அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


மூன்றுமாதம் கடுங்காவல் தண்டனை!

நாரணமங்கலம்144-வழக்கில் தீர்ப்பு
இலட்சியப் போரில் ஏழு சிங்கங்கள்
அடக்குமுறைக் கஞ்சா அருமை வீரர்கள்
கொடுமை! கொடுமை! கொடுமை!
ஐயோ இதுதானா சுயராஜ்யம்?

திருச்சி மாவட்டம் நாரணமங்கலம் கிராமத்தில் 27.11.50 அன்று ஆளவந்தாரின் அடக்குமுறையை எதிர்த்து பேச்சுரிமை காத்து கைது செய்யப்பட்ட நமதியக்க எழுச்சி பிம்பங்கள் எழுவருக்கும் 7.12.50 அன்று மூன்று மாதம் கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டது.

மூன்று மாதம்! நமது இளஞ்சீயங்களை, காங்கிரஸ் சர்க்கார் நமது மத்தியில் உலவாமற செய்துவிட்டது ஏழு இளம் காளைகளை அவர்கள் தாய் தந்தை, அன்பு மனைவி, ஆசை மக்களிடமிருந்து மூன்று மாதங்களுக்கு பிரித்துவிட்டது! கொடுமை! கொடுமை! கொடுமை!!!’ இலட்சியத்துக்காகப் போராடும் வீரர்களை, இன்ப பூமியிலிருந்து பிரித்து, காராக்கிரகத்தில் தள்ளுகிறது காங்கிரஸ் சர்க்கார்!

அரியலூர் மாஜிஸ்டிரேட்டால் மேற்படி தண்டனை அறிவிக்கப் பட்டதும் நமது தோழர்கள், அகமகிழ்வுடன் அதை வரவேற்றனர் சிறைச்சாலையை சிங்காரபுரியென யெண்ணி மகிழ்வுடன் தண்டனையை ஏற்றுக்கொண்ட அவர்கள் வீரங்கண்டு கூடியிருந்த மக்கள் பாராட்டினர் அவர்கள் தியாகத்தை எதிர்காலம் மறக்காது!

(6.12.50 அன்று நடைபெற்ற வழக்கு விசாரணை கீழேதரப் பட்டிருக்கிறது. அதற்கு முன் நடந்த விசாரணை இந்த இதழ் 3-ம் பக்கத்தில்)

திருச்சி மாவட்டம் பெரம்பலூர் வட்டம் நாராணமங்கலம் 144 தடையுத்தரவு மீறிய 7 தோழர்கள் வழக்கு 6.12.50 காலை 11.45 மணிக்கு அரியலூர் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கு நடவடிக்கைகளைக் கவனிக்க திருச்சியிலிருந்து தோழர்கள் எஸ்.வி.லிங்கம், திராவிடப் பண்ணை டி.வி முத்துகிருட்டிணன், டி.வி. அண்ணாமலை, என்.சார்பு மத்திய செயற்குழு உறுப்பினர் அம்பில் தர்மலிங்கம், ஆகியவர்கள் வந்திருந்தனர். அரியலூர், மற்றும் சுற்றுவட்ட கிராமங்களிலிருந்தும் பெரும்பாலான தோழர்கள் வந்திருந்தார்கள். தோழர்கள் விஜயகோபாலபுரம் முத்துவேல், வி.ஏ.சிவன், கிருட்டிணசாமி, ஜெயங்கொண்டான். “பொய்யாமொழி” ஆசிரியர் பாஸ்கரன், அரியலூர் மாணிக்கம், நவநீத கிருட்டிணன், எம்.மாரிமுத்து, ஆறுமுகம், கலியபெருமாள், இரத்தினம், கோபால், கரீம், அரங்கசாமி, சி. இளங்கோவன், அருணாசலம், மருதபிள்ளை, ஆர்.ராமசாமி மற்றும் பல கழக முக்கியஸ்தர்களும், கோர்ட்டுக்கு உள்ளும், வெளியும் நின்று நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்துக்கொண்டு மிகவும் அமைதியாக இருந்தார்கள்.

