அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


நமது முன்னணி வேலை

தோழர்களே!
சேலம் மாநாடு சம்மந்தமாக, வரவேற்புக் கழகத்தலைவரும் காரியதரிசிகளும் வெளியிட்டுள்ள அறிக்கையைக் கண்டேன். காரியதரிசிகளில் ஒருவரான வக்கீல் தோழர் சி.ஜி.நெட்டோ அவர்களின் போக்கு, எனக்கு ஆச்சர்யமூட்டவில்லை, அதை நான் எதிர்பாத்திருந்தேன். வரவேற்புக் கழக்த்தலைவர் தோழர் சேர்மன் இரத்தினசாமி அவர்களும், மற்றொரு காரியதரிசி தோழர் கணேச சங்கர் அவர்களும் இந்தப் போக்கை ஆதரிக்கும் நிலை என்னைத் திடுக்கிடச் செய்தது. அவர்களிடம் நான் இதனை எதிர்பார்க்கவிலைலை. சிறப்பாகச் சேர்மன் இரத்தினசாமி அவர்களை நான் திராவிட விடுதலைப் போருக்குச் சரியான ஓர் தளபதி, பெரியாரின் பெருநண்பர், என்றே கருதி வந்திருக்கிறேன். அவருடைய தீரத்தைப் பலதடவைப் பாராட்டியிருக்கிறேன். தோழர் நெட்டோ அவர்களின் போக்கு எனக்கு ஆச்சரியமூட்டவில்லை. ஏனெனில், மாநாடு நடைபெறுவதற்குப் பல மாதங்களுக்கு முன்பு, கோவைத் தோழர் ஜி.டி.நாயுடு அவர்கள் திருமகளாரின் திருமணத்தன்று அவரைக் கண்டபோது, மாகாண மாநாடு ஏன்? கட்சி ஏன்? எனக்குக் கட்டிசியில் இருக்க விருப்பமில்லை. கட்சி சரியாக வேலைசெய்யவில்லை என்று சலித்துக்கொண்டு, பேசினார். கேட்டுக்கொண்டிருந்த எனக்குச் சலிப்பும் காது வலிப்பும் வரும் அளவுக்கு. எனவே அவர் மாநாட்டின்போதும், பிறகும், காட்டிடும் போக்கு எனக்கு ஆச்சரியமூட்டவில்லை. எப்போதோ ஓர்சமயம் கட்சியிலே கலந்துகொள்பவர்கள், இதைத்தானே செய்யமுடியும். எனவே போக்குப்பற்றி நான் கவலைகொள்ளவில்லை.

மாநாட்டுக்கு முன்னாள் இரவு, என்னுடன், வரவேற்புக் கழகத் தோழர்கள் ஏதோ ஓர் ஒப்பந்தத்திற்கு வந்ததாகவும், பிறகு அது மீறப்பட்டுவிட்டதாகவும், ஒரு செய்தியைச் சண்டே அப்சர்வர் வெளியிட்டிருக்கிறது. ஒரு பெரிய கட்சியின் எதிர்காலத்தைப் பொறுத்த முக்கியமான பிரச்சனை விஷயமாக என்னுடன் ஒப்பந்தத்திற்கு வந்ததாகக் கூறுவது, என்னால் தாங்கிக்கொள்ள முடியாத கௌரவம்! உண்மையிலே, ஒப்பந்தம் எதுவும் நடைபெறவில்லை, உரையாடல் நடந்தது, அதுவும் பெரியார் வருவாரென்று அவர்கள் எதிர்பார்த்திருந்து அவர் வராததால் என்னுடன் நடந்தது. அவ்வளவே! ஒப்பந்தம் என்ற வார்த்தை பொருளின்றி உபபோகப்பட்டிருக்கிறது.

