அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


``நம்ம சர்க்கார்'' ஒன்றல்ல இரண்டு!

``நம்ம சர்க்கார்'' ஒன்றல்ல இரண்டு! என்று நாம் கூறினது அமைக்கப்படுவதற்கு முன்பு எப்படி இருக்கும் என்று நாம் ஆவலோடு எண்ணிக் கொண்டிருந்தோமோ அந்தக் கற்பனை சர்க்கார் ஒன்று, இப்போது நடைமுறையிலுள்ள, நாங்கள் ஏதும் செய்யத்தான் முடியவில்லை என்று பேசும் அமைச்சர்களைக் கொண்ட சர்க்கார், மற்றொன்று, என்ற கணக்கின்படி மட்டும் கூறப்பட்டதல்ல. நமது மக்களுக்கு உண்மையி லேயே இரண்டு சர்க்கார்கள் உள்ளன- ஒன்று மாகாண சர்க்கர்- மற்றது மத்திய சர்க்கார்!

இரு இடங்களிலும் இருப்போர் எமது கட்சியினரே என்று காங்கிரஸ் நண்பர்கள் இறும்பூ தெய்வது பற்றி நமக்குக் கவலையும் இல்லை - நஷ்டமும் இல்லை. ஆனால், இந்த இரு இடங்கள் ஒன்றோடொன்று உரசும்போது, நேரிடும் விளைவுகள் நிச்சயமாக. நம்மை மட்டுமல்ல, நமது காங்கிரஸ் நண்பர்களையும் பாதித்தே தீரும். எனவேதான், இந்த இரு அமைப்புகளுக்கு மிடையே உள்ள தொடர்பு பற்றி அவர்களும் சிந்தித்தாக வேண்டும் என்று கூறுகிறோம். மாடி கலனாகி இருந்தால் நமக்கென்ன, நாம் கீழ்த் தட்டிலேதானே குடி இருக்கிறோம் என்று எந்த வீட்டுக்காரரும் கருதிவிட முடியாதல்லவா?

நம்ம சர்க்காரிடம், திட்டம் தெளிவாக இல்லை. அப்படி ஏதேனும் சில அரை குறைத் திட்டங்கள் இருந்தாலும், அவைகளை நிறை வேற்றுவதற்கான பண வசதியும், பணத்தைப் பெறும் வழிவகை வசதியும் இல்லை. என்பது, இன்று, எதிர்க்கட்சிக்காரரான நாம் கூறும், விஷமத்தனமான பேச்சாகக் காங்கிரஸ் நண்பர்களுக்குத் தோன்றக்கூடும், ஆனால், பிரச்சனையை அவர்கள் ஆராய, ஆராய உண்மையிலே, அவர்களே, அந்த நிலைமையை உணரத்தான் செய்வார்கள்.

திட்டங்கள் தீட்டும்போது, மாகாண சர்க்கார், மத்ய சர்க்காரின் நோக்கம் யாதாயிருக் கும். எந்த அளவுக்கு அங்கிருந்து ஆதரவு கிடைக்கும், என்ற விஷயத்தைக் கவனித்தே செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. மாகாண சர்க்காரை நம்பியே, ஆதரவை எதிர் பார்த்தே, எங்ஙனம் முனிசிபாலிடிகள், ஜில்லா போர்டுகள் உள்ளனவோ, அதுபோலவே, மத்ய சர்க்காரை எதிர்பார்த்து, மாகாண சர்க்கார் வாழ வேண்டியிருக்கிறது. இந்த நிலைமை எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது, என்றால், நமது மாகாண சர்க்கார், அடிக்கடி டில்லி போயாக வேண்டும். காலம் அதிகமாகிறது. ஆகவே, ஒரு விமானம் வேண்டும், என்று கூற வேண்டிய அளவுக்கு வளர்ந்திருக்கிறது. அனுமானின் துணை கொண்டுதான், மாகாண சர்க்கார் அவ்வப்போது காரியமாற்ற வேண்டி வருகிறது. அரிசி மாநாடு - அரக்கு மாநாடு- கன்ட்ரோல் புகுத்தும் மாநாடு- அதை ஒழிக்கும் மாநாடு - உரம் தயாரிக்கும் மாநாடு- உள்நாட்டுப் பாதுகாப்பு முறை வகுக்கும் மாநாடு- என்று அடிக்கடி, டில்லியில் நடைபெறும் ஒவ்வொரு மாநாடும் மாகாண சர்க்கார், தனது யோசனையின் படியும், மாகாணத்தின் நிலைமையை உத்தேசித்தும், திட்டம் தீட்டிவிட முடியாது. மத்ய சர்க்காரின் மனதை அறிந்த பிறகே, எந்தத் திட்டமும் தீட்டியாக வேண்டும் என்ற உண்மையைத் தெளிவாக்கும் நிகழ்ச்சிகளாகும். இரு அமைப்பு களிலும், இன்று ஒரே கட்சியினருக்கு ஆதிக்கம் இருந்தும்கூட, தொடர்பு, திருப்தி தருவதாகவோ மாகாணங்களின் மனதை மகிழ வைப்பதாகவோ இருக்கிறதென்று யாரும் கூற முடியாது.

