அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


நன்னிலம் நண்பருக்கு!

“ஐயா ஒரு சேதி கேளும்” என்ற தோரணையிலே, நன்னிலம் நண்பரொருவர், நமக்கோர் நிருபம் தீட்டியுள்ளார், நொந்தமனதை ஆற்றிக் கொள்ளவோ, புதிய பந்தம் ஏற்படுத்திக்கொள்ளவோ, சாகச சந்தமாக இருக்கட்டும் என்றோ - காரணம் யாதோ நானறியேன், அவருடைய கடிதத்திற்கு! நட்புமுறைகூறி நமக்குவரும் கடிதங்கள் சிலவே, சாப ஓலைகளே அதிகம்; முதல் ரகம் நமக்குச் சஞ்சலத்தைத்தரும், இரண்டாவது ரகம், நமக்குச் சிரிப்பையும், நமது கூடைக்குப் பாரதத்தையும் தருவதே வாடிக்கை. நன்னிலம் நண்பரின் கடிதம், முதல் ரகத்தது. எழுதும்போது அவர் முகத்தை எவ்வளவு சுளித்துக்கொண்டிருந்திருக்க வேண்டும், கடிதத்தை எழுதி முடித்ததும், சுமையைக் கீழே இறக்கியவனுக்குண்டாகும் திருப்தி அவருக்கு எவ்வளவு இருந்திருக்க வேண்டும், என்பது, அவருடைய கடிதத்தினால் ஒருவாறு தெரிகிறது புண்பட்ட அவர் மனதுக்கு, எனது இந்தப் பதில், மருந்து! ஆனால், காரமாகத்தான் இருக்கும், புண்ணுக்குப் புனுகு தடவிடும் போலி வைத்யனல்லன் நான்; புண் தீரவே மருந்திடுவேன், கொஞ்சம் எரிச்சலாகத்தான் இருக்கும், பொறுத்தால் புண் ஆறும், இல்லையேல் புடம் வைத்துவிடும், பிறகு அறுப்பு முறை தேடவேண்டி நேரிடும்!

நன்னிலம் தோழர் ஒருவரின் கடிதத்துக்குப்பதில் எழுதி, நாட்டவரின் நேரத்தை வீணாக்குவதா என்று நேயர்கள் கேட்பர். கடிதம் எழுதியவர் யாரென்பதே எனக்குத் தெரியாது; ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லாதே என்ற யூகம் உணர்ந்த ஒரு பார்ப்பனர், விடுத்த லிகிதம் அது. என்றாலும், பொதுவாக, நமது இயக்க வேகத்தைக்கண்டு இடர்ப்படும் கூட்டத்தின் பிரதிநிதி
போல, வெள்ளைக்கொடி ஏந்திவந்து வெஞ்சமர் வேண்டாம் என்று பேசிடும் தூதர்போல அந்த நன்னில நண்பர் நமக்குக் கடிதம் தீட்டியதால், அவருக்கென்று கூறுவது, அனைவருக்கும் பயன்படட்டுமே என்றெண்ணிக், கிழமை இதழிலே பொறித்திட அனுமதி பெற்றேன்.

“அப்பனே! இந்தக் கட்டைக்கு ஒரு வெள்ளியால் அடித்த வட்டம் தருவாயா?” என்று பரதேசி கேட்டான், குடும்பக்கடலிலே விழுந்து, வறுமை எனும் சூழலிலே சிக்கி வதையும், கிராமத்தானிடம்.

“ஸ்வாமி! தாங்கள் காலால் இடும் வேலையை அடியேன் தலையால் செய்யச் சித்தம். தங்கள் வார்த்தையே எனக்கு வேதம்” என்று கிராமவாசி கூறுகிறான்.

“அப்பா! இந்த நாயிடம் இவ்வளவு அன்பு ஏன் எழுந்தது? எங்கே, பார்ப்போம், உன் அன்புக்கு ஒரு சோதனை! உன் மேலங்கியை எனக்குக் கொடு” என்று, பணத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு பரதேசி கேட்கிறான்.

“மேலங்கி ஒரு பிரமாதமா? இதோ தந்தேன்” என்று கிராமவாசி, தானம் செய்கிறான்.