மாநாடு நடைபெறுவதற்குச் சிலதினங்கட்கு முன்னால் சென்னையிலே பல நண்பர்கள், சண்டே அப்சர்வர் ஆசிரியரின் முயற்சியால், சேலத்திலே, பெரியாரைத் தலைமைப் பதவியிலிருந்து நீக்கும் ஏற்பாட்டை நடத்துவதாகக் கூறினார்கள். நான் சிரித்தேன்! நண்பர்கள் கோபித்துக்கொண்டனர். பெரியாரை, இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளுக்கேனும் இக்கட்சியின் தலைமைப் பதவியை வகித்திருக்க வேண்டும் என்று வற்புறுத்திக்கொண்டிருக்கிறேன் நான். அவரை நீக்க இங்கே முயற்சி நடக்கிறதா! வேடிக்கைதான், என்று கூறிவிட்டு, இந்த மாநாடு, கட்சியின் போக்கை மாற்றி அமைக்கவே நடைபெறுகிறது, சண்டே அப்சர்வரின் ராஜதந்திரத்துக்கு அல்ல என்று கூறினேன்.

சேலம் மாநாட்டுத் தேதி நெருங்க நெருங்க, விதவிதமான வதந்திகள் உலவின. வதந்திகளைப் பிறப்பித்துக்கொண்டு சில உருவாரங்கள் உல்லாசமாக உலவியும் வந்தன.

இந்நிலையிலே, நான் தலைவர் பாண்டியனாருக்கு நிலைமையை விளக்கியும், சேலம் மாநாட்டிலே யாதுசெய்தல் முறை என்பதை எனக்குத் தெரிவிக்கும்படியும் கடிதம் எழுதினேன். அதற்குக் காரணம் இச்சம்பவங்கட்குப் பல மாதங்கட்கு முன்பு, கட்சியின் எதிர்காலம் எப்படி இருக்கவேண்டும் என்பதுபற்றி, பெரியாருடன் பாண்டியனாரும் நானும் பேசி ஒரு முடிவிற்கு வந்திருக்கிறோம். அந்த முடிவின் முக்கியாம்சம்,
1. திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றுவது.
2. சுயமரியாதைக் கோட்பாடுகளை அதிலே புகுத்துவது.
3. அமைப்பைப் பலப்படுத்துவது.
இது விஷயமாகவே தலைவர் பாண்டியனாருடன் நான் கடிதப் போக்குவரத்து வைத்துக்கொண்டேன். வதந்திகளைக் கருவிலேயே புதைக்க, இந்தக் கடிதப் போக்குவரத்து மெத்த உதவியாக இருந்தது.

தலைவர் பாண்டியனவர்கள், ஈரோட்டிலே பேசியதை சேலத்திலே நிறைவேற்றவேண்டும் என்று எனக்குத் தெரிவித்து, அதற்கான வேலைத் திட்டத்தை தீட்டி அனுப்புமாறு பணித்தார்கள், செய்தேன்.

இடையே, சேலம் மாநாட்டு, வரவேற்புக் கழகச் செயலாளர் தோழர் நெட்டோ அவர்கள் பெரியார் எதிரிலேயே, தாக்கிப் பேசியதாகவும், மாநாட்டிலே பாண்டியன் அவர்களைத் தலைவராகப் பிலேலேபிக்க ஏற்பாடு செய்வதாகவும் கேள்விப்பட்டு, அந்தத் தகவலையும் தலைவர் பாண்டியன் அவர்களுக்கு அறிவித்தேன். கடிதம்மூலம். பிறகு பெரியாரைக் கண்டேன். எனக்கேன் இந்தச் சனியன், நான் மாநாட்டிலே பேசப்போவதில்லை. கட்சியை யாரேனும் நடத்தட்டும்என்றார் பெரியார். நான் வாதாடினேன். பிறகு கட்சியை நாம் நடத்த ஆரம்பித்ததால், மக்கள் திரண்டு விட்டார்கள், அவர்களை அரசியல் சூதாடிகளிடம் விடுதல் கூடாது நமது முயற்சியால், பட்டம் பதவி கோருவோர் கட்சியை விட்டு வெளியேறச் செய்யவேண்டும். தன்மானக் கொள்கைகளைத் தழைக்கவிடும் கழகமாக வேண்டும். இதுவே தான் பாண்டியனாரின் கருத்தும், என்பதைக் கூறினேன். பெரியார் சம்மதித்தார் என் வேண்டுகோளுக்கு.

