அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


நான்கு இலட்சம் காணிக்கை!

வீராவேசக்காரன், வெந்தழல் விழியினன், வெற்றியன்றி வேறொன்றறியா வீரன், ஹிட்லர், பாலைவனத்திலே, தனது பெரும்படையொன்றை அனுப்பி, அதற்குப் பக்குவமான பயிற்சி தந்து; பலமான பாதுகாப்பு அரண்கள் அமைத்துக் கொடுத்ததுடன், சூரன் என்ற விருதுகொண்ட ரோமல் என்பானைத் தலைவனாக்கி, அவனுக்கு அடுத்த படியில், ஆங்கிலரென்றால் சீறி விழும் துவேஷி ஆர்னீ என்பானைப் படைத்தளபதியாக்கி, வட ஆப்பிரிக்காவை வளைத்து, ஈஜிப்டைப் பிடித்து, மத்யதரைக்கடலைக் கலக்கிவிடு, என்று உத்தர விட்டான். வட ஆப்பிரிக்கப் போரும், பல்வேறு மாற்றங்கள், திட்டங்களுடன் நடைபெற்றது.

கடைசிக் கட்டம் என்று கருதப்பட்ட நேரத்திலே, ஜெனரல் ரோமல், புலியெனப் பாய்ந்து, கோட்டைகளைப் பிடித்துக் கொத்தளங்களைத் தூளாக்கி, ஆங்கிலப்படையை ஆட்டிப் படைத்ததுடன், அலெக்சாண்டிரியா துறைமுகத்தைப் பிடிப்பதற்காக, ஈஜிப்ட் தேசத் தாழ்வாரத்திலே நடமாடினான்.

கெய்ரோவிலே கழுகுகள் வட்டமிடுமோ, ஈஜிப்ட் பிடிபடுமோ, மத்யதரைக்கடல் இத்தாலிய ஏரியாகுமோ, சூயஸ் கால்வாயின் மீது சுவஸ்திகக் கொடி பறக்குமோ, என்று உலகிலே, எண்ணி ஏங்காதார் மிகச்சிலரே.

