அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


முழக்கம்

“எலிகள் புசிக்க
எல்லாம் கொடுத்தே
சிங்க ஏறுகள்
ஏங்கிடுமோ? இனிப்
புலிகள் நரிக்குப்
புசிப்பளித்தே
பெரும் புதரினில்
தூங்கிடுமோ?”

முடியாது! ஒருகாலும் முடியாது!! பொறுத்தது போதும், இனி நம்மால் புதரினில் பதுங்கியிருக்க முடியாது! சித்திரவதையைத் தாங்கிக் கிடக்க, நாம் ‘தர்ப்பாசூரர்’ பரம்பரையல்ல! நமது நரம்புகள்-மண் கூடுகளல்ல, தமிழகத்தின் வெற்றி வாட்கள்! நமது உடலிலே ஓடுவது நீரல்ல; செங்குருதி! நாம் ஏழைகளாய், மோழைகளாய், குடிசைகளில் குந்திக் கிடந்து விட இனி முடியாது!’ ஆண்ட இனத்தால் மீண்டும் முற்றுகை’ என்று ஆர்ப்பரிக்கும் நமது இதய முரசை, இனியும் நாம் எழுப்பாமலிருக்க முடியாது!

வாளும் வேலும் தாங்கி வாழ்ந்த பரம்பரை வெறும் ‘காகிதக் கோட்டை’களைக் கண்டு கலங்கிக் கிடக்கப் போவதில்லை! நாளும் நேரமும் நமக்கில்லை! நமது பணி, நடைபெறாத நாளில்லை நாட்டில் நமது உரிமை முழக்கம். எதிரிகளின் கேலிகளைத் தவிடு பொடியாக்கி, மாற்றாரின் மன இருளைப் போக்கி, ‘மண்பிம்பங்களை’யும் மனித உருவாக்கி, மகத்தான பேருகு எடுத்து வருவதை, வீணாக்கிவிட மாட்டோம்.

நாம் வீணர்களல்ல-வீழ்ந்துபட்ட மாபெரும் சமுதாயத்தின் விடுதலைத் தூதுவர்கள்.

சூது மதியும், சுயநல வாதமும் பேதத் திமிரும், பித்து நினைவும் கொண்டு திரிவோரின் கொட்டம் ஒடுங்க-கொள்கை வாளைக் குறிப்பறிந்து வீசி, கொடுமை களையப் போராடும் நாம் தூங்கும் புலிகளாக, இனி இரோம்; இருக்கவும் முடியாது!

கார்மேகங்களோடு புயலும் இடியும், மழையும் நாசமும் நம்மைத் தாக்கத் துவங்கிவிட்டன. அகிலும் தேக்கும் அழியாக் குன்றமும் கொண்ட நமது இன்ப பூமி, ஏழைகளின் பிணங்களைத் தாங்கும் துன்ப பூமியாவதைச் சகித்துக் கிடக்க நாம் ‘தசைப் பொதிகள்’ அல்ல! சாமிகளையும் சித்துக்களையும் ‘வரப்பிரசாத’ மகிமைகளையும், மயக்க விளக்கங்களையும் கேட்டு, மாண்டு மடிந்த நாட்கள் விலகிவிட்டன. இனியும் மதோன்மத்தராயிருக்க முடியாது! மார் நிமிர்ந்து, தோள்தட்டி போர்ப்பரணி பாடி, பாசறை நோக்கிப் புறப்பட்டுவிட்ட நாம் இனியும், வாளாயிரோம்! வஞ்சகரின் தாள் பணிந்தது போதும், இனியும் அவர்களுடைய தாசர்களாக இருக்க முடியாது!

விண் அதிர, மண் கலங்க இடியும் புயலும் போட்டியிட, நமது கொள்கையின் சக்தி, ‘பிடிவாதக் கோட்டைகளை’ தூள், தூளாக்க வேண்டும்! ‘எள்ளிச் சிரிக்காதே துள்ளிவருகுது வேல்!’ என்று துடுக்குத்தனமுடையோரின் இடுப்பை யொடிக்க வேண்டிய இன்பநாள்” நம்மை நோக்கி பவனி வரத் துவங்கி விட்டது!

