அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


முரண்பாடுகள் அல்ல

பண்டித ஜவஹர்லால், சிறை வைக்கப் பட்டார். 1942


பண்டித ஜவஹர்லால், வைசிராய் ஏற்பாடு செய்த விமானத்தில் மலாய் சென்று, அங்கு மவுண்ட் பேடன் பிரபுவுடன், மோட்டரில் பவனிவந்தார். 1946.

காங்கிரஸ் காரியக் கமிட்டியின் அறிக்கையைச் சர்க்கார், கண்டித்தனர். 1942

காங்கிரஸ் காரியக் கமிட்டியினர் உணவு சம்பந்தமாக வெளியிட்ட அறிக்கையைச் சென்னை சர்க்கார் ஆலோசகர் பொதுமக்களுக்குச் சிபாரிசு செய்கிறார். 1946

இவைகள், முரண்பாடுகள் அல்லவா? என்றே எவரும் கேட்பர். இல்லை என்பதுதான், ஆராய்ந்து பிறகு அனைவரும் கூறவேண்டிய பதிலாக இருக்கும். இவை முரண்பாடுகள் போல் தோற்றமளிக்கும், ஏகாதிபத்தியத் திருவிளை யாடல்கள்! ராஜதந்திரத் திட்டங்கள்!

மலாயாவில், மவுண்ட் பேடன் பிரபுவுடன், பண்டிதஜவஹர் பவனி வந்த செய்திகேட்டு, பிரிட்டிஷாரின் முகம் சோகம் கப்பியதாக இருந்திருக்கும் என்று இங்கு, அந்தச் செய்தியைக் கேட்டுக் களிப்புடன் காணப்படும் காங்கிரஸ் அன்பர்கள் கருதக்கூடும். உண்மை என்ன வென்றால் ஏகாதிபத்திய ஏஜெண்டும், ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்தியின் தலைவரும், ஒரே மோட்டாரில் பவனி வந்தனர் என்ற செய்தி, இங்கு உண்டாக்கியவதைவிட, அதிகமான சந்தோஷத்தைப் பிரிட்டனில் உண்டாக்கியிருக்கும் “வெள்ளையனே”, வெளியே போ! என்று வீரமுழக்கம் செய்தாரே, அந்த நேருதான் இவர்! பக்கத்தில் இருப்பது, வெள்ளைக்காரர், அதிலும் ஏகாதிபத்திய ஏஜெண்டு, அதுமட்டுமல்ல ராஜகுடும்பம், மவுண்ட் பேடன் பிரபு பக்கத்தில் இருப்பவர்” என்று படத்தைப் பார்த்துப் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ராஜதந்திரிகள் பூரித்துப் போயிருப்பர்! இந்த ராஜோபசாரத்தை நேரு ஏற்றுக் கொண்டதன் மர்மம், அவர்களுக்கு தெரியம், நம் மக்கள் அறியமாட்டார்கள். பயத்தால் வெள்ளைக்காரன் பணிந்தான் என்று நம் மக்கள் எண்ணிக் களிப்பர் பல நாடுகளைப் பலகாலமாகப் பிடித்தாட்டும் வெள்ளையனுக்குத் தெரியும் பிரிட்டிஷ் பசப்பும் பேரமும் பலித்துவிட்டது, என்பதைத்தான் அந்தப்படம் பாடமாகக் காட்டுகிறது என்பது, முரண்பாடுபோலத் தோன்றும் இந்தச் செய்திகள், இந்திய உபகண்டத்தின் விடுதலை வரலாற்றிலே, நாம், ஒருமுக்கியமான கட்டத்திலே இருப்பதைக் காட்டுகின்றன. பளபளப்பான பாதை, ஆனால் வழவழப்பும் அதிகம்!