கைது செய்யப்பட்ட ஏழு தோழர்களுக்கும் காலை 11 மணிக்கு பகல் உணவு அளிக்கப்பட்டது. பின் 11.45 மணிக்கு அனைவரும் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டார்கள். கைதிகள் சரி பார்க்கப்பட்டு வரிசையாக கூண்டில் ஏற்றப்பட்டார்கள். முதலாவதாக பெரம்பலூர் சப்-மேஜிஸ்டிரேட் விசாரிக்கப்பட்டார். சப்-மேஜிஸ்டிரேட் 144 தடை விதிக்க நேர்ந்ததின் காரணத்தை விளக்கினார். தடையுத்தரவு கோர்ட்டில் காட்டப்பட்டது. பின் தடையுத்தரவை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மீறப் போவதாக தோழர்கள் சொல்லுகிறார்கள் என்று பாடலூர் சப்இன்ஸ்பெக்டர் ரிப்போர்ட் அனுப்பியதன் பேரில் தானும் நாராணமங்கலம் கிராமத்துக்குச் சென்றதாகவும் அங்கு தோழர்கள் தடையைமீறுவதற்குத் தயாராக இருப்பதை அறிந்து அவர்கள் மேடை மீது வந்து 1,2 எதிரிகள் வார்த்தைகள் பேச முயன“றதும் அரஸ்ட் செய்யப்பட்டார்கள் என்றும் அதன்படி 143,188, பிரிவின்படி முன்பு குற்றப்பத்திரிகை அனுப்பட்டது என்று சொன்னார்.

எதிரிகள் இரண்டு மூன்று கேள்வி கேட்டு குறுக்கு விசாரணை செய்த பிறகு, இரண்டாவது சாட்சியாகபாடலூர் போலீஸ் கான்ஸ்டேபிள் 904 பாலூசாமி விசாரிக்கப்பட்டார். அவர்தான் 144 ‘சர்வ்’ செய்த விவரத்தை எடுத்துச் சொன்னார். அவரும் எதிரிகளால் குறுக்கு விசாரணை செய்யப் பட்டார். அடுத்து நாரணமங்கலம் கிராம முன்சீப் சுப்பு சாட்சியாக விசாரிக்கப்பட்டார்.

பப்ளிக் பிராசிக்யூடர் : நீர் எந்த ஊர் முன்சீப்?

முன்சீப் : நாரணமங்கலம்.

ப.பி : உங்கள் ஊரில் என்ன தெரிய வந்தது?

மு: திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டம் போடுவதாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.

ப.பி : கூட்டம் போடக் கூடாதென்று தெரிவிக்கப்பட்டிருந்ததா? தண்டோரா போடப்பட்டதா?

மு: தண்டோரா மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ப.பி: கூட்டம் போடுவதால் என்ன ஏற்படும்போல் தெரிந்தது?

மு: கலகம் ஏற்படும்போல் தெரிந்தது.

ப.பி: அதன் பேரில் ரிப்போர்ட் அனுப்பினீரா?

மு: அனுப்பினேன், மேஜிஸ்டிரேட்டால் 144 உத்திரவு போடப்பட்டிருந்தது. பிறகு 27.11.50 மாலை 51/2 மணிக்கு மேஜிஸ்டிரேட் சர்க்கிள் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், கான்ஸ்டேபிள்கள் எல்லோரும் நாரண மங்கலத்துக்கு கூட்டம் நடக்கும் இடத்துக்கு வந்திருந்தார்கள். மந்தைவெளி அரசமரத்தடியில் எதிரிகள் எல்லோரையும் அழைத்து 144 உத்திரவைப் பற்றி சொன்னார்கள். அது எங்களுக்குத் தெரியும்-தெரிந்தும் நாங்கள் பேசப்போகிறோம் என்றார்கள் பேச ஆரம்பித்ததும் எல்லோரையும் கைது செய்துவிட்டார்கள்.

ப.பி: பேசியிருந்தால் என்ன ஏற்பட்டிருக்கும்?

மு: கலகம் ஏற்பட்டிருக்கும்.

அடுத்துத் தோழர்கள் குறுக்கு விசாரணை செய்தார்கள்.

செண்பகராசன் : கலகம் ஏற்படும் என்கிறீர்களே! அதற்கான முயற்சியை யார் செய்தார்கள்?

மு: நீங்கள்தான்.

செ.ராஜன்: எப்படித் தெரிந்தது?

மு: அங்கிருந்த கூட்டத்தைப் பார்த்ததும் தெரிந்தது. கூட்டம் பெரிய அளவில் கூடியிருந்தது.

செ.ராஜன்: ரிப்போர்ட் அனுப்பியதாகச் சொன்னீர்களே. நீங்களாக எழுதி அனுப்பினீர்கா? வேறு யாராவது எழுதிக் கொடுத்து அதை வாங்கி அனுப்பினீர்களா?