மத்ய சார்க்காருக்குள்ள மனப் போக்குக் கும், மாகாண சர்க்காருக்குள்ள மனப்பான்மைக் கும், சகலவிதமான பொருத்தமும் அமைந்திருக் கிறதென்று எந்த அரசியல் ஜோதிடனும் கூறிவிட முடியாது. இடத்துக்கேற்ற இயல்பும், இயல்புக் கேற்றபடி எண்ணமும் எழுவதுதான் இயற்கை. இந்த முறைப்படி ஒவ்வொரு மாகாணத்திலும், அந்த இடத்தினுக்கேற்றபடியான திட்டம் தீட்டப்பட்டாக வேண்டும். ஆனால்அப்படிச் செய்வதற்கில்லாத முறையில், மத்ய சர்க்கார், ஒன்று இருக்கிறது, எந்தத் திட்டமும், அதனிடம் முத்திரை பெற்றாக வேண்டும் மாகாண சர்க்கா ருக்கு `தேவையற்றது, தீங்கு பயப்பது' என்று தோன்றும் திட்டங்களைக் கூட, மத்ய சர்க்கார், தனக்குள்ள அதிகார பலத்தைக் கொண்டு புகுத்த முடியும். யோசனை கூறுவதன் மூலம்- எச்சரிப் பதன் மூலம்- உமது இஷ்டம் என்று வெறுத்துப் பேசுவதன் மூலம் இப்படிப் பல வழிகளில், மத்ய சர்க்கார், மாகாண சர்க்காரின் போக்கையும் நோக்கத்தையும் கட்டுப்படுத்திவிட முடிகிறது. இது, நாம் வேண்டுமென்றே கூறுவது என்று எண்ணிக் கொண்டு காங்கிரஸ் நண்பர்கள் விஷய விளக்கம் பெறும் சிறந்த பண்பை இழந்து விடக்கூடாது.

``நமது மாகாணத்துக்கு உணவுப் பொருள் 4 இலட்சம் டன் தேவைப்படுகிறது. மத்ய சர்க் காரால் 34,000 டன் மட்டுமே தர முடிந்தது. மத்ய சர்க்கார் மறுபடியும் கன்ட்ரோலைப் புகுத்த வேண்டுமென்று தீர்மானித்தது, சென்னை சர்க்கார், அதே முறையைப் பின்பற்ற வேண்டிய தாயிற்று, கன்ட்ரோல்கள் ஏற்படுத்துவதால், இலஞ்ச இலாவணமும், கள்ளமார்க்கெட்டும் ஏற்படுகின்றன என்பது என் அபிப்பிராயம்.''

இவ்வண்ணம் பேசுபவர், `அனுமான்' வாங்கிய, நமது அருமை முதலமைச்சரேதான். அவருக்கு இஷ்டமில்லாத ஒரு திட்டம் - அதனை மத்ய சர்க்கார் வற்புறுத்துகிறது- மத்ய சர்க்காரின் முகத்துக்கஞ்சி, அவர், அந்தத் திட்டத்தை இங்கு புகுத்துகிறார்- இதுதான், இரு அமைப்புகளுக்குமிடையே உள்ள தொடர்பு! இதை மாகாண சுயாட்சி என்று யார் கூற முடியும்? இப்படியே, மாகாண சர்க்காருக்குப் பிடிக்காத திட்டங்கள், மத்திய சர்க்காரின் வற்புறுத்தலுக்காக வேண்டி இங்கு புகுத்தப்பட்டு வருவதென்றால், மாகாணத்தின் நலன் பாதிக்கப்படாமலிருக்குமா! இப்போதுள்ள நிலைமையில், எப்படியோ ஒன்று, கசப்பாக இருப்பினும், டில்லி டானிக் சாப்பிடுவது தான் சரி, என்று ஓமந்தூரார் வாய் திறக்கிறார்- அவருக்கே அடியோடு பிடிக்காத திட்டத்தை, மத்ய சர்க்கார் வற்புறுத்தினால், அப்போது நிலைமை என்ன ஆவது? அப்போது இரு அமைப்புகளில், காங்கிரஸ் நண்பர்களும், பொது மக்களும், எதனை, நம்ம சர்க்கார் என்று பாத்யதை கொண்டாடுவது - இவை, அரசியல் தெளிவை விரும்பும் யாருக்கும் தோன்றக் கூடிய கேள்விகள்!

`நம்ம சர்க்கார்' என்று பொதுவாகப் பேசிவிட்டால் போதாது- சென்னையில் ஒன்றும், டில்லியில் ஒன்றும் இருக்கிறது- எந்தச் சமயத் திலும் எந்தப் பிரச்னையிலும் டில்லியின் தயவைச் சென்னை நாடியே தீர வேண்டிய நிலைமை இருக்கிறது. சென்னைக்குச் செந்தேன் போல் இனிக்கும் ஒரு திட்டத்தை டில்லி கடு விஷம் என்று கருதி, வேண்டாம் அந்தத் திட்டம் என்று கூறினால், உறவும் உரசலும் மோதுதலாக, தாக்குதலாகவன்றோ மாறும்! இது நல்லதுதானா? விரும்பத்தக்கதுதானா? இதனைத்தானா மாகாண சுயாட்சி என்று அழைப்பது? இவ்விதமான மோதுதலின் போது, நமது காங்கிரஸ் நண்பர்கள், எதை `நமது சர்க்கார்' என்று எண்ணிக் களிப்பது? இவை, மிக மிகக் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய பிரச்னைகள்.

மதுவிலக்குத் திட்ட சம்பந்தமாகக் கூட, மத்ய சர்க்கார் என்ன போக்குக் காட்டிற்று? மாகாண சர்க்கார் நிலைமையைச் சமாளித்து விட்டது. வெற்றி பெற்றுவிட்டது என்றே கூடக் கூறலாம்- ஆனால் இதன் பின் விளைவுகள் என்ன ஆகும்?

பூரண மதுவிலக்குத் திட்டம் எமது உயிர்ப் பிரச்னை. அதை நாங்கள் எப்படியும் நிறை வேற்றியாக வேண்டும்- என்று `நம்ம சர்க்கார்' நம்பர் ஒன்று தெரிவித்தது.

