அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


நாலு நாட்களுக்குள்!

``ஏட்டில் எழுதுவது ஒன்று.''

``நடைமுறையில் செய்வது இன்னொன்று.''

``கொள்கையளவில் உண்மை!''

``நடைமுறையில் அப்படி இல்லை.''

``இந்துஸ்தானி கற்றுக் கொடுப்பதற்கு மட்டும் வசதி செய்யப்பட்டிருக்கிறது.''

``மற்றப் பாஷைகளுக்கு வசதி செய்ய வில்லை.''

``இஷ்டம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்துஸ்தானியைக் கற்றுத்தான் ஆகவேண்டும்.''

``வேறு வழி கிடையாது.''

``இதை நிர்ப்பந்தம் என்று அழைக்கக் கூடாதென்றால் வேறு என்னவென்று அழைப் பது?''

``நிர்ப்பந்தத்தின் கீழ் இந்தி கற்பதைப் பெரும்பான்மைத் தமிழ் மக்கள் விரும்பவில்லை என்பது வெளிப்படை.''

``முதலில் செய்த ஏற்பாடு பொது ஜன அபிப்பிராயத்தை ஒட்டியிருந்தது.''

``யாருடைய தூண்டுதலின் பேரில் முதல் உத்தரவைக் கைவிட்டார்?''


``காங்கிரசுக்குள்ளேயே சில அவசரக் குடுக்கைகள் துள்ளிக் குதித்திருக்கலாம்.''

``பொதுஜன அபிப்பிராயத்தை மதித்துப் போக்கை மாற்றிக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை.''

``கொஞ்சங்கூடக் கூசாமல் இரண்டாவது உத்தரவைக் கிழித்தெறிய வேண்டும்.''

சர்க்காரின் கட்டாய இந்தித் திட்டம் பற்றி இவ்வளவு கண்டனங்களைக் கிளப்புவது யார்? ``ஏட்டில் எழுதவது ஒன்று, நடைமுறையில் செய்வது இன்னொன்று.'' என்று சர்க்காரைச் சிறிதும் மதியாமல் கண்டனச் சொற்களை வீசுவது யார்? ``காங்கிரசுக்குள்ளேயே சில அவசரக் குடுக்கைகள் துள்ளிக் குதித்திருக்கலாம்'' என்று காங்கிரசுக்காரர்களா சொல்லுவார்கள்? ஒரு போதும் அப்படிச் சொல்லவே மாட்டார்கள். சொன்னால் தீர்ந்தது! உடனே ஒழுங்கு நட வடிக்கை எடுத்து அவர்களை விலக்கி விடு வார்கள்! பொதுமக்களின் ஆதரவைப் பெற்றுப் பதவியில் அமர்ந்திருக்கும் சர்க்கார் செய்யும் காரியங்களைப்ப் பொது மக்களின் விருப்பத் திற்கு மாறாகச் செய்யப்படுகிறதென்று கூறி யார் கண்டிக்க முடியும்? காங்கிரசுக்குப் புறம்பான கட்சிகளில் இருப்பவர்கள் தான் இப்படிக் கண் மண் தெரியாமல் கண்டிப்பார்கள். வேறு யாருக்கும் இவ்வளவு துணிச்சல் பிறக்கும்? இப்போது இந்தி எதிர்ப்பில் ஈடுபட்டிருக்கிறார் களே, திராவிட கழகத்தார். அவர்கள் தான் இவ்வாறு சர்க்காரை வேண்டுமென்றே வைத் திருப்பார்கள் என்று நினைப்பீர்கள். ஆனால் உண்மை அதுவல்ல. காங்கிரசை முழுக்க முழுக்க ஆதரிக்கும் ஒரு காங்கிரஸ் ஏடே இந்தக் கண்டனச் சொற்களை வீசி இருக்கிறது- சர்க் காரின் இந்தித் திட்டத்தைக் கண்டித்திருக்கிறது. சென்னையில் இருந்து வெளிவரும் `தினத் தந்தி' என்ற பத்திரிகை 6-8-48இல் இந்தக் கண்டனச் சொற்களை வீசி ஒரு தலையங்கம் தீட்டியிருக் கிறது. `தினத்தந்தி' எழுதிய முழு வாசகங்களை யும் அப்படியே கீழே தருகிறோம்.

