அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


நம்மோடு கலந்து விட்டார்!

நெஞ்சிலே நெருப்பு, கண்களில் நீர்த்துளிகள், கரத்திலே நடுக்கம், கருத்திலே திகைப்பு – இந்நிலையில் தமிழகத்துக்கு திராவிடச் சமுதாயத்துக்கு, பகுத்தறிவினருக்கு, ஈடுசெய்ய முடியாத இழப்பினை ஆறுதல் பெற முடியாத துயரத்தினைக் குறித்துத் தீட்டிட முனைகிறேன் – முடியாமல் திகைக்கிறேன்.

சுழலையும் சூறாவளியையும் கண்டு அஞ்சாது, கலங்கரை விளக்கொளிகண்டு உறுதியுடன் உற்சாகமூட்டிய வண்ணம், பாறைகளிலே மோதிடாவண்ணம் கலத்தைச் செலுத்திவரும், தலைவர், கலத்திலிருந்போர் இவர் தம் நெஞ்சுரம் நம்மைக் கரை கொண்டு சேர்க்கும். இவர் திறன் வெற்றிபுரிக்கு நம்மை வேளையில் இவர்போல் கலங்கா உள்ளமும் நெறி அறியும் நேர்த்தியும், அஞ்சாமையும், அயராமையும் கொண்டவர், வேறு எங்கே இருத்தல் இயலும் என்று கலித்திருப்போர், இறுமாந்து கூறிய வேளையில், கலத்தைச் செலுத்திச் செல்லும் காவலன், கண்களிலே ஒளி தோன்ற, கலத்திலிருப்போரை எல்லாம் ஒருமுறை பார்த்துவிட்டு, புன்னகை பூத்த முகத்துடன். கீழே வீழ்ந்து, பிணமானால், கலத்திலிருப்போர் என்ன நிலை பெறுவாரோ, அந்நிலை பெற்றனர் சுயமரியாதைக்காரர்கள். பட்டிவீரன்பட்டி பாண்டியனாரின் திடீர்மறைவு கேட்டு, எதிர்பாராத தாக்குதல் ஈடுசெய்ய முடியாத இழப்பு, துடைத்திட முடியாத் துயரம், ஆறுதுல் பெறமுடியாத் துக்கம் – நெஞ்சிலே எரிமலை, கண்களிலே அருவி, நமக்கெல்லாம்.

நண்பர்களே! திராவிடரே! பகுத்தறிவு இயக்கத் தோழர்கள்! பாண்டியனைப் பறிகொடுத்துவிட்டோம் . ஒளியை இழந்துவிட்டோம் – தலைவைனை இழந்துவிட்டோம்.

பாண்டியன் மறைந்தார் – பகுத்தறிவுச் சிங்கம் சாய்ந்தவிட்டது – தன்மான இயக்கத் தலைவர் இறந்துபட்டார் – திராவிட இயக்கச் செம்மல் மறைந்துவிட்டார்.

எந்தப் பாண்டியனைப் பற்றி எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும், நமக்கெல்லாம் புதியதோர் நெஞ்சுரம் பிறந்ததோ, எந்தப் பாண்டியனாரைக் கண்டவுடன் நமக்கெல்லாம் புதியதோர் வீர உணர்ச்சி கொழுந்துவிட்டதோ, எந்தப் பாண்டியனாரின் பண்புகள் எண்ணிடும் போதெல்லாம், பழுதுபட்ட குணத்தினர் வெட்க மடைந்தனதோ, எந்தப் பாண்டியனாரின் வீரதீரச் செயலைப் பற்றிக் கேள்விப்பட்டு, கூனன் நிமிரவும், குருடன் பார்வை பெறவும், கோழை வீரம் பெறவும் முடிந்ததோ, அந்தப் பாண்டியன் ஐயகோ! இறந்த போனார் – நம்டை, நாட்டை, நமது இயக்கத்தைத் துக்கத்தீ சுட்டுத் தள்ளுகிறது – அவர் மறைந்து போனார் துளியும் எதிர்பாராதபோது – எவருக்கும் ஆறுதல் கிடைக்க முடியாத நிலையில்.

