அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


‘முதல் தேதி‘ நோக்கிகள் அல்லல்!

“அப்பா! பேனா இல்லமல் எழுத முடியவில்லையப்பா – பேனா ஒண்ணு வாங்கிக் கொடு அப்பா!“

“முதல் தேதி வரட்டும்!“

“இப்படி ‘பால்‘ கொடுக்க எங்களாலே ஆகாது. எத்தனை மாசத்துப் பாக்கி, அப்படியே கிடக்குது? ஏம்மா! ஐயாவுக்குத் தான் காது கேட்கலே! நீங்க சொல்லவேணும். நானும் பிள்ளைக் குட்டிக்காரன்தான்! எங்க அப்பார் ஒண்ணும் சொத்து கட்டி வைச்சிருக்கலே – உங்களுக்கெல்லாம் உதவ!! ஐயா வந்ததும் சொல்லுங்க, பணம் இல்லேன்னா ‘பால்‘, இனிமேல் ‘த-பால்‘ தான்!!“

“ஆகட்டும்பா! ஒண்ணாம் தேதி வரைக்கும் பொறுத்துக்கோ. சம்பளம் வந்ததும் பட்டுவாடா பண்ணிடறேன்.“

முதல் தேதி – பல வீடுகளில் இன்பக் கனவுகளுடன் எதிர்பார்க்கப்படும் நாள். ஆபிசிலிருந்து அப்பா சம்பளம் வாங்கி வந்ததும் பேனா வாங்கிட எண்ணும் மகனும், பழைய ‘பாக்கி‘களைத் தீர்க்க வேண்டுமெனக் கனவு காணும் இல்லற ஜோதியும், அடுத்த மாதத்துக்கு யாரிடம் ‘கடன்‘ வாங்கினால் காலத்தை ஓட்ட முடியும் என்ற நினைவோடு பெற்ற சம்பளத்தைப் பிரியாளிடம் கொண்டுவரும் கணவனும் – ஏராளம்! இப்படிப்பட்ட குடும்பங்கள் பெருகியிருப்பதையே, “மத்திய தரவர்க்கம்“ எனும் பெயர் சூட்டி அழைக்கின்றனர், அரசியல்வாதி கள். இந்த மத்தியதர வர்க்கம், ‘கார்ல் மார்க்சின்‘ காலத்திலே இல்லாதது – அரை நூற்றாண்டிலே, அகில உலகிலும் வளர்ந்து கிடப்பது. இவர்கள் பட்டியலிலே, மூளையைக் குழப்பிக் கருத்து வடிக்கும் பத்திரிகாசிரியனும், பட்டம் பெற்றும் ‘கணக்கு‘ எழுதும் நிலைபெற்ற குமாஸ்தாவும் ஏழையாகவுமிராமல் பணக்காரனாகவுமில்லாமல் இரண்டுங்கெட்டான் குடும்பம் நடத்து வோருமாக ஏராளம் இருக்கிறார்கள். இவர்களால்தான் நாடுகள் பலவற்றில் இன்று புதியதோர் தலைவலி உருவாயிருக்கிறது! தொழிலாளர்களின் நிலையிலுமில்லாது – முதலாளிகளின் நிலையிலுமில்லாது, இரண்டுக்குமிடையில் அல்லாது இவர்களது நிலைபற்றி, எண்ணாதோர் கிடையாது இன்று. சிறு கம்பெனிக்குப் போனாலும் ஒரு மானேஜர் குமாஸ்தாக்களைக் காண்கிறோம்! பாங்கிக்குச் சென்றாலும் பலரை, ஏடும் பேனாவுமாக இருக்கக் காண்கிறோம்! சர்க்கார் அலுவலங்கள் பலவற்றிலே – கூட்டம், கூட்டமாக, இருக்கிறார்கள்! பள்ளிக் கூடங்கள் – ரயில்கள் – மண்டிக் கடைகள் – எங்கும் இந்த வர்க்கத்தினர் தான்!! இவர்கள் அத்தனை பேருக்கும் மாதத்தின் ‘முதல் தேதி‘ என்று சம்பளம் கொடுக்கப்படுகிறதோ அந்தத் தேதி தான் கடவுள்! சதா, எதற்கெடுத்தாலும் இப்படிப்பட்ட மத்தியதரக் குடும்பங்களில் கூறப்படும் பதில் ‘முதல் தேதி வரட்டும்‘! என்பதுதான். ஒவ்வொருவரும், தத்தமது உழைப்புக்கான ஊதியம் அன்று கிடைக்கும் என்ற உறுதியில், ஒவ்வொரு மாதத்தையும் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். அவனுக்குத் திடீரென்று விபத்து ஏற்பட்டாலோ அல்லது பேலை போனாலோ அவனுடைய குடும்பம், புயலில் சிக்கிய சருகாகும்! பசியும் பட்டினியும் தலை தூக்கும் இருப்பதைக் கொண்டு சில நாட்கள் நகரும் – மனைவியின் காதுகளிலும், குழந்தைகளின் கைகளிலும் இருக்கும் நகைகள் – மார்வாடியிடம் செல்லும்.

