அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


மவுண்ட் ரோட் பெருமானுக்கு அர்ச்சனைகள்!
அறிவையும், செய்கையையும் விற்பது!

அதிக வருமானம் ஆடைவது!

விளம்பரம் பல போடுவது!

கொள்ளை லாபம் அடிப்பது!

மாதம், மூன்று லட்சம் ரூபா விளம்பரத்தில் மட்டும் பெறுவது!

மக்களின் ஆதரவு என்றும் உண்டு என்று கனவுகாண்பது!

விளம்பர வரி கொடுக்க மறுப்பது!

வற்புறுத்திக் கேட்டால் மிரட்டுவது!

சர்க்காரை என்றுமே ஆதரித்து வராதது!

சர்க்காரைக் கவிழ்க்க ஆசைப்படுவது!

சர்க்கார் கவிழ்ந்தால் ஆனந்தப்படுவது!

இந்த அர்ச்சனைகள் இப்பொழுது வழங்கப்பட்டுள்ளன. யாரால் யாருக்கு வழங்கப்பட்டுள்ளன? அறிய ஆவல் பிறக்கத்தானே செய்கிறது!

யாருக்கு இந்த அர்ச்சனைகள்? மீண்டுங் கேட்கத் தூண்டுகிறது, அல்லவா! திராவிடர் கழகத்துக்கு இருக்குமோ? அதற்கு, மாதம் மூன்று லட்ச ரூபாய் விளம்பரத்தின் மூலம் வரும்படி எது! யாதேனும் கள்ளமார்க்கட் கொள்ளைக்காரர் ஸ்தாபனத்துக்கு வழங்கப்பட்டதாகுமோ? அத்தகைய ஸ்தாபனம் தான் வரி கொடுக்க மறுக்காதே! ஏதேனும் தொழிலாளர் கூட்டத்திற்கு அன்புடன் அளித் அர்ச்சனைகளோ? சர்க்காரை மிரட்டுவதால் தனக்கு எதும் பலன் கிடைக்காது என்பதைத்தான் அது நன்கு அறிந்திருக்கிறதே! பின் எதற்கு அளிக்கப்பட்ட அர்ச்சனைகள் இவை? பொறுங்கள், கூறிவிடுகிறேன். திருமாலின் சங்கு நடுவிடத்தும், யானையும், காமதேனுவும் இருபுறத்தும் அமைய, குறி தரித்துக் கொண்டு, நாள்தோறும், ஊர்தோறும், நாட்டில் வலம் வந்து கொண்டிருக்கும், மாடி வீடுடையான்-மஞ்சள் சுவர்தானுடையான்-வழியிரண்டுடையான்-வண்ணக் கோல நலமுடையான்-நாறுங் கூவங்கரையகத்தான் கூறிடும் விருந்து மாளிகை எதிருடையான்-எதும் சங்கு உள்ளுடையான் சுற்றும் சக்கரப் பொறிகளுடையான்-மவுண்ட்ரோடு வாழ் பெம்மனாகிய இந்துவுக்கு வழங்கப்படும் அர்ச்சனைகளே மேலே குறிக்கப்பட்டவை!

யார் இந்த அர்ச்சனைகளை வழங்குபவர்? கருப்புச் சட்டையினரா? இல்லை! செஞ்சட்டையினரா? இல்லை! இவர்களுக் கெல்லாம், பெம்மானை வழிபடும் பெருவழக்கம் இருந்ததில்லையே! கதருடை அணிந்து நாட்டைக் காத்துவரும் சென்னைப் பிரதமர் தோழர் பி.எஸ். குமாரசாமி ராஜா அவர்களே இவ்வர்ச்சனைகளை வாரியிறைத்திருக்கும் பக்தகோடி யாவார்! நெல்லையம்பதியிலே நின்று, மவுண்ட்ரோடிலேயே வதிந்து வம் சில உபபெருமாள்களையும் சேர்த்து அர்ச்சனை புரிந்துள்ளார் பிரதமர் குமாரசாமி ராஜா.