``இந்தி கட்டாயப் பாடமல்ல, இஷ்டமிருந் தால் படிக்கலாம், இல்லாவிட்டால் வேறு மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று சர்க்கார் விளக்கம் தந்திருக்கிறார்கள். ஏட்டில் எழுதியிருக்கும் திட்டத்தை பார்ப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல், அமல் நடத்தும் தோரணையையும் பார்த்ததால், சர்க்காரின் வியாக்கியானத்தால் ஏற்றுக்கொள்வதற்கில்லை என்று வருத்தத்துடன் கூற வேண்டியிருக்கிறது. திருத்தி அமைக்கப்பட்டுள்ள திட்டத்தின்படி மாணவர்கள் முதல் பாரத்திலிருந்து மூன்று மொழிகளைக் கட்டாயமாகப் படித்தாக வேண்டி யிருக்கிறது. பிரதேச பாஷையை மூன்றாவது பாஷையாகவும் கற்பதுடன் வேறொரு மொழியை இரண்டாவது பாஷையாகக் கற்றாக வேண்டும். இந்த இரண்டாவது பாஷையைக் கற்பதில் தான் தகராறு வந்திருக்கிறது.

இரண்டாவது பாஷையின் கீழ் இந்துஸ் தானி, சமஸ்கிருதம், அராபி பாஷைகள், இந்திய பாஷைகள், ஆகியவற்றுள், ஏதாவது ஒன்றை மாணவர்கள் எடுத்துக் கொண்டாக வேண்டும். இந்தப் பாஷைகளில் குறிப்பிட்ட ஒன்றைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அந்த முறையில் பார்க்கப் போனால் இந்துஸ்தானி ஒரு இஷ்டந்தானே என்று வாதிக் கப்படுகிறது.

கொள்கையளவில் அது வாஸ்துவமே, ஆனால் நடைமுறையில் அப்படிச் சொல்வதற் கில்லை. பொதுவாக எல்லாப் பள்ளிக் கூடங் களிலும் இந்துஸ்தானி சொல்லிக் கொடுப்பதற்கு மட்டும் வசதி செய்து தருகிறார்களே ஒழிய, இரண்டாவது தொகுதியிலுள்ள மற்றப் பாஷை களுக்கு வசதி செய்து தரவில்லை. எனவே இஷ்டமிருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்துஸ் தானியைக் கற்றுத்தான் ஆகவேண்டும், வேறு வழி கிடையாது! இதை நிர்ப்பந்தம் என்று அழைக்கக் கூடாதென்றால் வேறென்னவென்று அழைப்பது.

நேரடியாக இருந்தாலும் சரி, மறைமுகமாக இருந்தாலும் சரி, நிர்ப்பந்தத்தின் கீழ் இந்தி கற்பதைப் பெரும்பான்மைத் தமிழர்கள் விரும்ப வில்லை என்பது வெளிப்படை.

இந்தியைக் கட்டாயமாகக் கற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்குப் போதுமான காரணம் எதுவும் கிடையாது. சர்க்கார் விடுத்திருக்கும் அறிக்கையில்கூட இந்தி தேசிய மொழியாகப் போவதால், தமிழர்களில் பலருக்கு இந்தி தெரிந்திருப்பது நல்லது என்றுதான் கூறுகிறார் களேயொழிய தெரிந்துதான் ஆகவேண்டும் என்று சாதிக்கவில்லை. வடநாட்டுடன் சம்பந்தம் வைத்துக் கொள்வதற்கு இந்தி தெரிந்திருப்பது நல்லது என்று சர்க்கார் காரணம் காட்டி யிருக்கிறார்கள்.
மக்களின் எதிர்ப்பைக்கூட அலட்சியம் செய்து திணிக்கும் அளவுக்கு இந்தி அவசியந் தானா? இதை சர்க்கார் யோசித்துப் பார்க்க வேண்டும். இன்றைக்கெல்லாம் இருந்தால் எத்தனை பேர் வட இந்தியாவுக்குப் போய் புழங்கப் போகிறார்கள்! வியாபார நிமித்தமோ, உத்தியோக நிமித்தமோ தான் தமிழர்கள் வட நாட்டிற்குப் போகும் அவசியம் ஏற்படும்.

