அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


முன்னாள் அமைச்சர் எம்.சி. இராசா அவர்கட்கு, பல்லாவரம்.

தலைவரே!
தாங்கள் இருக்கும் திக்கு நோக்கினாலும், தேசீயத் திருவவதாரம் சக்கரவர்த்தி ராசகோபாலாச்சாரியாருக்குக் குளிர் எடுக்கும். சட்டசபையிலே அவரது சாகசம், சமர்த்து, கோபம், விகடம் எனும் பல்வேறு கணைகளையும் தங்களின் ஆற்றல் எனும் கேடயத்தால் தடுத்தீர். அதை யெல்லாம் விட, இப்போது கொடுத்திருக்கிறீரே ஒரு சூடு, அடா, அடா, அடா, அருமை அருமை அருமை!! சபாஷ், ராஜா! உமது சமூகத்திலே, இத்தகைய சுயமரியாதை வீரர்கள் பெருகப் பெருக, பழங்குடி மக்களின் வாழ்வு உயரும் என்பதிலே சந்தேகமில்லை.

அலகாபாத் மாநாட்டுக்கு சர். சப்ரூ அனுப்பிய அழைப்பை ஏற்றுக் கொள்ள முடியாமைக்குத் தாங்கள் காரணம் காட்டிவிடுத்த அறிக்கையிலே, ஆச்சாரியாரைச் சரியாகப் படம் பிடித்திருக்கிறீர்கள்.

நந்தன் காலமுதற்கொண்டு தங்கள் காலம் வரையிலே, வேதியக்கூட்டம், பாடுபடும், பாதுகாப்புத்தரும், பழங்குடி மக்கட்குச் செய்துவரும் கேடு, காட்டும் அவமரியாதை, ஏடு கொள்ளாது.

அன்று ஆதனூர் வேதியன் “சிதம்பர தரிசனமா? நீ அதை சிந்திக்கலாமா?” என்று திமிருடன் கேட்டானே, நரம்பு முறியப் பாடுபட்ட நந்தனைப் பார்த்து, அதைப் போலவேதான் திருச்செங்கோட்டு ஆச்சாரியார், ஆதித்திராவிட சமூகத்தினிடம் உண்மையான அக்கரை கொண்ட உம் போன்ற தலைவர்களுக்கு.

“ஆட்சியிலே பங்கா, அடடா! ஆரியன், தருவேனா” என்று கூறினார்.

ஆதித்திராவிட இனப்பிரதி நிதிகளை அடங்கி ஒடுங்கி இருக்கச் செய்து, ஆலயப்பிரவேசத்துக்காகத் தாங்கள் கொண்டுவந்த மசோதாவையும் எதிர்த்து ஓட் அளிக்கச் செய்தார். எனவே, “எங்கள் சமூகத்துக்குக் கேடு செய்த” ஆச்சாரியார் வரும் அந்த அலகாபாத் கூட்டத்துக்கு நான் வாரேன் என்று தாங்கள் சர். சாப்ரூவுக்குப் பதில் அளித்த வீரத்தை நான் பாராட்டுகிறேன்.

போலிச் செல்வாக்குப் புழுதி நெற்றியில்பட வீழ்ந்து வணங்கும் வீணர்கள், “ஆச்சாரியாரையா, இப்படிக் கூறுவது” என்று ஆயாசப்படுவர். அதைப்பற்றிக் கவலை கொள்ளாதீர்.

“என் சமூகத்தின் கட்டுப்பாட்டுக் குலைவுக்கும், அரசியல் சோகை நோய்க்கும், ஸ்ரீ. இராசகோபாலாச்சாரியாரே முக்கிய காரணம்.”

“ஸ்ரீ. ராசகோபாலாச்சாரியார், ஆதித்திராவிட சமூகத்தின் அரசியல் எதிரி” என்று தாங்கள் கூறியிருப்பது உண்மை உமது வீரம், வாசகங்களிலே ஒலிக்கக் காண்கிறேன்.

மற்றொன்று சொன்னீர், மிக முக்கியமானது. அலகாபாத் மாநாட்டில், தனக்குத் தென் இந்தியாவிலே போதுமான ஆதரவு இருப்பதாக ஆச்சாரியார் கூறுவார். அவர் இதுவரை, பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார், ஆதித்திராவிடர், முஸ்லீம், என்று பிரிவுபட்டுள்ள சமூகங்கள் கொண்ட தென் இந்தியாவிலே, அரசியல், சமுதாய ஒற்றுமை ஏற்பட ஒரு முயற்சியும் செய்யவில்லை என்று எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள்.

உண்மைதானே! இங்கு திராவிடத் தலைவர்கள், பழங்குடி மக்களின் பாதுகாவலர், இஸ்லாமிய ஏறுகள் இருக்க, இங்கு ஒரு கூட்டு எண்ணம் வளர்க்கச் சிறு விரலையும் அசைக்காத ஆச்சாரியார், அலகாபாத் போவது கேட்டு, நமது குறும்புக்காரக் குப்பன் கூவுகிறான், “கூரை ஏறிக் கோழி பிடிக்காதவன், கோபுர மேறி வைகுந்தத்துக்கு வழி காட்டுவது” போல இருக்கிறதே ஆச்சாரியாரின் செயல் என்று!

போலித்தனத்தின் மண்டையில் அடித்த உம்மை மனமாரப் பாராட்டுகிறேன்.

தங்களைப் பாராட்டும்,
திராவிடன்.

3.11.1943