அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


முகாம் அமைக்கிறார்கள்!
“இம் மாகாணத்தில் பிராமணர்கள் மீது பிற வகுப்பாருக்குக் கெட்ட எண்ணம் ஏற்படும்படிச் செய்யப்பட்டு வருகிறது. இதை அலட்சியமாக விட்டுவிடக்கூடாது. முளையிலேயே கிள்ளி விட வேண்டும்.”

சேலம் பிராமண மாநாட்டினர் இவ்விதம் பேசியும் தீர்மானித்தும் இருக்கிறார்கள்.

ஏகாதிபத்ய தாசராக இருந்து, பதவிகளில் புரண்டு பழுத்த கிழவராக இருக்கும் விஜயராகவாச்சாரியார் தலைமைதாங்கினார், இந்தத் தர்ப்பாசூரர் மாநாட்டுக்கு! தென்னாட்டிலே பெரிய முதலாளியாக உள்ள மோட்டார் சுந்தரம் ஐயங்கார், திறந்து வைத்தார் இந்தத் திருப்பிரம்மங்களின் மாநாட்டை.

பிராமண மாநாடு பிராம்மணீயத்தை எப்படி வளர்ப்பது என்பதற்காக என்றால், பதவி காரணமாகவும், பணம் தேடுவது காரணமாகவும், படிப்படியாகப் பிராமண தர்மத்தை இழந்துபோக வேண்டிய நிலைபெற்று விட்டவர்கள், கூடிக்கலந்து பேசிப் பயன் என்ன?

பிராமணன் என்னவிதமாக இருக்கவேண்டும் - அவனுடைய வாழ்க்கை முறை எப்படி இருக்கவேண்டும். என்று அவரக்ள் போற்றிப் புகழ்ந்துவரும் ஏடுகளிலே குறிப்பிட்டுள்ள இலட்சணங்களை இழந்தவர்களும், அந்த இலட்சணங்களின்படி இந்நாட்களில் வாழமுடியாது என்பதை அறிந்து கொண்டவர்களும், மாநாடு கூடி, பிராமணியத்தைப் பாதுகாக்க முற்படுவது, மொட்டைத் தாதர்கள் கூடிக்கொண்டு, கூந்தலின் நேர்த்தியைப் பற்றிப் பேசி வழிவகுப்பது போன்றதுதான்!

பிராமண தர்மத்தின்படி நடந்து கொள்ளாமல், ஆச்சாரத்தை அறியாமல், வாழ்ந்துவரும், தமது இனத்தவரை, அவர்களிலே ஆச்சார அனுஷ்டானம் அறிந்தவர்கள், ஆவகைளிலேஅக்கறை கொண்டவர்கள், மீண்டும் அந்த ஆச்சாரம் துவங்கவேண்டும் என்பதிலே இவலுள்ளவர்கள், பாயரார் எவ்வெவ் வகையில், என்ன காரணங்களால், பிராமணனுக்குரிய தர்மத்தினின்றும் வழுவி விட்டிருக்கிறார்கள் என்பது பற்றிய விசாரணை நடத்தி, திருத்தம் கூறியோ, தண்டித்தோ அவர்களை, பிராமண தர்ம மார்க்கத்துக்குத் திருப்பி அழைத்துச் செல்லும் திருப்பணியிலே ஈடுபட்டால் நமக்கு ஆட்சேபனை இல்லை - வேடிக்கையாக இருக்கும் பிராமண தர்மத்தை இழந்த பிராமணர்களின் பட்டியலை நாம் கூட, மாநாட்டினரின் உபயோகத்துக்காகத் தரமுடியும் - அவர்கள் திடுக்கிடும் வகையான தகவல்களை, இதாரங்களைக் காட்டமுடியும். மாநாடு பிறகு நடைபெறுமா என்பதே சந்தேகம் ஆகிவிடும், ஏனெனில், பிராமண தர்மம் என்று அவர்களின் ஏடுகளிலே குறிப்பிட்டுள்ள முறையிலே வாழ்ந்துவரும் பிராமணர் நூற்றில் ஒருவர்கூடக் கிடையாது.

