அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


நைல் நதி தீரம்!

கடந்த ஆண்டு, காதலித்து மணம்புரிந்த எழில்செல்வி நாரிமன், ஜனவரி 16ந் தேதி ஒரு ஆண் குழந்தைக்க தாயானாள். எகிப்து மன்னர் பரூக் அந்த நாளை இன்பத் திருநாளாகக் கொண்டாடினார். நாரிமன் – ஒரு சாதாரணப் பெண் – அவளழகால் மயங்கிய மன்னர், ராணி பரீடாவை ரத்து செய்ததையும், இவளை இதயவல்லியாக்கிக் கொண்டதையும் உலகு அறியும்.

பிரதமர் நஹாாஸ்பாஷாவை நீக்கி எகிப்து மன்னர் உத்திரவு பிறப்பித்தார். ஆலிமேகர் பாஷா, பிரதமராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இவரே, எகிப்தின் ராணுவ கவர்னராகவும் இருப்பார். நஹாஸ் பாஷா, கடந்த பொதுத் தேர்தலில் அமோக வெற்றிகண்ட, வாபத் கட்சியின் தலைவர் என்றாலும், தற்போதைய சூழ்நிலையை ஒட்டி, மன்னர், வேறு பிரதமரை நியமனம் செய்திருக்கிறார் இம்மாதம்.

“வீதிக்கு வீதி செல்லப்போகிறேன் துருவித்துருவித் தேடுவேன் – தொல்லை தருவோர் யாராயினும் சுட்டு வீழ்த்துவேன் என் இஷ்டப்படி நடப்பேன் – எது சரியென நினைக்கிறேனோ அதன்படி யெல்லாம் நடவடிக்கை எடுப்பேன் எகிப்து மக்க்ளின் ஆர்ப்பாட்டத்துக்கு அஞ்சமாட்டேன்!“.
- பிரிட்டிஷ் தளபதி எர்ஸ்கின்.

“அமெரிக்கா, பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகளிடமிருந்து எகிப்தின் போக்கைக் கண்டித்து, சூயஸ்கால்வாயைக் காப்பாற்றும் வகையில், விரைவில் சேனைகள் வரும், இந்த ‘சமிக்ஞைச்‘ சேனைகள் வரவு. சூயஸ் கால்வாய்பற்றி நாங்கள் கொண்டிருக்கும் திடமான கொள்கையை எடுத்துக் காட்டும்“.

- சர்ச்சில்

“ஜனாதிபதி ட்ரூமனைச் சந்தித்துப் பேசுகையில், அமெரிக்கத் துருப்புகளை சூயஸ் கால்வாய்க்கு அனுப்ப வேண்டுமெனச் சர்ச்சில் கோரினாரென்று தெரிகிறது. பிரிட்டனுடைய இந்தக் கோரிக்கைகளுக்கு அமெரிக்கா இணங்குமென்று தெரியவில்லை“.
- நியூஸ் மெகசைன் (அமெரிக்க பத்திரிகை)

நைல் நதித் தீரத்தைப் பற்றிய, செய்திக் குறிப்புகள், இவை கடந்த சில மாதங்களாக, ‘வெள்ளையனை விரட்டுவோம்!‘ என்ற முழக்கம், மத்யதரைக் கடலின் அலைகளைவிட அதிகமாக ஆர்ப்பரித்து எழும்பிக் காண்டிருப்பதை உலகு அறியும். இந்த முழக்கங்களின் விளைவாக, கொலைகளும் கத்திக்குத்தும், குண்டு மாரியும் தரைச் சண்டையும், தினசரி நூற்றுக்கணக்கில் நடைபெற்று வருகின்றன.

வெள்ளையர் தமது சுரண்டும் கொள்கையை, நைல் நதி தீரத்தில் கையாண்டு வருவதின் விளைவே, இந்தக் கிளர்ச்சி என்பதை, நமது இதழில், முன்பே விளக்கியிருக்கிறோம்.

பாங்கிகள்
வாணிபம்
கம்பெனிகள்
செல்வாக்கு

எல்லாத்துறையிலும் “அவர்களே“ ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதன் காரணமாக, எகிப்து மக்கள் உள்ளத்திலே எழும்பிய கொந்தளிப்பே, இந்தக் கிளர்ச்சிக்குக் காரணமாகும். இதைப்பற்றி, ரஷ்ய சர்க்காரின் இதழான “பிராவ்தா“ அண்மையில், ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. பிராவ்தாவின் விசேட நிருபராகச் சென்ற தோழர் ரஸாடீன் என்பவர், தந்துள்ள அக்கட்டுரையின் சுருக்கம்.