அப்படிச் செல்பவர்கள் குறைந்தபட்சம் எஸ்.எஸ்.எல்.சி. வரையிலாவது படித்திருப்பார் கள் என்று தாராளமாக எதிர்பார்க்கலாம். அவர் களுக்கு இந்தியில் பரிச்சயம் ஏற்பட வேண்டு மானால் 4-வது பாரத்திலிருந்து இந்தி கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தால் போதும். முதலாவது பாரத்திலிருந்தே பழக்கத்தில் இல்லாத பாஷையைத் திணித்து இளம் மூளைக்கு அதிக வேலை தர வேண்டிய அவசியமில்லை.

சர்க்கார் உத்தியோகத்திற்காக இந்தி தெரிந் திருக்க வேண்டிய அவசியமும் கிடையாது. எதிர்காலத்தில் மாகாண நிர்வாகம் பூராவும் தமிழிலேயே நடக்கப் போகிறது. எந்த விதத்தில் பார்த்தாலும், மறைமுகமாகக் கூட இந்தி கட்டாயப் பாடமாக்குவதற்கு காரணம் கிடையாது.

இதைக் கல்வி மந்திரி நன்கு உணர்ந்திருக் கிறார் என்பதற்கு அவர் முதலில் போட்டிருந்த உத்தரவே அத்தாட்சி. முதல் உத்தரவின்படி, இரண்டாவது பாஷையை எடுத்துக்கொள்வதும், எடுத்துக் கொள்ளாததும் மாணவர்களின் இஷ்டத்தைப் பொறுத்தது. இஷ்டமில்லா விட்டால், இரண்டாவது பாஷைத் தொகுதியில் எதையுமே எடுத்துக் கொள்ளாமல் விட்டு விடலாம்.

முதலில் செய்யப்பட்ட இந்த ஏற்பாடு பொது ஜன அபிப்பிரயாத்தை ஒட்டி இருந்தது. அவர் இதை எதற்காக மாற்ற வேண்டும்? யாருடைய தூண்டுதல் பேரில் முதல் உத்தரவைக் கை விட்டார்?

இந்தக் கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்காவிட்டாலுங்கூட பதிலை யூகித்தறிவது கடினமல்ல. காங்கிரசுக்குள்ளேயே சில அவசரக் குடுக்கைகள் துள்ளிக் குதித்திருக்கலாம். கல்வி மந்திரி நிதானமாக நடந்து கொள்கிறார் என்று குற்றஞ் சாட்டியிருக்கலாம். குறை கூறும் `உற்சாகிகளை'த் திருப்திப்படுத்துவதற்காகப் பழைய உத்தரவை மாற்றியிருக்கிறார் என்றே கருதுகிறோம். கல்வி மந்திரியின் சங்கடத்தை நாம் உணராமல் இல்லை.

இந்த நிலைமையில், கல்வி மந்திரி என்ன செய்தாக வேண்டுமென்பதில் சந்தேகமிருக்க முடியாது. கொஞ்சங்கூடக் கூசாமல் இரண்டாவது உத்தரவைக் கிழித்தெறிய வேண்டும். அதற்குப் பிறகு, முதல் உத்தரவையாவது அமலுக்குக் கொண்டு வரலாம், அல்லது 4-வது பாரத்தி லிருந்து இந்தி கற்றுக் கொடுக்கவாவது ஏற்பாடு செய்யலாம்.

பொதுஜன அபிப்பிராயத்தை மதித்துப் போக்கை மாற்றிக் கொள்ளுவதில் தவறு ஒன்றுமில்லை. ராஜாஜியைப் போன்ற பிரபல தலைவர்கள் அனேக சந்தர்ப்பங்களில் இப்படி நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் எடுத்துக்காட்ட விரும்புகிறோம். பொதுமக்கள் அபிப்பிராயத்தை அனுசரித்து கல்வி மந்திரி, தன் போக்கை மாற்றிக் கொள்வார் என்று நம்பு கிறோம்.''

