அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


மோட்டார் வேகத்தில் மதப்பிரசாரம்
‘கோயில்களின் பயனை மக்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. எனவே, மோட்டார் வண்டியில் சென்று மதப்பிரசாரம் செய்வதால், இந்த அறியாமை நீங்கும்.”

என்பதாகக் கல்வி அமைச்சர் தோழர் அவினாசிலிங்கம் அவர்கள் 4-7-48இல் பேசியிருக்கிறார். சென்னை சர்க்காரின் ஆதரவைப் பெற்றுத் தர்மபுர மடாதிபதியால் நடத்தப்படும் மதப் பிரசாரத்தைத் தொடக்கி வைக்கையில்தான் கல்வி அமைச்சர் இவ்விதம் குறிப்பிட்டார்.

“தலைமுறை தலைமுறைகளாக நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள், அறச்சாலைகளுக்கும், கோயில்களுக்கும், மடங்களுக்கும் ஏராளமான பணம் நன்கொடை அளித்துள்ளனர். இப்பொழுது அவர்கள் கல்வித்துறையில் கவனம் செலுத்துவதைக் காண, நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.”

என்பதாக முதலமைச்சர் தோழர் ஓ.பி.இராமசாமி அவர்கள் 4-7-48இல் பேசியிருக்கிறார். காரைக்குடியில், ‘டாக்டர் அழகப்ப செட்டியார் கல்லூரி’யைத் திறந்து வைக்கையில்தான் முதலமைச்சர் இவ்விதம் குறிப்பிட்டார்.

கோயில்களின் பெருமையையும், அவற்றை மக்கள் சரியாகப் புரிந்து கொள்ளாததால் மக்களுக்கு ஏற்பட்ட ‘அறியாமை’யையும் கல்வி அமைச்சர் விளக்கி, மதப் பிரசாரத்தை, மோட்டார் வண்டியின் துணைக்கொண்டு விரைவாகச் செய்ய வேண்டுமென்று பேசுகிறார். மதப் பிரசாரம், நாட்டில் எவ்வளவு விரைவாகப் பரவவேண்டுமென்பதை ‘நன்குணர்ந்த’ கல்வி அமைச்சர், அப்பிரசாரத்தை மணி ஒன்றுக்கு 40, 50 கல் வேகத்தில் செல்லக்கூடிய மோட்டார் வண்டியின் துணைக்கொண்டு செய்க என்று கூறுகிறார்.
மக்களினத்தின் பொதுவான வாழ்க்கை முன்னேற்றத்திற்குக் கல்வியொன்றே பயன்தரக்கூடிய தென்றும், இவ்வளவு காலமும் மடங்களுக்கும் - கோயில்களுக்கும் பணத்தைக் கொடுத்துவந்த நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள், இப்போது கல்வித்துறையில் கவனம் செலுத்துவதைக் காணத் தாம் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், டாக்டர் அழகப்பா போன்றவர்கள் பெரிய கல்லுரிகளைக் கட்டவேண்டுமென்றும், மற்றவர்கள் சிறு சிறு பள்ளிக்கூடங்களையாவது கட்ட முயல வேண்டுமென்றும், மாவட்டத்துக்கு (ஜில்லாவுக்கு) ஒரு கல்லூரியும், கிராமத்துக்கு ஒரு பள்ளிக்கூடமும் இருக்கவேண்டுமென்றும், அறிவுக் கூர்மைக்குப் பெயர் பெற்ற தமிழ்நாட்டில் ஏராளமான ஆராய்ச்சிக்கழகங்கள் இருக்க வேண்டுமென்றும், அதற்குச் சர்க்கார் இயன்றளவு உதவி செய்யும் என்றும் முதலமைச்சர் பேசுகிறார்.

“கோயில்களுக்கும், - மடங்களுக்கும் இதுவரை பணத்தை அள்ளி அள்ளிக் கொடுத்தீர்கள்; அதனால் நாட்டுக்கு ஏற்பட்ட பயன் ஒன்றுமேயில்லை; இப்போது கல்விக்கும் - ஆராய்ச்சிக்குமே பணத்தைச் செலவிடுங்கள்; இதனால் ஏற்படும் பயன் அளவு கடந்தது” என்று முதலமைச்சர் கூறுகிறார்.