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கடைசி நாள்கள் ஆரம்பமாகிவிட்டன. இதனை மற்றவர்களை விட, பிரிட்டிஷார் மிகநன்றாக அறிவார்கள். உலகிலே, எந்தப் பகுதியிலும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு, இடியும் ஐளனமும் கண்டனமும் எதிர்ப்பும் சூரியன் ஆஸ்தமிக்காத பரந்த சாம்ராஜ்யம் எம்முடையது என்று பெருமை பேசிக்கொண்டு பிரிட்டனில், இன்று கூர்ந்து நோக்கினால், ஒரு பரந்த சாம்ராஜ்யத்தைப் பண்புடன் ஆள்வதற்கு வேண்டிய மூளைபலம் அங்கு இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம். ஆதிர்ப்திகள் கிளம்பத்தான் செய்யும், அவைகளை அடக்குவதிலேதான் அரசியல் திறமையே இருக்கிறது. என்ற பழைய கோட்பாட்டை நம்பியதனால் வந்தபலன் இதுதான். ஏராளமான பொறுப்புகளைச் சுமந்து கொண்டு, அதற்கேற்ற அவ்வளவு திறமையின்றி இளைத்துப்போனால், எந்த ஏகாதிபத்தியமும் தானாகக் கலகலத்துதான் போகும். கரைவது, கலகலப்பது, கலைப்பது, சிதறுண்டு போவது, சின்னாபின்னப்படுத்துவது, என்ற முறைகளிலே பலவகைகள் உண்டு. ஆனால் முடிவு ஒன்றுதான், ஏகாதிபத்தியம் நிலைக்கமுடியாது என்பதே ஆம்முடிவு. இந்த நிலைமையினின்றும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, பிரிட்டன் ஓர் புதிய தந்திரத்தை இன்று கையாள்கிறது. அதாவது, சாம்ராஜ்யங்களிலேயும், தன்னுடன் ஏதேனும் ஓர் வகையில் தொடர்பு கொண்டுள்ள மற்ற நாடுகளிலேயும், சர்வாதிகாரம் பெற்றுள்ள கட்சிகளுடன் உறவாடி, அந்தக் கட்சிகளைத் தழுவி அவைகளைத் துணைக் கொண்டு தன் சரிவு விரைந்து நேரிட்டு விடாதபடி பாதுகாக்கும் தந்திரத்தைப் பிரிட்டன் கையாள்கிறது.
சீனாவிலே, தேசியவீரர், தியாக புருஷர் என்ற விருதுகள் பெற்று, சர்வாதிகாரியாக விளங்கிய, மார்ஷல் சியாங் கே ஷேக்கைப் பிரிட்டன் ஆதரித்ததுடன், சீனாவின் விடுதலை க்கும் விமோசனத்துக்கும், பாடுபடக்கூடிய ஒரே தலைவர் அவரே என்றும் பிரச்சாரம் செய்ததன் மர்மம் இதுவே சீனாவில் சியாங்குக்குச் சர்வாதிகாரம் கிடைத்து, அதே சியாங்கின் நேசம் பிரிட்டனுக்குக் கிடைத்தால், பிரிட்டனுக்கு இலாபமல்லவா! அது போலவே கிரீசில், தனக்குத் துணை நிற்கும் கட்சிக்கு ஆதரவு திரட்டப் பிரிட்டன் வேலை செய்தது. ஏகிப்திலே இதுபோன்ற துணைக்கட்சி கிடைக்குமா என்று தேடி அலுத்து முயற்சி வீணாகக் கண்டது இந்தியாவிலே இன்று, இதே தந்திரத்தைக் கையாண்டு, ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை ஒழித்தாக வேண்டும் என்று மக்கள் கொண்டுள்ள உணர்ச்சியையும், இந்தத் துறையிலே காங்கிரஸ் நடத்திய பல போராட்டங்களின் மூலம் ஏற்பட்ட எழுச்சியையும் கண்டதும் இந்த உபகண்டத்து முதலாளிகள், தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்ள இந்த உணர்ச்சியையும் எழுச்சியையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டி, பண பலத்தைத் தந்ததால், உணர்ச்சியும் எழுச்சியும், பிரம்மாண்டமான உருவை அடைந்தது. இதனைப் பிரிட்டனில் உள்ள முதலாளிகள் தெரிந்து கொண்டனர். எனவே அந்தப் பிரிட்டிஷ் முதலாளிகள், இந்திய முதலாளிகளுடன் கூடிக்கொண்டு, யாராவது ஆண்டு கொண்டு போகட்டும், நமக்குள் வியாபார சம்பந்தமான உறவு இருந்தால் போதும் என்று பேரம் பேசிக்கொண்டனர். இந்தப் பேரம் திருப்திகரமாக முடிந்துவிடவே இந்திய முதலாளிகள் காங்கிரசையும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையும், நேசர்களாக்கும் கைங்கரியத்தைச் செய்துவைத்துவிட்டனர். அதனாலேதான் விசித்திரமான காட்சிகளைக் காண்கிறோம். நம்ப முடியாத செய்திகளைப் படிக்கிறோம்! எந்தப் பண்டித ஜவஹர்லாலை 1942ல் சிறையில் தள்ளினரோ அதே ஏகாதிபத்திய ஏஜெண்டுகள் 1946ல் அதே பண்டிதருக்கு, மலாய்போய் வர விமானம் ஏற்பாடு செய்து தந்தனர். பிரிட்டிஷ் தளபதிகளில் ஒருவரான மவுண்ட்பேடன் பிரபுவும் பண்டிதரும் மலாயாவில் பிரபுவின் மோட்டாரில் பவனி வந்தனர்.
உணவு நெருக்கடியைச் சமாளிக்கக் காங்கிரஸ் தீட்டிய திட்டத்தைப் பொதுமக்கள் ஏற்று நடத்த வேண்டுமென்று, சென்னை சர்க்கார் (ஆட்வைசர்) இலோசகர் கூறுகிறார்.