“பிரமிக்க வைக்கும் பிரமிட் கோபுரங்கள், வானத்தை அளாவும் கூடங்கள், பழைய கோயில்கள் யாவும் எகிப்தின் புராதனப் பெருமையைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. கவனிப்பாரற்றுக் கிடக்கும் அந்த சரிதச் சின்னங்கள், எகிப்த்தின் பெருமைக்கோர் அத்தாட்சியாகும் இன்றைய எகிப்து, புராதன நிலையிலிருந்து எவ்வளவோ விடுபட்டுக் கிடைக்கிறது. இன்றுள்ள எகிப்து மக்கள் பழைமை படிந்தவர்களல்ல. அவர்கள் உள்ளங்களிலே தேசீயக் கனல் கொழுந்து விட்டெரிகிறது. வேதனைக்கு ஆளான மக்கள் வீறுகொண்டெழுந்திருக்கின்றனர் – பிரிட்டிஷ் பிடியிலே சிக்கிச் சீரழிந்த அந்தச் சிங்காரப் பூமிக்காக, சிந்தப்படுகிற இளைஞர்களின் இரத்தம் கொஞ்ச நஞ்சமல்ல நாட்டுபப்ற்று, இளைஞர்களின் நரம்புநாதம்!

கடந்த ஆண்டு அக்டோபர் 15ந் தேதி, மக்களின் ஆவேசக் கனலுக்கு, எகிப்து சர்க்காரை அடிபணியச் செய்தது. 1936ல் எகிப்துக்கும் இங்கிலாந்துக்கும் ஏற்பட்ட உடன்படிக்கையை ரத்து செய்ய வேண்டும் என மக்கள் முழக்கமிட்டனர். ‘உடன்படிக்கை அல்ல அது அடிமை சாசனம்!‘ என்று தேசத்தியாகிகள் கர்ஜித்தனர்.

‘அந்நியப் படைகள் புகாமல் எகிப்து பூமியைக் காப்பாற்றுவோம்‘ என்ற பொய்க்காரணம் கூறிக்கொண்டு, இந்த உடன்படிக்கையைக் காட்டி ஏராளமான துருப்புகளையும், தளவாடங்களையும் கொண்டு வந்து குவித்தனர் பிரிட்டிஷார். இதனால் ராணுவ ஆக்கிரமிப்பு – எகிப்தில் பொருளாதார ஏகாதிபத்யத்தையும் ஏற்படுத்திக் கொண்டனர்.

எகிப்தைச் சேர்ந்த சூடான் பிரதேசத்தைத் தம்வசமே வைத்திருக்க வேண்டுமென்கிற ஆசை பிரிட்டிஷ் ஆதிபத்தியவாதிகளுக்கேற்பட்டது சூடானை “கூட்டு‘ முறை நாடாக, பிரிட்டிஷ் வைத்துக் கொள்ள 1936 ஒப்பந்தம் வசதி தந்தது. அதனால் நைல்நதியின் மேற்குப் பகுதிகளிலே பிரிட்டனின் ஆதிக்கம் அதிகமாயிற்று.

“யார்வசம் கார்ட்டூம் !சூடானின் தலைநகர்) இருக்கிறதோ அவரே கெய்ரோவுக்கும் எஜமானன்“ என்று எகிப்திய பழமொழி ஒன்ற உண்டு. நைல்நதியின் மேற்குப் பகுதிகளின் நீர்ப்பாசன வேலைகளைத் தம்வசம் வைத்துக் கொண்டு, பிரிட்டிஷ் முதலாளிகள், எகிப்தையே ஆட்டிப் படைக்கலாயினர். “லண்டன்“ எகிப்தின் செல்வத்தைச் சுரண்டலாயிற்று. பாங்கிகள், வியாபாரம், கம்பெனிகள் எங்கும் வெள்ளையரே நிரம்பினர் – அவர்கள் ஆதிக்கத்துக்குக் கீழ், இந்த முக்கிய துறைகள், அகப்பட்டுக் கொண்டன. எண்ணெய்ச் சுரங்கம் தங்கக் கனிகள், ஆகிய இயற்கைச் செல்வங்களின் ஏகச்சக்கிராதி பதிகளாகவும், பிரிட்டிஷார், ஆயினர். எகிப்தை – தங்களது பருத்திக் தோட்டமாக உருமாற்றினர். சமீப ஆண்டுகளில், எகிப்தின் செல்வத்தைச் சுரண்டி வாழ அமெரிக்க பண முதலைகளும் ஈடபட்டு வருகின்றன.