மதப்பிரசாரத்துக்கு மடாதிபதிகளும், கட்டளைத் தம்பிரான்களும் முன்வர வேண்டுமென்று, கல்வி அமைச்சர் கவலைப்படுகிறார்.

விஞ்ஞானப் படிப்பில் அதிகக் கவனம் செலுத்த வேண்டுமென்றும், அதற்கு விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளரும் தேவை என்றும் முதலமைச்சர் வேதனைப்படுகிறார்.

மதப்பிரசாரத்துக்கு மோட்டார் வாங்கச் சொல்கிறார் அவினாசியார்.

கல்விக்குப் போதியபணம் இல்லை. ஆண்டு ஒன்றுக்கு 46 கோடி தேவைப்படுகிறது. இப்பொழுது பத்தேமுக்கால் கோடி ரூபாதான் செலவிட முடிகிறது; பணக்காரர்களும் பொதுமக்களும் இதற்கு உதவி செய்ய முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறார் ஓமந்தூரார்.

நாட்டின் முன்னேற்றத்தைக் காவி வேட்டி அணிந்தோரால் செய்வித்துவிட முடியுமென்று கல்வியமைச்சர் வரிந்து கச்சை கட்டிக் கதறுகிறார்.

நாட்டின் முன்னேற்றத்தை விஞ்ஞானிகளும் - ஆராய்ச்சியாளருமே செய்யமுடியும்; ஆனால், அப்படிப்பட்டவர்கள் நம்மிடம் இல்லை - இனியாவது உண்டாகமாட்டார்களா என்று உள்ளம் நொந்து கூறுகிறார் முதலமைச்சர்.

கோயில்கள் விளையாட்டு இடங்களாகிவிட்டன - மதம் மதிப்பற்றுப் போய்விட்டது என்று மயக்கமடைகிறார் மதி மந்திரியார்.

நாடு விடுதலை அடைந்துவிட்டது - விரோதிகள் அகன்றுவிட்டனர். என்றாலும், எதற்கெடுத்தாலும் அந்நியநாட்டவரையே எதிர்பார்க்க வேண்டிய கேவலநிலை இன்னும் ஒழியவில்லையே என்று ஓமந்தூரார் மனமொடிந்து கூறுகிறார்.

இவ்வாறு ஒரே முகாமில் இருந்து கிளம்பிய இருவர், ஒரே நாளில் இருவேறு இடங்களில், இருவேறு கருத்துகளை, மக்களின் முன்னேற்றத்துக்காகக் கடைப்பிடிக்க வேண்டு
மென்று கூறுகின்றனர்.
நட்டின் அரசியலை ஏற்று நடத்தும் பெரிய பொறுப்பினைத் தாங்கிக் கொண்டுள்ளவர்களில் ஒருவர், காலப்போக்கினை உணர்ந்து, அதற்கேற்பக் கரியங்களை நடத்தவேண்டுமென்று கூறவும், இன்னொருவர் தம்முடைய நிலையையும் பொறுப்பையும் மறந்து, காலப்போக்கையும் உணராது கண்ணை மூடிக்கொண்டு கருத்துக் கொவ்வாதவற்றைக் கூறவுமான நிலைமை ஏற்படுவதைக் காண நாம் வெட்கப்படுகின்றோம்.

காரைக்குடியில் கல்லூரியைத் திறந்துவைத்த முதலமைச்சரின் பேச்சையும், மயிலாப்பூரில் மதப் பிரசாரத்தைத் துவக்கிவைத்த கல்வியமைச்சரின் பேச்சையும் ஒப்பு நோக்கிப் பார்க்கும் எவருக்கும், முதலமைச்சரின் முற்போக்கான திட்டங்களினால் மக்களுக்கு உண்டாகும் நன்மையும், கல்வியமைச்சரின் பிற்போக்கான திட்டங்களினால் ஏற்படும் தீமையும் விளங்காமற் போகாது.

