அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


முடக்குவாதம் தீர!

அப்பமும் அவல்பொரியும், பழமும் பிறவும் குவித்து, “மத்தளவயிறனை”த் தொழும், பக்தகோடிகளுக்குப் பகுத்தறிவு, சுலபத்தில் உதித்து, அங்கு இங்கு எனாதபடி எங்கும் பிரகாசமாய் இருக்கும் ஆண்டவன் என்ற தத்துவத்தைத் தித்திக்கப் பேசிவிட்டு, அதற்கே முரணாக, ஆனைமுகத்திலே ஓர் உரு அமைத்து, இது ஆறுமுகனுக்கு அண்ணன் என்று, இமயவன் வீட்டுக்கு எதிர் வீட்டில் ஏழெட்டாண்டுகள் குடியிருந்தவர்போல் கூறிக்கொள்வதும், கொண்டாடுவதுமாகவுள்ள கோணற்சேட்டையை ஒரே அடியிலே விட்டுவிடுவார்கள் என்று நாம் பித்தசித்தம் கொண்டில்லை. எனவேதான், அவ்வப்போது பைய்யப்பைய்ய, இடைவிடாது, உண்மையை உரைத்தபடி இருக்கிறோம், மெல்ல மெல்ல அவர் தம்மருள் நீங்கி, மனமாசுபோய், மெய் ஞானம் பெறட்டும் என்ற மேலான எண்ணத்தால்.

கணபதி விழாவுக்காகக் களிமண்ணுங் கையுமாகச் சென்ற ஆண்டு இருந்தவர்களிலே, எத்தனை “பக்தர்கள்” இவ்வாண்டு, திருந்தி, விழா கொண்டாடாது இருக்கின்றனர், என்று கணக் கெடுத்துக் கூறமுடியாது. ஆனால், கணபதி பூஜைக்காகக் காலை யிலே குளித்து, கட்டுகட்டாக விபூதி அணிந்து, கையிலே விநாயக ரகவல் பிடித்து, களிமண் உருவெதிரே கால்கடுக்கத் தோப்புக் கரணமிடும், “ஐயாவும்” சமையற்கட்டிலே, மொச்சை சரியாக வெந்ததா, மோர் குழம்பிலே உப்பு அளவாக உளதா, கொழுக் கட்டையிலே, வெல்லம் குறைவா, சரியா, என்று “சபரிவேலை” செய்யும், “அம்மையும்” கணபதி பொம்மை செய்ததுபோக மிச்ச மிருக்கும் களிமண்ணை, உண்டையாகவோ, உரலாகவோ, உருவ மைத்து, உவகையுடன் கூவும் “குழந்தைகளும்” உள்ள இல்லத்திலே, “இந்த இதழ்” சென்றால், பக்தரின் சித்தத்திலே, ஒரு துளி பகுத்தறிவுப் பொறி சென்று தங்கும். பிறகு ஆராய்ச்சி எனும் காற்றடிக்க வடிக்க, பொறி, பெருந்தீயாகும், அத்தீ, நெடுநாளைய நினைப்பு, பழங்காலப் பழக்கம் எனும், குவியலைக் கொளுத்திக் கருக்கித் தள்ளும், என்ற நம்பிக்கையே, நம்மை, இப்பணிபுரியச் செய்கிறது; பிறரை வேண்டுமென்றே புண்படச் செய்யவேண்டுமென்றன்று!

உருவமற்றவனுக்கு உருவமமைப்பதும், உலகரட்சகனுக்குப் பட்சணமிடுவேன் என்ற பிச்சுப்பிள்ளை விளையாட்டில் ஈடுபடுவதும், அறிவு வளர்ச்சிக்கு அறிகுறியாகாது. ஆன்றோர் வழிபட்டனர், அடியேனும் அவ்வண்ணமே என்றுரைப்பது, விஷய விளக்கமுமன்று, விவேகமுமன்று, வாதமுறையுமன்று! ஆன்றோர், ஆன்றோர் என்பதன் கொடிவழிப்பட்டியின் கோடியை, உச்ச்ததைத் தேடிப்பார்ப்போமானால், உச்சிக் கிளையிலே உட்கார்ந்துகொண்டு, மச்சுமீது உலவுவோரைக்கண்டு சேட்டை புரியும் குரங்கினிடம் போய்ச்சேரவேண்டி நேரிடும். மனிதனுக்கு ஆதி தந்தை, மூலவர், குரங்கு, என்பது டார்வின் தத்துவம். எவரும் அந்நிலைபெற நினையார்! எனவே ஆன்றோர் என்ற சாக்கு மொழியைவிட்டு, அறிவு எனும் மெய்நெறி நின்று, மேதினியின் மற்றப் பாகங்கள், எவ்வளவோ முன்னேறியிருக்க, இங்கு மட்டும், மடைமை மதமாகவும், சேட்டை சடங்காகவும்,பாதகர் புரோகிதராகவும், வேடம் வைதீகமாகவும், இருப்பது சரியா, என்பதனை யோசித்துப்பார்க்க வேண்டுகிறோம்.