இந்த விசித்திரங்கள் போதாதென்று, வேறொன்றும் இப்போது தெரிகிறது.

சோவியத் ரஷியா, இந்தியாவிலே ஆதிக்கம் தேடுகிறதாம் அதனைத் தடுக்க, பிரிட்டிஷ் காங்கிரஸ் கூட்டுத் தேவையாம்!

கம்யூனிஸ்டு கட்சியினர் மீது கோபித்துக் கொள்வது என்ற அளவிலிருந்து ஆரம்பமாகி இன்று, பொது உடைமைக் கொள்கையையே பகிரங்கமாகவும், கூச்சமின்றியும் கண்டித்துப் பேசக் காங்கிரஸ் பிரசாரகர்கள் கிளம்பிவிட்டனர்.

ரஷியாவுக்கு ஏகாதிபத்திய ஆசை என்றும், அதனை இந்தியா எதிர்த்தாக வேண்டுமென்றும் பேசப்படுகிறது. ரஷியாவை ஆதரிக்கும் தோழர்களுக்கு இங்கே சோறுகூடப் போடமாட்டோம். வேண்டுமானால் ரஷியா, பாரசூட் மூலம், அவர்களுக்கு உணவு தரட்டும் என்று, அன்னதான சமாஜத் தலைவரல்ல, அரசியல் பத்திரிகை நடத்தும் அன்பர் சொக்கலிங்கம் தினசரியில் எழுதுகிறார். ஏழைப் பங்காளரான இவர் மட்டுமல்ல. பிரிட்டனிலே கார்லி பிரபுவும், ரஷியா, இந்தியாவிலே ஆதிக்கம் பெற விரும்புகிறது என்று பேசுகிறார்.

பிரிட்டிஷ் பிரசாரம் அற்புதமாக வேலைசெய்து வருகிறது. ரஷியாவின் ஆதிக்கம் வலுவடையும் என்ற பயத்தைக் களிப்பினால், இந்திய உபகண்டத்திலுள்ள சிற்றரசர்கள் சீமான்கள், கோடீஸ்வரர்கள் ஆகியோருக்குக் குளிரும் காய்ச்சலும் பிறக்கும், அந்த வர்க்கம் தன்னுடைய கங்காணிகளைக்கூப்பிட்டு புதிய ஆபத்து வருகிறதாம்! ஆகவே போர் முறையை மாற்றுங்கள் பிரிட்டனுடன் போராடியது போதும் - ரஷிய ஆதிக்கம் வர விடாதபடி தடுக்கவேண்டும். அதற்கான பிரச்சாரத்தைத் துவக்குங்கள். பிரிட்டனுடன் இனி விரோதம் வேண்டாம். நேசம் வேண்டும், பிரிட்டிஷ் பலத்தைத் துணை கொண்டுதான், இங்கு சோவியத் சூறாவளி ஏற்படாதபடி பாதுகாப்புத் தேடிக்கொள்ளவேண்டும் என்று முதலாளி வர்க்கம் கூறும் என்று பிரிட்டன் அறியும். அந்த வர்க்கத்தால் வளர்க்கப்பட்டுள்ள “காங்கிரஸ்” இப்போது, பிரிட்டனுடன் கூடிக்கொண்டு, ரஷியா மீது துர்ப்பிரசாரம் செய்யும் “பிரச்சார அச்சு” ஏற்படுத்திக் கொண்டது. எனவே தான், பிரிட்டன் மற்றக் கட்சிகள் ஏக்கேடு கெட்டாலும் சரி, காங்கிரசைக் கட்டித் தழுவினால் போதும் என்று துணிந்து கூறுகிறது. காதல் நாடகமும் தொடர்ந்து நடக்கிறது! அந்தப் புதிய அனுபவத்தை ஆலகாபாத் பண்டிதர் சிங்கப்பூர் பவனியின்போது பெற்று ரசித்திருப்பார் என்று நம்புகிறோம்.