“பாரில் நாமே-பழம்புகழ் உடையோம்” என்று பரம்பரைப் பெருமைகளைப் பேசிவிட்டுப் போய்விடும், பெருமிதப்போக்கு, இனி பலன்தர முடியாது! பொறுத்தோம்-இனியும் பொறுமைக்கு இடமில்லை!!

பொங்கும் நம் உணர்ச்சியை, ததும்பி வழியும் நமது சுதந்திரத்தாகத்தை வெளிக்காட்ட வேண்டிய வேளைகள் வந்து விட்டன. நமது உடலிலே தியாகத்தழும்புகள் இடம் பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

துப்பாக்கி! சாதாரண ஆயுதம் நமக்கு.

குண்டுமாரி! நம் கொள்கை வெறிக்குமுன் சிறுதூசு.

தடியடி! மாற்றார் வீசும் கொடுமை அடிகளைவிடச் சாதாரணமானது.

சிறைச்சாலை! மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை, நமக்கு!

இந்த அடக்குமுறைகளால் நமது இதயம் கலங்காது என்பதைக் காட்டிவிட்டோம்.

“அடி! உதை! குத்து! சுடு! எதற்கும் அஞ்சோம். எமது பணியை விடோம்!” என்று முரசொலித்துக் கொண்டேயிருக்கிறோம்.

எட்டுமுறை சுட்டுப்பொசுக்கினர்-கலங்கினோமில்லை, ‘நல்லுரிமை நம் மூச்சு’ என்ற கானம்தான் கிளம்பிற்று!

கலவரம் செய்தோம் என்று வழக்குப்போட்டனர். ‘வா! நீதி மன்றத்துக்கு’ என்று அழைத்துவிட்டோம்!

தடியடி தர்பார் நடத்தினர்- ‘தாங்கிக்கொள்ளும் பெரும் படை இதனைப் பாரீர்!’ என்று பட்டாளத்துத் தம்பிகளைக் காட்டினோம்!

நமது ரீரம்-சோரம் போய்விடாது சேரன் பரம்பரை ‘கனக விசயர்’ கதறலுக்காக, காலில் வீழ்ந்து விடாது நமது குருதி, வீரமறியா வீணர்களின் மிரட்டலால், வற்றிப்போய் விடாது.

அடக்குமுறை அம்புகளை ஓயாது, ஒழியாது வீசிக்கொண்டே யிருக்கின்றனர். வீம்பு எண்ணங் கொண்ட ஆட்சியாளர்கள்.

நமது சென்னை அலுவலகத்திலே கிடந்த, ‘காகித மூட்டை’களை, அந்தி நேரத்தில், கொண்டு சென்றனர். ரூ.700 தரமாட்டாயோ?” என்று கேலி பேசுவது போல நாம் சிந்தாகூலம் கொள்ளவில்லை! சிரித்தோம்.

“சந்திசிரிக்கிறதய்யா உங்கள் ஆட்சி! நீங்கள் மந்திரிகளாய் வந்ததுமுதல் என்னென்ன கோளாறு புரிந“தீர்கள் என்று குற்றப் பட்டியல் சாட்டுகிறார் உங்கள் சகா-மாஜி பிரதமர் பிரகாசம் அதை மறைக்க, வழியும் வக்குமில்லாத நீங்கள் எங்களது ‘காகித மூட்டைகளை’த் தூக்கிச் செல்லுகிறீர்கள். பாவம்! பெரிய எழுத்தில் உங்கள் குற்றங்களை மறைத்து அச்சிட்டு ஓட்டவாவது அந்தக் காகிதங்கள் பயன் படட்டும்! உங்கள் நாற்றம், வெளியில் தெரியாமல் தடுக்கவாவது எமது காகிதங்கள் பிரயோசனமா கட்டும்! பெரிய எழுத்துக்களில் உங்களைப் பற்றி அச்சடித்து, ஊர் முழுதும் ஒட்டிக்கொள்ளுங்கள்” என்று, அலட்சியத்தையே காட்டினோம்.