ஆம்! பாண்டியன் மறைந்தார் – பெருமலை சாய்ந்தது.

மரணம் – செச்சே – எத்துணை கொடுமைக் கணைகளை ஏவும் இயந்திரம் இது – இதன் பொறியில் சிக்காமலிருக்க இயலாது, எவரும் – எனினும் எத்துணை எத்துணை இதயப் புண் ஏற்பட்டு விடுகிறது. இந்தக் கொடுமை மிக்க பொறியினால்.

தவிர்க்க முடியாததும், அகற்ற முடியாததும், என்றேனும் ஓர்நாள் முடியுடைவேந்தனையும் சடை அணிவோனையும், எவரையும் தீண்டித் தீர்த்துவிடும் பொறிதான் இது – புரிகிறது – விளக்கம் அறிய முடிகிறது – எனினும், எனினும்.

முடிவிலோர் பிடி சாம்பலாவர் – பாடுகிறார்கள், கேட்டிருக்கிறோம் – புரியத்தான் செய்கிறது – எனினும் எனினும்.

அழுது அழுது புரண்டாலும், மாண்டார் வாரார் – உண்மை மிக மிகச் சாமான்யர்களுக்கும் எளிதாகப் புரியக்கூடிய உண்மைதான் – எனினும், எனினும் நெஞ்சிலே புகுந்து விடும் நெருப்பு அணைய மறுக்கிறது – அதிலும் பாண்டியனாருக்கு ஏற்பட்ட மரணமோ, இன்ற, அல்லது நாளை, காலை அல்லது இரவு, ஈளை, இல்லை, இருமல், இழுப்பு கூடவே வலிப்பு என்று குறிபற்றிய பேச்சும், கூடிக் கூடி உசாவுவதுமான நிலைக்குப் பிறகு ஏற்பட்டதா! அந்தோ! இல்லை, இல்லை! மரணப்படுக்கையில் அந்த மாவீரன் நாள் பல படுத்துக்கிடந்தவரல்ல. மரணத்தின் பிடியில் சிக்கிவிட்டார். இனித் தப்புவதற்கில்லை என்றும் பலரும் பேசிக்கொள்ளும் விதமான நிலைக்குப் பிறகு அல்ல, அவர் இறந்த பட்டது – அழகொளி வீசி வந்த திருவிளக்கை, மந்தியொனறு திடீரெனத் தாவிச் சென்று அணைத்திடுவது போல மரணம் அவரைத் தொட்டுவிட்டது – கொட்டிவிட்டது. எங்ஙனம் மனம் ஆறுதல் பெற இயலும், எவரால் இயலும்!

பத்து நிமிடங்களில் வந்துவிடுவார் – அறிவகத்தைக் கண்டு அகமகிழ்வார் – உழைத்திடும் உத்தமரல்லவா அவர், எனவே நமது உழைப்பின் உருவம் கண்டு உளம் களிப்பார் தோட்டம் சென்று காண்பார், கூடத்தில் உலவுவார், மாடி சென்று மகிழ்வார், ஆடிடும் கொடியினைக்கண்டு களிப்பார், பெருமையோடு நம்மைப் பார்த்துப் புன்னகை புரிவார், பூரிப்புடன் அவருடன் உரையாடப் போகிறோம், இதோ, இன்னும் சிறிதுநேரத்தில், என்று எண்ணியபடி, நானும் நண்பர் நெடுஞ்செழியனும், வில்லாளனும் ஜனவரித் திங்கள் பதினாறாம் நாள், பிற்பகல், சென்னையில் நமதியக்கப் பணிமனையில், அறிவகத்தில், அவர் வரவு நோக்கிக் காத்திருந்தோம் – அவர் அதுபோதுதான், நெஞ்சுவலியால் தாக்குண்டு மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டார், என்ற செய்தியை இரண்டுநாள் கழித்தே அறிந்தோம் – வருந்தினோம். கவலைப்படக் காரணமில்லை கலக்கமூட்டும் நிலை இல்லை என்றும், சில, நாட்கள் ஓய்வு மட்டும் தேவை என்றம், மகிழ்வூட்டும் செய்தி கிடைத்தது. மறத் தமிழனின் மரண ஓலையைப் பிறகு கண்டோம். மனம் உடையாமலிருக்க முடியுமா? எத்துணை திடீர் தாக்குதல்! எத்தகைய பெரும் இழப்பு.