“அஞ்சாதீர்! ஈஜிப்ட் காப்பாற்றப்படும்” என்று சர்ச்சில் உறுதி கூறினபோதுகூட, ‘ஆமாம், மலேயா காப்பாற்றப்படும் என்று கூடத்தான் இவர் கூறினார்; நடந்ததோ வேறு” என்று கூறி வருந்தினர் சிலர். கேலி செய்தனர் பலர். ஆனால் சர்ச்சிலின் மொழியைத் தமது வழியாகக்கொண்டு, நேசநாட்டுத் துருப்புகள் நிமிர்ந்து நின்று போரிட்டு ரோமலின் படையை விடாது துரத்தலாயின. இதற்குள், விஷி சர்க்காரைவிட்டு விலகினேன் என்று ஜெனரல் ஜிராடு கூறிவிட்டார், அப்படையும் போருக்குக் கிளம்பி அச்சுப்படையைக் கொட்டத் தொடங்கிற்று. அமெரிக்கப்படையும் வந்து சேர்ந்துவிட்டது, உடனே மகத்தான “வேட்டை” ஆரம்பமாயிற்று. மாயாவாதிபோல், மறைவதும் தலைகாட்டுவதும், ஓடுவதும் ஒதுங்கி நிற்பதும், திடீரெனத் தாக்குவதும் திசைமாறிப் பாய்வதுமான, பல சூது புரிந்தும், அச்சுப் படையினால், அவிழ்ந்த கச்சையை வரிந்து கட்ட முடியாது போய்விட்டது, கடலிலிருந்து, கப்பலின் பீரங்கிகள் கனலைக் கக்கின; தரையிலே டாங்கிகள் தாக்கின; விண்ணிலிருந்து விமானங்கள் குண்டுகள் பொழிந்தன. ஈஜிப்ட்டிலிருந்து பிரிட்டிஷ், இந்தியப் படைகள் தாக்கியபடி துரத்தின. அதற்கு எதிர்ப்புறத்திலிருந்து அமெரிக்கத் துருப்புகள், ஓடிவரும் அச்சுப்படையைக் குண்டு பொழிந்து வரவேற்றன. இடையே புகுந்து, வீரபிரான்சு மக்களின் விடுதலைப்படை, அச்சுப்படையின் இடுப்பை முறித்தன. வெற்றி முழக்கமிட்ட வண்ணம் பாய்ந்து வரும் நேச நாட்டுப் படைகள் முப்புறமும், மற்றோர்புறமோ கடல், அதிலேயோ, பிரிட்டிஷ் கடற்படை, விண்ணிலோ, பிரிட்டிஷ், அமெரிக்க விமானப்படை, புண்பட்ட புலி புதரிலே பதுங்கிப் பயன் உண்டோ! வேல் பாய்ந்து வாராதோ! ஜெர்மன், இத்தாலியப் படைகளின் நிலையும் அதுபோலவே முடிந்தது. டியூனிஸ் என்னும் கடைசிக்களத்திலே ஜெர்மானியர் தாம் கற்ற வித்தையத்தனையையும் காட்டிப் பார்த்தனர். தோற்றனர், சரண் புகுந்தோரும் செத்தவரும் போக, மற்றையோர், பான் தீபகற்பம் என்னும் இடத்திலே புகுந்து கொண்டனர், அவர்கள் நிலைமை, கூண்டிலே சிக்கிய எலி போன்றதாகி விட்டது. கேப்பான் தீபகற்பத்தைச் சுற்றிலும் நேசநாட்டுப் படைகள் குவிந்தன. குலைநடுக்கங்கொண்ட அச்சுப் படைத்தலைவன், வான்ஆர்னிம், புதன்கிழமை இரவு 8.15 மணிக்கு, ஆயுதத்தைக் கீழே போட்டுவிட்டு, “அபயம்” கோரினான் இந்தக் கடைசிக்காட்சியைக் காணாது, ரோமல், ஜெர்மனியிலே தங்கிவிட்டார். அவருக்கு ஏதோ நோயாம்! நோய் வருவது சகஜந்தான்!! பனிரண்டு தளபதிகள் உட்பட மே 5-ந் தேதி முதல் ஒரு வாரத்திலே மட்டும் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் அச்சுப் படையினர் கைதிகளாயினர். பிடிபட்ட பீரங்கிக்குவியலும். துப்பாக்கிக் குன்றுகளும், டாங்கி வரிசைகளும், ஒடிந்துபோன விமானங்களும், கணக்கிடமுடியாது. நேசநாட்டினருக்கு வட ஆப்பிரிக்காவிலே மகத்தான வெற்றி கிடைத்துவிட்டது. ஜெர்மன் படையை எதிர்த்துப் போரிட்டு நொறுக்க முடியும் என்பதை உலகுக்கு உணர்த்திய பெருமை, சோவியத் நாட்டுக்குக் கிடைத்தது. இரண்டாவது பரிசு, இப்போது நேசப் படைகட்குக் கிடைத்தது. இந்த வட ஆப்பிரிக்கப் போரிலே, நடந்த ஒவ்வோர் சமரும், சரிதக் கீர்த்தி வாய்ந்தனவாகும். இவைகளிலே, நமது துருப்புகள் மிக்க கீர்த்திபெற்றன. முக்கியமான கோட்டைகள் பிடிபட்ட போதெல்லாம் நமது துருப்புகளின் வீரத்தியாகமே வெற்றிக்குக் காரணமாக இருந்ததென்பதை ஏகாதிபத்திய இலட்சியத்தைப் பூஜிக்கும் சர்ச்சில் உள்படப் பலரும் பாராட்டக் கேட்டுப் புகழ்கிறோம். வட ஆப்பிரிக்காவை விழுங்குவதற்குத் திட்டமிட்ட ஹிட்லர், இந்த முனையில் போர் துவக்கி இரண்டு ஆண்டு, பதினோறு திங்கள், இருபத்தாறு நாட்களாயின, இறுதி வெற்றி நேசநாடுகளுக்குக் கிடைத்துவிட்டது. இந்தப் போரிலே இதுவரை கைதியான அச்சுப்படையினரின் தொகை 4 இலட்சம். பதினொரு ஜெர்மன் பட்டாளங்களும், இருபத்தாறு இத்தாலியப் படையும் படுசூரண
மாயின. பொருள் நாசமோ ஏராளம். பாலைவனத்தின் வெண்மணல், காவி ஏறிவிட்டது. ஜெர்மன் பேராசையும், இத்தாலியரின் சாம்ராஜ்யப் பித்தமும் மலை ஏறிவிட்டது. நாலு இலட்சம் வீரரைக் காணிக்கையாகத் தந்த ஹிட்லர், இனியேனும் சரண்புகுவாரா, கேப்பான் தீபகற்பத்திலே கடைசி நேரத்திலே ஒளிந்து கொண்டு போரிட்டுப்பார்த்தது போல் பெர்லின் கதவைச் சோவியத் படை தட்ட, கோட்டையை நேசநாட்டு விமானங்கள் தாக்க, பிரன்சுக் கடலோரம், நார்வே கடலோரம், இத்தாலி ஆகிய இடங்களிலே எங்கேனும் நேசப்படைகள் இறங்கி, ஜெர்மனிடையே நோக்கிப் பாய்ந்து வரும்வரை காத்திருக்கப் போகிறாரா, என்பதுபற்றிய கவலை, ஜனநாயக வாதிகளுக்கு இல்லை. ஜெனரல் பிராங்கோவுக்கு அக்கவலை பிறந்துவிட்டது. ஆகவே அவர், பட முடியாதினித்தயரம் எனும் பதிகம் பாடிச் சமாதானந்தேடக் கோருகிறார். நிபந்தனையின்றிச் சரண்புகுந்தாலன்றி இனி ஜெர்மன் வெறியர்கள் தப்ப முடியாது. இதற்காவன செய்யும் நோக்கத்துடனேயே சர்ச்சில் - ரூஸ்வெல்ட்டுடன் கலந்து பேசி வருகிறார்.

(திராவிடநாடு - 23.05.1943)