பிறகு பாண்டியனாரின் கடிதம் கிடைத்தது. நமக்குத் தலைவர் நமது பெரியாரே! என் பெயரைச் சில அறிவிலிகள் உபயோகித்தால் நான் என்ன செய்வது என்ற கருத்துடன்.

நான் மாநாட்டுக்குப் பட்டம் பதவிகளை விட்டுவிடும் தீர்மானத்தை அனுப்பினேன், பாண்டியனாருக்கும் அதனையும் அதன் அவசியத்தை விளக்கிய கடிதத்தைபும் அனப்பினேன், திருவாரூர் சென்றேன். நாடகத்துக்கு.

திரும்பினேன், தலைவர் பாண்டியன் அவர்கள், என் தீர்மானத்தை ஆதரித்தும், அதை அமுலுக்குக் கொண்டுவரத் தக்கமுறையிலே அமைப்பு வேண்டுமென்றும் எழுதிய கடிதம் கிடைத்தது, களித்தேன்.

மாநாட்டுக்கு முன்னாள் மாலை சேலம் சென்றேன். ஏற்கனவே அங்கு, தோழர் பாண்டியன், வி.வி.இராமசாமி சண்டே அப்சர்வர், கே.ஏ.பி.விசுவநாதன் ஆகியோர் வந்திருந்தனர்.

மாலையிலே நியூ சினிமாவிலே தாசி அபரஞ்சியைக் காணச் சென்றேன். பாண்டியனாரையும், நண்பர்கள் வி.வி.இராமசாமி, கே.ஏ.பி.விசுவநாதன் ஆகியோரைக் கண்டேன். எல்லாரும் அபரஞ்சியைக் கண்டோம். வீடு திரும்பினோம். இடையில், பெரியாருக்குத் தந்திகொடுத்திருப்பதாகவும் விடுதிக்கு வந்தால், மாநாட்டிலே, என்ன செய்வது என்பதைப் பற்றிப்பேசலாம் என்றும் யோசனை கூறினார் பாண்டியனார். சரி என்றேன். பெரியார் வரவில்லை. நானும் படுத்துக்கொண்டேன். 10.30 மணிக்கு மேல் நண்பரொருவர் என்னைப் பாண்டியனார் அழைப்பதாகக் கூறினார். நானும் ஏ.கே.தங்கவேலரும் சென்றிருந்தோம். நமாநாட்டு வரவேற்புக் கழகத் தலைவரும் காரியதரிசிகளும் வந்தபிறகு, எல்லோருமாக பேசினோம்.

மாநாட்டிலே கலகம் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று சண்டே அப்சர்வர் கூறினார் பலகம் ஏன் வரப்போகிறது? என்று நான் கேட்டேன் வதந்திகள் உள்ளன என்றார் அவர். தவறு என்றேன் நான்.

தீர்மானங்களைத் தொகுத்து ஒழுங்குபடுத்துவோம் என்று நான் செயலாளர் நெட்டோ அவர்களுக்குச் சொன்னேன். அது மாநாட்டிலே பார்த்துக்கொள்வோம், பட்டம் பதவித் துர்மானத்தைப் பற்றிப் பேசி ஒரு முடிவுக்கு வரலாம் இப்போது என்றார் அவர். தாராளமாகப் பேசுவோம் என்றேன். பேசினோம். இடையிடையே காரம்! கடைசியாகப் பாண்டியனாரின் அறிக்கையின்படி தீர்மானத்தை அமுலுக்குக் கொண்டுவரும் தேதியை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. பிறகு, பெயர் மாற்றுவது பற்றிய பேச்சு நடந்தது. அந்த விஷயத்திலே, அதுசமயம் நண்பர் பாலசுப்பிரமணியம் சொன்னது ஒன்றுதான், அதாவது ஆந்திரர், கேரளர் ஆகியோரின் கருத்து தெரியாமல் எப்படிப் பெயரை மாற்றுவது என்பதுதான்.
ஆந்திரநாடு செல்லக்கூடிய தாங்களம் கேரளம் செல்லக்கூடிய நண்பர் நெட்டோ அவர்களும், இதைச் செய்திருக்கவேண்டும், இனியேனும் செய்யுங்கள், அதைவிட்டு தமிழ்நாட்டிலே வேலைசெய்யும் எங்களைத் தாக்க இதனையும் சாதகமாக்குகிறீர்களே, சரியா? என்று நான் கேட்டேன். புன்னகையைத் தான் சண்டே அப்சர்வர் பதிலாகத் தந்தார். நண்பர் நெட்டோ அவர்கள் எனக்கு மலையாளம் மறந்தேபோச்சே என்றார்!