இந்த மூக்குத்திருகும், தாலிச்சரடும் போன பிறகு குடும்பம், ரணகளமாகும்! யாழினது குழலினிது என்றாரே வள்ளுவர் – அந்தக் குழந்தைகள், ‘குட்டிச்சத்தான்‘களாவர்! இல்லால் பொல்லாள் ஆவாள்! விபத்து, வளரும் இது, சகஜம் – சராசரி, தினசரி, நடந்துகொண்டிருக்கிறது. இதனால் தான் இதுபோன்ற மத்தியதர குடும்பத்திலிருப்போருக்கு, இப்போது ஆங்காங்கு நடைபெறும் ‘கிராஸ் வேர்ட்ஸ்‘, “பகுத்தறிவுப் போட்டி“ முதலியவைகளில் ஒரு ஆசை உண்டாகி லட்சக் கணக்கில் பணம் உருண்டு கொண்டிருக்கிறது. எப்படியாவது நாலுகாசு கிடைக்க வேண்டும். நாமும் நாலுபேரைப்போல வாழ வேண்டும் என்கிற ஆசைக்கும் – பிறர் எள்ளி நகையாடாத வகையில் அந்தப் பணத்தைச் சம்பாதிக்க வேண்டுமே என்கிற அச்சத்துக்குமிடையே ஊசலாடியபடி காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.!

இப்படிப்பட்ட மத்தியதர வர்க்கத்தை – சில ஆண்டுகளுக்கு முன் வரை கம்யூனிஸ்டுகள் அலட்சியம் செய்தார்கள்.

காங்கிரஸ்காரர்கள், இப்படியொரு வர்க்கம் முளைத்து வருகிறது என்பதைப் பற்றியே எண்ணியதில்லை.

எனினும், இன்று, எல்லோரையும் போலவே கம்யூனிஸ்டுகளும் எண்ணிப் பேசுகின்றனர் காரல்மார்க்ஸ, எழுதிய நூல்களில் இந்த வர்க்கம் பற்றிய வரிகள் இல்லை எனினும் கூட இப்போது ‘மத்தியதர வர்க்கத்தைத் திரட்ட வேண்டும்!“ என்று முழக்கமிடுகிறார்கள்.

சின்னாட்களுக்கு முன்பு டில்லியில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும்கூட இந்த மத்திய தர வர்க்கம் பற்றி, மாநில கமிட்டிகளுக்கு ஒரு தாக்கீது அனுப்பியிருக்கிறதாம்.

“மத்தியதர மக்களை அணுகி அவர்களைக் காங்கிரசுக்குள் கொண்டு வாருங்கள் அவர்களது பிரச்னைகளைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முயற்சியுங்கள்.