“மெச்சினேன் உன் பக்தியை! அப்பனே! இந்தப் பரதேசி, பத்துப் பரதேசிகளுக்குச் சோறிட எண்ணுகிறான். அதற்கான பணத்தை உன்னிடம் கேட்கிறான்” என்று பற்றற்றவர் கேட்கிறார். பழைய நெல்லை, ஒன்றுக்குப் பாதி விலையாக விற்றுப் பரதேசிக்குப் பணம் தருகிறான் பாட்டாளித்தோழன். பிறகு, மடம், தோட்டம்; தோட்டத்திலே ஒரு கேணி; கேணியிலே நீர் சேந்த ஒரு விதவை! அவளுக்கு நாளாவட்டத்திலே கரு!!

இந்தக் கட்டைக்கு, இந்த நாய்க்கு, இந்தப் பரதேசிக்கு - என்று பேசிய தடியன், கிராமவாசியை ஏய்த்து, இடமும் மடமும் பெற்று, விதவையின் விருந்தை விலாப்புடைக்கத் தின்று, கரு தோன்றியதும், ஊர்ப்பகை உண்டாவது கண்டு, ஆடெடுத்த தென்புலியூர் அம்பலவா என்று பாடிக்கொண்டு ஓடெடுத்து ஓடிவிடுவான், ஊரைவிட்டு. பல கிராமங்களிலே, பரதேசிக் கோலம் இதுபோலான துண்டு. முதலிலே, அந்தப் பரதேசி, கட்டை என்றும் நாய் என்றும், பரதேசி என்றும் தன்னைத்தான் கூறிக்கொண்டது, தன்னை மறந்த நிலை என்றோ, தத்துவார்த்த விசேடமென்றோ, பணிவென்றோ பகவத்பாச மென்றோ எண்ணிடும் ஏமாளிகளிடம், அடித்த வரையிலே இலாபம், என்பதற்காகத்தான். வஞ்சக வாழ்வுக்கு இஃதோர் வழி! வளைந்து வதைப்பது! ஒளிந்து தாக்குவது! பதுங்கிப்பாய்வது! வருகிறேன் பார், உன்னை விடுகிறேனா பார், என்று முழக்கமிட்டுக் கொண்டா நாகம் வருகிறது! பசும்புற்றரையிலே, பாடிக்கொண்டே நடந்துசெல்லும் வழிப்போக்கனை, பையப் பையப் பாதையிலே சென்று, நச்சு நாவால் தீண்டி நாசத்தை ஊட்டுகிறது. அதுபோல, வேதாந்த முகமூடி அணிந்தோ, சித்தாந்த சேலையால் தம்மை மறைத்துக்கொண்டோ, கயவர், கருத்தில் எளியோரைக் கவிழ்ப்பதுண்டு. அவர்களின் அபிநயத்தை உணராதார், அவர்களிடம் சிக்கிச் சிதைவர்.

மற்றொரு சாரார், மனது மருண்டிடும் விதமாகப் பேசுவர், மயக்கமொழியன்று, மலையதிரும் மொழி பேசுவர்! “இவர், வேங்கையின் வாலைப்பிடித்திழுத்துத் தூக்கி அதனைக் கரகரவெனச் சுற்றிக்கீழே அடிப்பார்; கீழே விழுந்த வேங்கையோ, இவர் காலடி பணியும்; பாம்புகளைப் பிடிப்பார் பல்லியிடம் கொடுத்துத் தின்றிடச் சொல்வார்; ஆடுகளை ஏவி, ஓநாயை விரட்டுவார்; ஆமையை அசுவத்துடன் பந்தயம் விடுவார், ஆமையே வெல்லும், மண்ணை மணியாக்குவார்; மணியை மண்ணாக்குவார்; மாங்கனி யைத் தென்னையில் காட்டுவார், தேங்காயைத் தெருப் புழுதியிலே முளைத்திடச் செய்வார்; கபோதியைக் காண வைப்பார்; கண்ணுள்ள இடத்திலே புண்வரச் செய்வார்” - என்று பேசிக், கேட்பவர் மனதை மருட்டிக், கபடத்தைத் தெரிந்து கொள்ளா மக்களிடம் காசு பறிப்பர். புலி வேடமிட்டு வாழும் நரிக்கூட்டம் இது! ஆர்ப்பரித்து ஆளை வெல்லும் தந்திரம்! வயிறு வளர்க்கக் கண்ணை உருட்டிடும் கடையர், இச்சாரார். இருசாராரும் சமுதாய இழுக்கை வளர்க்கும் சழக்கரே. ஆனால் இருவரின் போர்முறை வேறு, வேறு; நோக்கமும் விளைவும் ஒன்றேதான்!