நாம் இதனை இங்கு வெளியிடுவதற்குக் காரணம், இந்தி எதிர்ப்ப்ஸபக் கிளர்ச்சியை இப்பத்திரிகை ஆதரிக்கிறதென்பதற்காக மட்டும் அல்ல. சர்க்காரின் தடுமாற்றம், அந்தச் சர்க்காரை ஆதரிக்கும் பத்திரிகைகளுக்கும் இயல்பாகவே ஏற்பட்டு விடுகின்றதென்பதைப் பொது மக்கள், அறிந்து உண்மையை உணர வேண்டுமென்ப தற்காகவே இதனை இங்கு வெளியிடுகிறோம். 6.8.48ல் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி நியாயமான தென்று எழுதிய `தினத்தந்தி' இந்தி எதிர்ப்பு மறியல் துவக்கப்பட்ட நாளாகிய 10.8.1948ல் நாலு நாட்களுக்குள் இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி அவசிய மில்லையென்றும், இந்தி எதிர்ப்புக்காரர்கள், காங்கிரஸ் சர்க்காரை எதிர்ப்பதற்காகவே இந்தச் சூழ்ச்சியைச் செய்கிறார்கள் என்று சந்தேகப்படு வதாகவும் ஒரு தலையங்கம் எழுதிவிட்டது. 10.8.1948ல் எழுதிய தலையங்கத்திலும் சர்க்காரின் கட்டாய இந்தித் திட்டத்தைக் கண்டித்து எழுதின போதிலும், நாலு நாட்களுக்குள் கண்டனங்கள் வேறு வடிவம் பெற்று விட்டன. கண்டனங்கள் கனிவுரைகளாக மாறிச் சர்க்காரும், இந்தி எதிர்ப்பாளர்களும் நேச மனப்பான்மையில் ஒரு முடிவுக்கு வரலாம்- அது மிகவும் சுலபம் என்றும் கூறுகின்றது. இந்த அளவோடு `தினத்தந்தி' நின்றிருந்தால், நாமும் இதைப்பற்றி இவ்வளவு தொலைவு எழுத வேண்டிய நிலைமையும் ஏற்பட்டிராது. ஆனால், சர்க்காரின் இந்தித் திட்டத்தைக் கண்டிக்க 6.8.48ல் கையாண்ட வாசகங்களையும் 10.8.48ல் கையாண்ட வாசகங் களையும் ஒப்பு நோக்கிப் பார்க்கும்போது, 6.8.48ல் `தினத்தந்தி.'

``யாருடைய தூண்டுதலின் பேரில் முதல் உத்தரவைக் கைவிட்டார்.''

என்று கல்வியமைச்சரைக் கேட்ட கேள்வியையே நாமும்,

``யாருடைய தூண்டுதலின் பேரில், ``இந்தி எதிர்ப்பைச் சாக்காக வைத்துக் கொண்டு சர்க்காரை எதிர்க்க இவர்கள் கிளம்புகிறார்கள்'' என்பதாக ஏன் எழுத வேண்டுமென்று,

`தினத்தந்தி'யைக் கேட்க வேண்ண்டியிருக் கிறது. 10.8.48ல் `தினத்தந்தி'யில் காணப்படும் சில வாசகங்களையும் இங்கே தருகிறோம்.

``ஈ.வே.ரா. பிரதமரைச் சந்தித்தும்கூட எந்த விதமான முடிவும் ஏற்படவில்லை.''
``இந்தி எதிர்ப்புப் போராட்டம் தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று இந்தி எதிர்ப்பாளர் கள் கூறுகிறார்கள்.''

``இப்பொழுது அதிகாரத்தில் இருப்பது பொது ஜன சம்மதத்தைப் பெற்றுப் பதவிக்கு வந்த சர்க்கார் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டால், போராட்டத்தைத் தவிர்ப்பது சாத்திய மென்ற முடிவுக்குத்தான் வரமுடியும்.''