கொடுங்கோலர்கள் கையில் சிக்கிய எகிப்தைக் கண்ட, இளைஞர்கள் இதயம் எரிமலையாயிற்று. ‘பிரிட்டிஷ்‘ என்கிற வார்த்தையைக் கேட்ாலே, துடிக்கத்துவங்கினர். பிரிட்டனின் பிடியில் சிக்கிய காரணத்தால் அவர்கள் பட்ட அவதி,சிந்திய கண்ணீர், அவ்வளவு ஆத்திரத்தை மூட்டிற்று. அதனால்தான் 1936 ஒப்பந்தம் ரத்தாக வேண்டுமென்ற முழக்கம் எகிப்தின் விடுதலை வீரர்களிடமிருந்து எழும்பிற்று. ஆனால் பிரிட்டிஷார் எகிப்தைவிட்டு வெளியேற விரும்பவில்லை. எகிப்து மக்களின் விடுதலை முழக்கத்தைத் துப்பாக்கியாலும் பீரங்கியாலும் தடுத்துவிட முனைந்துவிட்டார்கள்! சர்ச்சில், எகிப்தின் விடுதலைப் போராட்டம் பற்றி, ஒரே ஒருவரியில், ‘மக்கள் கட்டுக்கடங்கவில்லை.... என்று கூறிவிட்டு, பிரிட்டிஷ் போர்க்கப்பல்களைக் குவிக்கத் துவங்கிவிட்டார் – துருப்புகள் அனுப்பப்பட்ட வண்ணமே உள்ளனர். இந்த ஆதிபத்ய வெறிக்காக எகிப்து மக்கள் இரத்தம் சிந்தாத நாளில்லை! போரிட்ட வண்ணமே இருக்கிறார்கள்.

வெறிகொண்டலையும் பிரிட்டிஷ் பீரங்கிகள், பல்லாயிரக்கணக்கான விவசாயிகளையும், பலிகொண்டு விட்டன. மூன்று மாதத்திதல் இதற்காக உயிரை இழந்தோரின் பட்டியல் மிகப்பெரிது!

1919ல் தங்களது விடுதலை இயக்கத்தை, சுட்டுப்பொசுக்கிய பெல்பின், அலென்பி ஆகிய பிரிட்டிஷ் வெறியர்களைப் பற்றி, எகிப்து மக்கள் மறந்து விடவில்லை. இருவரோடு இப்போது பிரிட்டிஷ் துருப்புகளின் தளகர்த்தராக அனுப்பப்பட்டிருக்கும் எர்ஸ்கின் என்பவரையும் சேர்ந்திருக்கிறீர்கள். எகிப்து மக்கள்.

தூங்கிக் கிடந்த அவர்கள் இதயங்கள் இப்போது துடித்துக் கிளம்பி விட்டன! ‘ஊமைதான் தூங்குவான்‘ என்று கூறிக் கொண்டு, எகிப்து மக்கள் வீறுகொண்டெழுந்து விட்டார்கள். விடுதலை! சுதந்திரம்! என்ற முழக்கம், எங்கும், எழும்பிவிட்டது. அந்நியனை வெளியேற்ற வேண்டும்‘ என்பதுதான் இப்போது அவர்களுடைய இருதயநாதம்.

வெளிநாட்டாருக்கக் கீழே வேலை செய்யமுடியாதென 60000 தொழிலாளர்கள் மறுத்துவிட்டார்கள். ‘அந்நியனுக்கு ஆதரவு தராதே! என்பதே, இன்று எகிப்து முழுமையும் எழும்புகிற குரலாகும்.