டில்லி தாக்கீதின் கருத்து இது! மத்தியதர மக்களின் பிரச்னைகளைத் தெரிந்து கொள்ளும்படித் தன்னுடைய கட்சயினருக்குத் தெரிவித்துக் கொண்டிருக்கிறது! இந்தத் தீர்மானம் இந்தியப் பிரதமர் பண்டித நேருவின் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தீர்மானத்தைக்கூட அவரேகொண்டு வந்தும் இருக்கலாம். ஏனெனில் காங்கிரஸ் அவர் வைத்ததுதானே சட்டம்! மத்தியதர மக்களின் துயர் களையும் நினைப்பு உருவானதே, மகிழ்ச்சிக்குரிய காரியம்தான். இப்படிப் பட்ட முக்கிய விஷயத்தில் கவனம் செலுத்த பண்டிதர் முனைவது பாராட்டுக்குரியதே!

ஆனால், நாட்டில் நாம் காண்பதென்ன? காங்கிரஸ் தலைமை, கட்டளையிடுகிறது, கட்சியினருக்கு! காங்கிரஸ் அரசு....? அதுதான் சிந்தையில் விந்தை மழையைப் பெய்கிறது! கடந்த 23ந் தேதி நாட்டின் நானா பகுதிகளிலும் ஆயிரக்கணக்கானோர் வேலை நிறுத்தம் செய்திருக்கிறார்கள் “நீதி கொடு!“ எனும் அட்டைகளைக் கையிலேந்தி வீதி வலம் வந்திருக்கிறார்கள். அவர்கள் யாவரும் ஆலைத் தொழிலாளர்களல்ல! மத்திய தர வர்க்கத்தினர்! முதல் தேதி நோக்கி வாழ்வோர்! பாங்கிச் சிப்பந்திகள்!

காங்கிரஸ் அரசின் தகாத போக்கினைக் கண்டித்து, ஒருநாள் வேலை நிறுத்தம் செய்திருக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, அவர்களது நியாயமான உரிமையில் கைவைக்கக் கூடாது என்று வாதாடி, அது ஏற்றுக் கொள்ளப்படாத காரணத்தால், தொழிலாளர் மந்திரியாகப் பதவி வகித்த தோழர் வி.வி.கிரி ராஜினாமா செய்திருக்கிறார்! சாதாரண விஷயமல்ல இது. அரசுத் தலைமையின் போக்கைக் கண்டித்து அமைச்சர் விலகுகிறார்! “நாம் காட்டும் போக்கு நல்லதல்ல. மக்களுக்குக் கேடு செய்வது, இந்தப் பாதை காங்கிரஸ்காரர்களாகிய நமக்கு ஏற்றதல்ல!“ என்று கூறித் தோழர் கிரி விலகியிருக்கிறார்.

பாங்கிச் சிப்பந்திகளின் பிரச்னைகளைப் பற்றி அரசால் அமைக்கப்பட்ட “தொழில் கோர்ட்டு“ ஒரு தீர்ப்பு வழங்குகிறது. சிப்பந்திகளின் சம்பளம், வேலை நிலை முதலியவைகளைப் பற்றி அதில் குறிப்பிட்டிருந்தது! அரசின் கடமை, தான் நிறுவிய ‘தொழில் கோர்ட்டின்‘ தீர்ப்பை நிறைவேற்ற வேண்டியதாகும்! நீதியும் கடமையும் கொண்ட எந்த அரசும் அதைத்தான் செய்யும். ஆனால், அந்தத் தீர்ப்புக்கு எதிராக, சில கருத்துக்களை நிதி அமைச்சர் தேஷ்முக் வெளியிட்டார். அதனால் குழப்பம் ஏற்பட்டது. பண்டிதரும், நீதியை மறந்து, நிதியமைச்சரை ‘தாஜா‘ செய்ய முயன்றார்!! அதன் விளைவாகத் தொழில் கோர்ட் தீர்ப்பில் அரசு தலையிட்டு, சில மாறுதல்களைச் செய்தது கண்ட தோழர் கிரி, தன் வேலையை உதறினார்! “கடமையினின்றும் தவறேன்! நீதிக்கு உகந்ததல்ல நமது போக்கு! உலகம் தூற்றும்! உள்ளம் உறுத்துகிறது என்னை!“ என்று கூறிநாட்டு அமைச்சர் பொறுப்பினின்றும் விலகியிருக்கிறார்! அமைச்சர்களான பிறகு, அதனை இழக்காமல் பிடித்து வைக்கப்பாடுபடும் காங்கிரஸ்காரர்களில், கிரி ஒரு விதி விலக்காயிருக்கிறார்! அவர்தான் தொழில் மந்திரி – அரசின் போக்கு அவருக்கே பிடிக்கவில்லை. பண்டித நேருவின் பாதை, அவரையே வெம்பச் செய்திருக்கிறது! வேதனையுடன், விலகிக் கொண்டிருக்கிறார்! தன்னுடைய நீண்டகால சகாவின் விலகலைப்பற்றிப் பண்டித நேரு சிறிதும் கவலை கொள்ளவில்லை – அவர் விலகும் பிரச்னை, எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் பற்றி அக்கரை கொள்ளவில்லை – ராஜினாமலை ஏற்றுக் கொண்டு, புதிய மந்திரியையும் நியமனம் செய்துவிட்டார்!!