கண்டோர் வியக்கம் உடற்கட்டு, கடும் உழைப்புக்கு ஈடுகொடுக்கும் வலிவு, எவ்வளவு பெரிய இடுக்கணையும் கண்டு கலங்காத திடமனம் – இவையல்லவா, பாண்டியன் – இந்தப் பாண்டியனா, படுத்தார் இறந்துபட்டார் என்ற திடீர் மரணச் செய்திக்கு இருப்பிடமாகக் கூடியவர்? அதோ தெரிகிறதே அந்த வீர உருவம் – அந்தப் புன்னகை – கனிவு – கண்களிலே கனிவு – தெரிகிறது. அவர் மறைந்துவிட்டார். இறந்து பட்டார் என்றால், மனம் பாடுபடத்தானே செய்யும்.

தாழ்ந்து கிடந்து தமிழகத்துக்கு, மறைந்த மாவீரன் ஆற்றிய பணிகளின் அட்டவணை பெரியது, தன்மை மிக உயர்தரமானது.

முப்பதாண்டுகளுக்கு மேலாக அந்த முடிசூடா மன்னன், மாற்றாருககப் புயலாகவும், நண்பர்களுக்குத் தென்றலாகவும், உழைப்பாளிகளுக்கு உறுதுணையாகவும், எத்தர்களுக்கு எதிரியாகவும் இருந்தாற்றிய அரும்பணியினால் சமுதாயம் புதியதோர் பொலிவு பெற்றது. அவர் உரைகேட்டு மட்டும் அல்ல அவர் செயல்கண்டு எண்ணற்ற இளைஞர்கள், அவரைத் தங்கள் தலைவர் என்று மகிழ்வுடன் கொண்டனர். பாண்டிய மண்டலத்திலேயே மிக மிக அதிகமாகவும், பிற மண்டலங்களிலே, குறிப்பிடத்தக்க பெரும் அளவுக்கும், மாவீரன், பரணிபாடி தரணி ஆண்ட தமிழன் அடைந்திருக்கும் தாழ்நிலையினை எடுத்துக்கூறி, தன்மானத்தின் மேம்பாட்டினை அறிவுறுத்தி வந்தார். அவர் வருகிறார் ஓர் நகருக்கு என்றால், இயக்கம் புது முறுக்கு அடைந்துவிட்டது என்று பொருள். அத்துணை அருமையான தொண்டாற்றி வந்தார். மக்களின் மனப்போக்கு மாறுதலடைவது கண்டு மகிழ்ந்தார், அறிவு மணம் கமழக் கண்டார். ஆற்றலுக்குத் தக்க பலன் பூத்திடக் கண்டார், பூரிப்படைந்தார் – மனதிலே மேலும் பல திட்டங்கள் வகுத்துக் கொண்டிருந்தார், மேலும் நாட்டுப் பணியாற்ற, அவருடைய அறிவாற்றலைத் திராவிடர் பெற இருந்தனர் புதியதோர் வேகத்துடனும் அளவுடனும், அத்தகைய வேளையிலே, மறைந்துபட்டார் – திராவிடச் சமுதாயம் மிகப் பெரிய வாய்ப்பை இழந்துவிட்டது.

செல்வக் குடிப்பிறந்த பாண்டியன், காடுகளைக் கழனிகளாக்கி கட்டாந்தரைகளைப் பூந்தோட்டமாக்கி, பாம்பு புரளுமிடத்தையும், புலிக்குகை உள்ள மலையையும், தித்திக்கம் கனி குலுங்கும் பண்ணைகளாக்கிய பெரும் உழவர், மிகக் கடுமையான உழைப்பைக் களிப்போடு ஏற்று நடத்தி, வேளாண்மை எனும் பண்புள்ள சொல்லுக்கு இலக்கியமாக விளங்கி வந்தார். வீரத்தலைவனை அல்லவா நாம் இழந்து விட்டோம்.

