அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


மூன்று ஆண்டுகள் முடிந்தன!

உலகம் இருண்டு மூன்றாண்டுகளாகிவிட்டன. நாலாவதாண்டு ஆரம்பமாகிறது! இந்த ஆண்டாகிலும், விமோசனம் கிடைக்குமா! உலகம் போர்க்களமாகி 3 ஆண்டுகளாகி விட்டன. அமைதியும் சாந்தியும் இந்த ஆண்டின் அறுவடையாக இருக்குமா! உலகம், ரணவளக்காளியின் கூத்து மேடையாகி, கோரக் கொலைக்களமாகி, சித்திரவதைக்கு ஆளாகி, செந்நீர் ஆறுபுரளும் காடாகி, பிணக்குவியல் தொட்டியாகி, மூன்று ஆண்டுகள் முடிந்தன. இனியேனும் உலகம், மக்கள் வாழுமிடமாக வேண்டாமா! உலகில், கலை, கவிதை, காவியம், காதல், காட்சி அறிவு வளர்ச்சி, ஆராய்ச்சி, தொழில் வளர்ச்சி, வாணிபம், முன்னேற்றம், முதலியன வற்றுக்கு மூன்றாண்டுகளாகத் தடைகள், தளைகள் ஏற்பட்டுவிட்டன. உலகு, நாலாவது ஆண்டிலாகிலும் விடுதலைபெற வேண்டும்.

போர்! பயங்கரம்! திகில்! திகைப்பு! மக்கள் மாள்வது! மணிபுரிகள் மண்மேடாவது, குடும்பம் குலைவது! குலை நடுக்கம்! கூக்குரல்! கோரம்! இவையே, மூன்றாண்டுகளாக உலகினரின் செவியைத் துளைத்து வந்தன! ஆனந்தகீதம், உலகினரின் செவிபுக, இந்த ஆண்டாகிலும், வசதி கிடைக்கவேண்டும்.

காளைகள் களத்தில், கன்னியர் தொழிற்சாலையில், கிழவர் வீட்டில், விண்ணிலே குண்டுபொழியும் விமானம், வீதிகளிலே பீதி, மன்னர் மாளிகை முதல் பாட்டாளியின் குடில்வரையிலே பதைப்பு, தூக்கமிழந்து, துயரில் உழன்று, ஏக்கத்தால் தாக்கப்பட்டு, உலகம் மூன்றாண்டுகளாக அவதிப்பட்டுவருகிறது. போதாதா இந்தக் கொடுமை! இன்னும் எத்தனை நாட்கள் உலகில் இருள் சூழந்திருப்பது. வெற்றி ஒளி இவ்வாண்டாகிலும் வீசவேண்டும்.

பணிந்த பிரான்சு, பிடிபட்ட பெல்ஜியம், நொந்த நார்வே, திடுக்கிட்ட டென்மார்க், சித்திரவதைக்காளான செக்கோ, பொசுக்கப்பட்ட போலந்து, கருகிய கிரீட், காடாக்கப்பட்ட கிரீஸ், பயந்த பல்கேரியா, பிணைபட்ட பின்லாந்து, யுக்தியை இழந்த யுகோஸ்லேவியா, ரணகள ரஷியா - இவ்வளவையும் கொத்தித் தின்று ஏப்பமிட எண்ணும் வெறிகொண்ட ஜெர்மனி, அதற்கு வெள்ளாட்டியாகிய இத்தாலி, சாமரம் வீசும் ஸ்பெயின் - இது ஐரோப்பா கண்டத்தின் காட்சி இன்று! சுற்றிலும் களமிருப்பினும், சுடுசொல் பாயினும், சுதந்திரச்சுடர் ஒளியுடன், ஸ்வீடன், ஸ்விட்ஜர்லாந்து, துருக்கி, ஆகியவைகள் மட்டுமே, களம்புகாது உள்ளன! பாலைவனத்து நீரோடைகள்!!

வார்கா, ராட்டர்டாம், இவை நகரங்களின் பெயர் மட்டுமல்ல! நாஜியின் நாசம் எத்தன்மையது என்பதை விளக்கும் உருவங்கள்!!

