அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


``நம்ம சர்க்கார்?''

கேட்டையோடா- தம்பி
கேட்டையோடா
கெக்கலிக்குஞ்சேதியொண்ணு
கேட்டையோடா!
சொந்தத்திலே சர்க்காரு
வந்திருக்குதாம் -
எல்லாம் சொகமாக வாழ வழி
பொறந்திருக்குதாம்
மந்திரிங்க சர்க்காரு
வந்திருக்குதாம்- நாம்ப
மாநிலத்தை ஆளுங் காலம்
வந்திருக்குதாம்
மானமெல்லாம் கண்தெறந்து
மாரிபொழியும்- இந்தப்
மண்டலத்து ஏரியெல்லாம்
ஊறிவழியும்
பானையெல்லாம் நெல்லுமணி
பொங்கிவழியும்- இந்தப்
பாட்டாளி மனசுலேயும்
பாரமொழியும்
வயித்துநெறைய நல்ல சோறு
கெடைக்கும் - நம்ப
மானத்தைக் காக்க ஒரு
கந்தெ கிடைக்கும்
பயித்தியம் பிடிச்சவங்க
போலகெடக்கும்- இந்தப்
பஞ்சைகள் மனசுக்கொரு
தஞ்சங் கெடைக்கும்.

நாட்டுக்கு நல்லாட்சி ஏற்பட்டுவிட்டது, இனி வீட்டிலே வேதனை இல்லை. வாழ்க்கையிலே வறட்சி இல்லை, அடிமை என்ற இழி பட்டம் இல்லை என்பது மட்டுமல்ல, தேய்ந்த வாழ்வு இனி இல்லை என்ற `சேதி' கூறி, தேசியக் கவிகள் தீட்டிய பல பாடல்களிலே ஒன்று, மேலே நாம் எடுத்துப் பொறித்திருப்பது- நமது கற்பனை யல்ல.
கெக்கலிக்கும் சேதி! கிராமிய நடையிலே கூறுகிறார் அந்தக் கவி களிப்பூட்டும் செய்தி தம்பி! என்று அறிவிக்கிறார்.
ஆளவந்தார்களாக, அவருடைய அன் புக்குப் பாத்திரமான காங்கிரஸ் கட்சி அமர்ந்ததும், அகமகிழ்ச்சி அவருக்கு- அந்த மகிழ்ச்சியிலே, கவிதை பெருக்கெடுக்கிறது- நாடாள நம்மவர்கள் வந்துவிட்டார்கள். எனவே, இனி நல்வாழ்வு கிடைக்கும் என்று நம்பினார்கள். இன்பம் தரும் எண்ணற்ற எண்ணங்கள் அவர்களின் இதய வெளியிலே நர்த்தனமாடின! பச்சை பட்டாடை உடுத்திக்கொண்டு நிலமகள். பலவகை மணம் பரப்பிக் கொண்டு மலைமகள், மக்களின் வாழ்வை வளமாக்கும் திருத்தொண்டிலே ஈடுபட காண்கிறார்! வீடுகளிலே, ஒளி- மக்கள் அகத் திலே மகிழ்ச்சி இருப்பதால் முகம், திரு விளாக்காகிறது! கட்டுக்கு அடங்க மறுத்த ஆறுகளிலே எல்லாம் புதிய தேக்கங்கள்! கரம்பாகிக் கிடந்த இடமெல்லாம், செழுமை. காடு மேடுகளெல்லாம் கழனிகளாகி விட்டன! உழவர் ஆனந்தப் பள்ளுப் பாடுகின்றனர். ஆலைகள் பொருள்களைச் செய்து குவிக்கின்றன! சாலை யிலே நடந்து செல்கையில் ஆலைத் தொழிலாளி பாடுகிறான்! ``நாமிருக்கும் நாடு நமதே என்பதறிந்தோம்'' என்று. கல்விக் கழகங்கள், ஊர் தோறும் காட்சியளிக்கின்றன- காட்டு ராஜாக் களின் கொட்டம் அடங்கி, கலப்பை தூக்கிகள் என்ற கேவல நிலையிலிருந்த பாட்டாளிகளின் உண்மை மேன்மை நாட்டுக்குப் புது வாழ்வு, பிறக்கிறது!!
கவியின் கற்பனையிலே தோன்றிய காட்சிகள்!! அவர் உள்ளத்திலே, இன்பத்தைக் கிளறும் காட்சிகள்... யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற முறையிலே, அவர், நாட்டு மக்களுக்கெல்லாம் தெரிவிக்கிறார். கெக்கலிக் கும் சேதியைக் கேளடா தம்பி என்று.
