அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


நாம்

கடுஞ் சினம்! காரசாரமான வார்த்தைகள்! கடுமையான தாக்குதல், குண்டுமாரி! ‘குரல்வளையைப் பிடித்தழுத்தும்! கொடூரச் செயல்கள்! விபத்துக்கள்-வேதனைகள்-விசித்திரங்கள்! எதுவும், அசைக்கவில்லை, நம்மை.

வேதனையோடு உலவப் புறப்பட்டோம், விஷத்தோடு விளையாடுகிறோம் என்றனர். விஷமத்தனம் என்றும் சொல்லினர். ‘விலா நோகச் சிரிக்கலாம் வேளை வந்துகொண்டேயிருக்கிறது’ என்று ஆரூடம் கணித்தனர். ‘வாலை நறுக்கிட வேளை பார்த்திருக்கிறேன்’ என்று கேலி பேசினர்’ ‘விஷயமறியாததுகள் வேகத்தில் கிளம்பியவர்கள்’ என்று கூடப்பேசினர்-எல்லாவற்றையும் தாண்டிவிட்டோம்.

நிலவு தேய்வதுண்டு குளிர்க்கொள்கை பரப்பும் நாம் வளர்ந்து கொண்டேயிருக்கிறோம்.

தென்றலுக்குக் கூட ஒய்வுண்டு-ஆனால் நமக்கோ ஓய்வு என்பதே கிடையாது.

ஓயாத தென்றல், நிற்காத அம்பு வற்றாத அருவி, ஆடாத விருட்சம், காயாத கடல்-நாம்.

நமது பணி நடைபெறாத நாளில்லை. திக்கெட்டும், தினசரி நமது குரல் ஒலிக்கிறது. தேன்தமிழ் முரசொலிக்க, திராவிட கீதம் இசைக்க, திண்தோள் வீரர்கள் பவனி வர, பெருமிதமும் பூரிப்பும் நம்மைச் சுற்றி பவனி வந்து கொண்டேயிருக்கின்றன.

இந்தச் சுவையான காட்சி இலேசானதல்ல-இலகுவானதும் அல்ல.

ஆனாலும் நாம் அடைந்துவிட்டோம்.

‘மாடமாளிகைகள்’ சாதிக்க முடியாததை ‘மண்குடிசைகள்’ பெற்று விட்டன! ‘ராஜபூபதி’ கள் காணாததை ‘ராஜ்ய உலவி’கள் பெற்று விட்டோம்!

நாம் ‘ஜரிகைக் குல்லாய்’ கள் அல்ல. நம்மருகே ஜமீனும் மிட்டாவும் கிடையாது பண பலம் அற்றோர் நாம் ஆனாலும் வளர்ந்து நிற்கிறோம்.

பிரச்சாரப் பீரங்கிகள் ஒருபுறம் முழுக்க, காகிதக் கோட்டைகள் மற்றோர் புறம் கர்ஜிக்க, ‘கண்மூடினால் போதும் காலை வாரிவிடலாம்’ என ‘காருண்ய’ சர்க்கார் காத்துக் கிடக்க எல்லாவற்றையும் தாண்டி, இருக்கும் ஒன்றிரண்டு பத்திரிகளோடு, உலவுகிறோம்-அதுவும் சாதாரணமாக அல்ல, பெருமிதத்தோடு பிறர் திகைக்கும்படியாக!

ஒராண்டுக் காலத்தில் நாம் சாதித்திருக்கும் காரியங்கள் சாமான்ய மானவையல்ல; சகலராலும் முடியக் கூடியவையுமல்ல.

சனாதனச் சர்ப்பங்கள் ஒரு புறம் சீறவும், சந்தர்ப்பம் எதிர்பார்த்து சர்க்கார் பாயவும், கழுகுப் பார்வையோடு எதிரிகள் வட்டமிடவும் இடுக்கித் தாக்குதல்கள் நம்மை எப்போதும் தாக்கவும் வேதனைப் புயல்கள் நம்மீது வீசிக்கொண்டேயிருந்தும் நமது விவேகப் பாதைவளையவில்லை, நெளியவில்லை!

மக்கள் மன்றம் தாலாட்ட, திராவிடப் பூமியில் திருமடியிலே தினசரி பணிபுரிந்து கொண்டிருக்கிறோம்.

நாம், பொது வாழ்வுப் பாதையில் போக போக்கியங்களை எதிர்பார்த்தோரல்ல! பொங்கி வரும் ஆபத்துக்கள், பொசுக்கிவிடும் சினக்காற்றுகள், உறவினர் பொல்லாப்பு, உற்றார் கிலேசம் ஆகியவைகளைத் தாங்கியே புறப்பட்டோம்!

காடாகயிருக்கும் நாட்டை நச்சரவக் கொள்கையிலிருந்து மீட்க நாம் தொட்ட பாதை காடு முரடானது மட்டுமல்ல; கஷ்டங்களை கணப்பொழுதும் தவறாது வீசும் பாதை! இருந்தும், நாம் கலங்கவில்லை.