கல்வியமைச்சராவது, தம்முடைய பொறுப்பில் விடப்பட்டிருக்கும் இலாக்கா இன்னதென்பதை அறிந்து, அதனால் மக்கள் அடையும் நன்மைகளை உணர்ந்து, அதற்கேற்ப நாட்டவர்க்கு நல்லுரைகள் வழங்க வேண்டும். அல்லது முதலமைச்சராவது கல்வியமைச்சர் முதலான தம்முடைய கூட்டு மந்திரிகளுக்கு, அவரவர்களுடைய இலாக்காக்களின் தன்மையையும் பொறுப்பையும் உணர்த்தி, அவர்கள் செய்ய வேண்டிய காரியங்கள் இன்னின்ன என்று தெளிவாக விளக்கியிருக்க வேண்டும்.

ஒரு கட்சியின் செல்வாக்கு, பலரை, அவர்களின் தகுதி-திறமை ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட நிலைமையை உண்டாக்கிய போதிலும், முதலமைச்சர் போன்ற அனுபவ அறிவும், முன்பின் யோசித்து நல்ல கருத்துகளை வெளியிடும் ஆற்றலும் பெற்றவர்களாவது, அவர்களுக்கு வழிகாட்டியாய் நின்று, நாட்டு மக்களுக்கு நன்மை உண்டாக்கக்கூடிய காரியங்களைச் செய்யும்படி அறிவுரை வழங்கவேண்டும்.

மதக்கலப்பற்ற அரசியலை நடத்துவதாகச் சொல்லிக் கொள்ளும் ஒரு சர்க்கார், பலதரப்பட்ட மதங்கள் நாட்டிலிருப்பதை அறிந்தும், ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பிரசாரம் செய்யும் நடுநிலைமை தவறிய திட்டத்தை ஆதரிப்பதும், அதனை ஆரம்பித்து வைப்பதும் சர்க்காரின் கொள்கைக்கே மாறுபட்ட
தென்பதைக் கல்வியமைச்சர் தம்முடைய கருத்தில் நிறுத்திப் பார்ப்பதற்குக் கூட நேரமும் நினைப்பும் இல்லாமல், மோட்டார் வேகத்தில் மதத்தைப் பரப்பும் பணியில் ஈடுபட்டிருக்கிறாரே என்பதை எண்ணும்போதுதான், நாம் உண்மையாகவே வருத்தமும் வெட்கமும் அடைகின்றோம்.
இன்று நாடுள்ள நிலையில், மதப்பிரசாரம்தான் மக்களின் இன்றிமையாத் தேவையா? அதுதான் மக்களின் வறுமையையும், - பசிக்கொடுமையையும், வேலையில்லாத் திண்டாட்டத்தையும், போக்கக்கூடியதா? மதங்கள் உலகில் தோன்றி எவ்வளவு காலமாயின? இவ்வளவு காலமாக மக்கள் மதங்களைப் பற்றிய உண்மைகளை ஏன் உணரவில்லை? மதங்கள் தோன்றிப் பல நூற்றாண்டுகள் கழிந்த பின்னரும் - மகேசுவரன் அருளைப்பெற்ற மதபோதகர்கள் பலர் வந்து போன பின்னரும் - மதங்களை மக்கள் உணர்த்தப் பிரசாரம் செய்யவேண்டுமா? கைலையில் இருந்து மதப்பிரசாரம் செய்யப்பட்டதே! வைகுந்தத்திலிருந்து செய்யப்பட்டதே! பரமண்டலங்களிலிருந்து செய்யப்பட்டதே! மெக்கா மதீனாவிலிருந்து செய்யப்பட்டதே! பாலைவனத்திலும் பர்ணசாலையிலுமிருந்து செய்யப்பட்டதே! காட்டில் தவம் புரிந்தும், நாட்டில் பல்லக்கேறியும் செய்யப்பட்டதே! நாடாண்ட மன்னர்களும் - ஓடேந்திய ஆண்டிகளும் மதப்பிரசாரம் செய்தனரே! இன்னும் யாராரோ - எங்கெங்கிருந்தோ - எப்படியெப்படியெல்லாமோ மதப்பிரசாரம் செய்தனரே! இவ்வளவு செய்த பின்னரும், மதப்பிரசாரம் மோட்டார் வண்டி வேகத்தில் செய்யப்பட வேண்டியிருக்கிறதே! ஏன் இந்த நிலை ஏற்பட்டது? என்ற இன்னபிற காரணங்களைக் கல்வியமைச்சர் கருதிப்பார்க்கும் அளவுக்காவது தம்முடைய அறிவைப் பயன்படுத்தியிருக்கக்கூடாதா என்பதனை எண்ணும்போதுதான், மதம் - கடவுள் பற்றிய சில உண்மைகளை மக்கள் உணரும்படி செய்யவேண்டுமென்ற கவலை உண்டாகின்றது. சாதாரண மக்கள் மட்டுமல்ல, மக்களின் வாழ்வுக்கு வழிகாட்டிகளாய் அமையும் வாய்ப்பைப் பெற்றுள்ள அமைச்சர்களும், அரசியல் தலைவர்களும் மதவியல் - கடவுளியல் ஆகியவை பற்றிய உண்மைகளை உணர்ந்தாலன்றி, அவர்கள் மக்களின் வாழ்க்கைக்கு உண்மையான வழிகாட்டி
களாக மாட்டார்கள்.