“தேசிய உணர்ச்சி” உருவானதும், அதனை முதலாளிகள் விலைக்கு வாங்கிக் கொள்பவர்கள் என்பதும், முதலாளியின் கைச்சரக்கானதும், அதனை ஏகாதிபத்யம், தோழமை கொள்ளும் என்பதும், அரசியல் அரிச்சுவடி அறிந்தவருங் கூடத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் இசியாவையே ஊய்விக்கும், ஆபாரமான காரியத்துக்காக அறிவையும் திறமைûயுயம் ஆர்ப்பணிக்க முன் வந்ததாகக் கூறிக்கொள்ளும் அன்பர்கள் மட்டும் இதனை அறிந்ததாகத் தெரியவில்லை என்ன காரணமோ!

ரஷியாவின் ஆதிக்கம் வந்த, விடமோ என்ற கிலிபோபால் மன்னருக்கும், ராஜபுதன ராஜாக்களுக்கும் கோடீஸ்வரர் பிர்லாவுக்கும், ஆலை அரசர் டாடாவுக்கும், பண்ணை முதலாளிமார்களுக்கும், பாட்டாளியின் இரத்தத்தைக் குடிக்கும் பலருக்கும் இருக்கலாம் - சகஜம்! தினசரி ஆசிரியருக்கு, எந்தச்சமஸ்தானம் போய்விடும் என்று திகில், விருது நகர் காமராஜருக்கு, எந்தச் சமஸ்தானம் போய்விடும் என்ற அச்சம், ஏன் இவர்கள் ரஷியாவின்த பெயர்கேட்டு நடுங்கவேண்டும்! நடுங்குவதுடன் இல்லையே, பரிதாபத்துக்குரிய அவர்கள், ரஷியாவுக்கு பயந்து பிரிட்டனுடன் கூடிக் குலவவும் துணிகிறார்களே, அதனை என்னென்பது! தென்றலுக்குப் பயந்து தேள்கடியைத் தேடிப் பெறுபவனை நாம் கண்டதில்லை, ஆனால் தேசபக்தியின் பெயரல் உள்ள, சிலதலைவர்கள், ரஷிய ஆதிக்கம் வருமென்று பயந்து, அந்தப் பயத்தைக் கிளப்பிவிட்ட பிரிட்டனுடன் கூடிக்கொள்ளவும் துணியும் விசித்திரத்தைக் காண்கிறோம், வியப்படைகிறோம்.

ரஷியாவின் ஆதிக்கம் வருகிறதாம், என்ற செய்தியைக் கேட்டதும், இடியோசை கேட்ட நாகமென்று, மாளிகையிலே, மனோஹரி தரும் மதுக்கிண்ணத்தைப் பெற்று மகிழும் மாமிசப் பிண்டங்கள் மருளட்டும், மக்களின் தலைவர்கள் மருள்வானேன்! மாஸ்கோமணம் பரவுமென்ற பயத்தை, மக்களின் வியர்வையைப் பொன்னாக்கி மணியாக்கிப் பூரித்துக் கிடக்கும் மதோன்மத்தர்கள் கொள்ளட்டும், பாட்டாளிகள் பதறுவானேன்? சிங்கார மண்டபங்கள் சீறட்டும், சித்திரக் கோலைகளிலே சிரித்து இடும் சிற்றிடையாளைப் பறித்தெடுத்த மலரெனக் கொண்டு காம மது உண்டுகளிக்கும் காசாசைக்காரர்கள் கலங்கட்டும், உழைத்து உருமாறி, உலுத்தர்களின் பிடியில் சிக்கிச் சீரழிந்து, கிடக்கும் கோடிக்கணக்கான மக்கள், ஏன் கோபமோ, பயமோ கொள்ள வேண்டும்! ஜாரின் கூலிகளாகத் தங்களை இக்கிக் கொண்டவர்கள் பயம் கொள்வது சகஜம், முதலாளி வர்க்கத்தின் சவுக்கடியால் வாழ்க்கையிலே வறுமைத் தழும்புகளைப் பெற்றுள்ள மக்கள் ஏன் பயப்பட வேண்டும்!