பத்திரிகைகளில் வரும் விளம்பரங்களின் மீது பத்துச் சதவிகிதம் வரிவிதிக்கப் போவதாகச் சென்னை அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின் பேரில், சென்னை மவுண்ட்ரோடிலுள்ள இந்துப் பத்திரிகை அலுவலகத்தில், பத்திரிகை முதலாளிகள் பலரும் கூடி, மந்திரிகள்-சட்டசபை அங்கத்தினர்கள் முதலியவர்களுடைய சொற்பொழிவுகளை, விளம்பர வரி விதிப்புக்கு எதிர் நடவடிக்கையாகத் தாங்கள் இனிப் பிரசுரிக்கப்போவதில்லை என்று அரசாங்கத்தை மிரட்டும் முறையில் அவர்கள் செய்த தீர்மானத்தை யாவரும் அறிவார்கள். அந்த மிரட்டல் தீர்மானத்திற்கு விடையிறுக்கும் முறையில்தான் நெல்லைப் பொதுக் கூட்டத்தில் பேசும்போது, பிரதமர் தோழர் ராஜா சற்று நெஞ்சுத் துணிவுடன் சில மொழிந்துள்ளார்.

பல்வேறு தொழில்களையும் முதலாளிகள் பலரும் கைப்பற்றிக் கொண்டு, அவ்வத் தொழிற் துறைகளில் ஏகபோக வல்லரசாட்சி நடத்திக் கொள்ளை லாபத்தை ஏப்பமிட்டு வருவது போலவே, இங்கு பத்திரிகைத் தொழில்களை ஒரு சிறு கூட்டத்தார் கைப்பற்றிக் கொண்டு, நாளடைவில் பெரும் முதலாளிகளாகி இன்று தனியாட்சி நடத்திக்கொண்டு குறையாக் கொள்ளை லாபத்தை விளம்பரங்களின் மூலம் கொட்டிக் கொண்டு வருகின்றனர். மற்றைய துறைகளிலுள்ள பெரும் முதலாளிகளுக்கு வரி விதித்து அரசாங்கத்தின் பற்றாக்குறையை நிறைவேற்றிக்கொள்ள முயலுவது போலவே, பத்திரிகை முதலாளிகளுக்கும் வரிவிதிக்கச் சென்னை அரசாங்கம் முனைந்திருப்பது போற்றுதற்குரிய ஒன்றாகும். காரணம் இதுவரையில் வரிகொடாமலே தப்பித்து வாழும் முதலாளியினம் அது.

உணர்ச்சி வயப்பட்டு, நாட்டின் மக்களுள்ளத்தில் எழுச்சியூட்ட வேண்டிக் கிளம்பியிருக்கும் பல சிறிய பத்திரிகைகள் விளம்பரங்களுக்காகத் தம் வாழ்வை நடத்துவதில்லை, என்றாலும் தானாகக் கிடைக்கும் சில விளம்பரங்களையாவது ùப்றறுக் கொண்டால்தான், மக்களுக்கு எளிய முறையில் பணியாற்ற முடியும் என்ற நிலையிலுள்ளவை களுக்காகவே அவைகள் இருக்கின்றன. அப்படிப்பட்ட பத்திரிகைகளுக்கு விளம்பர வரி விதிக்கப்படுமாயின், பத்திரிக்கையின் வாழ்வே பாதிக்கப்படக் கூடிய நிலை ஏற்படக்கூடும்.

அந்த நிலையிலள்ளவர்கள், வரி விதிக்க முற்படும் அரசாங்கத்தின் போக்குக்கண்டு வருந்தச் செய்வார்கள் என்பது உண்மை.

“சிறிய பத்திரிகைகளின் கஷ்டங்களை நான் உணர்ந்து கொள்ள முடியும். அவைகளுக்கு உதவியளிக்க நான் விரும்புகிறேன்”.

என்று பிரதமர் ராஜா கூறுவதைக் காணும்போது, மேற்கூறிய உண்மையை உணர்ந்து, சிறிய பத்திரிகைகளுக்கு அதாவது குறைந்த அளவு விளம்பர விகித வருமானம் பெறும் பத்திரிகைகளுக்கு விதி விலக்கு அளிக்கப்படுமோ என்று எண்ண இடமேற்படுகிறது. அப்படி ஏற்பட்டால் தான் நீதி புரிந்ததாகும், சட்டமும் முழுமனதுடன் நாட்டு மக்களால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாக விளங்கும்.