“பிடிசாபம்” என்று முனிவுடன் மொழியும் முனிவரும், “தருவேன் வரம்” என்று பேசும் தபோதனரும், சேர்ந்தே, அந்தக்கால அரச குடும்பங்களை அலைய வைத்தனர்; செல்வத்தை அரித்தனர்!! பசுத்தோல் போர்த்திய புலியானாலும், புலித்தோலில் உலவும் பசுவானாலும், கேடு விளையத்தானே செய்யும். புலியன்று, பசு என்று எண்ணி அருகே சென்றாலும் ஆள் அழிய வேண்டும். புலி, பசுவன்று என்று பயந்து அருகே செல்ல அஞ்சினாலோ, பயிரை மேய்ந்து, அழித்துவிடும்!

நன்னிலம் நண்பரின் நிருபத்திற்கும், நாசச்செயல் புரியும் நீசர்களின் வேடமுறை விளக்கத்திற்கும் என்ன சம்பந்தம், என்று கேட்கவே, உங்கள் மனம் தூண்டும். சம்பந்தமில்லாமல் நான் இதனைச் சொல்வேனா? சற்றுப் பொறுங்கள் தோழர்களே! சற்றுப் பொறுமையாக இருங்கள்.

பார்ப்பனியத்தால் விளையும் பாதகங்களை, அது மக்களின் சுகவாழ்வுக்கு ஊறு தேடுவதை, அறிவைப் பாழாக்குவதை, அநாகரிகத்தை வளர்ப்பதை, நான் எழுதி வருகிறேன். தன்னுணர்வு இயக்கம், பார்ப்பனிய ஒழிப்பு வேலையைச் சலிப்புக்களைப்பு இன்றி, சாகசத்துக்குச் சாயாமல் சமருக்கு அஞ்சாமல், செய்து வருகிறது. இதனைத் தடுக்க, இயக்கத்தை அடக்க, மறத் தமிழரின் போக்கை மடக்கப், புது அறிவு பரவுவதை ஒடுக்கக், கையாளப்படும் முறைகள் இரண்டுவிதம். பஞ்சப் பாட்டுப் பாடிடும் பரதேசி முறை ஒன்று, பயங்காட்டிடும் வேஷமுறை மற்றொன்று. “இந்தக் கட்டையிடம் கொஞ்சம் இரக்கம் காட்டு அப்பனே” என்று பேசிடும் முறை ஒன்று; “இவரை சாமான்யமாக எண்ணிடாதே, எரித்துச் சாம்பலாக்கி விடுவார் உன்னை” என்று மிரட்டுமுறை மற்றொன்று. இருமுறைகளும், ஒரே நோக்கங்கொண்டது; எப்படியேனும் பார்ப்பனியத்துக்கு உண்டாகும் எதிர்ப்பை நிறுத்திவிட வேண்டும் என்பதுதான். நாசுக்காகப் பேசிப்பார்ப்பதும் அதற்குத்தான், நறநறவெனப் பற்களைக் கடிப்பதும் அதற்குத்தான், புலம்லும் அதற்கே, புகை கிளம்பப் பேசுவதும் அதற்கேதான்! குழைவதும் அதற்கே, கொக்கரிப்பதும் அதற்கே, கண் சிமிட்டுவதாலேயே காதல் போலும் என்று ஏமாறுவதும் ஆபத்து, கரத்தை நீட்டுவதாலேயே காதல் போலும் என்று ஏமாறுவதும் ஆபத்து, கரத்தை நீட்டுவதாலேயே அடித்து விடுவானோ என்று அஞ்சுவதும் மடைமை! முறை மாறினாலும், நோக்கம் நிறைவேற்றவே முறையிலே மாற்றமிருக்கிறது என்று தெரிந்து கொண்டால், தமிழருக்குக் குறை ஏதும் வாராது! முறையைக் கண்டு மயங்கினாலோ, மருண்டாலோ, வந்தது விபத்து!! நமது நன்னில நண்பர், முதல் முறையை, பஞ்சப் பாட்டுப் பாடிடும் பரதேசி முறையை, இந்தக் கட்டைக்கு ஏதேனும் தரலாகாதா என்று பேசும் முறையைப், புலம்பும் முறையைக் கையாள்கிறார், என்பது அவருடைய கடிதத்திலே தெரியக்கிடக்கிறது.