நமது பெண்கள் பரதநாட்டியம் இடுவது கூடாது - என்று துக்கத்துடன் பேசவேண்டிய நிலைக்கு வந்துவிட்ட இந்நாளிலா, பிராமண தர்மம் பாதுகாக்கப்பட முடியும்!

உண்மையான பிராமண தர்மம் எப்படிப்பட்டது என்பதைப் பற்றி விவாதிக்காமலே, வாதத்துக்காக ஒப்புக்கொண்டு, நிச்சயமாகவே, பிராமண தர்மத்தைக் காப்பாற்றும் நோக்கம் கொண்டிருந்தால், இப்போது கூட்டியது போன்ற மாநாடுதானா, அதற்கான வழி? மாநாட்டை முன்னின்று நடத்துபவர்கள்தானா, அந்தத் தர்மத்தைக் காப்பாற்றக் கூடியவர்கள், என்று கேட்கிறோம். எப்படிப்பட்ட பழைமை மனப்போக்கினரும், இன்று அறிவர், பிராமணர்கள் பிராமணருக்கு உரிய தர்மத்தின்படி நடக்கவில்லை - நடந்துகொள்ள முடிவதில்லை, என்பதை.

சற்றுத் தெளிவுள்ளவர்கள் அந்த நாட்களிலே, பிராமணனுக்குக் குறித்துள்ள தர்மம் மடடுமல்ல, எந்தக் குலத்துக்காகக் குறிப்பிடப் பட்டுள்ள தர்மமும், இக்காலத்திலே நடைமுறைக்கு, ஏற்றதல்ல என்பதை அறிவர்.

தெளிவு இன்னும் சற்று அதிகமாகப் பெற்றவர்கள், குலதர்மத்தை அனுசரிக்க முடியாது என்பதை மட்டுமல்ல. குலதர்மம் வகுக்கப்பட்ட காலம், சமுதாயத்தின் குழந்தைப்பருவ ஏற்பாடு - சமுதாயம் இன்று அடைந்துள்ள வளர்ச்சியிலே, அந்தத் தர்மங்கள் வெறும் கேலிக் கூத்துத்தான் என்பதை அறிவர்.

மேலும், கொஞ்சம் பகுத்தறிவு பெற்றவர்கள், இந்தக் குலதர்மம் - ஜாதி ஆச்சாரம் - எனும் ஏற்பாடுகளே, சூதானவை, சுரண்டல் முறை, ஒரு குலத்தின் உயர்வுக்காக வகுக்கப்பட்ட சூழ்ச்சித் திட்டம் என்பதை அறிவர்.

சற்று மான உணர்ச்சி உள்ளவர்கள், இந்த முறையை முறியடிப்பதை, வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொள்வர்.

நிலைமை இப்படியிருக்க, பிராமணர்கள் மாநாடு கூட்டுகிறார்கள். பதவியில் புரண்ட ஒரு கிழவரையும் பணப்பெட்டிகளில் மீத படுத்துறங்கும் மற்றோர் பிரமுகரையும் அழைத்து வைத்துக்கொண்டு பிராமண மாநாடு நடத்துகிறார்கள் என்றால், உண்மையில், பிராமண தர்மததைக் காப்பாற்றவோ, ஆச்சாரத்தை நிலைநாட்டவோ அல்ல! ஆனால், ஏன், கூடினார்கள்? அவர்களுக்கு, உண்மையாகவே, பழைய கால பிராமணராக, கோலத்தில் கோட்பாட்டில், வாழ்க்கையில் இருக்கும் நோக்கமா, என்றால், நிச்சயமாக நோக்கம் அது அல்ல - அவர்களின் நோக்கம், ஆச்சாரத்தைப் பற்றியதல்ல, ஆதிக்கத்தைப் பற்றியது!

சமுதாயம் மாறிவிட்டது - மக்களின் மனப்போக்கு மாறிக் கொண்டே இருக்கிறது - இவர்களும் கூடத்தான்! இந்த மாறுதலின் காரணமாக, முன்பு இந்த ஜாதியாரால், எளிதிலே பெற முடிந்த ஆதிக்கம் இன்று பெறமுடியவில்லை. அதனால்தான், மாநாடு கூட்டுகிறார்கள் - மடிசஞ்சியின் மருத்துவத்தை மானிலத்துக்கு அறிவிக்க அல்ல - மயிலை திருவல்லிக்கேணிக்கே அறிவிக்க முடியாது - ஆதிக்கம் அழிந்து படுவதைத் தடுக்கும் முயற்சிக்காக மாநாடு கூட்டுகிறார்கள்.