நாம் மேலே எடுத்துக்காட்டியபடி, நம் நாட்டு மதப்புலவர்கள், தாங்கள் கூறும் மதக் கருத்துகளை மக்கள் நம்பி ஒப்புக்கொள்ள வேண்டுமென்பதற்காகப் பல திறப்பட்ட முறைகளைக் கையாண்டனர். மதக்கோட்பாடுகளை விளக்கும் புராண இதிகாசங்களை மக்களிடையே வைத்து, அவற்றைப் பாடிப் - படித்து - பொருள் விரித்து அவற்றுக்குப் புத்துயிர் அளிக்க முயன்றனர் முதலில் - புராண இதிகாசங்களில் கூறப்படும் கடவுட் கதைகளைக் கேட்ட மக்கள், தங்கள் பகுத்தறிவின் துணைக்கொண்டு, அக்கதைகளில் காணப்படும் அறிவுக்கும் இயற்கைக்கும் மாறுபட்ட நிகழ்ச்சிகளை எடுத்து ஆராய்ந்து, “இவை உண்மையிலேயே நிகழ்ந்தனவா? நிகழக்கூடியனவா? நம்பத் தக்கனவா? இவற்றால் மக்கள் அடையும் பயன் யாதாயினும் உள்னவா? என்று கேட்கத் தொடங்கினர்.

ஒரு காலம் இருந்தது, மதக்கோட்பாடுகள் எப்படி இருந்தாலும், அவை யாரால் சொல்லப்பட்டிருந்தாலும் அவற்றையெல்லாம் மக்கள் அப்படியே கண்ணையும் கருத்தையும் முடிக்கொண்டு நம்பவேண்டும். நம்பாவிட்டால் ‘நரகம்’ என்று. இந்த இரங்கத்தக்க நிலை மக்களிடையே மாறாமல் இருந்த காலம்வரை மதப் புலவர்கள் பாடு மிகவும் கொண்டாட்டமாகவே இருந்தது. மதக்கோட்பாடுகளை மக்களிடையே பதிய வைப்பதற்குத் தாங்கள் எதை எப்படிச் கூறினாலும், அவற்றையெல்லாம் மக்கள் நம்பாதொழியார் என்ற எக்களிப்பு, அவர்களை எதை வேண்டுமானாலும் - எப்படி வேண்டுமானாலும் எழுதும்படியும் சொல்லும்படியும் செய்துவிட்டது;

“இப்படியெல்லாம், இல்லாததையும் - இருக்க முடியாததையும் - இருக்க வேண்டிய இன்றியமையாமை இல்லாததையும் - இயற்கைக்கு மாறாகவும் அறிவுக்கு ஒவ்வாததாகவும் எழுதியும் பேசியும் வருகின்றோமே! இவற்றை மக்கள் நம்புவாரா? நம்பும்படி செய்வதுதான் - முறையா? மக்கள் நம்புவது ஒருபுறம் இருக்கட்டும் ; இவற்றை எழுதியும் பேசியும் வருகின்ற நாமாவது இக்கதைகளை நம்புகிறோமா? நாமோ அன்றிப் பிறரோ நம்பக்கூடிய முறையில் நம்மால் எழுதப்படும் கதைகள் அமைகின்றனவா?” என்றுகூட எண்ணிப்பார்க்க நேரமோ அறிவோ இல்லாத நிலையில், அவசர அவசரமாக ஆயிரக்கணக்கான அண்டப்புளுகுகளை ஆண்டவன் பேரைச் சொல்லி எழுதி வைத்துவிட்டனர்.