“ஏனய்யா, எங்களைத் தூஷிக்கிறீர்கள்? என்ன தவறு செய்தோம்? இப்படி ஏன் வீண் துவேஷத்தை மூட்டுகிறீர்? நாம் யாவரும் சகோதரர்களல்லவா? ஒருவரை ஒருவர் பகைத்துக் கொள்வதா?” - என்று கேட்கிறார், நன்னிலத்து நண்பர்.

“மஹாபாவிகளே! ஏண்டா இப்படி அழிந்துபோறேன்? நீங்க நாசமாய்ப்போக, எங்க உசிரை ஏண்டா இப்படி வாங்கரேள்! ரௌரவாதி நரகத்திலன்னா விழப்போறேன்! இந்த காங்கிரசார் பேச்சைக்கேட்டு ஆடி பிராமணா சாபம் இலேசாவிடுமோ? அன்னத் துவேஷத்தை விட ஆபத்தன்னோ பிராமணத்து வேஷம் க்ஷணித்துப் போயிடுவேள்” என்று பேசும், வைதிகக் குளறல் போய், பணிவுடன், பாசத்தால் உந்தப்பட்டவர் போல், பயந்தவன் போல, நமது நிலை கண்டு பரிதாபப்பட்டு, நம்மை உய்விக்கும் உன்னதமான நோக்கங்கொண்டவர்போல, நாம் எவ்வளவு தூற்றினாலும், துளியாவது கோபங்கொள்ளாத சாந்தமூர்த்திகள் போல ஏனப்பா இப்படி எங்களிடம் துவேஷம்? நாங்கள் என்ன செய்தோம் என்று பேசும்முறை, நமது நன்னில நண்பருக்கு மட்டுமன்று, ஆரிய இனத்திலே அனேகருக்கு இப்போது தெரிந்திருக்கிறது. காலம், அவர்களின் விழியிலே கனல் புறப்படுவதற்குப் பதிலாக நீரைச் சொரிய வைக்கிறது; சாபமிடுவதற்குப் பதிலாக, சாந்தோபதேசம் செய்ய வைக்கிறது. சபாஷ்! அடைந்தோம் வெற்றி, அடி பணிந்தனர் ஆரியர். அவர்தம் கொட்டம் ஒழிந்தது, என்று கூவிக் குதித்திட லாமோ? இல்லை, கூடாது. இந்தப் பணிவு, ஒரு சுரங்கவெடி, பாதையிலே படுகுழி, அதன்மேலே பச்சை இலையால் ஒரு மூடி நன்னிலம் நண்பர்போல், எங்களிடம் ஏன் வீண் பகை? என்று சில பல ஆரியர்கள் கேட்பதுகண்டு, தமிழர் ஏமாறுவரோ என்ற திகில் எனக்குண்டு, ஏனெனில் தமிழ்ச் சீமான்கள் சாய்வதே இந்த முறையின் விசேஷத்தாலே தான். “சார், என்னதான் சொல்லுங்கோ, இந்தப் பிராமணாள் முன்போல இல்லை, இப்போது, ரொம்பப் பணிவாக, இருக்கின்றனர். இனி அவர்களை வீணாகக் கண்டிக்கப்படாது” என்று பேசிடும், பல சீமான்கள் நீதிக்கட்சியிலே உள்ளனர். அவர்களின் நினைப்பைக் கெடுத்துவிட்ட நயவஞ்சகத்தை அவர்கள், அறிவதில்லை. ஆரியர் அடங்கிவிட்டனர், என்று கருதும் அவர்கள், தாங்கள், ஆரியத்தின் அடி வருடுவதை மறந்து விடுகின்றனரா? “உனக்கும் தெரியாமல், உனக்கே ஒரு பிள்ளை பெற்று, அவனைவிட்டே, உன்னைச் சவுக்கால் அடிக்க வைக்கிறேன் பார்” என்று சபதம் செய்தாளாமே மங்கம்மாள்; அதுபோல, ஆரியர் சபதங்கூற வில்லையே தவிரச், சாகசமாகப் பேசுவது அதே முறையானது தான் என்றே நான் கருதுகிறேன். நன்னிலம் நண்பர், கைநொடித்துக் கொள்கிறார், ஏன் எங்கள் மீது வெறுப்பு? நாங்கள் என்ன செய்தோம் என்று