பிறகு, அரசியலிலே மதப்பிரச்சனை கலக்கக்கூடாது என்று தலைவர் கே.வி.ஆர். அவர்கள் பேசும் பிரச்சனை விவாதிக்கப்பட்டது. இந்த விஷயத்திலே நாங்கள் ஒரு துளியும் விட்டுக்கொடுக்க முடியாது. சுயமரியாதைக் கோட்பாடுகளைப் பரப்பாமல், இருக்கமாட்டோம். ஜஸ்டிஸ் கட்சியிலே அவை இடம்பெற்றே தீரவேண்டும், எங்கள் குறிக்கோள் சமுதாய சீர்திருத்தமே - என்று நான் வாதாடினேன். பாண்டியனார் இடையிடையே என்னை ஆதரித்துப் பேசினார், பிறகு இவை பற்றிக் காலையிலே, மாநாடு கூடுமுன் பெரியாரும் - பாண்டியனாரும் பேசுவது, என்ற முடிவுடன் எங்கள் உரையாடல் முடிந்தது. இவ்வளவு பேச்சு நடக்கும்போதும், நண்பர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் கலந்துகொள்ளவில்லை. படுத்துக்கொண்டிருந்தார். பாண்டியனாரிடம் முழுப்பொறுப்பும் ஒப்புவித்துவிட்டேன் என்று. வரவேற்புக் கழகத்தலைவர் தோழர் இரத்தினசாமி அவர்கள், 10.30 லிருந்து 4 மணி வரை நடைபெற்ற பேச்சிலே ஒரே ஒருவாசகம் கூறினார், முடிந்ததா அண்ணா! போய்ப் பந்தலிலே வாழைமரம் கட்டவேண்டும் என்பதுதான் அவர் பேசிய வாசகம்!

