அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்



நேசக்கரம் இணைப்பீர்! நீசத்தனம் ஒழிப்பீர்!

“தூக்கிலிட்டு விட்டோம்!“ – நெஞ்சு நெருப்பாகும் இந்தச் செய்தியை, மலேய அரசாங்கம் உலகுக்குத் தந்திருக்கிது. தமிழ்நாட்டிலிருந்து வயிற்றைக் கழுவ, கடல்கடந்து சென்ற ஏழையை – பிணமாக்கி விட்டார்கள் – தூக்கிலே தொங்கவிட்டுவிட்டார்கள். 28-12-51 அன்று மலேய பூமியில், அந்த ஏழை வாலிபரின் உயிர் பறிபோய்விட்டது. பெரியண்ணன் தூக்கிலேற்றப்பட்டுவிட்டார்! பிணமாக்கப்பட்டார்!

நெஞ்சு துடிக்கும் செய்தி இது. தூக்கிலே துடித்துச் செத்த பெரியண்ணன், மலேய சொத்துக்களைச் சுரண்டும் மூலதனத்தோடு சென்றவரல்ல – கையையும், காலையும் சொத்தாகக் கொண்டு, உழைப்பைச் சிந்தி ஒர சில காசுகளைப் பெற்று, தமிழகத்திலே கண்ணீருங்க கம்பலையுமாகக் கிடக்கம் தனது குடும்பத்தாரின் – வயிற்றைக் கழுவும் ஆவலோடு சென்றவர். அவருக்கப் பரிசு – சாவு! மரணமேடை!

‘பொன்விளையும் பூமி இது‘ என்றுபோற்றித் துதிபாடும், திருவிடப்பூமயிலே, வாழமுடியாது, கடல்கடந்து சென்றார் – ஆனால் வாழ்வு அங்கும் கிடைக்கவில்லை பிணமானார்! பிணமாக்கப்பட்டார்! மலேய சர்க்காரால் கொல்லப்பட்டு விட்டார்!

கண்ணீர் வடிக்கிறோம் – அந்தக் காளையை நினைத்து! ஒரு சில திங்களுக்குமுன், அவருக்கு இத்தகைய தண்டனை தரப்படலாம் என்றொரு செய்தி வந்தது. செய்தி தேள்போல் இருநதது – கணபதியை இழந்தோம்! மலேயா சாம்பசிவத்தை மரணப்பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டபாடு ஏராளமாயிற்றே – இப்போது, அதே வரிசையில் இன்னொரு தமிழகச் செல்வனையுமா இழக்கவேண்டும்? ஐயகோ! என்ன கொடுமை, இது! என்று கலங்கினோம் – நமது மாநில மாநாட்டிலும், குற்ற்்கூண்டிலே நிற்கும் இவர்க்் விடுதலை செய்ய வேண்டுமென மலேய சர்க்காரைக் கோரி தீர்மானம் விடுத்தோம். நம்மைப்போலவே, இங்கு வாழும் முற்போக்குக் கட்சிகள் மலேய சர்க்காரைக் கேட்டுக் கொண்டன. ஆனால் வெறியர்கள் நம் கோரிக்கையை அலட்சியம் செய்து, ஒரு உயிரை பதைக்கச் சாகடித்திருக்கின்றனர்!

நெஞ்சுவேகும் இந்தக் கொடுமை நடவாமல் தடுக்கவேண்டிய பொறுப்பும் அதிகாரமும் உடைய டில்லி அரசாங்கமும், பாராமுகமாய் இருந்திருக்கிறது. தமிழகச் செல்வன் ஒருவன் உயிரைக் காப்பாற்றித் தர தவறிவிட்டது! வழக்கம்போல் அலட்சயிமாக இருந்திருக்கிறது!

தனது நாட்டுமகன், இன்னொரு நாட்டில் சித்திரவதைக்காளாகி செத்து மடிவதைத் தடுக்க வேண்டிய இந்திய சர்க்கார் – வாய்மூடிக் கிடக்கிறது – சித்திரவதை செய்யும், மலேய சர்க்காரோடு, ‘காமன் வெல்த் நேசம் – கலங்குமோ நம் பாசம்“ என்று சிகாரப் பண்ணிசைத்துக் கிடக்கிறது. நமது சகோதரன் உயிரை நமக்குப் பெற்றுத் தரவில்லை. தரவில்லை என்பது மட்டுமல்ல. தருவதற்கான முயற்சிகளையும் எடுக்கவில்லை!

பெரியண்ணன், போய்விட்டார் இன்னும் பல ‘பெரியண்ணன்களை‘ தூக்கிலே ஏற்றத் துடிக்கக் கிடக்கிறதாம், மலேய ஆட்சி.

இந்தக் கொடுமைகள் ஒழிய வேண்டும்! குற்றஞ் செய்தோரை நீதிமுன் நிறுத்தி தண்டனை தருவதோ, விடுதலை செய்வதோதான் முறை. அதற்குப் பதிலாக ‘இவன் ஒரு பயங்கரவாதி!‘ என்று கூறுவதும் உடனே தூக்கில் தொங்க விடுவது மென்றால், நாமென்ன அநாகரீகக் காலத்திலா வாழ்கிறோம்! நலம் விரும்புவோரே – தாயகச் சகோதரர்களே இந்தக் கொடுமைகள் ஒழிய ஒன்றுபடுங்கள்!

‘எல்லோரும் மேற்படி செயலைக் கண்டித்து இந்திய சர்க்காருக்கம் மலேய சர்க்காருக்கும் உடனே கண்டனங்கள் அனுப்ப வேண்டுகிறோம்‘ என, சென்னை நாடு கடத்தப்பட்டோர் சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. சகல முற்போக்குக் கட்சிகளும் ஒன்றாக நின்று இந்தக் கொடுமை ஒழிய நேசக்கரம் தூக்க வேண்டும்! மனித வெறியை மண்டையிலடிப்போம்! முற்போக்குக் கட்சிகளே – நம்குரல், எதேச்சாதிகார வெறியைச் சுக்குநூறாக்கட்டும்!

(திராவிட நாடு – 27-1-52)