கேட்கிறார். நண்பா, நன்னிலவாசியே! ஒரு பெரிய சமுதாயத்தை அறிவும் சுயமரியாதையும் ஓங்கியுள்ள இந்தக் காலத்திலேயும் அடிமை இனமாகக் கருதிப், பார்ப்பனர் வாழுகின்றனரே, அதை மறக்கமுடியுமா? இன்றும் பார்ப்பனர், பண்டிதத் தமிழனானாலும் பணக்காரத் தமிழனானாலும், பட்டம் பெற்ற தமிழனானாலும், நீதிக்கட்சித் தமிழனானாலும், காங்கிரஸ் தமிழனானாலும், பிரம்மாவின் காலிற் பிறந்த கடைசி வகுப்பு என்று கதை எழுதிப் படிப்பதும், அதற்கான பாட்டுப் பாடுவதும், கூத்து ஆடுவதுமாக இருப்பதுடன், சடங்குகள் செய்து வருகிறதே, இது தகுமா? ஏனய்யா எங்களிடம் துவேஷம்? என்று கேட்கிறோமே நண்பா, நியாய அநியாயத்தை உணர்ந்தவரானால், பார்ப்பனரின் போக்கைக் கண்டித்தீரா இதுவரை, இனியேனும் கண்டிக்க முன்வருவீரா? நீர், உமது சந்தேகத்தைப் போக்கிக்கொள்ள எனக்குக் கடிதம் எழுதுவதாகக் கூறும் நிலையில் உள்ளீர், நீர், இந்த நிலையைக் கண்டிக்காதது எனக்கு ஆச்சரிய முண்டாக்கவில்லை; பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு நிறத்திமிர் கூடாது, அதுதான் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தையே அழிக்கும் நோய் என்று அறிவுபுகட்ட முன்வரும் வலங்கைமான் விவேகி, மகாகனம் சாஸ்திரியார் என்ன, ஆங்கில ஆட்சியாளருக்கு ஆங்கிலச் சட்டத்தின் மேடு பள்ளங்களை, நுட்ப நுணுக்கங்களை எடுத்துரைக்கும் நிபுணராமே, சர். அல்லாடி கிருஷ்ணசாமி ஐயரென்ன, அகில இந்தியாவுக்கும் பத்திரிகா தேவனாக அவதாரம் எடுத்துள்ள இந்து பத்திராதிபரென்ன, இத்தகைய மேனாட்டு அறிவு படைத்த, உன் இனப் பெரியார்களே, இன இயல்பைக் கைவிடாது, இனச் செருக்கும் இன ஆதிக்கமும் ஒரு துளியும் கெடாதபடி பார்த்துக் கொள்வதிலே கவலை காட்டித், தமிழரை இழிவு செய்யும் பார்ப்பனியத்தைப் போற்றவும் துணிந்து, சமஸ்கிருதத்தை இன்றும் வானளாவப் புகழ்ந்து வருகிறார்களே, அது, எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு நாட்டிலே, ஒரு கூட்டம், எல்லா மக்களுக்கும் நானே உயர்ந்தவன் என்று கூறுவதும், அந்தக் கூற்றுக்கு ஆதாரமாக வேதசாஸ்திர இதிகாச புராணதிகளை வகுத்துக் கொள்வதும், அந்தப் புளுகுகளை நம்புபவனே ஆத்திகன், குறை கூறுவோன் நாத்திகன் என்று பொய்யுரை புகல்வதும், உயர் ஜாதி, மேலோன் என்ற நிலையை அப்பு அழுக்கின்றிக் காப்பாற்றத் தனி இடம், தனி நடை உடை பாவனை, தனி உணவு, தனிமொழி தேடி அடைவதும், மற்றவர் தொடக்கூடாது, மற்றவருடன் கலந்துண்ணலோ, மற்றவருடன் கலப்பு மணமோ கூடாது என்று விதிகள் ஏற்படுத்தி அதன்படி ஒழுகுவதும், மற்ற வகுப்பாருக்கு ஆசானாகவும், மோட்ச