இப்போது `நாட்டிலுள்ள நிலைமையை உத்தேசித்தும், நமது பண நிலைமையை உத்தேசித்தும், கூறுகிறோம். இப்போது பூரண மது விலக்குத் திட்டம் கூடாது- நிறுத்தி வைக்கத்தான் வேண்டும்- என்று நம்ம சர்க்கார் நம்பர் இரண்டு, தெரிவித்தது.

முதலில், விளக்கம் கூறும் முறையில் தெரிவித்தது, பிறகு புத்தி கூறும் பாவனையில் பேசிற்று. பிறகு, எச்சரிக்கும் முறையிலே பேசிற்று. கடைசியில் `எப்படியோ நாசமாகப் போ. எனக்கென்ன வந்தது!' என்று வெறுத்துக் கூறும் நிலையில், பேசிற்று.

மத்ய சர்க்காரிடம் பண உதவி கிடைக் காது- கடன் வாங்கவும் கூடாது- கையிருப்புப் பணத்தையும் பாழ் செய்யக் கூடாது- என்று தடைகள் விதித்துவிட்டு, இவ்வளவையும் ஏற்றுக் கொண்டு நடத்த முடியுமானால், உன் இஷ்டம் போல் மதுவிலக்குத் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்- என்று டில்லி தெரிவித்தது.

மதுவிலக்குத் திட்டத்துக்கு மட்டுமல்ல, ஜெமீன் ஒழிப்புத் திட்டத்துக்குக் கூட. எமக்கு, மத்திய சர்க்காரிடமிருந்து பண உதவி தேவை யில்லை, நாங்கள் நிலைமையைச் சமாளித்துக் கொள்வோம் - என்று கூறிவிட்டுச் சென்னை செயலில் ஈடுபடுகிறது.

இந்தத் துணிவு சென்னையிலுள்ள `நம்ம சர்க்காருக்கு' வந்ததற்குக் காரணம். இங்கு, சர்க்காருக்குள்ள `வருவாய்' அமோகம், என்பத னால் அல்ல. நெருக்கடிகளும், ஆபத்துகளும் ஏற்பட்டால் அப்போது உபயோகிக்கப்பட வேண்டும் என்பதற்காக, பலகாலமாகச் சென்னை சர்க்கார், சேர்த்து வைத்திருக்கும் நிதி 33 கோடி ரூபாய் இருக்கிறது என்ற தைரியம்!

இந்த முப்பத்து மூன்று கோடி இருக்கும் தைரியம். டில்லியின் எச்சரிக்கையைத் தட்டிக் கழிக்கும் தைரியத்தைச் சென்னை சர்க்காருக்கு அளித்தது- ஆனால் இந்தப் பணம் தீர்ந்து போய், வேறு முக்கியமான திட்டம் தீட்டப்பட்டு, அந்தச் சமயத்தில், இப்போது டில்லி எச்சரித்தது போலவே. பண உதவி கிடைக்காது- கடனும் வாங்கலாகாது என்று கூறினால், அப்போது மாகாண சர்க்காரின் நிலைமை என்ன ஆவது? `நம்ம சர்க்கார்' என்று பூரிப்படையும் நபர்களைக் கேட்கிறோம். என்ன ஆவது? நாளாகவாக இதுபோன்ற பிரச்னைகள் அதிகரிக்குமே, அப்போதெல்லாம், எதற்கும் டில்லி விளக்கம், டில்லி உபதேசம், டில்லி உத்தரவு பெற்றாக வேண்டிய நிலைமை இருந்தால், `நம்ம சர்க்கார்' என்று எதைக் கொண்டாடப் போகிறார்கள் நமது நண்பர்கள்!
ஆகவே, பொதுவாக, நமது காங்கிரஸ் நண்பர்கள். மற்றோர் உண்மையையும் உணர வேண்டும், `நம்ம சர்க்கார்' என்று அவர்கள் எந்த மாகாண சர்க்காரைப் பாராட்டுகிறார்களோ, அதனிடம் முழு அதிகாரம் இல்லை. எனவே, அந்தச் சர்க்கார் திட்டம் தீட்டியும் பயனில்லை. மாகாண சர்க்கார், அளவில் பெரியதாகக் காணப்படும் ஒரு ஜில்லா போர்டு போலத்தான். டில்லியின் கண்களுக்குத் தெரிகிறது. அவ்வித மான முறையிலே, மாகாண சர்க்காருக்கும், மத்ய சர்க்காருக்கும் இருக்கவேண்டிய `தொடர்பு' நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

மாகாணங்கள் இன்னின்ன அதிகாரங்கள் மட்டுமே செலுத்தலாம், என்று வரையறுத்து விட்டிருக்கிறார்கள். மத்ய சர்க்காரின் அதிகாரம் இதன் பயனாக, அதிகமாக இருக்க மட்டுமல்ல, வளரவும் வழி செய்யப்பட்டிருக்கிறது. இதனால், மேலும் மேலும் மாகாண- மத்ய சர்க்கார் மோதுதல்கள் ஏற்படவே செய்யும். ஏற்கனவே பல மாகாணங்கள், தங்கள் அதிகாரம் குறைக்கப் பட்டிருப்பது கண்டு குமுறுகின்றன. எதற்கெடுத் தாலும் டில்லியை நாடியே தீரவேண்டிய நிலைமை இருப்பது, மன எரிச்சலை வளர்க்கிறது. நாடியது கிட்டாது போகும்போது மன எரிச்சல் மாச்சரிய அளவுக்குச் செல்வதிலே வியப் பில்லை.

நமது மாகாணத்திலே, நடந்த பல மாதங் களாகப் பேசப்பட்டு வரும், ஜெமீன் இனாம் ஒழிப்புத் திட்டம். இந்த நிலைமையை விளக்கும் மிக முக்கியமான ஓர் எடுத்துக்காட்டு. மாகாண சுயாட்சி வெறும் கேலிக் கூத்தாக்கப்பட்டிருப் பதை விளக்கும் விசாரம் தரும் உண்மை. `நம்ம சர்க்கார்' என்று எதனைக் கருதுவது, சென்னை யையா, டில்லியையா, என்ற சிக்கலான பிரச் னையைக் காங்கிரஸ் நண்பர்களுக்கு ஏற்படுத்தி விட்ட சம்பவம்.