அவர் பணி அத்துடன் முடிந்தது- மக்களின் பிணியோ, இந்த மதுர கீதத்தை மருந்தாகக் கொண்டு மறைய மறுத்தது. மக்கள், ஆளவந்தார்களின் நிறமும், உருவும் மாறி யிருப்பதை மட்டுமே காண முடிந்தது- காண முடிகிறது. - வாழ்க்கையோ எப்போதும் போல இருண்டே கிடக்கிறது. ஏக்கம் மேலிடுகிறது- கோபம் கூடத்தான் பிறக்கிறது. ஆனால், வாய் திறந்தாலோ, வந்தே மாதரம்! இது நம்ம சர்க்கார்!! என்ற கட்டளை பிறக்கிறது.
நம்ம சர்க்கார்! இந்த வார்த்தையைப் போல, வசீகரமான மன எழுச்சி தரத்தக்க வேறு சொல், அரசியல் அகராதியில் கிடையாது. அன்னியனிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் நாட்டிலே, இந்த வார்த்தைக்கு அலாதியான மதிப்பு இயற்கையாக ஏற்பட்டு விடுவதும், அந்த ஒரு சொற்றொடருக்குள், எண்ணற்ற கற்பனை கள், கருவளவு உள்ள திட்டங்கள், ஆசாபாசங்கள் ஆகியவைகள் உள்ளடங்கி இருப்பதும் இயல்பு. எனவேதான், கவி பாடினவரும் கவிதையைப் பருகினவர்களும் நம்ம சர்க்கார் என்ற பேச்சைக் கேட்டதும், களி நடமாடினர்- கற்பனா லோகத்திலே புகுந்தனர். உண்மையை அவர் களுக்கு அன்றாட வாழ்க்கை காட்டிய போது, உள்ளபடியே அவர்கள் திடுக்கிட்டுத்தான் போயினர்.
நம்ம சர்க்கார் என்ற சொற்றொடர், எழுச்சி தருவது, என்பது போலவே எத்தனை யோ வகையான ஆட்சி முறைகளையும் உள்ளடக்கியது.
ஜெர்மனியர், ஹிட்லரின் நாட்களிலே, நம்ம சர்க்கார் என்றுதான் கூறிக் கொண்டனர்- குதூகலத்துடன் மட்டுமல்ல,- பெருமையுடன்!
முசோலினியும், இத்தாலியில் அன்னியர் அல்ல! அந்த ஆட்சியும் நம்ம சர்க்கார்தான், இத்தாலியருக்கு.
எனினும் அந்த நாடுகளிலே அந்த நம்ம சர்க்கார், மக்களுக்கு ரொட்டி தருவதற்குப் பதில் குண்டுகளைத் தந்து, வாழ்வு தருவதற்குப் பதில் சாவைப் பெற்றுத்தந்தன.- பிறகுதான் அந்த நாட்டு மக்களால், ஒரு ஆட்சி நம்ம சர்க்காராக மட்டும் இருந்தால் போதாது. நன்மையைச் செய்யும் சர்க்காராகவும் இருக்க வேண்டும் என்ற தெளிவு ஏற்பட்டது.
அரசியலில், தெளிவு ஏற்படுவது எளிதான காரியமல்ல- அதிலும் இந்த நாட்டிலே மிகமிகக் கஷ்டமான காரியம்.
நம்ம சர்க்கார் என்ற எண்ணம், உழவருக் கும் அவர்களை உறுஞ்சுவதால் சீமானாகும் பண்ணையாருக்கும், ஏழைக்கும், அவனுக்குத் தர்மம் செய்து புண்யம் தேடுவதற்காக, அவனை வஞ்சித்து பிரபுக்களானவர்களுக்கும், எல்லோ ருக்கும்தான், ஏகக்காலத்திலே ஏற்படுகிறது. நம்ம சர்க்கார் நல்ல சர்க்காராகவும் அமைய வேண்டுமானால், ஏழையை வாழ வைக்கும் திட்டமும், திறமும், தீரமும் இருக்க வேண்டும்- அத்தகைய இயல்பு, அந்த நம்ம சர்க்காருக்கு ஏற்பட்ட உடனே, அதனை நம்ம சர்க்கார் சுரண்டிப் பிழைக்கும் சுகவாசிகள் சொந்தம் கொண்டாடிப் பேசமாட்டார்கள்.
நம்ம சர்க்கார், என்ற பொதுவான முறை, உயர்வும், சிறப்பு பெற்று பயன் தருவதாக மாற வேண்டுமானால், அது எல்லா வகையினராலும் நம்ம சர்க்கார் என்று சொந்தம் கொண்டாடக் கூடிய முறையிலிருந்து, விடுபட்டு பாமர மக்கள் தங்கள் வாழ்க்கையிலே பல புதிய நலன்கள் ஏற்பட்டன என்று பூரிப்புடன் பேசுவதற்கு ஏற்றபடியான, பொதுமக்களின் பொதுநலனை வளர்க்கும் சர்க்காராக மாறியாக வேண்டும்.