தமிழகத்திலே, பெரியார், சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கினார், மக்களிடையே புதியதோர் விழிப்பு மலர்ந்தது. யாருடைய பிரச்சாரத் திறனும் ஓயா உழைப்பும், உயர்தரமான அறிவாற்றலும், தமக்குப் பயன்படுமென்று அரசியல் சூதாடிகள் எண்ணி வரவேற்று, உபசரித்து, முகமகன் கூறி, முறுவல் காட்டினரோ அந்தப் பெரியார், அரசியல் சூதாடிகளுக்கு அல்ல என் உழைப்பு, மக்களைச் சுயமரியாதைக்காரர் களாக்கவே, ஜாதிக் கொடுமைகளைத் தாக்கவே, மத மடைமைகளை அழிக்கவே பயன்படும் என்று கூறினார். சுயமரியாதை இயக்கம் துளிர்த்தது. சூது மதியினர் மிரண்டனர், மட அதிபர்கள் மிரட்டினர், பணம் படைத்தோர் பதைத்தனர், புராண மேதைகள், பூசுரத் தவைர்கள் புருவங்களை நெறித்தனர், யாரார் பெரியாருடைய பேராற்றல் தமக்குப் பயன்படும் என்ற ஆசை கொண்டனரோ, அவர்களெல்லாம் அரசியல் சூதாடிகளெல்லாம், எதிர்பாளராயினர், அத்தகைய சூழ்நிலையில் பட்டிவீரன்பட்டி பாண்டியனர்ர், பெரியார் பக்கம் நின்றார்! அவர் விரும்பியிருந்தால் மாளிகையிலே ‘மந்தகாச‘ வாழ்வு நடத்திக் கொண்டிருந்திருக்கலாம் – ஆனால், அவர், கல்வீச்சும், அதைவிடக் கடுமையான சொல் வீச்சும் மிகுந்திருந்த சுயமரியாதை இயக்கத்தில் புகுந்தார் – உற்சாகத்தோடு, எணபலம் படைத்தவர்களின் பகைக்கு நடுவே சிக்கிக் கொண்ட சுயமரியாதை இயக்கம்எங்கே தப்பிப் பிழைக்கப் போகிறது என்ற அச்சம் சூழ்ந்திருந்த வேளையில், பாண்டியன் பரணி பாடினார். வேடதாரிகளை விரட்டினார், சனாதனத்தைச் சாடினார். சீறிப் போரிட்டார். பெரியாரின் பக்கம் நின்று சுயமரியாதை இயக்கம் வேரூன்ற பாண்டியனாரின் பெரும் உழைப்பு பயன்பட்ட வகையினை எண்ணும்போது – அந்தோ – எவ்வளவு பெரியதுணையை இழந்துவிட்டோம் என்ற எண்ணம் நெஞ்சைத் துளைக்கிறது.

எங்கே எதிர்ப்பு அதிகமோ, எங்கே கனதனவான்களும், கனபாடிகளும் ஒரே முகாம் அமைத்து பகுத்தறிவு இயக்கத்தின் மீது காலித்தனத்தை ஏவினரோ, எங்கே கொலை செய்யவும் துணியும் கொடியவர்கள் கோவிந்த நாம சங்கீர்த்தனக் கும்பலுக்காகப் பரிந்து பேச நம்மைக் கண்டபடி ஏசக்கூடுவரோ, அங்கெல்லாம் பாண்டியன் வருவார், புன்னகை தருவார், வீரம் அரசோச்சும், வெற்றி, மாலை சூட்டும், பகுத்தறிவு பவனி வரும்.