`நம்ம சர்க்கார்' நம்பர் ஒன்று, ஜெமீனுடன் இனாமும் ஒழிய வேண்டும் என்று தீர்மானித்தது. இதற்கு நாட்டு மக்களின், ஆதரவு மிகமிகப் பெரிய அளவிலே கிடைத்தது. எல்லாக் கட்சி களும் ஆதரித்தன. மாகாண காங்கிரசும், சென்னை சட்டசபைக் காங்கிரஸ் கட்சியும் பேரா தரவு தந்தன. எனவே இந்தத் திட்டம், வெற்றி பெறும் என்பது சந்தேகத்திற்கு இடமாற்றதாகி விட்டது. சில ஜரிகைக் குல்லாய்களும், சன்னி தானங்களும், இருசாராருக்கும் சேவை செய்யும் சட்டந் தாங்கிகளும் எதிர்த்தனர்- உரத்த குரலிலே கூட அல்ல- முணுமுணுத்தனர். சட்ட சபையிலே, வைதீகத்தின் சார்பாக வாதாடினர். வரதாச்சாரி வைத்யநாத ஐயர் கூட்டம். இவர்களை இந்நாட்டு ஏடுகள் பலவும், ஏளனம் செய்தன. சட்ட சபையிலே இவர்களுக்குச் சரமாரியான கண் டனம்! அகராதி தீர்ந்தே போய்விட்டது! அவ்வளவு கண்டனம், கேலி அவர்களுக்கு.

ஒரு திட்டத்துக்கு நாட்டு மக்களின் பேராதரவும், சட்ட சபையில் பேராதரவும் கிடைத்து, விஷமிகள் சிலருடைய எதிர்ப்பு மட்டுமே இருந்தால் ஜனநாயகக் கோட்பாட்டின் படி விஷமிகள் வெட்கித் தலைகுனியும்படி பெருவாரிக் கட்சிக்குப் பெருமிதமான வெற்றி கிடைக்க வேண்டியதுதானே முறை. இந்த ஜனநாயக உண்மையை நம்பிக் கொண்டுதான் `தினசரியும்' அதன் திருக்குழந்தை காண்டீபனும், வறட்டுக் கூச்சலிடும் வக்கிரங்கள் மௌண்ட் ரோடு பெருச்சாளிகள்- இலஞ்சம் வாங்கும் பேர்வழிகள் என்றெல்லாம். மசோதாவை எதிர்த்தவர்களைக் கண்டித்து எழுதின. ஆனால், கடைசியில் நடந்ததென்ன! `தினசரி'யின் முகத் திலே அசடு சொட்டுகிறது! மௌண்ட் ரோடு பெருச்சாளிகள், வெற்றித் தாண்டவமாடுகின்றன! சன்னிதானம் களிக்கிறது! சட்டம் தூக்கிகள் சந்தோஷமடைகிறார்கள்! வரதாச்சாரி, வெற்றிச் சிரிப்புடன், வைத்தியநாதரைப் பார்க்க, ஓமாந் தூரார் ஓம் ரமணாய நமக! என்று கூறிவிட்டு அமருகிறார். இனாம்களை, மசோதாவில் சேர்க் காதே என்று டில்லி கட்டளையிட்டது- சென்னை, `சரி' என்றது! மெஜாரடியை, மைனாரடி வென்றது! ஜனநாயகத்தைச் சனாதனம் தோற்கடித்தது, டில்லி துருப்பின் உதவியினால்! இந்த நிலை யிலே, காங்கிரஸ் நண்பர்களுக்கு, எது, `நம்ம சர்க்கார்'? ஜெமீன் இனாம் இரண்டும் ஒழிய வேண்டும். சுரண்டல் முறை, எந்த உருவில்- பெயரில் இருந்தால் என்ன, அவை ஒழிய வேண்டும் என்று வீரத்துடனும் விவேகத்துடனும் பேசி, ஏழையின் மனதை இன்புறச் செய்த சென்னை சர்க்கார், `நம்ம சர்க்காரா?' அல்லது மடிசஞ்சிகளை வாரி அணைத்து உச்சி மோந்து முத்தமிட்டு, அழாதேடா கண்ணா! உன்னை மிரட்டிய சென்னை சர்க்காருக்கு நான் தக்க பாடம் கற்பிக்கிறேன்- என்று கூறி, இனாம்களைத் தொடாதே, எடு கரத்தை, என்று சென்னை சர்க்காருக்குக் கூறிவிட்ட டில்லி, ``நம்ம சர்க்காரா?'' எண்ணிப் பார்க்க வேண்டாமா, காங்கிரஸ் நண்பர்கள்- நேர்மையாளர்கள்!