மு: என்.ஜி தர்மலிங்கம் எழுதியதில் தான் கையெழுத்துப் போட்டு அனுப்பினேன்.

செ.ராஜன்: ஏன்? உங்களுக்கு எழுதத் தெரியாதா?

மு: தெரியும். இருந்தாலும் ராமலிங்கம் எழுதியதில் கையெழுத்துப் போட்டேன்.

செ.ராஜன்: அப்படியென்றால் ராமலிங்கத்தின் தூண்டுதல் பேரில் தானே நீர் செய்தீர்?

முன்: அவர் எழுதியதில்தான் கையெழுத்துப் போட்டேன்.

விஜயகோபாலன்: கைது செய்யும்போது நீங்களும் அங்கு வந்திருந்தீர்களா?

மு: நான் சப்இன்ஸ்பெக்டருக்கும் பின்னால் நின்று கொண்டிருந்தேன்.

வடிவேலு: நான் கூட்டத்தில் பேச முயன்றபோது கையில் என்ன வைத்திருந்தேன்?

மு: கவனிக்கவில்லை.

அமராவதி: தி.மு.க.பொதுக்கூட்டத்தால் பொது ஜன அமைதிக்குப் பங்கம் ஏற்படலாமென்று சொல்கிறீர்களே, அதனால், அங்கு என்ன பங்கம் ஏற்பட்டது?

மு: அங்கு கூட்டத்தில் பங்கம் ஒன்றும் ஏற்படவில்லை.

ஆதிமூலம் : இதற்கு முன்பு தி.மு.கழகம் கூட்டங்களுக்கு எங்காவது சென்று பார்த்திருக்கிறீர்களா?
மு: நான் பார்த்ததில்லை. (கோர்ட்டில் சிரிப்பு)

ஆ: பின் எப்படித்தெரியும்?

மு: எனக்கு ஒன்றும் தெரியாது- (சிரிப்பு)

ஆ: தெரியாத ஒரு விஷயத்தைப் பற்றி எப்படி ரிப்போர்ட் செய்தீர்கள்?

மு: ராமலிங்கம் மற்றும் பலரும் சொன்னார்கள்.

அ: அப்படியென்றால் பிறர் தூண்டுதலின் பேரில்தானே செய்தீர்கள்?

மு: மௌனமாக இருந்தார்.

அ: தி.மு.கழகத்தின் கொள்கை தெரியுமா?

மு: தெரியாது.

அ: தெரியாத ஒன்றுக்கு ஏன் ரிப்போர்ட் செய்தீர்?

மு: ஊரார்கள் சொன்னார்கள்?

அ: என்ன சொன்னார்கள்?

மு: மதம் சாமி, இல்லையென்று பேசுவார்களென்று சொன்னார்கள்.

அ: நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

மு: எனக்கு ஒன்றும் தெரியாது.

அடுத்து சாட்சியாக பாடலூர் சப்இன்ஸ்பெக்டர் தோழர் ராஜகோபால் விசாரிக்கப்பட்டார்.

27.11.50 காலை றி.கீ.மி பிறப்பித்த 144 பிரிவின்படி தடையுத்தரவை இரண்டாவது சாட்சியின் மூலம் ‘கிராமத்திலும் எதிரிகளுக்கும் தெரியப்படுத்திவிட்டு அன்று நாரணமங்கலத்தில் தடையுத்தரவு பந்தோபஸ்து செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது மாலை 5 1/2 மணிக்கு 1 முதல் 7 எதிரிகளும் தடையை மீறப்போவதாக அரசமரத்தடிக்கு மேஜை நாற்காலி ஒன்று எடுத்துக்கொண்டு வந்தார்கள். அப்போது 1,4,5 எதிரிகள் உள்பட அனைவருக்கும் தடையுத்தரவை எடுத்துச்சொல்லிக் கேளாமல், 1,2 எதிரிகள் வார்த்தைகள் பேசினார்கள் எதிரிகள் ஏழு பேரையும் கைது செய்தேன்.

ச: மாஜிஸ்டிரேட் உத்திரவு போடுவதற்கு முன் ஏதாவது எழுதி அனுப்பினீர்களா?