பிரிட்டிஷ் துருப்புகளின் வெறிச்செயல்களைக் கண்டு நொந்து நைந்த மக்கள், கொரில்லாப் படையொன்றைச் சேர்த்து வருகிறார்கள். வீராவேசங்கொண்ட இளைஞர்களே, இப்படையின், முன்னணி வீரர்கள். சூயஸ்கால்வாய்ப் பகுதியில், அந்நியர் மாடிவீட்டுக்குள் துணிவுடன் சென்ற முதல் எகிப்து வீரன் – சின்னஞ்சிறு பையன் ஒருவன்! அவனுடைய வயது 13 தான்! ‘நான் ஒரு விடுதலை வீரன்‘ என்று கூறிக்கொண்டு, கையிலே தீப்பந்தம் ஏந்தி, வெள்ளையர்களின் பெட்ரோல் கிடங்குகளை நோக்கி ஓடினானாம் – அந்தச் சிறுவன்!

தாயத்துக்குத் தீங்கிழைத்தோரைப் பழிவாங்க, பலம் சேர்ந்து வருகிறது கொரில்லாப் படைக்கு கையில் கிடைத்ததை யெல்லாம் ஆயுதங்களாக்கி அன்னியர் மீது பாய்கின்றனர்! ஆண்களும், பெண்களும், வீராவேசத்தோடு, விமானங்களும், டாங்கிகளும் மிகுந்த பிரிட்டிஷ் படைகளை நோக்கிப் பாய்கிறார்கள்.

விடுதலை ஆர்வத்தோடு உள்ள எகிப்துக்கு விரோதிகள் வெளிநாட்டிலிருப்பதைப்போல், உள் நாட்டிலும் இருக்கிறார்கள். எகிப்து நாட்டின் விடுதலை இயக்கத்தின் சரிதத்தில் தியாகிகள் மட்டுமல்ல துரோகிகளும் இருந்திருக்கிறார்கள். இப்போதும், பிரிட்டிஷ் கைக்கூலிகளாக, பலர் அங்கே இருக்கிறார்கள்.

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய சர்ச்சில், எகிப்தில் பிரிட்டன் துவக்கியிருக்கும் போராட்டம், உலக வியாபாரம் ஒழுங்காக நடைபெற வேண்டும் என்கிற ஆசையால்தான் என்று குறிப்பிட்டார். எகிப்தில் பிரிட்டிஷ் படைகள் மட்டும் இருந்தால் போதாதென அமெரிக்காவும் இதர ஏகாதிபத்ய நாடுகளும் துரப்புகளை அனுப்ப வேண்டுமெனக் கோரினர்.

இது, எகிப்தை அடக்கியாளும் அதிகார ஆசையின் தந்திரப் பேச்சேயாகும்.

எகிப்து பத்திரிகைகளில் சிலவற்றை எடுத்துப் பார்த்தால், ‘சமரசம் வேண்டும்‘, ‘ஒத்துப் போகலாம்‘ என்பது போனற் செய்திகள் அதிகம் இருக்கின்றன.

இந்த சமரச முறை, எகிப்துக்கு பலன் பயக்காதென்பதை விடுதலை இயக்கத்தினர் அறியாமலில்லை. எனினும் சில பத்திரிகைகள் வலியுறுத்தும் காரணம், பிரிட்டனின் ‘பணம்‘ அவர்கள் கையில் திணிக்கப்படுவதுதான்.

ஏகாதிபத்ய வாதிகள் திட்டமிட்டுச் செய்துவரும் இந்த பிரச்சாரத்தில் ஒரு பகதி – ‘எகிப்துக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் அபாயம் வந்துவிடும். ரஷ்யா தனது ஆக்கிரமிப்பைத் துவங்கி விடும்“ என்பதுதான். இப்படி எழுதி வரும் பத்திரிகைகளில், பலவற்றிற்கு அந்நிய நாடுகளிலிருந்து ‘கூலி‘ வந்த வண்ணமே இருக்கிறது.

இந்தப் பொய்ப் பிரச்சாரம் ஏகாதிபத்யவாதிகளுக்கு பலன் தரவில்லை. உண்மையைப் பொய்யாலா போக்கிட முடியும்? விடுதலை வீரர்கள், தங்களது இதய கீதத்தை முழக்காமலில்லை! தங்களது விடுதலைப் போரைத் தொடர்ந்து நடத்திக் கொண்டேயிருக்கிறார்கள்.

