அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


மூவரின் முத்திரை!

``மிஸ்டர் கரம்சந்! சரக்கு விற்பனையாக வில்லையோ!’’

``ஆமாம் பகதூர்! கட்டுக்கட்டாகக் கிடக்கின்றன. விற்கக் காணோம். அலைந்தது அலுப்பாக இருக்கிறது, ஆனா பலனோ பூஜ்ய மாக இருக்கிறது.’’

``சரக்குத் தயாரித்து விட்டால் மட்டும் போதுமா கரம்சந்! விற்பனைக்காக விளம்பரம் விசேஷமாகச் செய்ய வேண்டும். விளம்பரம் புதிய முறையிலே இருக்க வேண்டும்.’’

``என்னென்னமோ செய்து பார்த்தாகி விட்டது.’’

``சோர்வு வேண்டாம். சரக்கு விற்பனையாக நான் வழிகண்டு பிடிக்கிறேன்.’’

``மகாராஜனாக இருப்ப..... எப்படியோ, சரக்கு விற்பனையானால் போதும்!’’

பணியாள் ஒருவருக்கும், பார்ப்பனர் ஒருவருக்கும் நடைபெற்ற உரையாடல் இது. மோகன்தாஸ் கரம்சந் காந்தி தயாரித்த நெருக்கடி தீர்க்கும் மருந்து, விற்பனைக்காக, விளம்பர இலாக்காவில் விசேஷ நிபுணத்துவம் பெற்ற சர். தேஜ்பகதூர் சப்ரூ கம்பனியாரிடம் தரப்பட்டது. சரக்கு வார்தா தயாரிப்புதான்! காந்திய முறைதான்! ஆனால் சப்ரூ கம்பனியின் விளம்பரத்தோடு, மீண்டும் மார்க்கெட்டுக்குக் கொண்டு வரப் பட்டது.

1. இது கட்சிப் பற்றற்ற அப்பட்டமான அபூர்வமான திட்டம்.

2. இந்தியாவிலே உள்ள சகல கட்சியினர், கொள்கையினர், இலட்சியக்காரர் ஆகியோரின் யோசனைகளை பரிசீலனை செய்து பார்த்து நல்ல முறையிலே தயாரிக்கப்பட்டது.

3. பல நிபுணர்களின் ஆலோசனை ... ஆதரவாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. அரசியலில் மட்டுமல்ல, மதம், பொருளாதாரம் முதலிலியனவைகளிலும்-

என்று விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. இத்தகைய விளம்பரங்களைக் கண்டு இங்குள்ள வர்களும், வெளிநாட்டவரும் மயங்கி, சப்ரூ கம்பனியின் சரக்கு, சகல ரோக நிவாரணி என்று கொள்வர் என்று நம்பினர். ஆனால் உண்மை என்ன?

இந்தக் கமிட்டியுடன் ஜனாப் ஜின்னா டாக்டர் அம்பேத்கார், பெரியார் இராமசாமி ஆகிய முப்பெருந்தலைவர்கள் கலந்து பணி யாற்றவுமில்லை, அவர்களுக்கு இக்கமிட்டியிடம் நம்பிக்கையும் கிடையாது. இம்மூன்று தலைவர் களும், வெறும் அரசியல்வாதிகளல்ல, மந்திரி சபைகள், அமைத்துவிட்டால் மகத்தான வெற்றி காணலாம் என்று மனப்பால் குடிப்பவர்களுமல்ல, இன்று நேற்று முளைத்த காளான்களுமல்ல! காங்கிரசிலே உள்ள தலைவர்களென்போருக் குள்ள பொதுத் தொண்டு அனுபவத்திலே கொஞ்சமும் குறைந்ததல்ல இவர்களின் சேவை. மூவரும், மூன்று பெரிய, பிரச்னைகளின் சின்னங்கள். முஸ்லீம் வாழ்வு எப்படி இருக்க வேண்டும்! பாதுஷாக்களாக இருந்த இனம் இந்து ராஜ்யத்திலே பராக்குக்கூறி வாழ வேண்டியது தானா? அவர்களுக்கெனத் தனி வாழ்வு வேண்டாமா? தன்மானத்தோடு, இஸ்லாமியப் பண்புடன் அவர்கள் வாழ வேண்டுமென்றால் அவர்களுக்கெனத் தனி அரசு வேண்டாமா? என்ற இன எழுச்சியின் இணையில்லாத் தலைவர் ஜனாப் ஜின்னா அவர். இந்தச் சப்ரூ கமிட்டியிலே கலந்து கொள்ளவில்லை. இக்கமிட்டி காங்கிரசின் கைப்பாவையே என்று கூறிவிட்டது.

பலப்பல நூற்றாண்டுகளாகப் ``பஞ்சமராய், பராரியாய், பாட்டாளியாய்’’ ஒதுக்கி வைக்கப் பட்டுத் தீண்டதகாதாராக்கப்பட்டுச், சுரண்டப்பட்டு, அழுத்தி வைக்கப்பட்டுள்ள பல கோடிப் பழங்குடி மக்களின், விடுதலைக்கு, மனித உரிமைக்குப் போரிடுபவர் டாக்டர் அம்பேத்கார்! அவர் இக்கமிட்டியிலே கலந்து கொள்ளவில்லை.

வாணிபம், அரசியல், வீரம், கலை..........