இந்த மாறுதல், தானாகவும் ஏற்பட்டு விடாது. மக்களின் கிளர்ச்சி உருவெடுக்காமலும் நடை பெறாது. மாறுதல் ஏற்படுவதைத் தடுக்கவும், தவிர்க்கப்படுத்தவும், சுரண்டல் முறையினர், முயற்சி செய்வர்- செய்யும்போது, தங்கள் சுகமும் சுயநலமும் கெடுகிறது என்றா கூறுவர்- நாடு கெடுகிறது. நம்ம சர்க்கார் இடர்ப்படுகிறது. மக்கள் மனதிலே குழப்பம் ஏற்படுகிறது. மாச்சரியம் உண்டாகிறது. அமைதி குலைகிறது. ஆள்வோ ருக்கு அல்லல் அதிகரிக்கிறது. பதவிபெறும் சூழ்ச்சிக்காரரின் படை வேலை செய்கிறது. பாமரர் மனதிலே, விஷக் கருத்துத் தூவப்படு கிறது என்று பலப்பல கூறுவர்.
இப்போது, நாட்டிலே உள்ள நிலைமை இதுதான்.
நாடாள வந்திருக்கிறது நம்ம சர்க்கார், என்று முன்னம் கவி பாடினோர் கண்டு கொண்டனர். நாட்டுக்குப் புதுவாழ்வு பிறக்க வில்லை- எதிர்பார்த்த இன்ப நிலை ஏற்பட வில்லை - என்பதை.
ஆனால் வெளியே கூறவோ, பலருக்குத் துணிவு இல்லை- சிலர் உண்மையிலேயே மன வேதனையால் பேச்சிழந்தனர். சிலர் வெட்கத் துக்குக் கட்டுப்பட்டு வேறு பலவற்றிலே நேரத்தையும் நினைப்பையும் ஏவுகின்றனர் சிலர் மட்டும். நிலையை மறைப்பானேன் என்று வெளிப்படையாகவே கூறியும் வருகின்றனர். அவர்களின் தொகை குறைவு- ஆனால் வைரத் தின் ஒளியும் மதிப்பும், வர்ணக் கண்ணாடிக் குவியலுக்கு எது!
தேசீய சர்க்கார் வந்துவிட்டது என்று தம்பிக்கு, கெக்கலிக்கும் சேதியையல்லவா, கூறினார்- கவி ஒருவர்- நாடாளக் காங்கிரஸ் கட்சியினர் அமர்ந்தது- அந்தக் கட்சியின் ஆட்சி பலப்பல திங்களாக நடைபெற்ற பிறகும் உள்ள நிலைமையை, ஆட்சி செய்யும் பொறுப்பிலுள்ள முதலமைச்சரை முன்னாலே வைத்துக்கொண்டு, `சந்து பொந்து'களிலே அல்ல. வானொலி நிலையத்திலே, பாடிக்காட்டுகிறார், திருச்சிற்றம் பலக் கவிராயர் என்பவர். இந்த ஆகஸ்ட் திங்களில்.
இன்றைக்கோ
வானவெளி முகடாய்
மண் தரையே பாயலெனக்
கூனியுடல் தாங்கி
குன்று படை சனங்கள்
நெற்றி வியர்வைதனை
நீராக்கி நெல்லாக்கி
குற்றுயிராய் வாழ்ந்து, பசி
கும்பி கொதிப்பதையும்
அவ்வேளை-
உண்டு தினம் உறங்கி
உறுத்தாத பஞ்சு மெத்தை
திண்டு சுகங் கொடுக்க
திளைக்கின்ற பணக்காரர்
ஊரான் உழைப்பதனை
உறிஞ்சி உயிர் வாழ்வதையும்
வட்டிக் கடன் கொடுத்து
வாய்தாக் கழிந்துவிட்டால்
கட்டி வச்சிக் காசைக்
கறப்பதையும்-
இருப்பில் உணவிருக்க
இருட்டில் பதுக்கி வச்சி
கருப்புக் கடை நடத்தி
காசுதனைச் சேர்த்தோன்
உருப்படியாய் நம் முன்னே
உலா வந்து போவதையும்
ஆலைத் துணிப் பெருக்கு
அலையலையாய் வந்தாலும்
சேலை துணி மணிக்கு
திண்டாடி வாடுவதும்
மானந்தனை மறைக்க
மழைக்குளிரைத்தான் தடுக்க
சாணகலத் துணியின்றி
சாவதும்-
ஆதி முதல் நம்மவர்க்கு
அகிம்சை நெறி கூறிவந்த
சூதறியாக் காந்திமகான்
சுடப்பட்டு வீழ்ந்ததுவும்
போதி மரப் புத்தனைப் போல்
போதம் புகன்றவனை
சாதி மத பேதச்
சழக்கு உயிர் வாங்கியதும்