சந்திசிரிக்கும் சர்க்கார்-நம்மீது சமர் தொடுக்கிறது!

ஆயினும் நாம், அதைக் கண்டு கலங்கவில்லை-பரிதாப்படுகிறோம்!

கொடுமைகளை வீசி மக்களை அடக்கிட மனப்பால் குடித்து கடைசியில் வீழ்ந்து ஒழிந்தோரின் சரிதம்-நமக்கு நன்றாகத் தெரியும்.

ஆனாலும் நம்மை மிரட்டுகிறார்கள் இந்தப் ‘பொம்மைகள்!’

‘சலசல’ வென்ற சப்தங் கேட்டதும் பயந்து பதுங்கும் பனங்காட்டு நரிகள் நாம், என்று எண்ணிக் கொண்டு!

நாம் எதற்கும் கலங்கவில்லை-எடுத்த காரியங்களை வெற்றிகரமாக்கிக்கொண்டே வருகிறோம்.

‘வடநாட்டு மந்திரிகளைப் பகிஷ்கரிப்போம்’ என்று முடிவு செய்தோம். விளைவு, பல கொடுமைகளுக்காளாகினும், நாம் அயர்ந்தோமில்லை!

பேச்சுரிமை நிலைநாட்ட குன்றத்தூரிலும், நாரணமங்கலத்திலும் அறப்போர் துவக்கினோம், கொடுமை தாண்டவமாடச் செய்தனர் கோலேந்திகள். தயங்கவில்லை நாம்!

நமது நடவடிக்கைகள்-இலட்சியப் படிக்கட்டுகள்.

வீர முழக்கமிட்டுவிட்டு, காரியம் முடிந்ததா, போதும் என்று கணக்குப் போட்டுப் பார்க்கும் காரியமல்ல நமது பணி. ஒருபெரிய நாட்டையே மீட்பது, எனவேதான், ‘அவசர முடிவுகள்’ நம்மை அண்ட முடிவதில்லை பொறுப்போடு பணிபுரிந்து கொண்டிருக்கிறோம்.

பொறுப்பின் செல்வர்களாக விளங்கும் நமது கிளைக் கழகங்களுக்குத் தங்கள் “சக்தி”யைக் காட்ட, சந்தர்ப்பம் வந்துவிட்டது. துடித்துக் கிளம்பும் தூண்டா விளக்குகளாம் நமது தொண்டர் மணிகளுக்குச் சுமையானதோர் செய்தி.

முன்பு வருவதாக அறிக்கைதந்து விட்டு, கடைசி நேரத்தில் வராமற் போன டில்லி கைத்தொழில் மந்திரி அரிகிருஷ்ணமஹ்தாப்- தென்னாட்டின் பல பகுதிகளிலும் டிசம்பர் 3-ந் தேதி முதல் சுற்றுப் பிரயாணம் செய்யப் போகிறாராம். (விபரம் வேறிடத்தில்) டில்லி மந்திரி வருகிறார்! வடநாட்டு ஆதிபத்தியத்தின் பிம்பம் வருகிறார்!!

வரும் செய்தியறிந்து, நமது கிளைக்கழகத்தினர், தமக்குக் கிடைக்கும் சந்தர்ப்பத்திற்காக மகிழ்ச்சிடையவர் என்பதை நாம் அறிவோம்!

தங்கள் வீரத்தைக் காட்டிடும், சந்தர்ப்பம் கிடைத்தது என்ற மகிழ்வோடு இருந்து விட்டால் மட்டும் போதாது!

நமது சக்தியைத்திரட்டி, டில்லி மந்திரி, கலங்குமாறு காட்டிட வேண்டும் கருப்புக் கொடிகளை.
நமது உரிமை முழக்கத்தின் உண்மையை உணர்த்தும், கருப்புக்கொடி நாள் அமைதியோடு, ஆங்காங்கு நடைபெற வேண்டும்.

நாம் அமைதியோடு இருந்தாலும்-கண்ணியத்தோடு இருந்தாலும் இப்போதைய ஆளவந்தார் ‘நம்மைப் போலவே’ இருப்பர். என்று எண்ண முடியாது!