கவண்ட்ரீ, இலண்டன், பிரிட்டிஷ் நகரங்களாக மட்டுமில்லை இன்று. நாஜித்தாக்குதல் எனும் தணலில் வெந்த தங்கக் கோட்டைகளாக விளங்குகின்றன.

டோவர், பிரிட்டிஷ் துறைமுகமாக மட்டுமில்லை இன்று - 21 மைலுக்கு அப்பால் உள்ள எதிரியை, ஜெர்மன் படைகளை, நோக்கிச் சிரித்துக் கொண்டிருக்கும் வீரர் கோட்டமாக விளங்குகிறது!

விச்சி, ஒரு நகரின் பெயரன்று இன்று, நாடி நடுங்குபவரின் நயவஞ்சகக் கூடமாக இருக்கிறது.

பெட்டெயின், ஒரு நாட்டுப் பரிபாலன கர்த்தாவின் பெயரன்று, வயோதிகத்தால் வளைந்து, சுயநலத்தால் சோர்ந்து, சோரம் செய்தேனும் வாழவேண்டுமென்ற சொரணை கெட்ட தனத்துக்கு, சுருக்கமான பெயராக விளங்குகிறது.

லவால் ஓர் ஆண்மை யாளனின் பெயராக இன்று இல்லை. அதிகாரலாகிரியால் மதிமயங்கி, மக்களைக் கூளமாகக் கருதும் கோணற்குணங் கொண்டோனின் பெயராகிவிட்டது.

குவிஸ்லிங் குவலயமெங்கும், குடிகெடுக்கும் குணத்தான், நாட்டைவிற்று எதிரியை நத்திப்பிழைக்கும் நாசகாலன், என்பதைக் குறிக்கும் சொல்!

ஐரோப்பா கண்டம், இன்று, கோரக்காட்சியும், கோணற்குணங் கொண்டோரின் கூத்தும் நிறைந்த கொட்டகையாகி விட்டது. மூன்று ஆண்டுகளாகிவிட்டன, இத்தகைய இழிவைத்துடைக்க, பிரிட்டன் கிளம்பி! நாலாவதாண்டு பிறந்தது! நாசம் நின்று, பழிக்குப்பழி, இரத்தத்திற்கு இரத்தம் என்னும் தத்துவம் வென்று, உலகு, மீண்டும் உல்லாசத்தைப் பெற வேண்டும்.

1939ம் ஆண்டு, செப்டம்பர் 3ந்தேதி, மாலை 4-45க்கு, பிரிட்டன், ஜெர்மனிமீது போர் தொடுத்தது. மூன்று ஆண்டுகளாக, பிரிட்டனுக்கு இருந்து வந்த இடுக்கணும் இடையூறும் அளவிட்டுரைக்க முடியாததாகும்.

கடலிலே கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன, நகரங்கள் குண்டுமாரியால் நாசமாயின, டன்கர்க் முதலிய சம்பவங்கள் நேரிட்டன, கிரீட் தீவை இழந்திட நேரிட்டது. ஆப்பிரிக்காவிலே அலைச்சல், டோப்ரூக்வரை மீண்டும் எதிரிவசமாகிவிட்டது. மால்ட்டா தீவின்மீது, மட்டற்ற வஞ்சம் வைத்து, எதிரிகள் குண்டு பொழிந்தவண்ணம் இருக்கின்றனர். ஜிப்ரால்டர்மீது எதிரிக்கு நாட்டமிருக்கிறது. ஈஜிப்ட்டை பிடித்து, சூயசைச் சூறையாடிட சுவஸ்திகக் கொடியோனுக்கு எண்ணமிருக்கிறது. அதுமட்டுமா? இந்தியாவை விழுங்கவும், நீர் ஊறும் வாயுடன் நிற்கிறான்.

அவனது கிழக்கத்திக் கூட்டாளி ஜப்பான், மலாய், சிங்கப்பூர், பர்மா, அந்தமான், ஆகிய இடங்களைப் பிடித்துக்கொண்டு, சீனாவிலே சித்திரவதை செய்து, வருகிறான், சிலோனைத் தாக்கினான், விசாகையிலும் குண்டுகளை வீசினான், வங்கக்கடலைக் கலக்கினான், வங்காளத்தின் எல்லையிலே அவனது வாடை இன்றும் வீசியபடி இருக்கிறது.

6.9.1942