ஆகிய இப்படிப்பட்ட காட்சிகளையன்றோ காண்கிறோம், என்று கசிந்துருகிக் கேட்கிறார், கவிராயர். வானொலி மூலம், நாட்டு மக்களை- முதலமைச்சரின் முன்னிலையிலே, கவிராயர், திராவிடர் கழகத்தாரா! அரசியல் சூழ்ச்சியா! இவருடைய அறவுரைக்குக் காரணம்? அல்லது அவர் கூறிய `காட்சிகள்' நாட்டு மக்கள் காணா தனவா! இட்டுக் கட்டிப் பேசுகிறாரா? - என்பவை களை எண்ணிப் பார்க்கவேண்டும், கெக்கலிக்கும் சேதி கூறினவர்கள்.

பானையெல்லாம் நெல்லுமணி
பொங்கி வழியும் இந்த
பாட்டாளி மனசுலேயும்
பாரமொழியும்
என்று பாடி, மக்களை, மகிழத் தூண்டி, மக்களாட்சி வந்துவிட்டது என்று பேசி, நாட்டுக்கெல்லாம் நல்ல சேதி கூறினபோது, எந்த நம்ம சர்க்கார் அரியாசனத்தமர்ந்ததோ, அதே சர்க்கார்தான், சட்ட சபையிலே, எதிர்க் கட்சியால் சிக்கல் ஏற்பட்டு அல்ல, நினைத்ததை நினைத்த வண்ணம் செய்து முடிக்கத் தங்கு தடையற்ற பலம் பொருந்திய பெருவாரிக் கட்சியாக விளங்குகிறது - எனினும்,
இப்படியாய்
எத்தனையோ காட்சிகளை
இன்றளவும் காணுகின்றோம்

