அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


“நான் சென்று வருகிறேன்”
எதிர்பார்த்தது நேரிட்டுவிட்டது. வகுப்புத்துவேஷம் எட்டக்கூடிய விதமாக ஆரியமாயை என்ற நூல் எழுதினேன் என்று வழக்கு தொடுக்கப்பட்டு 153வது செக்ஷன்படி ரூ. 700 ஆபாரதம் கட்டத்தவறினால் ஆறுமாதம் சிறைவாசம் என்று தண்டிக்கப்பட்டிருக்கிறேன்.

பொதுநலத் தொண்டர்களுக்குச் சிறைவாசம், எதிர்பாராத சம்பவமல்ல எந்தச் சமயமும் அதை எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்து தீரவேண்டும்.

மேலும் சமுதாயத்திலே புதியதோர் அமைப்பைக் காணவேண்டும் என்ற குறிக்கோளுடன் பணியாற்றும் நமது இயக்கத்துக்கு, தாக்குதல் பல இடங்களிலிருந்து கிளம்பிய வண்ணம் இருந்துதான் தீரும். அதற்குத் தயாராக இல்லாவிடில் கொள்கையை வெற்றி பெறச் செய்யமுடியாது.

“ஆரிய மாயை” ஒரு தனி நூல் அல்ல. பத்திரிகையிலே பல்வேறு சமயங்களிலே என்னால் தீட்டப்பட்ட பல கட்டுரைகளின் தொகுப்பு அதிலே வகுப்புத் துவேஷம் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது - சட்டம் தன் கடமையைச் செய்திருக்கிறது. நானும், சமுதாயத்துக்கு நான் செய்யவேண்டி கடமை என்ற பொறுப்புணர்ச்சியுடன் தான் அந்தக் கட்டுரைகளைத் தீட்டினேன் - ஏன் மனச்சாட்சியின்படி தான் நான் நடந்துகொண்டேன் - ஆனால் இன்றைய சூழ்நிலையில், இவ்விதமான பணிபுரிபவர்கள், அடக்கு முறைக்கு ஆளாகுதல் என்ற விலைகொடுக்க வேண்டி இருக்கிறது. உள்ளத்தில் பட்டதை ஊருக்கு உரைத்திட வேண்டுமானால், இந்த விலை கொடுத்தே ஆகவேண்டும். எனவே தான், நான் மகிழ்ச்சியுடன் சிறை செல்கிறேன். கடமையைச் செய்யத் தவறவில்லை, மனச்சாட்சியின்படி நடந்து கொள்ளத் தயங்கவில்லை. கஷ்ட நஷ்டம் ஏற்கவேண்டுமே என்பதை எண்ணிக் கலங்கவில்லை - என்ற எண்ணம் தரும் களிப்பு எனக்கு உறுதுணையாக நிற்கிறது. சிறை ஏன் உள்ள உரத்தை மேலும் உரமாக்கும் என்றே நம்புகிறேன்.
உங்களைக் காணவும், உங்களுடன் சேர்ந்து பணியாற்றவும் இயலாது சிறையில் நானும், வெளியில் நீங்களுமாகச் சிலகாலம் இருக்க நேரிடுவதால் இந்த நிலைமை எனக்கோ உங்களுக்கோ மகிழ்ச்சியைத் தராது எனினும் நாம் இந்தப் பிரிவைச் சகித்துக்கொள்ள வேண்டும்.
மூச்சை அடக்கிக் கடலுக்குள்ளே மூழ்கிச் சென்று முத்து எடுத்துவந்த பரம்பரையில் பிறந்தோம்! ஆயிரக்காணக்கான அடி இழமுள்ள சுரங்கத்துக்குள்ளே சென்று தங்கத்தை வெட்டி எடுத்து வரும் இனத்திலே பிறந்தோம்! சீரிய முறையிலே நமது நாட்டைத்திருத்தி அமைக்கும் பெரும் பணிக்காக நாம், சிறை சென்று சில பல கஷ்டத்துக்கு ஆளாவது, பெரியதோர் காரியமல்ல. இதுகூடச் செய்யாமல் நமது இலட்சியம் வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்ப்பார்ப்பது ஏமாளித்தனமாகும். எனவே சிறை செல்வது கண்டு, திடுக்கிடத்தேவையில்லை பிரிவு நமக்குள் உள்ள பாசத்தை மேலும் பலப்படுத்தும்.