இது அரசியல்! ஆனால் கட்சியின் சார்பில் கட்டளை செலுத்துகிறது காங்கிரஸ் கமிட்டிகளுக்கு – மத்தியதர மக்களின் பிரச்னைகளைத் தெரிந்த கொள்ளுங்கள் என்று!!

30.09.64 மித்திரன் ஏட்டில் வந்த விளம்பரங்கள் இவை.

பல அடமானதார்களின் பொறுப்பில் சென்னை 17 தேவிசந்த்தோகா உத்திரவின்படி பொன், வெள்ளி நகைகள் 8.10.54 அன்று சென்னை கோவிந்தப்ப நாயக்கன் தெரு, இந்தியன் பண்டஸ் லிமிடெட் அவர்களால் ஏலத்தில் விற்கப்படும்.

பல அடமானதார்களின் பொறுப்பில் திருத்தணி சகன்மல்கீசுலால் காரானா உத்திரவின்படி பொன் வெள்ளி நகைகள் 9-10-54 அன்று மேற்படி இந்தியன் பண்ட்ஸ் லிமிடெட்டால் ஏலம் போடப்படும்.

பல அடமானதாரர்களின் பொறுப்பில் சென்னை புதுப்பேட்டை எம்.கே. சாம்பாலால் உத்திரவின்படி 10-10-54 அன்று மேற்படி லிமிடெட்டால் ஏலம் விடப்படும்.

பல அடமானதார்களின் பொறுப்பில் சென்னை சூளை கே.ஜேத்மல் சௌகார் உத்திரவின்படி பொன், வெள்ளி நகைகள் 8-10-54 அன்று மேற்படி இந்தியன் பண்ட்ஸ்ல் ஏலம் விடப்படும்.

பல அடமானதார்களின் பொறுப்பில் புவனகிரி எம்.ஜே. கணேங்மல் சௌகார் உத்திரவின்படி வெள்ளி தங்க நகைகள் 10-10-54 அன்று கோவிந்தப்ப நாய்க்கன் தெரு, ஜி.எம். ஆக்வுனியர் அவர்களால் ஏலம் போடப்படும்.

பல அடமானதார்களின் பொறுப்பில் பல்லாவரம் மோகன்ராஜ் சௌகார் உத்திரவின்படி பொன், வெள்ளி நகைகள் 12-10-54 அன்று இந்திய பண்ட்ஸ் லிமிடெட்டால் ஏலம் போடப்படும்.