பிரிட்டன், இதுபோது ஆரம்பித்துள்ள “சோவியத் எதிர்ப்புணர்ச்சி” இந்திய முதலாளிகளுக்குப் பரவிவிட்டது. அந்த முதலாளிகளின் கைப்பாவையாகக் காங்கிரஸ் இருப்பதால், அந்தக் காங்கிரஸ் பிரச்சார பீரங்கியை மாஸ்கோ பக்கம் திருப்புகிறார்கள். அந்தத் திருப்பணியிலே தினசரி ஆசிரியர் போன்ற சமன்தானமற்ற, ஜெமீனற்ற, பண்ணையற்ற, ஆலையற்றவர்கள் உடுபடுவது, நகைச்சுவையுடன் கலந்த சோகக் சித்திரம்! இந்த விசித்திர நாள்களிலே, இந்த விபரீதக் காட்சியையும் காண்கிறோம்!

ஆனால், பிரிட்டிஷ் ராஜதந்திரம் இன்று காங்கிரசைச் சரிப்படுத்திவிட்டதே தவிர, காங்கிரசுக்குப்பல மூட்டிய மற்றச் “சக்திகளை” பிரிட்டன், வெல்லவில்லை - வெல்லவும் போவதில்ல. காங்கிரசுக்கு முடிசூட்டிவிட்டதாலேயே புரட்சிப் புயலுக்கு மூடியிட்டு விட்டதாகப் பிரிட்டன் கருதுவதற்குக் காரணம், நாம் முதலில் கூறியபடி, பிரிட்டிஷ் ஏகாதிபத்யத்தின் மூளைபலம், குறைந்து விட்டதுதான், மூளையிலே மூடுபனி கிடப்பதால் தான், இன்னமும் பிரிட்டன், இந்தியாவிலே, மெஜாரிட்டி மைனாரிட்டி பிரச்சனை இருப்பதாக எண்ணுகிறது, இன்று இங்கே இருப்பது இனப்பிரச்னை என்பது தெரியாமல்.

முதலமைச்சர் ஆட்லி, மேதாவித்தனமான ஓர் அரசியல் உண்மையை எடுத்துக்காட்டுபவர் போல, ஒன்று சொன்னார், “மெஜாரிட்டியின் முற்போக்கைத் தடுக்க மைனாரிட்டியை அனுமதிக்கமாட்டோம்” என்று அதற்குப் பொருள் காங்கிரஸ் கட்சியின் போக்கை மற்றச் சிறுகட்சிகள் தடுக்கும்படியாக நாங்கள் அனுமதிக்கமாட்டோம், என்று கொள்கிறார்கள், களிப்புமடைகிறார்கள்.