“பயலைச் சுட்டுத் தள்ளி விடலாம் – ஆனால் பாண்டியன் வந்து தொலைந்தானே – என் செய்வது....“ என்று பேசி நழுவாத அரசியல் அக்ரமக்காரன் கிடையாது, பாண்டிய மண்டலத்தில்

“கொடி மரம் நாட்டக் கூடாதாம் – கொடுவாள் தூக்கிக் கொக்கரிக்கிறார்கள்“

“யார்? ஏன்? எப்போது?“

“ஊர் பெரியதனக்காரர்? கூட்டம் போட்டோம், கடந்த ஞாயிறு.“

“சரி“, அடுத்த ஞாயிறு கூட்டம் நான் வருகிறேன். அஞ்சாமல், அமைதியாக இருங்கள்“

பாண்டியனாருக்கம் சுயமரியாதை இயக்க துவக்க காலத்தோழருக்கும் இதுபோல் உரையாடல் நடைபெறும் அடுத்த ஞாயிறு, கொடி கம்பீரமாகப் பறக்கும், கூட்டம் சிறப்புற நடைபெறும். பாண்டியன் நமது பாதுகாவலர். சுயமரியாதை இயக்கத்தின் படைத்தலைவர்! அவருடைய சொல்லே, முரசு! அவருடைய கண்ணொளியே, எதிரியைத் துளைக்கும் கணை! அத்தகைய வீரப்பணிபுரிந்தவர், பாண்டியன் நாம் மறந்துகூடப் போயிருப்போம் பலப்பல சம்பவங்களை, சுயமரியாதை இயக்கத்தின் பகைவர்கள், மறந்திட முடியாது. அந்த மாவீரன், சுயமரியாதை இயக்கத்தை அவ்வளவு ஆற்றலுடன் கட்டிக்காத்து வந்தார்.

பணம் அவர் காலடியில் குவிந்தது – ஆனால் படாடோபம் அவரைக் கண்டு உறவாடப் பயந்தது.

ஆற்றல் அவரிடம் நிரம்ப இருந்தது. ஆனால் ஆதிக்கமோகம் அவரை அண்ட அஞ்சியது.

செல்வமும் செல்வாக்கும் அவருக்கு ஏராளம், செருக்கு அவரைத் தீண்டியதில்லை.

பண்புகளின் பெட்டகமாய் விளங்கிவந்தார்.

ஏழையின் கண்ணீரைக் காணச் சகியாத உளம் படைத்தவர்.

செல்வரின் செருக்கைக் கண்டால் சினம் கொள்ளும் வீரர்.

உழைப்போர் உடனிருப்பதில் உவகை கொண்டவர்.

உல்லாசபுரியினரின் தொடர்பு அவருக்கு எட்டி.

அவர், நாம் யாரும் அடையமுடியாத செல்வத்தைப் பெற்றிருந்தார், ஆனால் நம்மோடு இருப்பதையே பெருமை என்று கொண்டார்.

எவ்வளவு கனிவுடன், கொஞ்சுமொழியில் கூறுவார், “நமது பிள்ளைகள்“ என்று! அதைக் கூறும்போது அவருடைய அகமலர்ச்சியை அழகுற முகப்பொலிவு எடுத்துக காட்டுமே! அந்த ஓவியத்தை அல்லவா, மரணம் அழித்து விட்டது.

இயக்க ஊழியர்களிடம் அவர் காட்டிய பரிவு, எவ்வளவு!

வறுமைத் தேள் கொட்டினால், மருந்திடுவர்ர்.

உழைப்பால் உடல் நலிந்தால், அன்பு மொழியாலும் ஆதரவாலும் மருத்துவ உதவிக்கு வழிதேடியும், தேற்றுவார்.

சலிப்பு கொண்டவர்களுக்கு உற்சாகமூட்டுவார். சந்தர்ப்பவாதிகளை விரட்டுவார் – ஒன்றல்ல இரண்டல்ல அவராற்றிய அரும்பணிகள்.

நான் பொது வாழ்க்கையில் ஈடுபட்ட நாள் தொட்டு, என் மனதை வெகுவாகக் கவர்ந்தவர் பாண்டியனார்.

அச்சமற்று அவரிடம் பழகுவேன், பேசுவேன், யோசனைகள் கூறுவேன், கடிந்து கொண்டுமிருக்கிறேன், ஆனால் எப்போதும் அவரைக் கண்டால் தனியானதோர் மகிழ்ச்சி, காணாதபோதும் எண்ணி எண்ணி மகிழ்வதுண்டு.