ஏனெனில் நம்மைத்திண“டாடச் செய்வதும், நமது பொருள்களைக் சூறையாடுவதுமே, இந்த சர்க்காரின் திருப்பணியாயிருக்கிறது.

ரூ.700 கட்ட வேண்டும் என்று காரணங்காட்டி தி.க. தலைவர் பெரியார் அவர்களது காரைக்கொண்டு போய், போலீஸ் பாராவில் வைத்துச்சீரழிக்கும் கெடுமதிகொண்ட இந்த ஆட்சியில் கண்ணியத்தை நாம் எதிர்ப்பார்க்க முடியாது!

கண்ணியமும், நல்லாட்சியும் இந்த ஆட்சியில் மக்கள் காணமுடியாப் பொருளாகும்.

எனவே, நாம் கருப்புக்கொடி காட்டப்போகிறோம் என்று அறிந்ததும் தடிகளைத் தூக்கி வரலாம்! துப்பாக்கிகளுக்கு வேலை தரலாம்! குண்டுமாரிகளைக் கொட்டலாம்! பிடித்து லாரியிலே கொண்டு செல்லலாம்! எலும்புகளை முறிக்கலாம் நரம்புகளை அறுக்கலாம்-மார்புகளைத் துளைக்கலாம்-மனிதாபிமானம் இல்லாது கையிலே விலங்கிட்டு நம்மை இழுத்துச் செல்லலாம்! நாம் எதிர்பாராத, கேடுகளும் அடக்குமுறைகளும், நம்மீது வீசப்படலாம்.

ஏன்? நமது உயிர்கள் கூட இந்த மண்ணிலிருந்து பிரிக்கப்படலாம். குண்டுகள் மூலம்!

துப்பாக்கிகள் அலறக் கூடும்-பரவாயில்லை.

தடியடி தர்பார் நடக்கக் கூடும்-பரவாயில்லை.

நமது இரத்தம் வீண்போகாது, அடக்குமுறைக் கொடுமையால் நாம் எதையும் இழந்துவிட மாட்டோம்! அதிகமாகப் போனால் எது போகும் நமது உயிர்போகும்!

போனால் போகட்டுமே! கேடுற்று! சீர்குலைந்து ‘நாயும் பேயும்’ உலவும் நாட்டின் நல்வாழ்வுக்காக, நமது உயிரைக் கொடுத்தோம் என்ற பெருமையாவது, நமக்குப் பின்னால் நிலவும்!

ஐந்நூற்றுக்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் ஒரிஸாவிலுள்ள ரந்தரளி என்ற இடத்தில் நேப்பாளப்பாபா என்ற ஒரு போலி வேடதாரியால் கடந்த வாரம் இறந்தனராம் மாயமருந்து வாங்க வந்து, காலராவுக்கு இரையாகி, உயிர் துறந்தனராம், மூன்றே நாட்களில்!

அதுபோல இல்லாது, நல்ல இலட்சியத்திற்கா நமது உயிர்போனால் தான் என்ன!

கேடுகெட்ட ஆட்சியின் கொடுமைக்குச் சாவுமணி அடிக்கும் காற்றாகவாவது நமது கடைசி மூச்சுப்பயன்பட்டது என்று சரித்திரம் சாற்றாமலா போகும்!

வேதனைக்காகப் போராடி வேதனையால் சாகடிக்கப்பட்ட சமுதாயத்திற்காக-கேவலம்-நமது உடலையும் உயிரையும் தத்தம் செய்யவும் கூசும் ஏமாளிகளல்ல நாம்!

இதை, நம்மை ஆட்டிப் படைக்கும் ஆணவப் பொம்மைகளுக்கு உணர்த்துவோம். மஹதாப்-வருகையின் போது நமது மகத்தான இலட்சிய கீதத்தை நமது வீரத்தால் எழுப்புவோம்! நாடெங்கும் கருப்புக்கொடி காட்டி நமது சக்தியை உணர்த்துவோம்! நமது பணி! ஓயாத் தொடர் கதை அதை நமது இரத்தத்தால் எழுதுவோம்! வெற்றி நமதே!

(திராவிடநாடு 24.12.50)