நாம் வாலிபர்கள்-வசந்த காலத்தின் வாயிலிலே நிற்பவர்கள் என்னும் நமது வாழ்க்கையைப் பொதுப்பணிக்குச் சமர்ப்பித்து விட்டோம். வாழ்ந்து கெட்ட ஒரு மாபெரும் சமுதாயத்தின் விடுதலைப் பட்டாளத்தின் முன்னோடும் வீரர்களாகி விட்டோம்!

நமது சேவைகண்டு-சினந்தோர், அணைக்கிறார்கள். சீறினோர் பூரிக்கிறார்கள். கேலி செய்தோர் ‘கிட்டவா!’ என்று, அன்போடு அழைக்கிறார்கள்.

இந்த நிலை நமக்குப் பூரிப்பதைத் தருவது மட்டுமல்ல புதுப்பொறுப்புகளையும் தருகிறது. ‘போதாது உனது பணி உனது சேவை அதிகமாக வேண்டும். கஷ்டங்களைப் புன்சிரிப்போடு தாங்கும் சக்தி வளரவேண்டும்” என்று போதிக்கிறது.

பொதுச்சேவை வீணையொலியல்ல, வேதனைப்புயல் அதிலும் சாக்கடை நாற்றம் நிரம்பிய ஒரு சமுதாயத்துக்காகப் பணியாற்றுவதென்பது சாமான்யமானதல்ல. சினம் என்று காற்று சீற, பணபலம் என்ற ‘படை மோத பத்திரிகைப்பீரங்கிகள் பாய, சர்க்கார் என்ற ‘சக்கரம்’ சுழன்று தாக்க இத்தனையையும் எதிர்பார்த்துக்கொண்டே நாம் நடந்துசெல்கிறோம்.

இலட்சியக்கோட்டையை அடைவதற்கு முன், நாம் ஓடவிட வேண்டிய ‘இரத்த ஆறு’ கொஞ்சமாக இருக்காது. ஒடியப்போகும் எலும்புகள் உடைந்து உருக்குலையப் போகும் உருவங்கள் எண்ணிறந்தவையாகவேயிருக்கும்.

சிறை, தடியடி, குண்டுமாறி-இவைகளை எதிர்பார்த்தே நாம் நடக்கிறோம், நம்மை ‘எதிரிகள் என்று கருதுவோர்’ எத்தகைய கொடூரப் புலிகள் என்பதை நாம் அறியாமலில்லை. நமது வளர்ச்சியைக்காண அவர்கள் இதயத்தில் எழும் ஆத்திரத்தை நாம் அறிந்தவர்கள் தான். ஆனாலும் அட்டகாசத்தோடு நம்மைத் தாக்கினும் புன்சிரிப்பையே நாம் பதிலாகத் தருகிறோம் துப்பாக்கியைக்காட்டினும் நாம் துவளவில்லை. குண்டு மாறி கொட்டினும் நெஞ்சைத் திறந்துகொண்டே செல்கிறோம் எதையும் தாங்கும் இதயம் நம்மிடை வளர்ந்துவிட்டது.

நமது இலட்சியம் கானல், நீரல்ல; வீணாசைகொண்டு வெறி கொண்டு அலைவோரும் நாமல்ல.

நமது பாதை விவேகப்பாதை-விடுதலை விரும்பிகள் நடந்து சென்ற பாதை.

நாம்-நியாயத்தின் பிம்பங்கள் நேர்மையின் சின்னங்கள்.

கண்ணியம் என்ற வாளும் கட்டுப்பாடு என்ற கேடயமும் நமது கைகளிலே இடம் பெற்றிருக்கின்றன.

சுயநல வேட்டையும், சூதுச்செயலும் நமக்குப் பிடிக்காதவைகள்.

இலட்சிய வீரர்கள் என்ற பட்டந்தாங்கி பணிபுரியும் நமக்கு ஏற்படும் ஆதரவு அகத்தில் மகிழ்ச்சியையும், நெஞ்சில் பொறுப்புச் சுமைகளையும் தருகிறது.

மக்கள் மன்றத்தில் நமக்கேற்பட்டிருக்கும் வளர்ச்சி, நமது தியாக இதயத்தை இன்னும் பெரிதாக்குகிறது. நமது கடமைப் பாதையைப் பெரிதாக்கிக் கொண்டேயிருக்கிறது.

புது ஆண்டு பூத்து விட்டது. உலகச் சூழ்நிலைகளையும், நமது எதிர்காலத்தையும் எண்ணும் போது நமது கடமைகள் பெருகிக்கொண்டே போவது கண்ணுக்கு முன்னர்த் தெரிகிறது.

கடமைகள் வளர்வது நமது காரியமாற்றும் சக்தியைப் பலப்படுத்தும்.

அந்தச் சக்தியைத் தாங்கி-இலட்சியபுரி நோக்கி விரைந்து செல்லும் வேகமும் விவேகமும் நமக்குண்டு அதைத் துணையாகக் கொண்டு நடந்து கொண்டேயிருப்போம்!

(திராவிடநாடு 31.12.50)