ஆபத்து, இடுக்கண் பகை – இவைபற்றிய ‘சேதி‘ கிடைக்கம் போதெல்லாம் ‘பாண்டியன்‘ என்று எண்ணிக் கொள்வோம் – பயம் போய் விடும் அவ்வளவு நெஞ்சுரம் தரும் சொல் – பாண்டியன் என்ற பெயர்! அவ்வளவு ஆற்றலுக்க உறைவிடம், அவர் அவ்வளவு எளிதில் அவர் உதவியைப் பெற முடியும் தொண்டர்கள் அண்ணாந்து பார்த்தாலும் அவர்களின் கண்ணுக்குத் தெரியாத உயரத்திலே தாவிச்சென்று கோலாகலமாகக் கொலுவீற்றிருக்கும் தலைவர்கள் நிரம்பியிருந்த நாள் அது. அந்த நாட்களிலே, எங்களுக்கெல்லாம் கிடைத்த ‘தோழர்‘ சௌந்தபாண்டியன் அவரை இழந்துவிடுவதென்றால்....“

சேலம் நமக்கும் பாண்டியனாருக்கும் இருந்து வந்த ‘தொடர்பை‘ ஓரளவுக்கு வெட்டிவிட்டது, என்பதுதான் அனைவரும் அறிவர் – ஆனால், அந்தத் ‘தொடர்பு‘ கெடக்கூடாது என்பதற்காக அவர் எவ்வளவு பாடுபட்டார் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.

அவர் அதுபோது மதுரை மாவட்ட ஆட்சி மன்றத் தலைவர்.

திறம்பட நிர்வாகம் நடத்திய அனுபவமும் உள்ளவர்.

சட்டசபையிலே இருந்து, சட்ட நுணுக்க அனுபவமும் பெற்றவர்.

தன்னலமற்றவர், எனவே அவருடைய அரும்பணி மக்களுக்கு நேர்மையான நிர்வாகத்தைத் தந்து வந்தது.

சுயமரியாதை இயக்கத்திலே தளராது பற்றுகொண்டவர்கள், நிர்வாக இடங்களிலே அதிகம்பேர் கிடையாது – அதிகம் பேர்களா – விரல்விட்டுக்கூட எண்ண முடியாது! பாண்டியன் ஒருவர்தான் இருந்துவந்தார்.

சேலம் – பதவிகளை நம்மவர்கள் விட்டுவிட வேண்டும் என்ற திட்டம் உருவான இடம்.

தீர்மானம் தீட்டினவன், நான் – பத்திரிகையில் குறிப்பு வெளியிட்டேன் – மாநாட்டுக்கு முன்பே!

“அன்புள்ள அண்ணாத்துரை, பத்திரிகையில் உன்னுடைய வெடிகுண்டு பார்த்தேன் நான் தயார்“ என்று கடிதம் விடுத்தார், அந்தக் கொள்கை வழுவாக் கோமான்.

அதுமட்டுமல்ல! இயக்கத்திலே பலர் அறியார், பிறகு நடந்ததை, பதவியை விட்டுவிடத் துணிந்தர். “ராஜிநாமா“க் கடிதமே எழுதி, எனக்கே அதை அனுப்பி, சர்க்காருக்கு அனுப்பி விடவும் அனுமதி தந்தார்! ஆக, அவர் பதவியைத் துறக்க மனமின்றி, இயக்கத் தொடர்பை வெட்டிக் கொண்டு விட்டார், என்று எவரேனும் எண்ணினால், அவர்கள் முழு உண்மை தெரியாதவர்கள் என்றே பொருள், “ராஜிநாமாவை“ அமுலுக்குக் கொண்டுவருவதற்குள், கட்சியின் நடைமுறைகளுக்கான சில நிபந்தனைகளை அவர் விதித்திருந்தார் – யார் மீதும் குற்றம் கூறுவதல்ல இது – அப்போது அந்த நிபந்தனைகள் செயலாக முடியவில்லை, பிறகே “ராஜிநாமா“ நடைபெறவில்லை. அவரும், தொடர்பைத் தளர்த்திக் கொள்ள நேரிட்டது.