ஆண்டவனைப் பாதுகாப்பதற்கு மதம் என்னும் அகழியும், மதத்தைப் பாதுகாப்பதற்குப் புராண இதிகாசங்கள் என்னும் மதிற்சுவரும் சுற்றி அமைக்கப்பட்டிருப்பதன் காரணம் என்ன என்பதை மக்கள் அறியவும், அவைபற்றி ஆராயவும் தொடங்கினர். “எங்களையும் பிற உயிர்களையும் படைத்துக்காத்து இரட்சிப்பதாகச் சொல்லப்படும் ஆண்டவனுக்கு இத்துணைப் பாதுகாப்புகள் எதற்காக? எங்களைப் படைத்த ஆண்டவனை நாங்களே அறியும்படி செய்யமுடியாது. ஆண்டவன் தன்னை இன்னார் என்று அறிவிப்பதற்கு ஒரு மதத்தையும், அதனை விளக்குவதற்குப் புராண இதிகாசங்
களையும், இவற்றை உண்டாக்குவதற்கு நம்மவரிலேயே சிலரையும் ஏற்பாடு செய்திருக்கின்றாரே! தன்னைத்தானே பாதுகாக்க முடியாமல்; தன்னைப் பாதுகாப்பதற்கு மதத்தையும் - புராண இதிகாசங்களையும்- நம்மவரிலேயே சிலரையும் ஏற்பாடு செய்துவைத்துக்கொண்டிருக்கும் ஒரு கடவுள், எங்களை எல்லாம் படைத்துக்காத்து இரட்சிக்கிறார் என்று சொல்லப்படுவதை நாங்கள் எப்படி நம்பமுடியும்? ஒப்புக்கொள்ள முடியும்?” என்று மக்கள் சிந்திக்கும் காலம் இது.

ஆண்டவன் என்றால் அவயவங்கள் அடங்கி - மதம் என்றால் மனம் ஒடுங்கி - என்ன? ஏது? என்று ஒன்றும் கேளாமல் இருந்த நிலைமாறி, ஆண்டவனைப் பற்றியும், மதத்தைப் பற்றியும், மதநூற்களைப் பற்றியும் மக்களிடையே பலதரப்பட்ட ஐயப்பாடுகள் தோன்றியுள்ள காலம் இது.

இன்றைய உலகம், மதப்போர்வையால் ஏற்பட்ட இருளில் மயங்கிக்கிடங்கும் சில பழுத்த வைதிகர்களையும் தனது பகுத்தறிவுச்சுடரால் தெளிவு பெறச்செய்து, மத மயக்கத்தை மாற்றி மன்பதையின் மாசற்ற மாணிக்கங்கள் ஆக்கியும், புராணங்களே எங்கள் புகலிடம் - இதிகாசங்களே எங்கள் இருப்பிடம் ஆகமங்களே எங்களுக்கு ஆதரவு-உபநிஷதங்களே எங்களுக்கு உயிர்-தேவாரமே எங்களுக்குத் தென்பு-பிரபந்தமே எங்கள் பேறு என்றெண்ணி இறுமாந்திருந்தவர்களிற் பலரைப் பகுத்தறிவுலகிற்குச் செல்லும் பாதையைச் செப்பனிடும் சீர்திருத்தச் சிற்பிகளாக்கியும் வருகின்றது. இவற்றையெல்லாம் மோட்டார் வேகத்தில் மதத்தைப் பரப்பும் முயற்சிக்கு ஆதரவு தரும் அரசியல் ‘அறிஞர்கள்’ ஆரஅமர யோசித்துப் பார்க்கவேண்டும்.