பத்திரிகை உலகில் கொள்ளை இலாபமடித்துவரும், முதலாளிகள் ஏதேச்சாதிகார தர்பார் நடத்திவர இதுவரையில் வசதி ஏற்பட்டிருந்ததால், நாட்டு மக்களுக்கு விதிக்கப்படும் வரிகளைப் பொறுத்து, பொது மக்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கவலையேயில்லாமல் அரசாங்கத்தின் வரி விதிப்புகளை ஆதரித்தனர். இராசகோபாலாச்சாரியார் அன்று விதித்த விற்பனை வரிக்கு ஆதரவு தந்தனர். எதிர்த்துப் பேசாமல் இரந்தனர். எதிர்த்துப் பேசியவர்களையும் பேசிய பத்திரிகைகளையும் கேலி செய்தனர். அதே விற்பனை வரி வளர்ந்து இன்று தங்கள் மடியில் கையை வைக்க வரும்போது சீறிக் குதிக்கின்றனர். இந்தப் பத்திரிகை முதலாளிகளெல்லாம் வரிகொடுக்கத்தாளாத வர்களா? மாதம் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் கொள்ளையிடுகின்றனர் விளம்பர விகிதத்தின் மூலம் அந்தக் கொள்ளையில் ஒரு பகுதியை வரவு செலவுத் துண்டுவிழும் அரசாங்கத்திற்குக் கொடுத்தால் என்ன குடிமுழுகிகப் போய்விடும்? சிறிது இடம்பரமும் சிறிது அகம்பாவமும் இதனால் குறையலாமே தவிர, இவர்களுக்கு இதுவரையில் ஏற்பட்டிருக்கும் நலன்கள் எவ்வகையில் குறைந்து விடும்? தங்களுடைய முதலாளித்துவப் போக்கிற்குச் சிறிதளவும் பாதகம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று கூக்குரலிட்டுக் கொக்கரிக்கின்றன, இந்துவும், சுதேசமித்திரனும் அவையன்ன பிறவும்.

“சில பத்திரிகைகள் ஏராளமாக இலாபம் சம்பாதிக்கின்றன. ஒரு பத்திரிகை மட்டும், விளம்பரங்கள் மூலம், மாதம் ரூ. 3 இலட்சம் சம்பாதிக்கிறது. அதன் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை. எந்தப் பத்திரிகையை நான் குறிப்பிடுகிறேன் என்பதை நீங்கள் சுலபமாகத் தெரிந்து கொண்டிருப்பீர்கள். இந்தப் பத்திரிகையின் ஆட்சேபம்தான் பிரமாதமாக இருந்தது”.
என்று பிரதமர் 9-6-49ம் நாள் நெல்லையில் நடைபெற்ற அந்தப் பொதுகூட்டத்தில் பேசும்போது குறிப்பிட்டுள்ளார். மேலே அவர் குறிப்பிட்டுள்ளது. இந்துப் பத்திரிகையைத் தான் மறைமுகைமாகக் குறிக்கின்றன என்பதை அனைவரும் எளிதில் அறிந்து கொள்ளலாகும்.