நான் சிறையில் இருக்கும்போ, நாம் அனைவரும் ஆற்றவேண்டிய தொண்டிலே எனக்கு உள்ள பங்கிணை ஏன்பொருட்டு நீங்கள் தான் செய்யவேண்டும். நான் சிறை சென்றதால், சிலவேலைகள் தடைப்பட்டுவிட்டன. என்ற சொல்லைவிட எனக்கு வேதனை தரக்கூடியது வேறு எதுவுமில்லை இதை உணர்ந்து இயக்கப் பணியினை, என்றும்போல், அல்ல! அல்ல! முன்பிருந்ததைவிட அதிக உற்சாகத்தோடு செய்து கொண்டு வரக்கோருகிறேன். சிறையிலே நாம் இருந்தாலும் நமது செல்வத் தம்பிமார்கள் தமது திறத்தாலே இயக்கத்தை எழிலுள்ளதாக்கி வருகிறார்கள் என்ற சேதி எனக்குச் சிறைவாசத்தின்போது கிடைத்தால் போதும் - சிறையிலே தரப்படும் சோளக்கஞ்சியே எனக்குப் பஞ்சாமிருதமாக இனித்திடும்.

நமது கழகம், ஓராண்டுப் பருவத்தில் உள்ளது. சுற்றிலும் சூதுமதியினரின் சுடுசொற்கள் வீசியவண்ணம் உள்ளன. வசதி இல்லை! பத்திரிகை இல்லை! திராவிடநாடு தினசரியாக வெளியிடும் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறேன் - எனவே, தினசரி வெளிவருவதும் தடைப்பட்டுவிட்டிருக்கிறது! இவ்வளவு இடுக்கண்களையும், உங்கள் ஆர்வமும் அறிவாற்றலும் பொடிப் பொடியாக்கிவிடும் என்ற நம்பிக்கையுடன் சிறைசெல்கிறேன், ஏன் நம்பிக்கை வீண்போகாதல்லவா!

கோயில்பட்டித் தீர்மானம், நமக்குப் புதியபொறுப்பான, பணியினைத் தந்திருக்கிறது. தொடக்கம், திவாகர் சென்னை வந்தபோது கண்டோம் தொடர்ந்து பணியாற்றவேண்டும், நான் வெளியேயில்லை ஆனால் தோழர்களே! பணியை மறந்துவிடுவீர்களா!! நான் வெளியே இருந்தால் நடப்பதைவிடச் செம்மையானமுறையிலே, பணியினைத் தொடர்ந்து நடத்துவீர்கள் என்பது எனக்குத் தெரியும். எனவேதான் என்ன நேரிடுமோ - எதற்குக் குந்தகம் ஏற்பட்டுவிடுமோ - என்ற ஐக்கமின்றிச் சிறை செல்கிறேன்.

நமது, பொறுமையைச் சோதிக்கும் விதமாகச் சிறுசொல், வீசுவோர், பலர் உண்டு - அறிவீர்கள். திராவிடச் சமுதாயத்திலே, ஒற்றுமை கெடவேண்டும், கட்டுப்பாடு தூளாகவேண்டும், காலம்விரயமாக வேண்டும். அதுவே நாம் பிழைக்கும் வழி என்று எண்ணிடும் பெருந்தகையாளர்கள் உண்டு - அறிவீர்கள் நமது நோக்கத்துக்கு மாசு கற்பித்து, நமது நடவடிக்கைகளைத் திரித்துக்கூறி, நமது முயற்சிகளை நையாண்டி செய்து, நமது உள்ளத்துக்கு ஏரிச்சலை மூட்டி, வம்புக்கு இழுப்போர் உண்டு - அறிவீர்கள்! அவர்களல்ல - நமது கவனத்துக்கு உரியவர்கள்! அவர்கள் தூற்றலை முறியடிப்பது அல்ல, நம்முன் உள்ளவேலை! நாம் மகத்தான பணியினை மேற்கொண்டுவிட்டோம்! நமது மாற்றார்கள், மதவெறி, சாதிவெறி, மூடப்பழக்க வழக்கம், சுரண்டல்முறை, ஏதேச்சாதிகாரம், என்று பலப்பல! பொறாமை கொண்டோர் பொச்சரிப்புக்காரர்கள், அரசியல் உடலிலே தோன்றும் அரிப்புக்கள்! நமதுவேலை அவர்களிடம் மல்லுக்கு நிற்பது அல்ல. அறிவுப்பணி புரியும் ஆற்றல் நமக்கு இருப்பது உண்மையானால், நாட்டு விடுதலையில் நமக்கு நாட்டமிருப்பது மெய்யானால், நாம் இந்தச் சில்லறைக்குச் சிந்தனையைச் செலவிடலாகாது. இதைத்தயவு செய்து மனதிலே பதியவைத்துக் கொள்ளுங்கள். கண்ணியம் தோற்காது - உறுதியாக இதைச் சொல்லுங்கள் தொடர்ந்து பணியாற்றுங்கள் - திராவிடச் சமுதாயத்திலே, மோதலும் பேதமும் ஏற்படாத வகையில்! யானை பிடிக்கச் செல்பவன், பூனைக்குட்டியைத் துரத்திக் கொண்டு போவது - நேரக்கேடு அல்லவா! சந்தனக்காட்டுக்குச் செல்பவன், சருகுகளைக் கண்டு, இவை போதும் என்று இருந்துவிடலாமா? திராவிடநாடு திராவிடருக்கே, என்ற இலட்சியத்துக்காகப் பாடுபடுவது என்று துணிந்து இறங்கியானபிறகு, உன்னால் என்ன ஆகிறது, என்ற உருப்படாத வேலையிலா நாட்டம் செல்வது! இகாது, தோழர்களே! துளியும் இகாது! அந்தப் பாதையைக் கண்ணெடுத்தும் பார்க்காதீர்கள். எழில்மிக்க திராவிடம் உங்கள் உழைப்பைக் தேடுகிறது. உங்கள் ஆற்றலை விரும்புகிறது - உங்களுடைய வீரத்தால்தான் தன் தனைகள் ஓடிந்துபடும் என்று நம்புகிறது. அந்தத் திருப்பணிக்கே, உங்கள் ஆற்றல் பயன்படட்டும் - வேறு திக்கு நோக்கவேண்டாம்.