வழிகாட்டியாகவும்; தலைவனாகவும், வீற்றிருக்கவே தாங்கள் ஜெனித்ததாகப் பேசுவதும் அதற்கேற்றபடி நடப்பதும், உழைக்காமல் வாழ வழிவகுத்துக்கொள்வதும், பிறரின் உழைப்பை உறுஞ்சுவதையே உத்தமமான காரியமெனக் கருதி வருவதும், உடலை வளைத்து நரம்பு தேய, எலும்பு முறிய, இழிதொழிலோ, கடின வேலையோ, செய்யத் தமிழரும், மந்திர உச்சாடனம், பூஜை புரிதல், வக்கீலாக வாயாடுதல் முதலிய தந்திர வேலையை மேற்கொண்டு, தமிழரைச் செக்குமாடாக்கித், தாங்கள் சுகபோகிகளாக இருப்பதுமாக இன்றும் பார்ப்பன இனம் வாழுகிறதே! இந்த நிலை, சூடும் சொரணையும், மங்கிப்போன இங்கன்றி வேறு எந்த நாட்டிலாவது நடைபெற முடியுமா? இம்முறையை வேறு நாட்டிலே எந்தக் கூட்டமேனும் கையாளத் தொடங்கினால், அந்தக்கூட்டத்தினரைப் புதைக்கக் கல்லறைகூட அந்த நாட்டிலே தரமாட்டார்களே, அது தெரியுமா தங்கட்கு! பிரிட்டனிலே, முதலாம் சார்லஸ், முடியும் முடிதரித்த சிரமும் இழந்ததும், இரண்டாவது ஜேம்ஸ் எனும் மன்னர் ஊரைவிட்டு ஓடியதும், பிரன்சு நாட்டு மன்னரும் பரிவாரமும் பிடரியில் கால்பட ஓடியதும், ரஷிய ஜாரும் சகாக்களும் ஓடஓடக் கொல்லப்பட்டதும், பயங்கரமான புரட்சிகளும், இரத்த வெறிச் செயல்களும், தீப்பந்தமும் துப்பாக்கி முனையும் தாண்டவமாடியதும், எதனால், என்பதை, நண்பா! ஓய்வாக இருக்கும்போது யோசித்துப்பார்! ஆளப்பிறந்தோம், நீங்கள் அடிமைகளாக வாழப்பிறந்தீர்கள் என்று கூறியவர்களை, உலகிலே, காட்டுமிராண்டித்தனத்தை இன்னமும் கைவிடாத இந்த நாட்டில் தவிர வேறு எங்கும், விடுதலை இயக்கம் சும்மா விட்டுவிடவில்லை. இங்கோ, அத்தகைய கேடரையே கும்பிடும் குணஈனர்கள் நடமாடக் காண்கிறோம். ஓர் இனம் மற்றோர் இனத்தை, ஆயுதபலத்தால் அடிமைகொண்டு, வரி வசூலித்தோ வியாபாரம் செய்து பொருள் ஈட்டியோ அதிகாரம் செய்தோ வாழுவதை, அநாகரிகம், அக்ரமம், அநீதி என்று அறிவாளிகள் கண்டிக்கும் இந்நாட்களிலே, பழைய தோள் வலிமையன்றிப் பிறிதோர் வலிமையில்லாத இனம், தோள்வலிமை கொண்ட தமிழ் இனத்தை, சவடால் ஒன்றினாலேயே இன்றும் ஆள்கிறதே, இத்நிலை இந்த இரு இனத்துக்குள், நேசத்தை, எப்படியப்பா வளரச் செய்யும்? இவ்வளவு சமரசம் பேசும் நீயே, உன் கடிதத்திலே, எங்கள் பள்ளியிலே, குடி அரசும், திராவிட நாடும் மற்றும் பார்ப்பனரைத் தூஷிக்கும் பத்திரிகைகளுமே காண்கிறேன்” என்று மனம் வெம்பி எழுதுகிறாய். துவேஷம் உனக்கு இல்லையானால், இன எழுச்சிக்காகவும் இன விடுதலைக்காகவும், நீதிக்காகவும் சுயமரியாதைக்