“இன்றைய எகிப்து“ – என்று மகுடமிட்டு ‘பிராவ்தா‘ இதழ், சுருக்கமாக அங்குள்ள நிலைமை பற்றித் தந்திருக்கிறது உலகின் கவனத்தை, நைல் நதி தீரத்திலே நடைபெறும் போராட்டம் மிக மிகக் கவர்ந்திருக்கிறது. சர்ச்சில், பிரிட்டிஷ் பிரதமர், ஆனதும் வழக்கம்போல் தனது தந்திரரோபாயங்களைக் கையாளத் துவங்கிவிட்டார்! எதிரியை மிரளச்செய்யும் அவரது குரல் பீரங்கி முாங்கத் துவங்கி விட்டது! அமெரிக்கா செல்வதும், ட்ரூமனைச் சந்தித்து பேசுவதும், அமெரிக்க பாராளுமன்றத்தில் எகிப்தைப் பற்றிக் குறிப்பிடுவதுமாக நைல் நதி தீரத்தி்ன் விடுதலைக் கிளர்ச்சியை மிரட்டத் துவங்கியிருக்கிறார். ஆப்பிரிக்கக் கண்டத்தின் மணிமுடி போலத் திகழும் எகிப்து – அதற்கு மேற்கேயுள்ள சூடான் இரண்டையும் குறித்து, இன்னும் சில விவரங்களைத் தர விரும்புகிறோம். கெய்ரோ நகரப் பல்கலைக் கழக வர்த்தகப் பகுதிப் பேராசிரியர் ‘எகிப்து – சூடான்‘ சம்பந்தமாக, தீட்டியிருக்கும் கட்டுரையொன்றைக் கீழே தருகிறோம்.

“சூடான் நாட்டின் பரப்பு 9,67,600 சதுர மைல்கள் வடக்கேயிருந்து தெற்கே 1400 மைல் நீளமும் மேற்கேயிருந்து கிழக்கே 1200 மைல் அகலமும் கொண்டது. இதன் தலைநகர் கார்ட்டூம், சூடானையும் எகிப்தையும் பிரிக்கும் எல்லை எதுவும் கிடையாது. நைல் நதிதான் இந்த இரு நாடுகளின் ‘தாய்‘ இதன் மூலம் போக்குவரத்துக்கள் நடைபெறுகின்றன. பருவநிலையை ஒட்டி சூடானை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.

1. குறுகலான நைல்நதி பள்ளத்தாக் நீங்களலாக வடக்குப் பாகம் பெரும்பாலும் பாலைவனமாகும்.
2. மத்தியப்பகுதி – புல்வெளிகளும் பண்ணைநிலங்களும் நிரம்பியது.
3. தெற்குப் பகுதி – செழித்துக் கொழித்த நாடுகள் நிரம்பியது.

அராபியர் எகிப்தை வெற்றி கொண்டபின், படிப்படியாக சூடானிலும் குடியேறினர். இந்த அராபியர், சூடானியப் பெண்களை மணந்து கொண்டதன்மூலம், சூடானின் முகம்மதிய மதத்தைப் பரப்பினர். அதை அரவு நாடாகவும் ஆக்கினர். 1941ல் எடுத்த கணக்குப்படி இதன் மக்கள் தொகை 75.5 இலட்சம் இதில் 50 இலட்சம் பேர் அராபிய மொழி பேசும் இஸ்லாமியர்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில், எகிப்து மன்னர் முகம்மது அலி, தன்துருப்புகளை சூடான் மீது ஏவினார். நைல்நதியின் வளம் அவர் கண்களைக் கவரவே, அதைக் கைக்கொள்ள ஆசைகொண்டார். அவரது மகன் இஸ்மாயில், சூடானை வென்றார். பருத்தி சாகுபடிக்கு ஊக்கமளித்துச் சாகுபடியை விருத்தி செய்தார். கார்ட்டூம் கஸ்ஸாலா இரு இடங்களிலும் பஞ்சாலைகள் ஏற்படுத்தினார் – பள்ளிகளும் நிறுவப்பட்டன.