இயக்கத்திலே இரண்டறக் கலந்திருந்த பாண்டியனார் சில ஆண்டுகள் இங்ஙனம் ஒதுங்கினார், என்றாலும் திராவிட முன்னேற்றக்கழகம், நல்ல அமைப்பு முறையுடன் மலர்ந்ததும், மனமுவந்து வரவேற்றதுடன், ஓராண்டுக்கு முன்பே, உறுப்பினராகவும், சேர்ந்து, பணிபுரியத் தொடங்கினார் – பூரித்துக் கிடந்தேன் – திராவிடச் சமுதாயம் தேம்பித் தவிக்கத் தவிக்க, நமக்குக் கிடைக்க இருந்த கருவூலத்தை இழந்து விட்டோம்.

சில திங்களுக்கு முன்னம், மதுரையில் நடைபெற்ற மாபெருங் கூட்டத்தில் பாண்டியனார் தலைமை தாங்கிய காட்சி கண்முன் நிற்கிறது, பேசிய வீர உரை காதிலே ஒலிக்கிறது. ஆனால், அந்தோ! அவர் இறந்துபட்டார் – மறைந்த போனார். என்செய்வது! எதை எண்ணுவது, எதை மறப்பது ஆறுதல் பெற வழிதான் எது?

ஒரே ஒரு வழி உண்டு – ஆறதல் பெற மன புண்ணைப் போக்கிக் கொள்ள அவர் இறந்தார், இறந்துபட்டார் என்பதை இனி மறப்போம் – அவர் இறந்தார், என்பதல்ல இனி நாம் கூறவேண்டிய பேச்ச . அவர் நம்மோடு கலந்துவிட்டார். அவருடைய பண்புகளை ஆற்றலை, அறிவுத் திறனை, நமக்குத்தான் அளித்துச் சென்றிருக்கிறார் – எனவே, அவர் நம்மோடு கலந்துவிட்டார் என்றே கொள்ளவேண்டும். அவர் காட்டிய பாதையில் நாம் நடந்த செல்லுவதும், நம்மைப் பிறர்பார்த்து “இவர்கள் அந்தப் பாண்டியன் படையினர்“ என்று கூறுவதும்தான், நாம் செய்ய வேண்டியக் கடமை.

நமது செயல்மூலம் அவர் நம்மோடு இருக்கிறார் என்பதை எடுத்துக் காட்ட வாரீர் என்ற, அழைக்கிறேன். கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கடமையாற்ற வாருங்கள் என்று அழைக்கிறேன்.

பாண்டியனை இழந்து தவிக்கும் அவர் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தைச் செலுத்துகிறேன் – இயக்கம் செலுத்துகிறது.

ஒப்பற்ற பாண்டியனாரின் குடும்பம், சுயமரியாதை உலகின் எழிலோவியம் பாண்டியனாரின் பண்புகளை அந்தக் குடும்பம் தொடர்ந்து இயக்கத்துக்கு அளித்துவரும் என்று நம்புகிறேன்.

நாமும், மாவீரனின் பண்புகளைச் செல்வமாகக் கொண்டு, வழி நடப்போம், பகை முடிப்போம் திராவிடம் காண்போம் – என்று சூளுரை கூறிக்கொள்வோம், கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கூறுவோம் நாட்டினருக்கு, “பாண்டியன் படைவரிசை இதோ! பெரியதோர் இழப்புக்குப் பிறகு, தாங்கொணாத் துயரைத் தாங்கிக் கொண்டு, அவர் செய்து வந்த அரும்பணியினைத் தொடர்ந்து செய்யும் படை இதோ!“என்று கூறுவோம் வாரீர்.

பாண்டியன் மறைந்தான் – மன்னிக்கவும் – பாண்டியன் நம்மோடு கலந்து விட்டார்.

அண்ணாதுரை

திராவிட நாடு – 8-3-53