எந்த நியாயத்தைக் காரணமாகக் காட்ட முடியும், இனாம்களை ஒழிக்க சென்னை செய்த முடிவை, டில்லி மாற்றியதற்கு? ஏழைக்குக் காட்டும் பரிவா இது? எத்தர்களுக்குத் தரப்பட்ட பாதுகாப்பு அல்லவா! ஏன் இதை டில்லி செய்தது? இப்போது, வரதாச்சாரிகள், எவ்வளவு கெம்பீர நடை நடக்கிறார்கள்! அவர்களை மௌண்ட் ரோடு பெருச்சாளிகள் என்று ஏளனமாக எழுதினவர்களை இன்று, அவர்கள் பார்க்கிறார் களே! அந்தப் பார்வை சாமான்யமானதா? ``சூரப் புலிகளே! ஏதோ சட்டசபையிலே கொஞ்சம் அதிகாரம் கிடைத்ததும், எங்களைத் துச்சமாக எண்ணினீர்களோ என்னவாயிற்று உங்கள் வீரப் பிரதாபம். ஆவேசப் பேச்சு எல்லாம்! உங்களிடம் உள்ள அதிகாரம் பிரமாதமானது என்று எண்ணிக் கொண்டீர்கள்! இந்த வேதியர்களால் என்ன காரியம் சாத்யப்படும். சர்க்காரிலே நமக்குத்தானே செல்வாக்கு என்று எண்ணி இறுமாந்து கிடந்தீர் கள். பித்துக்குளிகளே! சுண்டைக்காய் அளவு அதிகாரம் உம்மிடம் இருப்பது! டில்லி தேவதை யின் முன்பு, உம்மால் என்ன செய்ய முடியும்? பார்த்தீர்களல்லவா. டில்லி தேவதையின் பிரம்படி விழுந்ததும், மசோதா என்ன நிலையாயிற்று என்பதை! பைத்யக்காரர்களே! இருப்பது ஒரு சர்க்கார் அல்ல, இரண்டு. ஒன்று சென்னையில்- இங்கு நீங்கள் எதையும் சாதித்துக் கொள்ளலாம் என்ற அகம்பாவம் கொள்ள வேண்டாம். மற்றொன்று டில்லியில் இருக்கிறது- அந்தச் சர்க்காரின் சொற்படிதான். உங்களுக்குச் செல்வாக்குத் தரும் சென்னை சர்க்கார் நடந்து கொள்ள வேண்டும். எங்களுக்கு அங்கு, டில்லி தேவதையிடம் வரம் பெற முடியும் - வல்லமை உண்டு - வழிவகை தெரியும் உங்களால், டில்லியின் கட்டளையை மீற முடியாது!'' என்றல்லவா அவர்களின் பார்வை பேசுகிறது. என்ன சொல்லுகிறார்கள் காங்கிரஸ் நண்பர்கள். ஏழை எளியவர்களை ஏமாளிகளாக்கி, காட்டு ராஜாக்களாகவும் மேட்டுக்குடியினராகவும், ஜெபமாலை ஜமீன்தார்களாகவும் வேஷமிட்டு வாழ்ந்து வருபவரின் கொட்டத்தைத் தீரமாக மட்டந் தட்டுகிறது பாரீர்! நம்ப சர்க்கார்- என்று பூரிப்புடன் பேசியவர்களின் முகத்திலெல்லாம், டில்லி கரி பூசி விட்டதே, இதற்கு என்ன சொல்வது! எதனை `நம்ம சர்க்கார்' என்று ஏற்றுக் கொள்வது?

இதுபோன்ற சிக்கல்கள் பலப்பல முளைத்தபடியேதான் இருக்கும். புதிய பிரச்னைகள் தோன்றும்போதெல்லாம்.

மாகாண சர்க்கார் தீர்மானிக்கும் திட் டத்தைக் கைவிட்டுவிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படக் கூடும்- மாகாண சர்க்காருக்கு விருப்பமேயில்லாத திட்டத்தைப் புகுத்தியாக வேண்டுமென்று வற்புறுத்தப்படக் கூடும். அப்படிப்பட்ட சமயங்களிலே, நம்ம சர்க்காரிடம் அன்பு காட்ட வேண்டாமா? குறை கூறிக் கொண்டிருக்கலாமா- என்று பரிவுடன் பேசும் காங்கிரஸ் நண்பர்கள் என்ன எண்ணமுடியும்- அன்பை எங்கு செலுத்துவது?

ஒவ்வொரு மாகாணமும் உள்ளூர உணரு கிறது. மத்ய சர்க்கார் அதிகமான அளவிலும், அவசியமற்ற முறையிலும், மாகாண விவகாரங் களிலே தலையிடுகிறது என்பது பற்றி.

அசாம் மாகாணப் பிரதிநிதி ஒருவர், மத்ய சர்க்காரின் இத்தகைய போக்கைச் சில திங் களுக்கு முன்பு கண்டித்துத் தீப்பொறி பறக்கப் போசினார் மத்ய சர்க்கார், அசாமுக்குச் செய்ய வேண்டிய அளவு நன்மைகளை செய்வதில்லை. ஆனால், எங்கள் மாகாணத்திலிருந்து ஏராள மாகப் பணத்தை மட்டும் பெற்றுக் கொள்கிறது. டில்லியில் ஒரு பெரிய உத்யோகத்தில்கூட அசாமியர் இல்லை! இப்படி அசாமை நடத்து வானேன்? இதைவிடத் தனியாக விட்டுவிடுங் கள்- அசாம் தனித்து வாழ முடியும் என்றெல்லாம் பேசினார்.

ஒரு ஆந்திரத் தலைவர், ஆந்திரர்களின் நலனுக்காகச் செய்யப்பட வேண்டியவைகள் எவ்வளவோ உள்ளன. ஆனால் போதுமான பண வசதி இல்லை. மாகாண நிலைமை அவ்வித மாக்கப்பட்டிருக்கிறது.

வளரும் செலவினம், மாகாண சர்க்கா ருக்கு - ஆனால் வருவாய் தரும் இனமோ - வளரக் கூடியது அல்ல!

வரிமுறையிலே, இருவகை உண்டு- வளரக் கூடிய முறை, வளர முடியாத முறை- நில வரி, சொத்துவரி போன்றவைகள், பின்னதற்குச் சான்றுகள், தொழில் வரி, வருமான வரி, விற்பனை வரி, புகையிலை வரி போன்றவைகள், முன்னதைச் சார்ந்தவை.