இந்த இடத்தில் வாசகர்களுக்கு ஒன்றை நினைவுறுத்தி, மேலும் `தினத்தந்தி' கூறும் கருத்துக்களை வெளியிடுகிறோம். அதாவது 6.8.48ல்,

``பொது ஜன அபிப்பிராயத்தை மதித்து, போக்கை மாற்றிக் கொள்வதில் தவறு ஒன்று மில்லை.''
என்று எழுதிய `தினத்தந்தி'யே, 10.8.48ல் ``இப்பொழுது அதிகாரத்தில் இருப்பது பொது ஜன சம்மதத்தைப் பெற்றுப் பதவிக்கு வந்த சர்க்கார். எனவே, சர்க்கார் சொல்லுகிறபடி பொதுமக்கள் கேட்க வேண்டும் என்ற பொருளில் எழுதி யிருக்கிறது. 6.8.48ல் பொது ஜன அபிப் பிராயத்தை சர்க்கார் மதிக்க வேண்டுமென்றும், 10.8.48ல் சர்க்கார் அபிப்பிராயத்தை பொது மக்கள் மதித்து அதன்படி நடக்க வேண்டுமென்றும் எழுதியிருக்கிறது. இவ்விரண்டில் எது ஜனநாயக முறை என்பது விளங்கவில்லை. முன்னதா? பின்னதா? பொதுமக்களின் அபிப்பிராயத்தை பொதுமக்கள் மதிக்க வேண்டுமா என்பதை முதலில் `தினத்தந்தி' புரிந்துகொண்டு, இந்தத் துறையில் இறங்கியிருந்தால், அது பொது மக்களின் நன்மைக்காகவே தன்னுடைய கருத் துக்களை வெளியிடுகிறதென்று கருத முடியும். ஆனால், `தினத்தந்தி'யின் ஜனநாயக முறை, பாம்புக்கு வாலும் மீனுக்குத் தலையும் காட்டுவது போல், ஒருபுறம் இந்தியை ஆதரிப்பது போலவும், இன்னொரு புறம் இந்தி எதிர்ப்பை ஆதரிப்பது போலவும் இரண்டும் கெட்ட முறையில் `ஜனநாயகத்துக்கு விளக்கம் கூறுகிறது.

``இந்தி கட்டாயப் பாடமாகக் கூடாது என்பதில் இவர்களுக்கு உண்மையான சிரத்தை இருக்குமானால், பயமுறுத்தலை விட்டுவிட்டுச் சமரசச் முறையில் பரிகாரம் தேட முற்பட வேண்டும்.''

என்று மேலும் `தினத்தந்தி' கூறுகிறது. சமரச முறை என்று `தினத்தந்தி' எந்தவிதமான எண்ணத்தை மனத்தில் வைத்துக்காண்டு கூறுகிறதென்பது விளங்கவில்லை. தமிழ்நாட்டிலும் இந்தி கட்டாயப் பாடம் தான் என்று சர்க்கார் அறிக்கை வெளி யிட்ட நாளில் இருந்து, நாம் அத்தகைய கட்டாயத் திட்டத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதைப் பத்திரிகை வாயிலாகவும், சர்க் காருக்கு தெரிவித்து வந்திருக்கிறோம். இந்திக் கட்டாயத் திட்டத்தை எடுத்துவிடும்படி நேச மனப்பான்மையுடனேயே கேட்டும் வந்தோம். தனிப்பட்ட முறையில் அல்ல. தமிழ்ப் பேரறிஞர் களுடையவும், பொதுமக்களுடையவும் ஆதர வைப் பெற்ற தீர்மானங்களை நிறைவேற்றி அவற்றின் வாயிலாகவும் சர்க்காரை சமரச முறையிலேயே கேட்டுப் பார்த்தோம். சர்க்கார் இணங்கி வரவில்லை. ஒருமுறை பாடிய பல்லவியையே மீண்டும் மீண்டும் பாடிக் கொண்டிருந்தது. பொது மக்கள் விரும்பாத ஒரு திட்டத்தை சர்க்கார் புகுத்துமானால், அங்ஙனம் செய்வது முறையல்லவென்ற பொதுமக்கள் எந்த முறையில் கேட்டுக்கொள்ள வேண்டுமென்று `தினத்தந்தி' நினைக்கிறதென்று நமக்கு விளங்க வில்லை. ஒருவேளை, யாராவது தனிப்பட்ட முறையில் சர்க்காரை அணுகி இந்த ஏற்பாட்டைக் கைவிட்டு விடும்படி கேட்டுக் கொள்வதுதான் சமரச முறை என்று `தினத்தந்தி' எண்ணினால் அந்த முறையையும் கையாண்டு பார்த்ததாகி விட்டது என்பதைத் `தினத்தந்தி'யே 10.8.48ல் வெளியிட்டிருக்கிறது.