ச.இ: நாரணமங்கலம் ‘பெட்டிஷனை’ அனுப்பினேன். அந்த கிராமத்திற்கு 25.11.50 ல் பெட்டிஷன் தாரர்களைப் போய் விசாரித்து தடைபோடும்படி உத்திரவு செய்ய பெரம்பலூர் ஷி.ஷி.வி க்கும் சர்க்கிள் இன்ஸ்பெக்டருக்கும் ரிப்போர்ட் அனுப்பினேன்.

ப.பி: கூட்டம் பேசியிருந்தால் என்ன நடந்திருக்கும்?

ச.இ: கூட்டம் போட எதிரி பார்ட்டியிருந்தார்கள். கலகம் ஏற்பட்டிருக்கும்.

அடுத்து தோழர்கள் குறுக்கு விசாரணை செய்தார்கள்.

வானமாமலை: நீங்கள் எந்த ஊர் சப்-இன்ஸ்பெக்டர்?

ச.இ: பாடலூர்.

ம: பாடாலூருக்கு எங்கு இருந்தீர்கள்?

ச.இ: திருச்சியில்

ம: என்-ஜி ராமலிங்கத்தை தெரியுமா?

ச.இ:தெரியும்.

ம:அப்பாவு உடையார் பேரில் நல்லு மூப்பனாரால் கொடுக்கப்ட்ட வழக்கு என்ன ஆயிற்று?

ச.இ: பெரம்பலூர் சப்மாஜிஸ்டிரேட்டுக்கு அனுப்பி தள்ளப்பட்டது.

ம: உங்கள் பெயர்?

ச.இ: ராஜகோபால்

ம: கவுண்டரா? செட்டியரா? பட்டம்?

ச.இ: சொல்லத்தயாரில்லை.

ம: தகப்பனார் பெயர்?

ச.இ: ராமசாமி.

ம: கூட்டத்தில் கருப்புச் சட்டைப் போட்டிருந்த ஒருவரைப் பிடித்துத் தள்ளி திட்டினீர்களே அது ஏன்?

ச.இ: கூட்டத்தைக் கலைக்க கட்டுக்கூட கலைக்கு அதிகாரம் இருக்கிறது.

விஜயகோபால்: இன்னொரு (பார்டியும்) கூட்டம் போட்டு பேச இருந்ததாகச் சொன்னீர்களே? அந்த பார்ட்டி காங்கிரஸ்காரர்களா? கம்யூனிஸ்டுகளா? சோஷலிஸ்டுகளா? மற்ற எந்தக் கட்சியினர்? அவர்கள் கூட்டத்துக்கு விளம்பரம் செய்திருந்தார்களா?

ச.இ: அது எனக்குத் தெரியாது.

விஜயகோபால்: கூட்டத்தில் நாங்கள் பேசியதாகச் சொன்ன ஒன்றிரண்டு வார்த்தைகள் ஞாபகம் இருக்கிறதா? யார் பேசியது?

ச.இ: ஞாபகம் இருக்கிறது ஆனால் யார் பேசியதென்று சொல்ல முடியாது.

அமராவதி: எதிரிகளில் இதை முன்னின்று நடத்தியது யார் என்பது தெரியுமா?

ச.இ: பெட்டிஷன்தார் ராமசாமி. சிதம்பரம் காதர் மற்றும் 45 பேர்.

ஆதிமூலம் : எந்த காதர்?

ச.இ: ப. காதர்சாய்பு.

மருதமுத்து: தடை மீறும்போது கலவரத்துக்கு ஏதாகிலும் அறிகுறி தோன்றிற்றா?

ச.இ: கூட்டம் நடந்திருந்தால் ஏற்பட்டிருக்கும் அத்துடன் பிராசிஷன்தரப்பு சாட்சி விசாரணை முடிந்தது. பிறகு கோர்ட்டார் அவர்கள் எதிரிகளாகிய தோழர்களைப் பார்த்து உங்களுக்கு சாட்சி உண்டா என்று கேட்டார்கள். தோழர்கள் அனைவரும் நாங்களே தான் எல்லாம் தனியாக வேறு ஒருவரும் இல்லை என்றார்கள். தனித்தனியே ஒவ்வொருவரையும் ஏதாவது சொல்லவேண்டுமா என்று கேட்டு ஒன்றும் இல்லையென்றதும் வாக்கு மூலத்தில் கையெழுத்து வாங்கப்பட்டது வழக்கு மறுநாள் ஒத்தி வைக்கப்பட்டது.

(திராவிடநாடு 10.12.50)