இந்த இருமுறைகளில், வளரக் கூடிய வரிகளை மத்ய சர்க்காரிடம் ஒப்படைத்து விட்டனர்- வளரமுடியாத வரி வகைகளை மாகாணங்களிடம் தந்து விட்டனர். மாகாணங் களின் செலவோ ஒரு குறிப்பிட்ட அளவோடு நின்று விடக்கூடியதல்ல. நாம் குறிப்பிட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யச் செய்ய, செலவினம் வளர்ந்த வண்ணம் இருக்கும். எனவேதான், எதற்கெடுத்தாலும், மாகாண சர்க்கார், பணம் இல்லை என்று கதற வேண்டி இருக்கிறது. வருமானத்தின், சத்தான பகுதி, டில்லிக்குக்க் காணிக்கையாக்கப்பட்டு விடுகிறது! எனவே, மாகாண சர்க்காரால், மக்களுக்குத் தேவையான அடிப்படை நன்மைகளைச் செய்யவும் முடிவதில்லை. திட்டம் தீட்டித்தான் பலன் என்ன?

நகரசபைகளின் மூலம், நகர மக்களின் நன்மைகள் கவனிக்கப்பட வேண்டும், ஆனால், அதற்கு வேண்டிய பண வசதியை மாகாண சர்க்காரிடமே பெறவேண்டி இருக்கிறது. பணம் கேட்க முடிகிறதோ!

``உதவி நிதிக்காக முனிசிபாலிட்டிகள் மாகாண சர்க்காரிடம் செல்ல எவ்வாறு கூச்சப்படுகின்றனவோ, அதேபோல் மாகாண சர்க்காரும் மத்ய சர்க்காரிடம் உதவி கோரக் கூச்சப்படுகிறார்கள்'' என்று கோவையில் நிதி மந்திரி, கோபால ரெட்டியார் பேசினார். கூச்சமாம்! கூச்சத்தை விட்டுக் கேட்டும் பார்த்தார்கள் நகர சபைத் தலைவர்கள், பண உதவி வேண்டும் என்று. பதில் என்ன கிடைத்தது? அதுதான் இல்லை! மற்றோர் ரசமான பதில்!
``உங்கள் கஷ்டமும், என் நஷ்டமும் ஒரே விதமானதாகவே இருக்கிறது. உங்களிடமும் பணம் இல்லை, என்னிடமும் பணம் இல்லை'' என்று கூறினார். நிதி மந்திரி கோபால ரெட்டியார். நகரசபைத் தலைவர்கள் மாநாட்டில் அனை வரும் சிரித்தனராம்! எதை எண்ணியோ!
நகர சபைகளிலே கொலு வீற்றிருந்தால் மட்டும் போதாது. மக்களின் தேவைகளை உணர்ந்து நன்மைகளைச் செய்ய வேண்டும், கேட்டுப் பார்ப்போம். குறைகளைக் கூறி முறையிட்டுப் பார்ப்போம் என்று எண்ணி, மாகாண நகரசபைத் தலைவர்கள் ஓர் மாநாடு கூட்டினர் சென்னையில், சென்ற திங்கள் மந்திரி கோபால ரெட்டியார் வந்திருந்தார். அவர் அளித்த பதில் நாம் மேலே கூறியது- என்னிடமும் பணம் இல்லை- உம்மிடமும் இல்லை- என்று நகைச் சுவைக்கு நல்ல எடுத்துக்காட்டுத்தான். ஆனால் மக்களின் நன்மை என்ன ஆவது, இப்படி மந்திரி கை விரித்தால்.

ஆனால் அவர் என்ன செய்வார்? அவர் நிலையே அப்படியாகி விட்டது.

கொழுத்த பணம் தரும் வருமான வரி, மத்ய சர்க்காருக்குப் போய்விடுகிறது. இதைப் பெற்றுக்கொண்டான பிறகு, ஏதோ ஓர் அளவு மாகாணத்துக்குத் திருப்பித் தரப்படுகிறது. இந்த முறை சரியல்ல. இதன் பலனாக நேரிடும் விளைவுகள், வேதனை தருகின்றன, என்பதைப் நிதி மந்திரி வெளிப்படையாகவே இப்போது பேசத் தொடங்கிவிட்டார்.

மாகாண சர்க்காரின் உரிமையாக உள்ள நிலவரி வளரக் கூடியதல்ல- விற்பனை வரி, இப்போது கொழுத்த பணம் தருகிறது என்ற போதிலும் இதன் அளவும் குறைந்து தீரும், மேலும் இந்த வரி பெரிதும் ஏழைகளையே பாதிக்கக் கூடியது. எனவே, பணம் வேண்டு மென்பதற்காக விற்பனை விகிதத்தைக் கண்ணை மூடிக் கொண்டு அதிகப்படுத்திக் கொண்ண்டே போக முடியாது.
குறையும் நிலவரி, வளர விடக்கூடாது விற்பனை வரி, எனும் இருவகை வருமானத்தைக் கொண்டு, மாகாண சர்க்காரால், மக்களாட்சியின் மாண்பு துவங்கும் விதத்திலே, ஆட்சி செய்ய முடியாது.

நிதி மந்திரி, வானொலியில் பேசுகிறார், கழகங்களிலே கதறுகிறார், சட்டசபையிலேயும் சஞ்சலத்தைத் தெரிவிக்கிறார். மத்ய சர்க்கார், மாகாணத்திலே வசூலிக்கும் வருமான வரி, கம்பெனி வரி, புகையிலை வரி போன்றவைகள். பல கோடி ரூபாய். இதிலே, மிகமிகச் சிறுபகுதி தான் திருப்பித் தரப்படுகிறது. இதுபோதுமான தல்ல என்று புலம்புகிறார். இன்னும் கொஞ்சம் தரவேண்டுமென்று கெஞ்சுகிறார். இப்படிப் பணம் இல்லாத நிலையிலே மாகாணத்தின் வளம் எப்படி வளரும் என்று கேட்கிறார், முறையிடுகிறார்.