எகிப்து மன்னரின் ஆடசிக் காலத்தில், சூடானில் அடிமைகள் விற்பனை ஒழிந்தது. 1879ல் இஸ்மாயில் பதவியிலிருந்து நீக்கப்ட்டார். எகிப்திலோ உள்நாட்டுக் குழப்பம் இந்நிலையில் 1882ல் பிரிட்டிஷ் ஆதிக்கம் தலை தூக்கிற்று. இதே நேரத்தில் மதத் தலைவர் அஹமத் அல் மஹ்தி தலைமையில் சூடானில் ஒர புரட்சி ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தைப் பிரிட்டிஷார் பயன்படுத்திக் கொண்டு, எகிப்து சர்க்காரை, சூடானைவிட்டு வெளியேறும்படிச் செய்தனர் எகிப்தியப் படைகளும், அதிகாரிகளும் வெளியேறியதால், சூடான் கொந்தளிப்புக்கு ஆளாயிற்று – கொடுமை தாண்டவமாடிற்று – கொலைகளும் கொள்ளையும் அதிகரித்தன. இதைக் கண்ட பிரிட்டிஷார் எகிப்தின் ஆதரவோடு சூடானை வீழ்த்தத் திட்டமிட்டனர். முயற்சி வெற்றி தந்தது சூடான்மீது, பிரிட்டிஷ் எகிப்து சர்க்கார்கள் ‘கூட்டு ஆட்சி‘ நடத்தும் வகையில் 1889ல் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர் 1889 ஒப்பந்தம் கையெழுத்தான பின் சூடானின் அதிகாரம் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல், மாகாண கவர்னர்கள் கைக்கு வந்தது. ஆட்சி பீடத்தை அபகரித்த பிரிட்டிஷார் கொஞ்சம் கொஞ்சமாக சூடான்மீது எகிப்துக்கிருந்த செல்வாக்கைத் தகர்த்துக் கொண்டே வந்தனர்.

1914ல் எகிப்து – சூடான் இரண்டுமே, பிரிட்டிஷ் பாதுகாப்புக்கு உட்பட்டவை எனப்பிரகடனம் செய்யப்பட்டது. சுதந்திரத்தோடிருந்த எகிப்து விழ்ந்தது! காலனி நாடாயிற்று!

உலகையே நிலைகலக்கிய முதலாவது உலகப்போர் !1914 – 1918) முடிந்ததும். எகிப்து மக்கள் விடுதலைக் கிளர்ச்சியைத் துவக்கினர். சுதந்திர தாகம், எகிப்து மக்களிடையே அலைமோதலாயிற்று. ஆத்திரம் கரை புரண்டது. இதைக்கண்ட பிரிட்டிஷ் ராஜதந்திரிகள், சிறிது வளைந்தனர் – ‘பாதுகாப்பு‘ என்பதை ரத்து செய்தனர். இதனால் எகிப்து சுந்திரமான நாடெனப் பிரகடனம் செய்யப்பட்டது. 1922ல் வெளியிடப்பட்ட இப்பிரகடனத்தால், சூடானின் நிலையில் எவ்வித மாற்றமும் நிகழவில்லை சூடான், வெள்ளையரின் கைப்பிடியில் சிக்கிக் கொண்டது.

சூடானில் மிகப்பெருத்த அளவில் பருத்திச் சாகுபடியை உற்பத்தி செய்யத் திட்டமிட்டு பிரிட்டிஷார் நடவடிக்கை எடுக்கவே இதனால் எதிர்காலத்தில் தங்களுக்குப் போதிய தண்ணீர் கிடைக்காமற் போய் விடுமோ என்று எகிப்தியர் கலங்கலாயினர்.

சூடானை இழந்த எகிப்து அடிக்கடி சீறிக்கொண்டேயிருந்தது.

1924 முதல், எகிப்துக்கும் பிரிட்டனுக்கும் இதுபற்றி, பலபேச்சு வார்த்தைகள் நடைபெற்றும்

பின் 1936ல் எகிப்தும் பிரிட்டனும், ஒரு நேச ஒப்பந்தம் செய்து கொண்டன. 1899ல் செய்து கொண்ட கூட்டு ஒப்பந்தம் நீடிக்குமென்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்தப்படி அதிகாரமெதுவும் எகிப்துக்கு கிடைக்கவில்லை. பிரிட்டிஷார், வெகுதந்திராமாக, எகிப்தை ஒரு அந்நிய நாடாக ஆக்கி, எகிப்துக்கும், சூடானுக்குமிடையிலிருந்த பாசத்தையும் நேசத்தையும் குறைக்க வழி செய்தனர்.