காங்கிரஸை இதுவரையிலும் ஆதரித்து வரும் பத்திரிகைளாயிற்றே என்பதையும் கருதாமல், அவைகள் இப்பொழுது மேற்கொண்டிருக்கும் பிற்போக்குத் தன்மை கண்டு வெகுண்டெழுந்த பிரதமர் ராஜா அவர்கள். சற்றுக் காரசாரமான சொற்களால் அப்பத்திரிகைகளின் உண்மையான நோக்கத்தை வெளியிட்டு விட்டார். “அறிவையும், செய்கையையும் விற்று ஏராளமாக இலாபம் சம்பாதித்துள்ள பத்திரிகைகள், இந்த வரி விதிப்பை எதிர்ப்பதுதான் எனக்குப் புரியவில்லை” என்று இடித்துரைக்கிறார். “இப்பத்திரிகைகள் இவ்வளவு இலாபம் சம்பாதிப்பது எப்படி நியாயமாகும்” என்று கேட்கிறார். இதுவரையில் ஏற்படாத துணிவுடன், “விளம்பரங்கள் மீது வரி வதிப்பது தங்களைப் பாதிக்கும் என்றால், அவர்கள் கூறுகூதை நான் பரிசீலனை செய்யத் தயாராக இருக்கிறேன்” என்று சவாலும் விட்டிருக்கிறார். மவுண்ட் ரோடு பெம்மான்கள் இந்தச் சவாலை ஏற்றுத் தம் நிலைகளை விளக்குவது தானே ஏன் இன்னும் மௌனம் சாதிக்கின்றன.
பத்திரிகை உலகில் காட்டாட்சி நடத்தி வந்த இச்சிறு முதலாளிக்கூட்டம், அரசாங்கத்தை அடிக்கடி மிரட்டித் தங்கள் காரியத்தைச் சாதித்து வந்திருக்கின்றன. இனியும் சாதித்து வரும் என்றாலும் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. பத்திரிகை முதலாளிகளின் சுட்டுவிரல் அசைவிற்கு அரசாங்கமும் கூடி அடிக்கடி அசைவு கொடுத்துக் கொண்டு, அதன் போக்குப்படிச் செயலாற்றி வந்திருக்கிறது. இந்தப் பத்திரிகை முதலாளிகள் தங்கள் கொள்கைக்கு மாறுபட்டு விளங்கும் எத்தணையோ சிறிய பத்திரிகைகளை, அரசாங்கத்தின் உதவிகொண்டு தலை எடுக்க வொட்டாமல் செய்திருக்கின்றன, அழித்தொழித்திருக் கின்றன, சிதைத்துச் சீரழித்து வந்திருக்கின்றன, இன்னும் எத்தணையோ சீரிய நல்ல பத்திரிகைகளையெல்லாம் அழித்தொழிக்கும் படியாக அரசாங்கத்திற்கு இலோசனை கூறிவருகின்றன. தம் இன நலன்களுக்கு ஊலைவைக்கக் கூடிய சிறந்த காவியங்களையும், கதைகளையும் கட்டுரைக் கோவைகளையும், நாடகங்களையும் பறிமுதல் செய்துவிடும்படி அரசாங்கத்திற்கு எடுத்துரைத்து வந்திருக்கின்றன. இவ்வளவு கேடுகளையும புரிந்து, விளம்பரங்களையெல்லாம் தமக்கே கிடைக்கும்படியாகச் செய்து கொண்டு, ஆவற்றினால் வரும் கொள்ளை லாபத்தை முழுவதும் ஏப்பமிட்டுக் கொண்டு வருகின்றன. அப்படி ஏப்பமிடும் பொருளிலே ஒரு பகுதியை அரசாங்கத்திற்கு வரியாகக் கொடு என்றால், இந்துவுக்கும், சுதேசமித்திரனுக்கும் வயிறு பற்றிக்கொண்டு ஏரிகிறது. ஏழைகளின் தலைமீது விற்பனைவரி விதிக்கும் போதெல்லாம் ஆதரித்து இருந்துவிட்டு, இப்பொழுது அந்த வரி தம்மீது பாயவரும்போது, அரசாங்கத்தின் மீது சீறத் தலைப்படுகின்றன.

