அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


‘நல்ல முடிவு’ கூடாதாம்

ராதா நாடகத்திற்குத் தடை!

சர்க்காரின் ‘ஐயம்’ வளர்ந்து கொண்டே போகிறது! ‘அஞ்சி அஞ்சி சாவார். இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே’ என்று பாரதியார் பாடிய பாடலுக்கு இன்றைய சென்னை மந்திரிசபை இலக்கியமாகத் திகழ்கிறது!

அவர்கள் தடை போடாதது எதுவுமில்லை ஆனால் அவர்கள் பேசாத ‘சுதந்திரங்களும்’ எதுவுமில்லை!

பேசினால் தடை எழுதினால் தடை. நூலாசிரியர், அச்சிட்டவர் எல்லோரையும் வழக்கில் சிக்க வைத்து வம்பு செய்கிறார்கள். தண்டனை அபராதம் என்று ‘தாறுமாறாக’ நடந்து கொள்கிறார்கள். ஆனாலும் அவர்கள், ஜனநாயகம் பேசுகிறார்கள்!

சென்னையில் தோழர் நடிகவேள் எம்.ஆர்.இராதா அவர்கள் ‘நல்ல முடிவு’ என்ற நாடகம் நடத்தி வந்தார். அதனை ஆளவந்தார்கள் தடுத்துவிட்டார்கள். அந்த நாடகத்தை நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டு விட்டார்கள்.

நாடாளும் ‘நம்ம மந்திரிகளுக்கு’ இது புதிதல்ல-இதற்குமுன் தடுத்த நாடகங்களின“ பட்டியலே பெரிது-அத்துடன் இதனையும் இணைக்கிறார்கள்.

‘நல்ல முடிவு’ கூடாது என்று கூறிவிட்டார்கள். இந்தப் ‘பொல்லாத முடிவிற்கு’ ஏன் வந்தார்கள் என்று நமக்குப் புரியவில்லை.

தோழர் ராதாவின் நாடகங்கள் பலவற்றை ஏற்கனவே தடுத்திருக்கிறார்கள். அதனால் அவர் கலங்கி விடவில்லை.

அடுத்து அவர் நடத்திப் போகிற நாடகம் ‘அறிவு இல்லாத மந்திரிகள்’ நாடகங்களைத் தடுப்பதால் நாடாளும் மந்திரிகள் நாட்டவரால் இப்பெயரால் அழைக்கப்பட்டாலும் ஆச்சர்யமில்லையல்லவா?

(திராவிட நாடு 17.12.50)