அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


மூலிகை, மலை மீது

பத்திரிகை உலகம் பார்ப்பனரிடமே பெரிதும் இருக்கிறது. இதனால் திராவிடர்களுக்கு மனக்குறை ஏற்படுவதும், தமக்கு ஒரு உயர்நிலை தேவை என்ற எண்ணமுண்டாவதும், இந்தத் துறையிலே இருப்பது போலவே, மற்றத் துறைகளிலுமிருப்பதால், திராவிட நாடு திராவிடருக்கானால்தான் இந்தக் குறை தீர்க்கப்பட முடியும் என்று எண்ணமுண்டாவதும் இயற்கை. எனவேதான் திராவிடஸ்துன் கோரிக்கை உண்டாகி இருக்கிறது.

என்று, காசா சுப்பாராவ் என்ற பார்ப்பன ஆசிரியரே சின்னட்களுக்கு முன்பு, ஒரு பொதுக் கூ.ட்டத்திலே பேசினார். இவர் இதுபோது பத்திரிகை ஆசிரியர் வேலையிலே இருந்து விலகவும் நேரிட்டதாகக் கேள்வுப்படுகிறோம். உண்மையை அவர் எடுத்துக் கூறியதற்காக நாம் மிகப் பாராட்டுகிறோம்.

பத்திரிகைகள், ஆரியரிடம் சிக்கிக் கொண்டிருப்பதனால், நேரிட்டுளள நச்சு நினைப்புகளும் நாசகால நிந்தனைகளும் கிளம்பி, ஒற்றுமை குலைத்து, வேற்றுமை மிகுந்து போயிருப்பதற்குள்ள முக்கியமான காரணம், ஆரியரின் ஆதிக்கத்திலே உள்ள ஏடுகள், கட்டுப்பாடாகவும், சாதாரண, மிகச் சாதாரண மரியாதையை மறந்தும், திராவிடரின் நிலைக்கு ஊறுதேடும் காரியத்தையே இருக்கும்போது, நாங்கள் அவைகளை உபயோகியாமல் இருப்போமா? என்று ஆரியர் ஆணவத்தோடு கேட்கவுங் கூடும். இந்த ஆணவத்தால், திராவிடர் பல இன்னல்களை அடைகின்றனர், நல்ல பிரச்சனைகள் நலிகின்றன, பொய்ம்மைக்குப் பீடமும், உண்மைக்குக் கல்லறையும் கிடைக்கிறது. என்ற போதிலும் இதனால் திராவிடருக்கு உண்டாகும் கேடுகளைவிட, ஆரிருக்கே கேடு அதிகம் என்று நாம் அறிந்து கூறுகிறோம். மாற்றார் என்று திராவிடரைக் கருதிக்கொண்டு, அவர்கள் வெட்டும் படுகுழி ஆழமானது பயங்கரமானது வீழ்வோரை மாய்க்கக் கூடியது. ஆனால் அந்த ஆழ்குழியை அவர்கள் அதிகக் கஷ்டப்பட்டு வெட்டி வெட்டி ஓயாது வேலை செய்து, மெலிந்து, களைத்து அதன் ஓரத்திலே ஓய்வுக்காக உட்காரும சமயம், அப்படுகுழியிலே வீழ்வதற்காக, விரட்டப்பட்டு வரும் திராவிடத் தோழர்கள் கிளப்பும் கால்தூசு புயலெனக் கிளம்பி, படுகுழி வெட்டியவர்களைக் குழியிலே விழச்செய்துவிடும்! இதனை உணரவில்லை ஏடுமூலம் நாடு கெடும் தீய செயலைச் செய்யும் திருப்பிரமங்கள் இன்று திராவிடர். ஆரியர் போராட்டம், இந்த அளவுக்கு வந்திருப்பதற்குக் காரணமே, பத்திரிகை உலகிலிருந்துகொண்டு ஆரியர்கள் வளர்த்த துவேஷந்தான்.