என்று கவிராயர் பாடவேண்டிய நிலை தான். நாட்டிலே இருக்கிறது, ஏன்? நம்ம சர்க்கார் என்று சொந்தம் கொண்டாடி மகிழும் நண்பர்கள், யோசிக்க வேண்டாமா! நம்ம சர்க்காரிலும் ஏன் நாட்டிலே,
நெற்றி வியர்வைதனை நீராக்கி,
நெல்லாக்கிய
நல்லவர்களின் வாழ்வு, வேதனை சூழ்ந் ததாக இருக்கிறது? இதை எடுத்துக்கூறிப் பரிகாரம் தேட முயற்சித்த நம்ம கட்சி நண்பர் நாராயணசா நம்ம சர்க்காராலேயே, சிறையிலே தள்ளப்பட்டிருக்கிறாரே, ஏன்? இதைக் கண்டித்து நம்ம கட்சியினரான எம்.எல்.ஏ.க்கள் பலர், நம்ம மந்திரியிடம் கூறியும் பலன் ஏற்படவில்லையே, ஏன்? சொந்தத்திலே சர்க்காரு வந்திருக்கு தாம் - எல்லாம் சொகமாக வாழவழி பொறந் திருக்குதாம். என்று கவிபாடிக் களிப் பூட்டினாரே. நிலைமையோ கவலையைத் தானே மூட்டுகிறது. அதனைக் கவிராயர் பாடியபோது, துக்கம் பீறிட்டுக் கிளம்ப, அதை வெட்கம் விரட்ட, அந்த வெட்கத்தை வீழ்த்துமளவுக்குக் கோபமும் பிறக்கிறதே, ஏன் நம்ம சர்க்காரால் நமது எண் ணங்களை ஈடேற்ற முடியவில்லை. ஆற்றல் இல்லையா வழி தோன்றவில்லையா- அல்லது இது, நம்ம சர்க்கார் என்று நாம்தான்பாத்யதை கொண்டாடுகிறாமே தவிர, உண்மையில் நாட்டுப் பெருவாரியான மக்களின் நலனைக் கவனிக்காத சிறு கூட்டத்தாரின் சர்க்காரா, என்னதான் விஷயம் என்று யோசிக்க வேண்டாமா, காங்கிரசிலே உள்ள நல்லவர்கள். யோசித் தனரோ!

அந்த யோசனையும், அதிலே தெளிவும் ஏற்பட, ஏற்பட்டு நல்ல தீர்ப்புக் கிடைக்க, நண்பர்கள் முதலிலே, நம்ம சர்க்கார் என்ற கொஞ்சு மொழிக்குள்ளே, என்னென்ன வஞ்ச கமும் நஞ்சும் கலந்து கொண்டு விட முடியும், என்பதை யூகித்தறிய வேண்டும்- இதற்குப் பாசமும் பயமும் தளர வேண்டும்- தேய வேண்டும்- நம்ம சர்க்காராயிற்றே என்ற பாசமோ, நம்ம சர்க்காரைக் குறைக் கூறினால், கண்டித்தால், திருத்த முற்பட்டால், மற்றக் கட்சியினர் கேலி செய்வரே. ஒருவேளை அவர்களின் கரம் வலுத்து விடுமோ என்ற பயமோ இருந்தால், எண்ணவும் முடியாது. எண்ண முயன்றாலும் தெளிவும் ஏற்படாது- இந்தப் பாசத்தையும், பயத்தையும் பயன்படுத்திக் கொண்டு ஒரு சிறு கூட்டத்தார் பாசீசத்தை அமைத்துவிட முடியும். அதையும் அவர்கள், நம்ம சர்க்கார் என்றே கூறுவர். நாட்டு மக்களை நம்பும்படி செய்யவும் முடியும்- நம்ப மறுப்பவர்களை நசுக்கிடவும் முடியும். எனவேதான், இப்போதோ, திருத்து வதற்குத்த் திறமும், நேரமும் உள்ளபோதே, எண்ணத் தொடங்குங்கள். ஏன் நம்ம சர்க்கார் திருச்சிற்றம்பலத்தார் தீட்டிடும் நிலையை நாட்டிலே இருந்திடச் செய்கிறது. என்பது பற்றி எங்களை மறந்து, இந்தச் சிந்தனையில் ஈடுபட வேண்டுகிறோம், காங்கிரஸ் நண்பர்கள்.

எங்கள் மீது வீசப்படும் 144, 151, 41, 107, 106, 75 முதலிய செக்ஷன்களைக் கவனப்படுத்தி யல்ல, உங்கள் ஆட்சியிலே, என்னென்ன இன்பக் காட்சிகள் காணலாம் என்று எண்ணினீர் களோ, அவைகள் தோன்றாமல், திருச்சிற்றம் பலத்தார் சுட்டிக்காட்டிடும் காட்சிகள் காணப்படு கின்றனவே. அவைகளைக் கவனப்படுத்திக் கேட்கிறோம்- எண்ணிப் பார்த்தீர்களா, ஏன் நம்ம சர்க்கார் இருந்தும் நாடு இவ்விதம் இருக்கிறது என்பது பற்றி, முயற்சித்துப் பாருங்கள்!

(திராவிட நாடு - 26.9.1948)