சேலம் பிராமண மாநாடு ஆதிக்கம் செலுத்தி வந்த ஒரு கூட்டம் நாட்டிலே ஏற்பட்டுவரும் புதிய போக்கின் காரணமாகத் தமது ஆதிக்கம் குறைவது கண்டு, கூடி அழுவதற்கு, ஆத்திரத்தைக் கொட்டிக் கொள்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டதே யொழிய, உண்மையிலேயே, பிராமண தர்மம் என்று ஏடுகளிலே குறிப்பிடப்பட்டுள்ள முறை பாழாகிறதே என்பதனால், மனம் பதறிக் கூட்டப்பட்ட மாநாடு அல்ல!

பிராமண மாநாட்டுக்கு பிராமண தர்மம் தெரிந்த நிபுணர்களல்ல, முன்னணி நிறுத்தப்பட்டவர்கள் - சர்க்காரிலே செல்வாக்கு உள்ள ஒரு சர்! ஆதிக்கத்தை நிலை நிறுத்தம் திட்டம் தயாரிக்கப்பட்டால் அதற்கான செலவுக்குப் பணம் தரக்கூடிய ஒரு முதலாளி - வேதம் ஓதித் தேர்ச்சி பெற்றவரோ உபநிஷத்தின் உட்பொருளை அறிந்தவரோ அல்ல, மாநாட்டுக்கு முன்னணி நின்றவர்கள்.

ஒரு சமயம், தங்கள் அச்சத்தைப் போக்கிக்கொள்ள, ஆறுதல் பெற, அந்தச் சர்ரையும் ஒரு சீமானையும் கொண்டுவந்து நிறுத்தி அழகு பார்த்தனரோ என்னமோ நாமறியோம்.

ஒருசமயம் அச்சமூட்டுகிறார்களோ, எமது ஆதிக்கத்தைக் குலைத்திட முயற்சிக்கும் பேர்வழிகளே! ஜாக்ரதை! இதோ பாருங்கள், எம்மிடம் உள்ள குலமணிகளை, சர் விஜயராகவாச்சாரியார் - சீமான் சுந்தரம் ஐயங்கார்! - இவர்களைக் கொண்டு, உங்களை என்னென்ன பாடுபடுத்துகிறோம் பாரீர், என்று மிரட்டுகிறார்கள் போலும்.

காலம் உணராதவர்களாக இருப்பின் அவர்கள் அவ்விதம் எண்ணிக் கொள்ளவும் கூடும். ஆனால் இது சர்கள், சீமான்கள் ஆகியோரின் சீற்றத்தைக் கண்டு சீர்திருத்தவாதி பயப்படும் காலமல்ல.
ஒருவகையிலே, பார்க்கும்போது “பிராமணர்கள்” தங்கள் ஆதிக்கத்தைப் புதுப்பித்தக்கொள்ள, ஒரு தனிமுயற்சி எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதே, நமக்குக் கிடைத்து வரும் வெற்றியின் அறிகுறி என்று கூறுவோம்.

பிரம்மஞான சங்கம் - சுதர்ம சமாஜம் - மகாஜன சங்கம் தேசியக் காங்கிரஸ் - என்ற பல்வேறு போர்வைகளும் பயனற்றுப் போய், பச்சையாகவே, பிராமண மாநாடு நடத்த வேண்டிய நிலைக்கு, வந்திருப்பதே, நமது வெற்றிகளில் ஒன்று என்றே நாம் கருதுகிறோம்.