மெஜாரிட்டியாக, உள்ள கட்சியை மைனாரிட்டி ஒரு போதும் தடுக்கத்தான் முடியாது, தடுக்க முடிகிறது என்றால் அப்போது, மெஜாரிட்டி என்று பெயரளவில் உள்ள கட்சிக்கு, மைனாரிட்டியின் எதிர்ப்புச் சக்தியைச் சமாளிக்கவும் முடியாத அளவு மூப்பு மேலிட்டுவிட்டது என்று பொருள். எனவே ஆட்லி துரையின் வாசகத்துப் பொருள் இல்லை. பொருளற்ற வாசகத்தைக் கூறின குற்றம் மட்டுமல்ல ஆட்லி துரைமீது நாம் சாட்டுவது, பிரிட்டிஷ் நடத்தைக்கும் இந்தப் பேச்சுக்கும் துளியும் பொருத்தமுமில்லை என்றும் கூறுவோம். மெஜாரிட்டி கட்சியின் போக்கைத் தடுக்கக்கூடாது என்பது பிரிட்டிஷார் கண்டுபிடித்த விதியாக இருக்குமானால், எந்தக் காரணத்தைக் கொண்டு, ஜெர்மனியிலே மெஜாரிட்டி கட்சியாக இருந்த நாஜிக் கட்சியை ஆட்லி வர்க்கம் எதிர்த்தது என்று கேட்கிறோம்? நாஜிக்கட்சி ஜெர்மனியின் மெஜாரிட்டிதான், ஆனால், சர்வாதிகார வெறி கொண்டு அலைகிறது. ஆகவே அந்தக் கட்சியின் போக்கைத் தடுத்தாக வேண்டும் என்று இதே ஆட்லி துரையும் அவர்தம் சகாக்களும் பேசினர். அதேபோல காங்கிரஸ சர்வாதிகாரக்கட்சி - பாசீச இலட்சணம் அவ்வளவும் அதிலே இருக்கிறது, இதனை மெஜாரிட்டி கட்சி என்பதற்காக, ஆக்கட்சியின் கோரிக்கையின்படிதான் நாங்கள் நடப்போம், என்று ஆட்லி கூறுவது ஜனநாயகக் கோட்பாட்டுக்கே ஏற்றதல்ல, ஆனால் நாம் ஆட்லியைத் தடுக்கவில்லை. காங்கிரசுக்கு முடிசூட்டிவிடச் சொல்கிறோம் - விரைவாகவே அதனைச் செய்யும் படியும் சிபாரிசு செய்கிறோம். அப்போதுதான், பிரிட்டிஷ் இந்திய முதலாளிகளின் கூட்டு ஆட்சி நடைபெறுவதும, அந்த ஆட்சி பாட்டாளிகளின் பாதுகாவலனாகி, பாரிலே, இன்பம் பாலிக்கும் சமய தர்மத்தை நல்கிய சோவியத் கோட்பாட்டையே கெடுக்கும் காரியத்தில் உடுபடுவதையும், வறண்ட தலையும் இருண்ட கண்களும், நொறுங்கிய எலும்பும், கொண்டு உழலும் கோடிக்கணக்கான மக்கள் உணர முடியும. அந்த உணர்வு பீறிட்டுக் கிளம்பும்போது, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கடைசித் திருவிளையாடலும் அதன், வலையில் வீழ்ந்தோரின் கைங்கரியமும், தவிடு பொடியாகும். ஆகவேதான் நாம் பிரிட்டன், காங்கிரசுக்கு முடிசூட்டு விழா நடத்தும் நாளை மிகமிக இவலோடு எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறோம். காசியும் இலண்டனும் கைகுலுக்கிக் கொண்டு, மாஸ்கோமீது பாய்ந்தால், மக்கள், எந்தத் திக்கும் நோக்கி நிற்பர், என்பதைக் கூறப்பிரமாதமான அறிவு தேவையில்லை. தினசரி ஆசிரியர் கூடத்தான் தெரிந்து கொள்ளமுடியும்! அந்தத் தெளிவு அவர்களுக்கும் பிறக்க வேண்டும். ஆகவேதான், காங்கிரஸ், சமாதானத்தையும் முதலாளித்துவத்தையும் வளர்க்கும் ஸ்தாபனம் என்று கூறும் நாம் அதே காங்கிரஸ் பட்டத்துக்கும் வரவேண்டும் என்று கூறுகிறோம். இதுவும் முரண்பாடு அல்ல, காங்கிரசின் மூல நோக்கம் என்ன, என்பதைத் தெரிந்து கொள்ள, நாட்டு மக்களுக்குச் சந்தர்ப்பம் வேண்டும் என்ற கருத்துடனேயே இதனைக் கூறுகிறோம். பாசீசம் பட்டத்துக்கு வந்தால்தான், பாட்டாளி அரசுக்கான புரட்சி தோன்றும் எனவே, முரண்பாடு போல் தோன்றும் பலவற்றை ஆராய்ந்தால், முரண்பாடு அல்ல என்பது விளங்குவது போலவே, மேல்வரிசையாகப் பார்க்கும் போது,

திராவிடர் கழகம் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி திராவிடர்கழகம் காங்கிரசுடன் போட்டியிடவில்லை, காங்கிரசாட்சியே ஏற்படவேண்டும் என்று கூறுகிறது, என்ற வாசகமும் முரண்பாடு போலத்தோன்றும், ஆனால் ஆராய்ந்து பார்த்தால், இதுவும் முரண்பாடு அல்ல, என்ற முடிவு தெரியும்.

(திராவிட நாடு 24.3.46)