ஒருநாள், விளம்பரம் இது! இவ்வண்ணத்தில் ஏலத்தில் போகும் பொன், வெள்ளி நகைகள் – ஏழைத் தொழிலாளர்களுடையதல்ல, மாளிகைச் சீமான்களுடையதல்ல, மத்தியதரவர்க்க மக்களுடையது தான்!! ஏல விளம்பரம். ‘முதல் தேதி நோக்கி‘களின் நிலைமையை விளக்குகிறது. இன்று நேற்றல்ல, ஒருநாள் இருநாளல்ல, எப்போதும் இப்படி நடந்து கொண்டு தானிருக்கிறது! இந்த மத்தியதர மக்களை நம்பித்தான் ‘சேட்டுகளின்‘ கொள்ளைக் கிடங்குகள், நாட்டில் மலிந்திருக்கின்றன!!.

இருக்கும் ஒன்றிரண்டையும் இழந்து தவிக்கும் நிலையில் மத்தியதர வாழ்க்கையினர் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் – அவர்களுக்கு மறுமலர்ச்சி வழங்க முடியாவிட்டாலும் ‘தொழில் கோர்ட், மத்தியதர மக்களின் ஒரு பிரிவினரான பாங்கு சிப்பந்திகளின் பிரச்னையில், சில யோசனைகளைக் கூறுகிறது. அரசோ, அந்த யோசனைகளை ஏற்காமல் 15000 பேருக்குச் சீட்டுக் கிழிப்போம்! சம்பளத்தையும் குறைப்போம்!! என்று சட்டம் செய்கிறது. அதே நேரத்தில், அவர்களது பிரச்னைகளைத் தெரிந்து கொள்ளுங்கள் என்று கட்சியினருக்குக் கட்டளையிடுகிறது.

23-ந் தேதியன்று, பாங்கு சிப்பந்திகள் வீதிகளில் வலம் வந்தார்கள் என்றால், அந்த நிகழ்ச்சியினைச் சாதாரணமாகக் கருதிவிட முடியாது, எவரும் – முன்பு என்.ஜி.ஓக்கள் இப்படிப் போர்க்காலம் பூண்டபோதும், போலீசார் உரிமைப் போர் துவக்கிய போதும், அடக்குமுறைகளை வீசி அரசு மடக்கியது அவர்களை – அதைப்போல, எப்போதும் செய்திடலாம்! என்ன செய்துவிட முடியும் இவர்களால்! என்று இலேசாக எண்ணலாம். அரசு, அதே நேரத்தில் கட்சியின் மூலம் அவர்களது பிரச்னையில் கவனம் செலுத்துவதாகக் காட்டிக் கொள்ளவும் முயலாம். தன்னுடைய ‘ஜோதி‘ சுடர்விட்டு எரிவதால் இதனைச் சுலபத்தில் சாதிக்க முடியும் என்றும் பண்டிதர் கருதலாம்!!.

ஆனால், அவரை எச்சரிக்கிறோம். மத்தியதரவர்க்கம், இன்று ஏதோ, இப்படி திடமான முடிவு எடுக்க முடியாமல் திண்டாடினாலும, அவர்களது குறைகள் களையப்படாமலிருப்பது பெரும் பெரும் ஆபத்தாகும்! நாட்டில், அவர்கள் தான் அதிகம்!! ‘தேவைக்கேற்ற ஊதியம், சக்திகேற்ற உழைப்பு“ என்கிற நிலைவர நாள் பல ஆனாலும், அன்றாட பிரச்னைகளைச் சமாளிக்கும் வகையில், அரசு ஏதாவது செய்யத்தான் வேண்டும். பண்டிதர் ஆட்சிக்கு அந்த மனப்பண்பில்லை! கட்சிச் சப்த மூலம், உண்மைக்குத் திரைபோட முயல்கிறாரே யொழிய, நல்லது செய்ய வேண்டுமெனும் எண்ணமில்லை – இந்த அரசு வாழும் வரையில், என்பதை மத்தியதர மக்கள் சிந்திக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதோடு அவர்களுக்காக காரியங்களையும் மேற்கொள்ள தி.மு.க. தயங்காது என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

திராவிட நாடு – 3-10-54