``ஈ.வே.ரா. பிரதமரைச் சந்தித்துங்கூட எந்த விதமான சமரச முடிவும் ஏற்படவில்லை.'' என்ற உண்மையை அப்பத்திரிகையே வெளியிட்டிருக் கிறது. தலைவர் பெரியார் அவர்கள் முதலமைச் சரைச் சந்தித்துக் கட்டாய இந்தித் திட்டத்தில் எவ்வளவு விட்டுக் கொடுக்க முடியுமோ அவ்வளவு தொலைவு கழகத் திட்டத்திலிருந்து இறங்கி வந்து கேட்டுங்கூட முதலமைச்சர் இணங்கி வரவில்லை.

``இப்போது சர்க்கார் வகுத்திருக்கும் இந்தித் திட்டத்தில் அணுவளவும் விட்டுக் கொடுக்க முடியாது.''

என்று முதலமைச்சர் கண்டிப்பாகக் கூறிய பின்னரே, இனி நேரடி நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு நாம் வந்தோம். இது `தினத்தந்தி'க்கும் தெரியும். என்றாலும், இந்தி எதிர்ப்பு நேரடி நடவடிக்கை எந்தவிதமான சமரசமும் செய்யப்படாமல் அவசரமாகத் தொடங்கப்பட்டு விட்டதென்று கூறியதோடு மட்டும் நின்று விடாமல், ``இந்தி எதிர்ப்பைச் சாக்காக வைத்துக்கொண்டு சர்க் காரை எதிர்க்க இவர்கள் கிளம்பி இருக்கிறார் கள்.'' என்று. யாருடைய மிரட்டலுக்கோ பயந்து கூறும் பாவனையில் எழுதியிருக்கிறது.

``தினத் தந்தி'' மேலும் ஒரு உண்மையை வெளியிட்டிருக்கிறது. அதாவது,

``இந்தி எதிர்ப்பாளர்கள் வெளிப் படையாகக் கூறும் நோக்கத்திற்கும், கல்வி மந்திரியின் நோக்கத்திற்கும் இடையில் அதிக வித்தியாச மில்லை. இந்தியைக் கட்டாயமாகத் திணிக்கக் கூடாது என்பதுதான் கல்வி மந்திரியின் நோக்கம்.''

என்று 10.8.48ல் எழுதியிருக்கிறது. எனவே, இந்தி எதிர்ப்பாளர்களின் நோக்கத்திற்கும், கல்வி அமைச்சரின் நோக்கத்திற்கும் இடையே அதிக வித்தியாசம் இல்லை என்று `தினத்தந்தி' கூறுவது உண்மையானால், கல்வியமைச்சர் தம்முடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த ஏற்பாட்டை, மாற்றியிருக்கலாம். ஒரு மாகாணத்திலுள்ள மக்களின் கல்வித் துறைக்குத் தலைவராய் இருக்கும் ஒருவர், தமக்கும் பொது மக்களுக்கும் சரியென்று பட்டதைத் தைரியமாகச் செய்ய முடியாமல், ஒருசிலரின் மிரட்டலுக்கு அஞ்சித் தம்முடைய திட்டத்தை விட்டுக் கொடுத்துவிட்டு, வெறும் பொம்மை மாதிரிப் பதவியில் ஒட்டிக் கொண்டிராமல் வெளியேறுவதே அறிவுடைமை யாகும் என்று அமைச்சருக்கு அறவுரை கூறுவதை விட்டுக் கல்வியமைச்சரின் நோக் கத்தை நிறைவேற்றும் பணியையே செய்யும் இந்தி எதிர்ப்பாளர்களைக் `காங்கிரசை எதிர்க்கும் சூழ்ச்சியைச் செய்கிறார்கள்'' என்று யாருடைய மிரட்டலுக்குப் பயந்தவன் செய்யத் தகாத காரியத்தைச் செய்ய முற்படுவது போல், நாலு நாட்களுக்குள் `தினத்தந்தி' ஏன் தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்? என்பதைச் சிந்தித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்ளுகிறோம்.

(திராவிட நாடு - 15.8.48)