ஓராண்டு நாம் செய்துள்ள பணியினைக் கணக்கெடுங்கள் - களிப்பூட்டும் - இந்தக் களிப்பு பல மடங்கு வளரும் விதமாக இவ்வாண்டு பணிபுரிவோம் என்று சூள் உரைத்துக்கொள்ளுங்கள், வெற்றி நிச்சயம் வந்து சேரும்.

சிறைவாசம் ஏன் பொதுவாழ்க்கையிலே இது முதல்முறையல்ல.

ஆச்சாரியார் ஆட்சிக் காலத்திலே, இந்தி எதிர்ப்பு நடைபெற்ற போது,ùச்னனைச் சிறையிலே இருந்திருக்கிறேன் - நாலுமாதங்கள் சைதாப்பேட்டை சப்ஜெயிலிலே இருந்திருக்கிறேன் - ஒரு வாரம் இப்போ, கவர்னர் - ஜெனரலாக ஆச்சாரியார் வந்தபோதும் சில நாட்கள் இருந்திருக்கிறேன். பலமுறை சிறை சென்று மன மெகேறிய பெரியாருடன் பழகி இருக்கிறேன். எனவே, சிறை என்னைச் சிதைத்துவிடாது. நான் உள்ளே இருக்கும்போது, வெளியே நீங்கள், ஆத்திரப்படாமல் ஆர்வத்தோடு, இயக்கத்தை நடத்திச் செல்கிறீர்கள் என்ற சொல் போதும், எனக்குச் சிறையே சிங்கார மாளிகையாகக் காட்சி தரும்.

ஆயிரமாயிரம் மேடைகளிலே பாடி இருக்கிறோம்.

மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை
நம்மை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை.

என்று அங்குதான் செல்கிறேன். அருமைத்தோழர்களே! அண்ணாதுரை சிறை ùன்றான். ஆனால், திராவிட முன்னேற்றம் கழகத்தின் வளம் குன்றவில்லை என்று எவரும் வியந்து கூறும்வண்ணம் பணியாற்றி வாருங்கள். ஆரிய மாயையில் சிக்கித் தவிப்போருக்கு அறிவு ஒளி தாருங்கள்! திராவிடத்தைத் திரு இடமாக்குங்கள்! சென்று வருகிறேன் - வெளியே வந்ததும், உங்கள் வெற்றிப் பட்டியலைக் காட்டுங்கள்! நம்பிக்கையுடன் செல்கிறேன், நமது நல்லதம்பிகள், நாட்டை மீட்டிடும் நற்பணியினைத் தொடர்ந்து நடத்தி வருவார்கள் என்று! சென்று வருகிறேன், வணக்கம்.

(திராவிடநாடு 24.9.50)