முஸ்லீம்கள் விஷயத்திலே, பத்திரிகைகள் இவ்விதம் நடந்துகொண்டதன் விளைவு, காந்தியாரை, ஜின்னா மாளிகைக்குச் சென்று பேசச் செய்திருக்கிறது. அந்தப் பேச்சு வெற்றி பெற வேண்டுமென்று பிரார்த்தனை செய்ய வேண்டிய நிலைமைக்கு, நாட்டின் நாயகர் நாங்களே என்று நவின்றவர்களைக் கொண்டு வந்துவிட்டது. எழுதுகோலுக்கும் அறிவுக்கும் பொருத்தமேற்படுத்திக் கொண்டால், இந்த ஆரியர்கள், முஸ்லீம்கள் விஷயமாக நடந்துகொண்டதன் விளைவை உணர்ந்து இனியேனும் திராவிடர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் சரியாக நடக்க வேண்டும் என்ற எண்ணத்தைப் பெறலாம். இல்லை, எமது இயல்பை மாற்றிக்கொள்ளமாட்டோம் என்றே அவர்கள் கூறுவரோல், கேடுவருமுன் மதிகெட்டுத்தானே விடும் என்று நாம் இருப்போம், நாளை நடப்பதை யாரறிவார்! என்று தெரியும், நமக்கு, இன்று திராவிடன் என்ற உணர்ச்சி பெற்றவர்கள், ஆரிய ஆதிக்கத்திலிருக்கும் ஏடுகளை நாட்டின் களைகள் என்று கருதுகிறார்கள் அவர்களின் தொகை குறைவாக இருக்கலாம். குறைமதியினர் நிளைய இருக்கலாம் இந்தக் குணங்கெட்டவர்களின் குறுநகையில் சொக்கி, ஆரிய ஏடுகளை வேதமென நம்பிக்கொண்டு! வேதத்தையே பேதமெனும் பித்தத்தை வளர்த்த ஓலை என்று கருதும் கூட்டம் இருக்கிறது. இந்நாளில் அவர்கள் இந்த ஆரிய ஏடுகளை, வீரியமுடையோரைக் கெடுக்க, குலுக்கி மினுக்கி, கடை இடை காட்டி, மாமத்தீ மூட்டி கண்ணியத்தை ஓட்டி அறிவைக் கருக்கி, ஆண்மையைச் சுருக்கி பாசமெனும் படுகுழியில் வீழ்த்திடும் நாசகால நாரி எனவே மதிக்கின்னர். இங்ஙனம் கருதுவோரின் தொகை மிகக் குறைவாக இருக்கலாம். ஆனால் அந்தத் தொகை வளர்ந்துகொண்டு வருகிறது. அதனை உணராதார், அறிவை இழந்தார் என்போம்.

சேலத்திலே கூடிய ஜஸ்டிஸ் மாநாட்டிலே, செவ்விளநீர் பருகச் சென்ற மந்தியைச் செந்தேள் தீண்டினால், அது எங்ஙனம், தகதகவென ஆடி, தாவித் தவிக்குமோ அதுபோலப் பெரியாரை வீழ்த்த வலை வீசி, அவ்வலையிலே தாமே வீழ்ந்து, பின்னர் அடைக்கலப்பத்தும், அபய அகவலும், துதி மாலையும் பாடி, தப்பினரே, அவர்களின் தப்புரைகளை, இன்று ஆரிய ஏடுகள், தாராளமாக எடுத்து எழுதுகின்றன, திராவிடரிடையே பிளவு என்று கூறிப்பூரிப்பதும், பெரியாருக்கு எதிர்ப்பு என்று எழுதுவதும், பெரியார் ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து ஓடிவிட்டார் என்று உளறுவதும், இன்று அவர்களுக்கு, இனிப்பாக இருக்கிறது. இந்தச் சமத்திலாவது இந்த ஏடுகளுக்கு அறிவுத் தெளிவும், நீதியில் நாட்டமும் ஏற்பட்டிருக்கலாகாதா என்பதே நமது கவலை.