இதைத்தான் சண்டே அப்சர்வரில் ஒப்பந்தம் என்று எழுதி இருக்கிறார்கள். இது உரையாடல்! மூன்று துர்மானங்களைப் பற்றிய பேச்சு. மறுதினம் காலையிலே பாண்டியனாரும் பெரியாரும் பேசினார்கள். முன்னால் இரவு பேசப்பட்ட விதமாகவே காரியத்தை நடத்துவது என்று. மாநாட்டிலும், அவ்விதமே நடந்தேறியது. எல்லாம் முடிந்தபிறகு, எதையும் செய்யமுடியாதுபோன கூட்டம் ஏதாவது செய்வோம், என்று, மாநாட்டிலே முறையில்லை என்றும், ஒப்பந்தம் மீறப்பட்டது என்றும் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அறிக்கைகள் மட்டுமே வெறியிடத் தெரிந்தவர்கள், அதையேனும் செய்து தங்கள் ஆசையைத் துர்த்துக் கொள்ளட்டும். நமக்கோ வேலை மிகுதியாக இருக்கிறது. ஆகவே, ஆள்தேடிகளைப் பற்றிக் கவலைப்படாமல் ஆங்காங்கு திராவிடர் கழகங்களை அமைத்துப் பலப்படுத்துங்கள். திராவிடநாடு திராவிடருக்காக வேண்டும், அதுவே நமது முன்னணி வேலை. பல தலைவர்கள் மாநாட்டுக்கு வரவில்லை, எனவே மாநாடு பிரதிநிதித்துவம் வாய்ந்ததல்ல என்று சண்டே அப்சர்வர் எழுதுகிறது. வராத தலைவர்களுக்குத் திராவிடரின் விடுதலையிலே அக்கரை இல்லை. எனவே அவர்கள் திராவிடர் கழகத்துக்குத் தேவை இல்லை, என்று கழகம் முடிவு செய்கிறது என்று எழுத அதிக நேரம் பிடிக்காது. நம்முடைய வேலை வீண் வீம்பு அல்ல. மாநாட்டிலே மதமே கூடாது என்று நான் பேசியதாகவும்; திராவிடர் கழகம், மதமற்றவர்களின் கட்சி என்றும், சண்டே அப்சர்வர் கூறுகிறது. இது சர்காருக்கு கலகமூட்ட உதவும். சர்காரும், மதமில்லதவர்களா! என்று கேட்டு திராவிடர் கழகத்தை அடக்க நடவடிக்கை எடுத்துக்கொள்ளக்கூடும். நாம் அதற்கு அஞ்சப்போவதில்லை. அன்று மாநாட்டிலே நான் பேசியது, இன்று நமது தலைமீது சுமத்தப்பட்டிருக்கும் ஆரிய மார்க்கத்தை நாம் அறவே நீக்கவேண்டும் என்பதுதான். இதைத் திரித்துக்கூறிச் சர்க்காரின் திருஷ்டி என்மீது விழும்படியாகச் செய்வதன் மூலம், நண்பர் பாலசுப்பிரமணியானார் திருப்தி அடையவிரும்பினால், நான் அதனைத் தடைசெய்ய விரும்பவில்லை. நான் ஆங்கிலப் பிணைப்பிலும் ஆரிய வலையிலும் வடநாட்டு ஆதிக்கத்திலும், சிக்கியுள்ள திராவிடநாடு முழுதுமே இன்று ஓர் சிறைக் கூடமாக இருப்பதாகவே கருதுகிறேன். எனவே மதமற்றவர்கள் காஜிகள், ஒத்துழையாதார், என்ற பழிகள் சுமத்தி சர்காரைத் தூண்ட சண்டே அப்சர்வர் முயன்றால், அதுகண்டு கலங்குபவர்கள், தன்மான இயக்கத்தவர்கள் அல்லர் என்று கூற விரும்புகிறேன்.

பெரியாரும் அவருடைய கோஷ்டியாரும் ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்கள் என்று எழுதியிருப்பதும், மக்களுக்கு அந்த ஆசிரியர் கூறும் வாசகமாக நான் கொள்ளவில்லை. சர்காருக்குத்தான் அதையும் சொல்லுகிறார்.

பட்டம் பதவி கூடாது என்று ஜஸ்டிஸ் மாநாட்டிலே, கூறிவிட்டார்களே என்று எண்ணி, பட்டம் பதவிகளைத் தராமல் இருந்துவிடாதீர்கள், அவைகளைப் பெறுவதற்கு நாங்கள் இருக்கிறோம், இதோ ஜஸ்டிஸ் என்ற பெயருடன் கட்சியைக் கூட்டுகிறோம், பெரியாரும் அவரைப் பின்பற்றுபவர்களும், இனி ஜஸ்டிஸ் இல்லை. ஆகவே தயக்கமின்றி துரைமார்கள் தயவுகாட்ட முன்வாருங்கள்! என்று, தூது சொல்லுகிறார், ஆசிரியர். தாராளமாகச் செய்யட்டும்.

பெயர் மாற்றம், சுயமரியாதை கொள்கை புகுத்துதல் ஆகியவைபற்றிப் பக்கம் பக்கமாக எழுதிய ஆசிரியர், பட்டம் பதவிகளைவிட்டு விடுவதுபற்றி, ஏன் ஒருவரி கூட எழுதவில்லை! அவர் நடத்தப்போகும் ஜஸ்டிஸ் கட்சியைப் பார்த்து மக்கள் கேட்கப்போகும் முதல் கேள்வி,

பட்டம் பதவிகளை நீங்கள் விட்டுவிடுவீர்களா, கெட்டியாகப் பிடித்துக்கொண்டு இருக்கப்போகிறீர்களா? என்பதுதான்.

(திராவிடநாடு - 10.09.144)