அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


முத்துரங்கத்தின் இந்திப் பித்தம்

அண்ணாமலைப் பல்கலைக் கழக உப அத்தியட்சகர் தோழர் இரத்னசாமி அவர்கள், மேற்படி பல்கலைக் கழக மாணவர்களுக்கு இந்தி கற்பிப்பதன் அநாவசியத்தை உணர்ந்து, அத்திட்டத்தை இப்போது நீக்கிவிட்டார். ஆச்சாரியார் ஆட்சிக் காலத்தில், அழைப்பின்றி அழைதுவரப்பட்ட இந்தித் திட்டத்தை அப்போதே எதிர்த்து ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் சிறைக்கோட்டம் புகுந்து, அத்திட்டத்தின் கட்டாய முறையை ஒழிந்தனர். தமிழ் மக்களின் கிளர்ச்சியை நடு நின்றுணர்ந்த சர்க்காரும், ஆச்சாரியாரின் கட்டாய இந்தித் திட்டம் பயனற்றதென்ற முடிவுக்கு வந்து அதனை ஒரு விருப்ப பாடமாக்கினர். சர்க்கார் மட்டுமன்று, அதன் அவசியமற்ற தன்மையை உணர்ந்த சர் சி.ஆர். ரெட்டி, டி.ஆர். வெங்கட்டராம சாஸ்திரி போன்ற அறிஞர்கள்கூட அக்காலத்தில் ஆச்சாரியாரின் போக்கைக் கண்டித்துள்ளனர்.

இப்போது ஒரு சில் பள்ளிகளில் மட்டும் இந்தி விருப்ப பாடமாகக் கற்பிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டமும் கூட இன்னும் சில காலத்தில் ஒழிந்துவிடுமென்ற நம்பிக்கையை உண்டாக்கக் கூடிய முறையில், மதுரைபோன்ற முக்கிய வட்டப்பள்ளிகளில் இந்தி கற்பிப்பதை நிறுத்திவிட்டார்கள். இதுபோலவே அண்ணாமலைப் பல்கலைக் கழகமும் இப்போது செய்திருக்கிறது. இது தமிழ் மக்களால் பெரிதும் வரவேற்கக் கூடியதும், அண்ணாமலைப் பல்கலைக் கழக உப அத்தியட்சகரைப் பாராட்டக்கூடியதுமான ஒரு நற்செய்தியாகும்.

ஆனால், நல்லதைக் கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் எண்ணும் இயல்பைப் பெற்றுள்ள சிலர் தமிழ் நாட்டில் இருக்கின்றனர், இந்தப் பட்டியில் தோழர் முத்துரங்க முதலியார் அவர்கள் முதலிடம் பெற்றுள்ளனர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இந்தி கற்பிப்பதை நிறுத்தியதைக் கண்டித்துத் தோழர் முத்துரங்கம் அவர்கள் ஓர் அறிக்கை விட்டுள்ளார். அதில், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களிற் பலர் யுத்த சேவையில் ஈடுபட்டு வடநாடு முதலான வெளிநாடுகளுக்குப் போக வேண்டியவர்களாய் இருப்பதால், அவர்களுக்கு இந்தி தெரிந்திருக்கவேண்டியது அவசியமென்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், தோழர் முத்துரங்கம் அவர்கள் பட்டாளத்திற் சேராதே, பணங்கொடுக்காதே என்று கூக்குரலிடும் கும்பலைச் சேர்ந்தவர் என்பதை இங்கு நாம் நினைவூட்ட விரும்புகிறோம். ஏனென்றால், மக்கள் பட்டாளத்தில் சேர்வதைத் தடுக்கும் இயக்கத்தில் உள்ள ஒருவர், இப்போது, பட்டாளத்தில் சேர்வதற்கு இந்தி அவசியமென்றும், பல்கலைக் கழக மாணவர்களிற் பலர் பட்டாளத்தில் சேரவேண்டியவர்களாய் இருக்கிறார்கள் என்றும் கூறுவது, எதைக் காட்டுகிறது? இந்தி படிப்பதன் அவசியத்தையா? பட்டாளத்தில் சேர்வதன் அவசியத்தையா? பட்டாளத்தில் மக்கள் சேர்வதற்கு இந்தி அவசியமென்றால், இப்போது இரண்டு மூன்றாண்டுகளுக்குள் தமிழ் நாட்டிலிருந்து மட்டும் 2 இலட்சம் பேருக்குமேல் பட்டாளத்தில் சேர்ந்து விட்டார்கள். இவர்களில் ஆயிரத்துக்கு ஒருவருக்குக் கூட இந்தி தெரியாதென்பதை நாம் நன்கறிவோம். இந்தி தெரியாத காரணத் திற்காகப் பட்டாளத்தில் சேர்ந்தவர்களில் ஓர் ஆளையாவது சர்க்கார் வேலையிலிருந்து நீக்கிவிடவுமில்லை. இதனால், பட்டாளத்தில் சேர்பவர்கட்கு இந்தி அவசியமில்லை என்பது நன்கு தெளிவாகின்றது. அடுத்தபடியாக, வடநாடு சென்று வியாபாரம் செய்யும் தமிழ் மக்களுக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டுமென்பது தோழர் முத்துரங்கம் அவர்களின் இன்னொரு வாதம். இதுவும் தேவையும் பொருத்தமுமற்ற வாதமாகும். எப்படி என்றால், தமிழ் நாட்டில் இருந்து கராச்சி, பம்பாய் முதலான ஊர்களுக்குச் சென்று வியாபாரம் செய்யும் தமிழர் எவரும், முதலில் இந்தி கற்றுக் கொண்டு போவதில்லை. அங்கு சென்ற சில நாட்களுக்குள்ளாகவே அவர்களுக்கத் தேவையான அளவுக்கு இந்தியோ பிற நாட்டு மொழிகளையோ தெரிந்து கொண்டு வியாபாரத்தை நன்கு நடத்துகின்றார்கள். எனவே, தோழர் முத்துரங்கம் அவர்கள் இந்தி கற்பதற்காகக் கூறும் காரணங்கள் பயனற்றவை என்பது தெரிந்தும், தம்முடைய கட்சியாரால் கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தை மற்றையோர் மாற்றுவதா என்ற குறுகிய மனப்பான்மையுடனேயே அவ்வறிக்கை வெளியிடப்பட்ட தென்பதை எவரும் எளிதில் அறிந்து கொள்வர்.

தோழர் முத்துரங்கம் போன்ற தனி நபர்கட்கு ஒருக்கால் இந்திப் பித்தம் தலைக்கேறி அது தெரிந்த பின்பே வடநாடு சென்று வியாபாரம் முதலான தொழில்கள் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். ஆனால் அந்தத் தேவையற்ற இந்திப் பித்தம் மற்ற அனைவர்க்கும் இருக்கவேண்டுமென்று கூறுவது அடாது முறையுமாகாது.

(19.9.1943)