காகவும் பாடுபடும் பத்திரிகைகளிடம் உனக்கு இவ்வளவு துவேஷம் பிறக்குமா சொல்லு! “தெய்வாதீனமாக விடுதலை நின்றுவிட்டது” என்று கூறி, ஆறுதல் அடைகிறாயே அப்பனே, விடுதலை, தெய்வ ஆதினத்தால் நின்றுவிடவில்லை. அந்த நாசுக்கான பாணம், தடித்துப்போன தோலருக்குத் தைக்காது என்பதற்காகக், குடி அரசு எனும் குறுந்தடிப் பிரயோகம் ஆரம்பமாகிவிட்டது, கோபித்து என்ன பயன்? “பள்ளிக்கூடத்திலே, பார்ப்பனரல்லாத மாணவர்களே, எங்களைத் திட்டுகிறார்கள், நாங்கள் அவர்களைச் சகோதரராகவே கருதுகிறோம்” என்று புத்தனோ, ஜீனனோ, ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று புத்திபுகட்டிய ஏசுவோ, என்று நான் மலைக்கும்படி எழுதுகிறாயே நண்பா! உங்கள் வேதமே, தமிழரைத் தூஷிப்பதும், தமிழரை அழித்தொழிக்கும்படி தேவனை வேண்டுவதும் என்பதை நீ அறிவாயா? உங்கள் இனத்தார் கோர்த்த புராண இதிகாசங்கள் தமிழர்களைக் கேவலப்படுத்துவதுதான் என்பது உனக்குத் தெரியுமா? இவைகளைத் தமிழர் தலைமீது சுமத்தி, அவர்களைக் கேவலப்படுத்துவது, உனக்கு உறுத்தவில்லை, பள்ளி மாணவர்கள் பதட்டமாகப் பேசுவது மட்டும் உமக்குச் சுரீல் என்று பொத்துக் கொள்கிறதோ! எங்கள் இனத்தைச் ‘சூத்திரன்’ என்று உங்கள் இனம் அழைக்கிறதே, அதைவிட, அகராதியிலே கேவலமான அசங்கியமான ‘திட்டு’ வேறு இல்லையே, அதைத்தானே, தமிழருக்குச் சூட்டி இழிவு செய்கிறீர்கள், இதைவிடக் கொடுமையா, தமிழ் மாணவர்கள் செய்கிறார்கள், நெஞ்சிலே கைவைத்துக் கூறு! நன்னிலத்து நண்பா, உங்கள் இனத்தாரின் ஏடுகளில் ஒன்றான வேதத்திலே ஓரிடத்தில், சாந்த சொரூபிகள் என்று நீ கூறும் உன் இனமுன்னோர், சொல்கிறார், “கோதுமைப் பயிரை மான் கூட்டம் அழிப்பது கண்டு, உழவன் பதைப்பதுபோலத், தமிழ் மங்கையருடன் ஆரியர் கூடும்போது, தமிழர் பதைக்கின்றனர்” என்று! இதைவிடக் கொடுமையான தூற்றல் வேறு இருக்க முடியுமா? இத்தகைய தூற்றலையே வேதமெனக் கொண்டு, இதை நம்புபவனே, இகபரசுகம் பெறுவான் என்று நம்பச் செய்து, வாழும் ஆரிய இனத்தினிடம், ‘துவேஷம்’ வளருவதா உனக்கு ஆச்சரியமாக இருக்கிறது! நண்பனே, இவ்வளவு கொடுமையைச் செய்தும், அந்த இனம் இன்றுவரை, வாட்ட வருத்தமின்றி வாழுகிறதே, அதுதான் எனக்கு ஆச்சரியத்தை உண்டாக்குகிறது. குச்சுக்காரிக்கு நாட்டிலே இடமிருப்பதே கேவலம், அவளுக்குக் கோயில்கட்டி, பூசை செய்ய, கற்பரசிகள் நியமிக்கப்பட்டால், அது, ஆச்சரியத்திலும் ஆச்சரியமல்லவா? இந்த அக்ரமத்துக்குச் சிலர் உடன்பட மறுக்கும்போது, அந்தக் குச்சுக்காரி, இது தகுமா, முறையா, என்று கேட்பது அதைவிட ஆச்சரியமல்லவா? அதுபோல்தான் இருக்கிறது, ஆரிய இனத்துக்காகப் பரிந்துபேசும் உமது வாதம்!

(7.11.1943)