பத்திரிகையின் சீறுதல்களுக்குப் பல சமயங்களிலே, அரசாங்கம் படிந்து கொடுத்துவந்துள்ளது. அதனை நினைவில் வைத்துக்கொண்டு இப்பொழுதும் சீறுகின்றன, மிரட்டிப் பார்க்கின்றன. பத்திரிகை முதலாளிகளின் தீர்மானத்திற்குப் பதிலளிக்கையில், நிதிமந்திரி, கோபால் ரெட்டியார், பத்திரிகைகளுக்குச் சலுகை காட்ட நாங்கள் தயங்கமாட்டோம் என்றும் பத்திரிகைகள் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்து விடக்கூடதென்றும் அஞ்சிப் பணிந்துதான் கேட்டு கொண்டள்ளார். பிரதமர் குமாரசாமி ராஜாவும் தமக்குப்படிந்து விடுவார் என்றே, பத்திரிகை முதலாளிக் கூட்டம் எண்ணியிருந்திருக்கிறது. ஆனால் பிரதமர், வழக்கத்திற்கு மாறாக, பத்திரிகைகளின் மிரட்டலுக்குப் பயப்படாமல், பாராட்டத்தக்க வகையில், பத்திரிகை முதலாளிக் கூட்டத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“மந்திரிகள், சட்டசபை அங்கத்தினர்கள் முதலியோருடைய பிரசங்கங்களை, விளம்பரவரி விதிப்புக்கு எதிர் நடவடிக்கையாக அவர்கள் பிரசுரிப்பதில்லையென்றால், நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்பது சர்க்காருக்குத் தெரியும். முதலாவதாக, எல்லாச் செய்திகளையும் ரேடியோ மூலம் வெளியிட முடியுமாதலால் பொதுமக்கள் செய்தியின்றித் தவிக்க மாட்டார்கள். இரண்டாவதாக, பணம் கொடுத்துப் பத்திரிகை வாங்கும் பொதுமக்கள், மந்திரிகள், சட்டசபை அங்கத்தினர்களின் பிரசங்கங்கள் பிரசுரமாகாத பத்திரிகைகளைப் பகிஷ்கரிக்கும் படி பொதுமக்களை வேண்டிக்கொள்ள நான் கொஞ்சமும் தயங்கமாட்டேன். இம்மாதிரி மனப்போக்கைத் தாங்கள் ஆதரிக்க முடியாதென்று பொதுமக்கள் இப்பொழுதே கூறவேண்டுமென்று நான் விரும்புகிறேன். இது அவர்களுக்கு நல்ல படிப்பினையாகவும் இருக்கும்.”

என்று பிரதமர் பத்திரிகை முதலாளிகளுக்கு எச்சரிக்கை விடுப்பதோடு, பொதுமக்களுக்கு வேண்டுகோளையும் விடுததுள்ளார்.

சிறிய பத்திரிகைகளுக்குச் சலுகை காட்டி, விளம்பரக் கொள்ளையடிக்கும் பத்திரிகைகளுக்கு விளம்பர வரி விதிக்கச் சென்னை அரசாங்கம் முற்படுமேயானால் பொதுமக்களின் ஆதரவு, அந்த அளவுக்கு. அரசாங்கத்திற்குக் கிடைக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆனால் எடுத்த இந்த அவசியமான செயலில் சிறிது தளர்ச்சி ஏற்படுமானால், அப்பொழுது பொதுமக்கள் பரிகசிக்கத்தான் செய்வர். பொது மக்களின் ஆதரவு இந்த வகையில் உறுதியாக உண்டு என்பதைப் பிரதமர் ôஜா உணர்ந்து கொள்ளவேண்டும். பொதுமக்கள் இந்த வரியை ஆதரிக்காவிட்டால், தாம் ராஜினாமா செய்யக்கூடத் தயார் என்று சூளுரை கூறியிதிலிருந்து, பொதுமக்களின் ஆதரவு இதற்கு இருக்கிறது என்பதை அவர் உணர்ந்து கொண்டார் என்றே தெரிகிறது.

கொள்ளை லாபமடிக்கும் பத்திரிகைகளுக்கு விளம்பரவரி விதிப்பது முறைதான் என்று வாதாடுகிறேமேயல்லாது, அரசாங்கம் ஏற்படுத்தும் எல்லாவரிகளும் சரியானதே என்று இங்கு நாம் வாதாடவில்லை.

வரவு - செலவுத் திட்டத்தில் துண்டு விழுவதை விளம்பரவரி மூலம் ஓரளவுக்கு நிறைவு படுத்திக்கொள்வதை நாடு வரவேற்கும் என்பதில் ஐயமில்லை. மற்றவரிகளைத் தனித்தனியாக ஆராய்ந்து சரியானதென்றால் ஏற்றுக் கொள்ளவும், ஆநீதியுடையதானால் அதனைக் கண்டிக்கவும் முற்படவேண்டும். அந்த முறைப்படி இந்த விளம்பரவரி ஏற்றுக் கொள்ளக் கூடிய வொன்றேயாகும்.

மவுண்ட் ரோடு பெருமானுக்கு பிரதமர் ராஜா வழங்கியிருக்கும் அர்ச்சனைகளை, நாடு அறிந்து இனியேனும் உண்மைநிலை அறிந்து இனியேனும் உண்மைநிலை தெரிந்து, நல்ல பாடத்தை அப்பெருமானுக்குக் கற்பிக்குமாக!

(திராவிடநாடு 19.6.49)