அதிலும் தங்கள் ஆதிக்கத்தைப் புதுப்பிக்க, இவர்கள் என்ன செய்கிறார்கள் யாகம் செய்து பூதத்தைக் கிளப்பி ஏவும் காரியமா? சாபம் கொடுத்து, சர்வநாசத்தû ஏவும் காரியமா? அல்ல! அல்ல! அந்தக் காலம் மலையேறிவிட்டது! சர்ரையும் சீமானையும் ஏவிப் பார்க்கிறார்கள்! அதுவும் சர்களுக்கும் சீமான்களுக்கும் அஞ்சும் காலம் கருகிவிட்ட பிறகு! மகாமேதாவிகள் என்று கூறுவர் இந்த பிராமணர்களை! தவறு மிக மிகத்தவறு குதிரை பறிபோன பிறகு - கொட்டிலைப் பூட்டும் மந்த மதியீனர்களைவிட மட்டரகமான மனப்போக்கு ஏற்பட்டுவிட்டது வீழ்ச்சியின் அறிகுறி.

என்ன செய்துவிடுவார் சர். விஜயராகவார்! சர்க்காரிடம் தமக்குள்ள செல்வாக்கின் காரணமாக வகுப்புவாரி நீதியை ரத்துசெய்யச்செல்வார். இவ்வளவுதானே செய்வார்? இதுவும் முடிகிறதா - காங்கிரஸ் திராவிடர்கள் சும்மா இருந்துவிடுவார்களா என்பது வேறு பிரச்சனை - முடிகிறது, என்றே வைத்துக் கொண்டாலும், அதன்விளைவு என்ன ஆகும்? தீர்மானம் நிறைவேற்றனார்களே மாநாட்டில் பிராமண ஜாதியார்மீது மற்ற வகுப்புக்கு விரோத உணர்ச்சி எட்டப்படுகிற, என்று, அந்த விரோத உணர்ச்சியை எட்டிக் கொண்டிருக்க வேண்டியதில்லை எவரும்! தானாகத்தழைக்கும்! தடுக்க முடியாத அளவு தழைக்கும்!

இப்போதாவது, வகுப்புவாரியாக உத்தியோகம் தரும் முறையும் கல்வி வசதி ஏற்படுத்தித்தரும் முறையும் இருப்பதால், மற்ற வகுப்பார்களிலேயும், கல்வி பெறவும், உத்தியோகம் பெறவும் குறிப்பிடத்தக்க அளவுக்கு முடிகிற காரணத்தால், எங்கு பார்த்தாலும் பிராமண இதிககம் என்ற பேச்சுக்கு இருந்துவந்த பயங்கரச் சக்தி ஓரளவுக்குக் குறைந்திருக்கிறது. எல்லா வகுப்பாரிலும் தானே, படிக்கிறார்கள், என்று பேச முடிகிறது - சாந்தி உண்டாக்கச் சௌகரியம் ஏற்படுகிறது. சர்ரையும் சக்கரக் சீமானையும் துணைக்கொண்டு வகுப்புவாரிப் பிரதிநித்வ முறையை ரத்து செய்துவிட்டால், பிறகு, ஆணைக்க முடியாத ஜ்வாலை கிளம்பப் போகிறது! இந்தக் கேட்டினைத்தான், தேடித்தேடி அழைக்கிறார்கள் தாரளமாகச் செய்யட்டும். நாம் தடுக்கப் போவதில்லை!

சேலம் மாநாட்டின் மூலம், அவர்கள் ஏதாவது வெற்றி பெறுவது என்று ஆசைப்படுவதானால், நாம் முதலில் குறிப்பிட்டபடி, பழைய முறையை, குலதர்மத்தைப் காப்பாற்றும் காரியத்திலே வெற்றிபெற முடியாது - உத்யோகத்தைப் பறித்துக்கொண்டு, அதன் மூலம் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்காக, கம்யூனல் ஜி.ஓ.வை ரத்து செய்ய வைப்பது என்ற வெற்றியைப் பெறலாம். நேருசர்க்காரின் துணைக்கொண்டு இந்த வெற்றியைப் பெற முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அந்த வெற்றியே, தங்களுக்கு வீழ்ச்சியைத் தரப்போகிறது என்பதை, பாபம், உணரவில்லை! எதையோ, முளையிலேயே கிள்ளிவிடவேண்டும் என்று பேசினார்களே, அதற்காக, அவர்கள் கையாள நினைக்கும் காரியம், எங்கெங்கிருந்தெல்லாமோ அவர்களை எதிர்க்கும் சக்தியைக் கிளப்பிவிடும் விளைவைத்தான் உண்டாக்கப் போகிறது. வேண்டுமானால் செய்தே பார்த்து விடட்டும்.