இந்த ஒப்பந்தம் சூடானிலும் எரிச்சலை உண்டாக்கிற்று! இதனால், இரண்டாவது உலகப்போருக்கு பிறகு, எகிப்தில் மீண்டும் விடுதலை இயக்கம் வலுப்பெற்றது. அப்போது எகிப்து பிரதமராக இருந்த சித்தீபாஷா, எகிப்து சூடான் ஐக்கியத்துக்குப் போராடினார். பிரிட்டிஷார் விடுதலை இயக்கத்தாருடன் சமரசம் செய்து கொள்ள முயன்றனர். முயற்சி வெற்றி தரவில்லை.

1946ல் சித்திக் பாஷா ராஜினாமா செய்யவே, நொக்ராஷிபாஷா எகிப்தின் பிரதமரானார். 1947ல் எகிப்தின் விடுதலைக் கோரிக்கை, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலுக்குக் கொண்டுபோகப் பட்டது. பிரிட்டிஷ் துருப்புகள், எகிப்து சூடான் பிரதேசத்திலிருந்து வாபஸ் பெறப்படவேண்டுமென்றும் சூடானில் நிலவும் கூட்டாட்சி முறை ரத்து செய்யப்படவேண்டுமென்றும் எகிப்து கோரியது. ஆனால், பாதுகாப்புக் கவுன்சில் வழக்கம்போல, எவ்வித முடிவுக்கும் இன்னும் வரவில்லை.

1950 ஜனவரியில், நஹாஸ்பாஷா தலைமையில் வாபத் கட்சி மந்திரி சபை ஏற்பட்டது. பலமுறை பிரிட்டனுக்கும் எகிப்துக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற தென்றாலும், எவ்வித சமரசமும் ஏற்படவில்லை.

இதனால்,அண்மையில் எகிப்து சர்க்கார் தீவிரமான நடவடிக்கையில் இறங்கயிது.

1936 ஆங்கிலோ – எகிப்திய ஒப்பந்தத்தையும், 1889 சூடான் கூட்டாட்சி ஒப்பந்தத்தையும் ரத்து செய்தது. இதனால், கிளர்ச்சி ஓங்கிற்று – பிரிட்டன் தீவிரமாக நடக்கிறது. நைல் நதிதீரம் போர்ப்புயலால், சீரழிந்தது கொண்டிருக்கிறது.

எகிப்தும் – சூடானும் ஒன்றாக, பரூக் மன்னரிக் கீழ் இருக்கவேண்டும் என்பதே விடுதலை இயக்கத்தினரின் வேட்கையாகும். ஏனெனில் இருநாடுகளுக்குமிடையே நெருஙகிய இன, மத, மொழி,கலாச்சார ஒற்றுமைகளிலிருந்து வருகின்றன. பொருளியல் ரீதியிலும் ஒற்றுமையுள்ள பூமி, இது எகிப்திய மன்னர் தலைமையில் நைல்நதிப் பள்ளத்தாக்கு, விடுதலை பெறவேண்டுமென விடுதலை இயக்கத்தினர் முடிக்கும் காரணம். ஆதிக்கநோக்கமோ, சாம்ராஜ்ய மோகமோ, அல்லவென்பதை எகிப்தியர் தெரிவித்துள்ளனர்.

இருந்தும், பிரிட்டன் பிடிவாதம் பிடிக்கிறது.

சூடானில் வாழும் பல்வேறு அரசியல் கட்சிகள், எகிப்தின் நடவடிக்கைபற்றி, கொண்டுள்ள கருத்துக்களை ஆராயுமுன், சூடானின் சமீபத்திய அரசியல் நிகழ்ச்கிளை நாம் அறிந்து கொள்வது அவசியம்.

சூடான் பட்டதாரிகள், இடைவிடாது கிளர்ச்சி செய்த 1918ல் “பட்டதாரிகள் கிளப்“ ஒன்று அமைத்துக் கொள்ள சூடான் சர்க்காரின் அனுமதியைப் பெற்றனர்.

மூடப் பழக்கவழக்கங்களை ஒழித்து, அறிவுக்கு வேலை தருவது மதவேற்றுமைகளை ஒழித்தல், மதத் தலைவர்கள் வசமே இருந்துவரும் தேசீயத் தலைமையைப் பெறுதல் முதலியன இக்கிளப்பின் இலட்சியங்களாகும்.