பட்டம் பதவி கூடாது, என்று தீர்மானித்து, அதன் பலனாகப் பல பங்களாக்களின் பகையை வரவேற்றுக் கொண்டிருக்கிறது கட்சி, தேர்தலுக்குத் தம்பட்டம் தயாரிக்கும் இடமாகக் கருதப்பட்ட இடம், திராவிடநாட்டு விடுதலைக்குப் பாசறையாக்கப்பட்டிருக்கிறது. அஆரிய ஏடுகளுக்குப் பட்டம் பதவியிலே வெறுப்பும், அரசியல் சூதாடிகளிடத்திலே அருவருப்பும் இருப்பது உண்மையானால், எந்தக்கட்சியை அதே ஏடுகள் பட்டம் பதவிக்காகவோ, அதே கட்சியிலே பட்டம் பதவி கூடாது என்று தீர்மானம் செய்திருப்பதை, வரவேற்றுப் பாராட்டியிருக்க வேண்டாமா, நீதியிலே நினைப்பு இருந்தால், நீதிவேண்டாம், அதைமறந்து நெடுங்காலமாகி விட்டிருக்கக்கூடும். யூகமாவது இருக்கவேண்டாமா? நாட்டிலே, பிளவு கூடாது என்று பெருங்குரலிலே பேசும் இவர்கள் ஒரு கட்சியின் நினைப்பிலும் ஒரு பெரிய மாறுதல் நேரிடுகிற இந்தச் சமயத்திலே, பட்டம் பதவிக்குப் பல்லிளிக்கும் ஒரு சிறு கும்பலையா ஆதரிப்பது! இல்லை! நேர்மையா, அறிவுடைமையா, யூகத்தின் பாற்பட்டதா! இல்லை! ஆணவத்தால் விளையும் அறிவீனம் என்போம். ஒரு ஏடு, பெரியாருக்கு இந்தத் தள்ளாத வயதிலாவது இந்த ஞானோதயம் வந்ததே அதுவரையிலே சந்தோஷம் என்று எழுதியிருக்கிறது. பெரியாருக்கு ஞானோதயம் இந்த ஆரியக்கும்பலை விட்டு வெளி ஏறவேண்டுமென்று என்று நினைத்ரே அன்றே ஏற்பட்டது குருகுலப் போராட்ட காலத்திலேயே அவருக்கு ஞானோதயம் ஏ.ற்பட்டது இன்று ஏற்பட்டதாக எழுதும் பாரததேவி என்ற ஏடு, அதுபோது கருவிலே கூட இல்லை. அதன் தாய்க்குத் திமணப் பருவம் கூட இல்லாத போதே பெரியார், உண்மையை அறிந்து, ஊருக்கு உரைக்க ஆரம்பித்து, தள்ளாத வயதிலே தன்னைச் சுற்றி திராவிடர் பெருங்கூட்டமாநின்று, எமது தலைவர் பெரியாரே! என்று ஏத்தி ஏத்தித்தொழும் காட்சியைச்க காண்கிறார்! இது பாரததேவியின் கண்களுக்குத் தெரியக் காரணம் இல்லை! எப்படி இருக்கும், அன்னையே, பாரத தேவியே! என்னை வெட்டுவதற்குச் சிலர் முனைகிறார்கள். நான் அதனைத் தடுப்பேன் என்று உறுதிகூறித் தன் முன்னே உடைவாளோடு நின்று காவல் புரிந்த காந்தியாரும் ஆச்சாரியாரும், பாரத மாதாவை வெட்டுவது, மயக்கமருநது (குளோதோபாரம்) கொடுததா, கொடுக்காமலா? குறுக்குவாட்டிலா நீளவாட்டிலா, என்று விவரம் விசாரிக்க, ஆருடம் சகுனம் பார்த்து ஆசிகேட்டுப் பெற்றுச் சென்றிருப்பதைக் கண்டு, கண்ணீர் கலங்கி இருக்கிற பாரததேவிக்குப், பெரியாரின் உயர்நிலை தெரியாதிருக்கலாம், நமக்கு அதுபற்றிக் கவலையில்லை. ஆரிய ஏடுகள், தமது, விஷமத்தனமான செயலால், திராவிடருக்கு மனப்புண் உண்டாகும்படி செய்கின்றன. அந்தப் புண் தரும் மூலிகை, விந்தியமலை உச்சியிலே இருப்பதை நாம் அறிவோம். அந்த மலையையே எல்லையாகவும் அரணாகவும் கொண்ட திராவிடநாடு அமைத், திராவிடப் பெருங்குடி மக்கள், தளராது உழைக்கத் தொடங்கிவிட்டனர். ஆரியம் அஸ்தமித்துத் திராவிடம் உதயமாகும் காலம் இது. குருடனுக்குக் கதிரவனின் இளங்கதிர் தெரியாது. செவிடனுக்குச் சேவல் கூவுவதும் கேட்காது. திராவிடரின் எழுச்சியை அகந்தைகொண்ட ஆரியர் அறியார், அறிவுள்ளோர் அறிவர்.

(திராவிடநாடு - 17.09.1944)