வித்தகராய் வாழ்ந்து, ஆரியத்திடம் வீழ்ந்துபோன திராவிடப் பெருங்குடி மக்களைத் தாசர் நிலையினின்றும் மீட்சி பெறச் செய்து, வீரராய்த் திகழச் செய்யத், திராவிட நாடு திராவிடருக்காக வேண்டும் என்று திக்கெட்டும் முழக்கமிட்டு வரும் தீரத் தலைவர் பெரியார். அவர் இக்கமிட்டியிலே கலந்து கொள்ளவில்லை. காரமில்லை, உப்பில்லை, புளிப்புமில்லை, ஆகவே கலயத்தில் உள்ளது, கடை வீதியிலே, சீந்துவாரற்றுக் கிடக்கிறது. சீமைக்குத் தந்திகள் பறக்கின்றன! செய்தித் தாட்களிலே சித்திரத் தலையங்கங்கள் மலர்கின்றன! விளம்பரம் அமோகமாக இருக்கிறது. ஆனால் அதிலே பசையோ ருசியோ பயனோ இல்லை! எப்படி இருக்க முடியும்! எந்தெந்தப் பிரச்னைகளின் பலனாகச் சிக்கல் உண்டாகிறதோ, அவைகளின் தலைவர்களே, எந்தக் கமிட்டியைக் கவைக்கு உதவாது என்று கருதினாரோ, அதே கமிட்டி சிக்கல் தீர்க்கும் திட்டம் வெளியிட்டால், சீந்துவார் யார்! ஆங்கிலேயராவது, இந்த மூலாதாரப் பிரச்னைகளை விவாதித்து முடிவு செய்ய, இப்பிரச்னைகளோடு நேரடியாகத் தொடர்பு கொண்ட, தலைவர்களை வரவழைத்து, வட்ட மேஜை மாநாடு நடத்திப் பார்த்தனர். அதுவே பலன் தரவில்லை! இங்கோ, அந்தத் தலைவர் களின்றியே, திட்டம் தீட்டிவிட்டார்கள்! தீண்டு வார் யார் அதனை? காகிதப் பூ கண்ணுக்குக் காட்சி, களிமெண் பொம்மை சிறாருக்கு மகிழ்ச்சி, என்பதுபோல, இந்தச் சப்ரூ சரக்கு, சாய்வு நாற்காலிகளின் ஓய்வு நேர வேலை, இது, உள்ளத்தை உருக்கும் நாட்டைக் கலக்கும், பிரச்னைகளைத் தீர்க்கும் வழியாகாது. மேலும் நாம் துவக்கத்திலே கூறியபடி, சரக்கு சப்ரூ கம்பனியின் விளம்பரத்துடன் வெளிவருகிறதே தவிர, தயாரித்த இடம் வார்தாதான் என்பதற்குச் சந்தேகம் இல்லை. ஏன்? காங்கிரசார், பாகிஸ்தான் கூடாது என்றனர், சப்ரூ கமிட்டியும் அதையே தான் கூறுகிறது. தனித் தொகுதியால் தான் தொல்லை வந்தது, முஸ்லீம்கள் கூட்டுத் தொகுதி முறையை ஆதரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறுகிறது, சப்ரூ கமிட்டியும் அதையேதான் சொல்கிறது. மத்திய சர்க்காரிலே, கூட்டு மந்திரி சபைகளோ, எல்லாக் கட்சிகளும் கொண்ட மந்திரி சபைகளோ ஏற்படுத்தலாம் என்று சொல்வதும், அஃதே, வேண்டுமானால் முஸ்லீம் களுக்கு, இந்துக்களுக்கு எத்தனை ஸ்தானங்கள் மத்ய சபையிலே இருக்கின்றனவோ அவ்வளவு ஸ்தானங்கள் அன்பளிப்பதாகக் காங்கிரஸ் கூறுகிறது, சப்ரூ கமிட்டியும் இதையேதான் கூறுகிறது. காங்கிரசின் பேச்சுக்குச் சப்ரூ கமிட்டி, பூச்சிட்டுத் தந்திருக்கிறதேயொழியப் புதிய வழி ஏதும் காணவில்லை. எவை எவைகளை நாள் பார்த்து, நன்முகூர்த்தம் பார்த்துச், சிரித்துப் பேசிக் கட்டித் தழுவிக் கை குலுக்கிக் கலந்துரையாடிக், காந்தியார் ஜனாப் ஜின்னா வீட்டிற்குப் போய் தருவதாகக் கூற, ஜனாப் ஜின்னா, ``எனக்குத் தேவை இவையல்லவே. என் இனத்துக்கு இயல்பின்படி வாழ ஒரு இடம், பத்துக் கோடி மக்களுக்கு ஒரு தரணி, பாகிஸ்தான் வேண்டும், பிற அல்ல’’ என்று கூறி அனுப்பி விட்டாரோ, அதே சரக்கே, அலகாபாத் விளம்பரக் காரியால யம் அனுப்பப்பட்டு அழகான முறையிலே உறை போடப்பட்டுக் கண்கவரும் சித்திர வேலைப் பாடுடனும், மயக்கமூட்டும் விளம்பரத்துடனும் `மார்க்கெட்’ வந்திருக்கிறது. ஆனால் மக்கள், அந்தச் சரக்கை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்! மூவரின் முத்திரை மோதிரம் பொறிக்கப்படா முன்னம், எந்தத் திட்டமும் வெற்றி பெறாது! திணிக்கப்பட்டாலோ, ஜீரணமாகாது! அதனை அறிந்து கொள்ள மறுப்பது, பாதையிலுள்ள படுகுழியை பறந்து, பாய்ந்து செல்வதாகும்!

(திராவிட நாடு - 15-4-1945)