உண்மையாகவே, நாம் இம்முறை, அவர்களின் மாநாடு, உருவான, ஓர் காரியமாற்றும் என்று நம்பினோம். நம்பும் விதமாக, சேலம் பிராமண சேவாசங்கச் செயலாளர் நடந்து கொண்டார்.

இந்தப் பேத உணர்ச்சியும், எதிர்ப்புப் பேச்சும், இனியும் இருக்கத்தான் வேண்டுமா, ஏதேனும் ஓர் சமரசத்துக்கு வர இயலாதா, தீர்க்கப்படவே முடியாத சிக்கல்களாக உள்ளன என்றும் நாம், உண்மையாகவே சிந்திக்கும் ஓர் சூழ்நிலை உண்டாயிற்று, ஒரு சிறு சம்பவத்தின் காரணமாக.

ஒரு திங்களுக்கு முன்பாக, நமது தலைவர் பெரியார் இராமசாமிக்கு, சேலம் பிராமண சேவாசங்கத் தலைவர், பாலசுப்பிரமணிய ஐயர் என்பவர் ஓர் கடிதம் அனுப்பி இருந்தார்.

நம் நாட்டிலே மேலோங்கி வரும் பார்ப்பன எதிர்ப்புணர்ச்சியைப் பற்றிய தமது கருத்தைத் தெரிவித்ததுடன், பெரியாரின் பெருந் தொண்டுகளைப் பாராட்டி, அவருடைய சீர்திருத்த நோக்கத்தைப் புகழ்ந்து அவருடைய தலைமையின் கீழிருந்து பணி புரியும் வாய்ப்புக் கிடைக்குமானால் அதனைப் பெரியதோர் பாக்கியமாகக் கருதுவாகக் குறிப்பிட்டு விட்டு, பிராமண சேவாசங்கச் செயலாளர், சமரசமாகப் போவதற்கு வழி காணவும் சிக்கல்கள் இருப்பின் தீர்த்துக் கொள்ள முயற்சிப்பதற்கும். பெரியாருடன் நேரில் கலந்து பேச விரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தச் சிறுசம்பவம், நமக்கு ஓர் நம்பிக்கையை எட்டிற்று.

குடந்தையில் நடைபெற்ற கூட்டத்திலே, பெரியார் அவர்களும் இக்கடிதத்தை குறிப்பிட்டு, சமரசமாகப் போவதிலே தமக் எப்போதுமே ஆட்சேபனை இருந்ததில்லை என்று பேசினார்.
இப்படிக் கடிதம் எழுதியவர் மாநாடு கட்டி, அதிலே மீண்டும், கனலைக் கக்குவதன் காரணம் என்ன? மாநாடுதான் கூட்டினரே, அதிலே, தமது கடிதத்தூது பற்றிப் பேசிப் பெரியாரைச் சந்தித்துப் பேச, ஒரு தீர்மானம் நிறைவேற்றி, ஒரு சிறு கமிட்டி அமைத்திருந்தால், எவ்வளவு நல்லறிவு படைத்தநற்கரியமாக இருந்திருக்கும்.

இதைச் செய்ய மறந்தார், சர்ரையும் சீமானையும் காட்டி, சல்லடம் கட்டிப்பார்க்கிறார்.

சேலம் பிராமணமாநாடு, அந்த வகுப்பாருக்கு, இன்னமும், ஆதிக்க நோக்கம் இருப்பதை எடுத்துக் காட்டுவதற்குதான் பயன்பட்டதே ஒழிய, பிற வகுப்பாருக்கு உள்ள கெட்ட எண்ணத்தைப் போக்கப் பயன்படவில்லை - பயன்படாது! முகாம் அமைக்கிறார்கள் முப்புரியினர் - என்று தன் மக்களை எண்ணச் செய்யும், அவர்களின் மாநாடு.

(திராவிடநாடு 27-2-49)