இவர் மட்டுமல்ல, சென்னை மாகாண நிதி நிலைமையைப் பற்றி ஆராய்ந்து கருத்துரை கூற அமைக்கப்பட்ட, கமிட்டியார், இதனையே வலியுறுத்திக் கூறியுள்ளனர்- என்னதான் சிக்கனம் செய்தாலும், சென்னை மாகாணத்துக்கு இப்போதுள்ள வருமான வழிகளை மட்டும் கொண்டு மக்களின் வாழ்க்கைக்கு இன்பம் தரத் தக்க எதனையும் செய்ய முடியாது என்று கூறிவிட்டது கமிட்டி.

கோபாலர், இங்கு பேசுவதுடன் மட்டுமல்ல, அரசியல் நிர்ணய சபையிலேயும் இது சம்பந்தமான பிரச்னையை எழுப்பினாராம்.

அடிக்கடி அவரும் டில்லி வட்டாரத்துக்கு மனுச் செய்தபடிதான் இருக்கிறார்.

ஏன் இப்படி நிலைமை இருக்க வேண்டும்! கிடைக்கும் பணத்தைத் தூக்கிக் கொண்டு போய் டில்லியில் போட்டுவிட்டு, தாழ்வாரத்தில் நின்று பல்லிளிக்கும் போக்கு எதற்கு?

மத்ய சர்க்காரின் பொறுப்புகளை வரை யறுத்து, அந்தப் பொறுப்புகளுக்கான செலவு வகையை நிர்ணயித்து, அந்தச் செலவுக்காக, இன்னின்ன மாகாணம் இவ்வளவு தரவேண்டும் என்று தீர்மானித்து விட்டால், பிச்சைப் பாத்திரத்தைத் தூக்கிக் கொண்டு, டில்லிப் பட்டணம் போகத்தேவை இருக்காதே!

`இந்தியாவின்' பாதுகாப்பு மகத்தான பொறுப்பு. ஆம்! இதை மத்ய சர்க்கார்ர் கவனித்துக் கொள்ளும். சரி! இதற்கு இவ்வளவு கோடி ரூபாய் தேவை. நல்லது. இதற்காக ஒவ்வொரு மாகாணமும் தத்தம் வசதிக்கு ஏற்ற அளவு பணம் தர வேண்டும். நியாயம், பம்பாய், கோடீஸ்வரர்கள் உள்ள மாகாணம், கொஞ்சம் தாராளமாகத் தரட்டும். சென்னை தொழில் வளம் அதிகரிக்காத நிலையிலுள்ள இடம், பணத்தின் அளவு சற்றுக் குறைவாக இருக்கட்டும். இப்படி ஓர் முறையை ஏன் வகுத்துக் கொள்ளக்கூடாது!

`நம்மசர்க்கார்' என்று சொந்தம் பேசும் காங்கிரஸ் நண்பர்கள் நம்ம சர்க்கார் பணப் பெட்டியை டில்லியில் கொடுத்துவிட்டு, அவ்வப் போது சென்று உண்டியைக் குலுக்கிப் பணம் கேட்கும் கோலத்தை ஏன் கொள்ள வேண்டும் என்று கேட்டனரா? கேட்பரா? கோபாலரே குமுறுகிறாரே- மந்திரி என்ற பொறுப்பான நிலையில் இருப்பவர். இதற்குமேல் வெளிப்படை யாகப் பேசமுடியாது. முறையிடத்தான் முடியும். சற்று முடுக்காகப் பேசினால் `ஓ! நீயும் திராவிட நாடு கேட்கிறாயோ' என்று டில்லி சீறும். ஆகவே அமைச்சர் அதற்கு மேல் விளக்கமாகப் பேச முடியாது. வெளிப்படையாகக் கூறுகிறார். நாட்டுக்குத் தேவையான திட்டங்களை நிறை வேற்றப் பணம் இல்லை, பணம் பெறும் வசதி இல்லை. வரியிலே ருசியும் பசையும் உள்ளவகை டில்லிக்குப் போய்விடுகிறது என்று தெரிவிக் கிறார், ``நம்ம சர்க்கார்'' என்று பரிவு காட்டும் அன்பர்கள் என்ன செய்கிறார்கள்? ஏன் கூறக் கூடாது. எல்லாவகையான வரியும், மாகாணமே வசூலிக்கும், ஏனெனில் மாகாண சர்க்கார் ஆற்ற வேண்டிய கடமைகள் ஏராளமாக உள்ளன- வசூலித்தான பிறகு, மத்ய சர்க்காருக்கு நாட்டுப் பாதுகாப்பு பொறுப்புக்காக ஏற்படும் செலவுக்காக, எங்கள் மாகாணத்தின் நிலைமைக்குத் தகுந்தபடி

(கோட்டா) அளவு பணம் தருகிறோம், அதுதான் முறை என்று ஏன் கூறக்கூடாது? கூறுவரா?

இப்போது, `நம்மசர்க்கார்' மீது, எதிர்க் கட்சிக்காரர் ஏதேதோ குறை கூறுகிறார்கள் என்றெண்ணிக் கோபப்படும் நண்பர்கள், `நம்ம சர்க்கார்' வந்தும் நாடு சீர்படவில்லை. அதற்குக் காரணம் நம்மசர்க்காரிடம் பணம் போதுமான அளவு இல்லை, அதற்குக் காரணம், பெரும்பா லான பணம் டில்லிக்குப் போகிறது. டில்லியிலே இருந்து, பணம், வேட்டு, வெடிகுண்டாக, கவர்னர் ஜெனரல் சம்பளமாக, தூதுவர்களின் தர்பாருக் காகச் செலவாய் விடுகிறது என்ற உண்மைகளை உணரும் காலம் வரத்தான் போகிறது.