கூலித்தொழிலாளர், கொண்டு விற்போர் போன்ற வேலைப் படிகளாம் வேடதாரிகளை நம்பி, அவர்களால் வீசப்படும் மதவலையில் சிக்கிச் சர்க்கார் தன்னுடைய உருவான திட்டங்களை உதாசீனம் செய்து விடக்கூடாதென்பதை, நாட்டு நலனில் அக்கறை கொண்டுள்ள எவரும் எடுத்துக் காட்டாமல் இருக்கமுடியாது.

வேட்டியும், தாள்வடமும், வெண்ணீறும், வெண்பல்லும் காட்டி, நாட்டைக் குட்டிச்சுவராக்க முயலும் நயவஞ்சக ஞானக் கள்வர்களால் இதுவரை நாம் அடைந்துள்ள இன்னல்களை எண்ணிப் பார்க்கும் எவரும் இன்று, அத்தகையவர்களால் நடத்தப்படும் மதப்பிரசாரத்துக்கு மயங்கி, மன்பதையின் நல்வாழ்வைக் கெடுக்கும் கேட்டுக்குத் துணைபுரிய மாட்டார்கள்.

எனவே, முதலமைச்சர், கோயில்கள் மடங்கள் கட்டுவதற்குப் பண உதவி செய்ததுபோதும், இனிக் கல்லூரிகளும், விஞ்ஞான - ஆராய்ச்சிக் கழகங்களுமே நமக்குத் தேவை. ஆகையால், இத்துறையில் பணத்தைச் செலவிட நாட்டுக்கோட்டைச் செட்டியார்களும் பிறரும் முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்ளும் அளவுக்குக் காலமாறுதலும், மக்களின் விழிப்பும் ஏற்பட்டிருக்கும் இக்காலத்தில், காவி அணிந்து - கமண்டலம் ஏந்தி - ஓம் நமச்சிவாயா என்று உரத்த குரலில் பேசும் தம்பிரான்களின் மோட்டார் வேக மதப்பிரசாரம் நாட்டு மக்களுக்கு என்ன நன்மையை உண்டாக்கிவிடும் என்பதனை, அதனை ஆரம்பித்துவைத்த கல்வியமைச்சர் இதற்கு முன்யோசித்துப் பார்க்கவில்லையென்றாலும், இனிமேலாவது மதசம்பந்தமான கருத்துகளில் பல, நாட்டில் எவ்வளவு மாறுதல் அடைந்துள்ளன என்பதை எண்ணிப் பார்ப்பதோடு, மக்களின் நல்வாழ்வுக்கான திட்டங்களை வகுப்பதிலேயே அவருக்குக் கிடைத்துள்ள அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம்.

நம்மவரிற் பெரும்பாலார், தாம் கடவுளிடத்து அன்பு செலுத்துவதாகச் சொல்லி, அப்பெயருக்கு அடிமையாகின்றனர். அன்புக்கும் அடிமைக்கும் உள்ள வேறுபாட்டை அவர்கள் உணர்வதில்லை. அன்பு - நட்பையும், அடிமை - அச்சத்தையுமே உண்டாக்குவன என்பதை உள்ளபடியே உணர்கின்றவர்கள், தாம் கடவுள் பெயரைக் கேட்டவுடன் உண்டாகும் அடிமையுணர்ச்சியை உடனே விட்டுவிடுவர். கடவுள் என்ற சொல்லின் பொருளை அறியாது பலர், தாம் புரிகின்ற தீயசெயல்களைப் பிறர் அறிந்துகொள்ளாதபடி மறைப்பதற்காகவே கடவுள் வழிபாடு செய்வதாகப் பாசாங்கு செய்கின்றனர். நம்பிக்கை மோசமும், திருட்டுத் தொழிலும், பொய்யும் கடவுள் பேரைச் சொல்லியே நடைபெறுகின்றனவென்பது கண்கூடு. ஆதலால், கடவுளுக்காகப் பரிந்து பேசி மதப் பிரசாரம் செய்பவர்களிடம், மக்கள் விழிப்பாய் இருத்தல் வேண்டும்.

(11.7.1948)