இந்திய துரக்கி, முதலிய இடங்களில் நடைபெற்ற ஏகாதிபத்ய எதிர்ப்புப் போராட்டங்கள் சூடானில் அறிஞர்களின் சிந்தனையைக் கிளறிவிட்டன. அதனால், ‘பிரிட்டிஷ் ஆட்சி ஒழிக‘ எகிப்து சூடான் ஐக்கியம் வேண்டும்! என்ற கோரிக்கைகள் பிறந்தன. எங்கும் கிளர்ச்சி! கல்லூரிகள், பள்ளிக், தொழிற்கூடங்கள் யாவும் திரண்டெழுந்தன! 1924ல் சிப்பாய்கலகம் ஒன்றும் நடைபெற்றது! இந்தக் கிளர்ச்சியால் சிந்திய இரத்தம் – அதிகம் பலதேசத் தலைவர்கள் பிரிட்டிஷ் துருப்புகளால் கொல்லப்பட்டனர். பலர், நாடு கடத்தப்பட்டனர்.

1936ம் ஒப்பந்தத்துக்குப் பிறகு, அதனால் ஏமாற்றமடைந்த சூடானியர், பட்டதாரிகள் மகாநாடு ஒன்றுகூட்டி பட்டதாரிகள் காங்கிரஸ் எனும் இயக்கத்தை நிறுவினர்.

சூடானிலுள்ள அரசியல் கட்சிகள், இப்போது கொண்டிருக்கும் கோரிக்கைகள்.

யூனியனிஸ்ட் கட்சி – சுதந்திர சூடான் நிறுவப்பட்ட வேண்டும். எகிப்திய டொமியனாக இருக்க வேண்டும். வெளிநாட்டுத் தொடர்புகள் சூடானுக்கே இருக்க வேண்டும். படித்தவர்கள் நிரம்பிய கட்சி இது.

அஷிகா !ரத்த சகோதரர்கள்) – மிகவும் செல்வாக்குள்ள அரசியல் கட்சி இதுதான். எகிப்து மன்னர் தலைமையில், எகிப்துக்குட்பட்ட ஒரு சர்க்கார் சூடானில் இருக்க வேண்டும். மக்கள் சமஉரிமைகளோடு வாழவேண்டும்.

நைல் பள்ளத்தாக்கு ஐக்கியக் கட்சி – எகிப்து சூடான் ஐக்கியமே இதன் நோக்கம்.

உம்மா !தேசிய) கட்சி – பணக்காரர்களும் நிலப்பரப்புகளும் அடங்கிய கட்சி பிற்போக்கு வாதிகள் நிரம்பியது. இப்போது இதுவே சட்டசபையில் இருக்கிறது.

மேலே குறிப்பிட்ட கட்சிகள்யாவும், ஐக்கியத்தை, ஆதரிக்கின்றன. இந்தக் கட்சிகள் சூடான் அசெம்பளித் தேர்தலை, பகிஷ்கரித்தன. இதனால்தான் இப்போதுள்ள சட்டசபை, மக்களின் பிரதிநிதித்துவம் வாய்ந்ததல்லவென்று, முழக்கமிட்டு வருகின்றனர்“

சூடானை 50 ஆண்டுகளாக பிரிட்டிஷார் ஆட்சி செய்தும் போதிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லையென, ஐக்கியத்தை ஆதரிக்கும் கட்சிகள் யாவும் கூறுகின்றன. இதன் காரணமாகவே, ஐக்கியம் வேண்டுமென்றும் இன ஒற்றுமை மிக்க இரண்டு சமுதாயம் பிரிக்கப்பட்டிருந்தால் கூடாதென்றும் விரும்புகின்றன. பிரிவினையின் காரணமாகவே, சுரண்டல் ஏகாதிபத்தியம் நீடிக்க முடிகிறதென்றும், கருதுகின்றன. இனம், மொழி, கலாச்சாரம் ஆகிய எல்லா வகையிலும் ஒரே வகையைச் சேர்ந்த இந்த இவ்விரு நாட்டு மக்களும் எழுப்பத் துவங்கியிருக்கும் ‘ஒன்றுபட்டாலுண்டு வாழ்வே – நம்மில் ஒற்றுமை நிங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே! என்ற இதயகீதம் நிச்சயம் வெற்றியைத் தேடித் தரும்! ஏகாதிபத்ய சுரண்டல் வாதிகளின் மிரட்டலுக்கு பணிந்துவிடாது!

திராவிட நாடு – 17-2-52