காட்டுக்கு அடங்க மறுக்கும் கானாறுகளை யும், காட்டு மிருகங்கள் உலவும் வயல் வெளி களையும், காலராவால் மடியும் கிராம வாசி களையும், பள்ளிக்கூடம் இல்லாத ஊர்களையும், பாதைகளால் தொடர்பு பெறாத சிற்றூர்களையும், வேலையற்ற மக்களையும், வைத்ய வசதியற்ற நிலைமையையும், காணக் களிப்பா பிறக்கும்! நம்ம சர்க்கார்தான், ஆனால் நாடு இப்படியா இருக்க வேண்டும், நியாயமா? என்று எண்ணாமலிருக்க முடியுயுமா? ஆலைகளில் எப்போதும் போல் முதலாளிகள் ஆட்சி செலுத்துவதையும் குடிசைகளில் வழக்கம் போல் பாட்டாளிகள் பதைத்துக் கிடப்பதையும், மிராசுதாரர்கள் எப்போதும் போல மின்னும் உடலுடன் இருப்பதையும், வயலோரத்தில் கஞ்சிக் கலயத்துடன் உழவன் காட்சி அளிப்பதை யும், காணக் காண, அவர்களின் மனம் என்ன இரும்பா கரையாமலிருக்க.

இந்தக் கஷ்டங்களைப் போக்காமல் ஏன் `நம்ம சர்க்கார்' காலத்தை ஓட்டுகிறது. என்று கடுங் கோபம் அவர்களுக்குப் பிறக்கத்தான் போகிறது. இப்போது யாராரின் கண்கள், நமது கழகக் கூட்டத்தின் மீது கற்களை வீசச் சுறுசுறுப்பாக வேலை செய்கின்றனவோ, அதே கண்கள், இத்தகைய காட்சிகளைக் கண்டு, கண்ணீர் உருக்கத்தான் போகின்றன. இதுவோ `நமது சர்க்கார்' என்று அவர்களும் பாபு புருஷோத்தம தாஸ்தாண்டன் போல கண்ணீர் சொரியத்தான் போகின்றனர். இப்போது நமது கழகத் தோழர் களின் உடலிலிருந்து ஒழுகும் இரத்தம் அடக்கு முறையாலும், காங்கிரஸ் நண்பர்கள் விளக்க மறியாது வீசும் கல்லடியாலும் ஒழுகும் இரத்தம், நாளை உண்மையை உணர்ந்து, `நம்ம சர்க்கார்' நமது பாசத்தை முதலாக வைத்துச் சிலர் இலாபச் சூதாட்டம் நடத்திய முறையாகவே முடிந்தது. நமது இன்பக் கனவு பலிக்காது போயிற்று, என்று மனம் நொந்து, அதே நண்பர்கள் சொரியப் போகும் கண்ணீருக்கு, முன் நீர் என்றே கருது கிறோம். நாம் இரத்தம் சொரிவோம் இன்று நமது காங்கிரஸ் நண்பர்கள் நாளை கண்ணீர் சொரிவர். சொல்லலங்காரத்துக்கு அல்ல, இதைத் தீட்டுவது.

``சுயராஜ்யம் என்றால், மக்களுக்கு ஏதே னும் நன்மை பயப்பதாக இருக்க வேண்டும். சர்க்கார் என்ன செய்தது என்பது பற்றிக் கூர்ந்து கவனித்து, மக்கள், இன்றில்லாவிட்டாலும், ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, கணக்குக் கேட்கத் தான் போகிறார்கள்'' என்று அமைச்சர் கோபால ரெட்டியாரே கூறுகிறார்.

ஆம்! கேட்கத்தான் போகிறார்கள்- இன்று `நம்ம சர்க்கார்' என்று பரிவுடன் பேசி, அந்தப் பரிவுக்குச் சான்றுகள் என்று எண்ணிக் கொண்டு, எதிர்க்கட்சிக்காரனின் மாநாட்டுப் பந்தைக் கொளுத்தியும், கண்ணைத் தோண்டியும், கை கால்களை ஒடித்தும் மண்டையைப் பிளந்தும், மட்டற்ற கொடுமைகளையும் நடாத்தி வரும் காங்கிரஸ் நண்பர்களே கேட்கத்தான் போகிறார் கள். அந்த நாள்தான், இந்த நாட்டு, நல்லாட்சிக்கு விடிவெள்ளி! அதுதோன்றும் என்பதிலே, நமக்குத் தளராத நம்பிக்கை இருக்கும் காரணத் தால்தான். `நம்ம சர்க்கார்' என்ற பாசத்துக்குப் பலியாகி பாசீசத்தை உற்பத்தி செய்துவிட வேண்டாம், நம்ம சர்க்காரின் அமைப்பு முறை, இலட்சணம், அதற்குள்ள திட்டம், திறமை, திட்டத்தை நிறைவேற்றுவதற்குள்ள வழிவகை, நம்ம சர்க்கார் என்று, டில்லியில் ஒன்று இருந்து கொண்டுள்ள முறை, அதற்கும் சென்னை சர்க்காருக்கும் உள்ள தொடர்பு, அதனால் வரும் விளைவுகள், ஆகியவை பற்றிச் சற்று சிந்தனை யைச் செலுத்துங்கள் என்று காங்கிரசிலுள்ள உண்மை உழைப்பாளர்களை, நேர்மையாளர் களை நல்லாட்சி கோருபவர்களை கேட்டுக் கொள்கிறோம். வாழ்க ஜனநாயகம்! வருக நல்லாட்சி!!

(திராவிட நாடு - 17.10.1948)