மதவாதிகளின் மொழி வழியே நின்று பார்ப்பினுங்கூட, “விநாயகர்” வெளிநாட்டிலிருந்து, சில நூற்றாண்டுகளுக்கு முன்னர், இங்கு கொண்டுவரப்பட்டவர், என்பது தெரிய வருகிறது. இது தெரிந்தோருங்கூட, “களிமண்ணுங்கையுமாக” விநாயக சதுர்த்தி என்ற விழாவை, சென்ற 3ந் தேதி கொண்டாடினர் என்றால், மதம், மக்களை எவ்வளவு தூரம் மயக்கத்திலே இழுத்துக்கொண்டு போய்விட்டது, என்பது விளங்கும். அவ்வளவு, கப்பிக் கொண் டிருக்கும், சமுதாயத்திலே, சிலராவது - அந்தத்தொகை பெருகிக் கொண்டே வருகிறது - ஓரளவு மக்களாவது, களிமண்ணுங்கையுமாக இராமல், அச்செயல் புரிவோரைக் கண்டு, கைகொட்டிச் சிரித்து, பெரிய பிள்ளைகளின் சிறிய விளையாட்டு இது, என்று கூறும் நிலை தமிழகத்திலே இருக்கிறதே, இதுவே, ‘மகத்தான தோர் வெற்றி என்போம்.’ வறண்டுகிடந்த கட்டாந்தரையிலே ஒரு பாகத்தில் வரகரசி விளையும் அளவுக்காவது வளமை உண்டானால், மகிழ்ச்சிதானே. இருண்ட வானத்திலே, மினுக்கும் விண் மீனும், வழிப்போக்கனுக்கு உதவிதானே! அதுபோலவே, மூடத்தனம் எனும் மூடுபனி கப்பிக்கொண்டுள்ள இச்சமுதாயத்திலே, ஓரோர் இடத்திலே, அறிவுச்சுடர் தோன்றுவது, வியப்புக்கும் மகிழ்ச்சிக்கும் உரியதே. அந்த அணி வகுப்பிலுள்ளவர்களை நாம் பாராட்டுகிறோம். களிமண்ணுங் கையுமாக இருந்தவர்களை நாம், பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம், “ஐயன்மீர்” நீங்கள் ஈடுபட்ட செயலும், அச் செயலைத் தூண்டிவிட்ட சிந்தனையும், அறிவுக்கு ஏற்றது தானா என்பதைச் சற்றே சிந்தித்துப் பாருங்கள். உலகம் முன்னேறியுள்ள நாட்களிலே, இதுபோன்ற உன்மத்தம் ஆகுமா என்று. மத ஏடுகளிலே, கணபதியின் பிறப்பு வளர்ப்பு கூறப்பட்டுள்ளதைப் பார்த்தால், அதிலே உள்ள ஆபாசம், அருவருப்பைக் கிளறுமே யன்றி, தொழுகையில் ஈடுபடும்படி செய்யாது. மதத்தரகர்களின் மொழியையே தமது வாழ்க்கைக்கு வழியாகக் கொண்டுள்ளவர்கள் மட்டுமே இத்தகைய காரியத்தில் பிடிவாதம் காட்டுவர். அந்தப் பிடிவாதமே, இந்நாட்டுக்கு முடக்குவாத நோயை உண்டாக்கி விட்டது. அந்நோய் தீர, பகுத்தறிவுக் கஷாயம் பருகத்தான் வேண்டும். கைப்பாக இருக்கிறதே என்று, கூறிடின், பயனில்லை. இன்னும் எத்தனை காலம், களிமண்ணுங் கையுமாக இருந்து, கருத்திழந்து பாழாவது, என்று சிந்தித்துப் பார்க்குமாறு, சிவனுடைய மைந்தனுக்குச் சிந்து பாடிவிட்டு, சிற்றுண்டி ஜீரணித்ததா என்று சந்தேகப்படும் சீலர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

(5.9.1943)