அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


நரி பரியாகும் படலம்!

கவர்னரே! சட்டசபையிலே சொற்பொழிவாற்றும் தகுதி உமக்குக் கிடையாது!

முதியவர் ஒருவர் முழக்கமிடுகிறார் இதுபோல, சட்டசபையில் – கவர்னர் முன்னாலே – ஆச்சாரியார் வீற்றிருக்கும் மன்றத்திலே.

கவர்னர் சொற்பொழிவாற்றுவதைக் கண்டிக்கும் அறிகுறியாக நாங்கள் இந்தச் சபையைவிட்டு வெளியேறுகிறோம், என்று வீரஉரை கூறிவிட்டு, 170 உறுப்பினர்கள் வெளியேறினர்!

மைனாரிடி மந்திரிசபை ஒழிக! மக்கள் துரோகிகள் ஒழிக என்று முழக்கமிட்டனர், சட்டசபை நடவடிக்கைகளைக் காணச் சென்றிருந்தவர்கள். கருப்புக் கொடியும் காட்டினர். போலீஸ் புகுந்தது புயலை அடக்க – புரட்சிப் பொறிகளைச் சட்டசபைக் கட்டிடத்துக்கு வெளியே கொண்டு சென்றது – அங்கே இ்ருந்த பொதுமக்கள் இதைக்கண்டனர் – ஆர்வத்தீ மூண்டது – கண்டன முழக்கம் கிளம்பிற்று!

போலீசும், இராணுவமும், தடியும் துப்பாக்கியும், சட்டசபைக் கட்டிடத்தைச் சுற்றிலும், அதை ஒட்டியுள்ள பல தெருக்களிலும்.

நாடாள வந்துள்ளார் ஆச்சாரியார் – துவக்கவிழா நடைபெறுகிறது. துப்பாக்கியும் துரோகிகளும் துணைபுரிய துதிபாடுவோர் உடனிருக்க. பொதுமக்கள் கண்டிக்க, வீரர் முழக்கமிட, போலீஸ் புயலை அடக்க, எனும் இத்தகைய கோலாகலத்துடன்.

கண்டனம், வெளி ஏற்றம், முழக்கம், கருப்புக்கொடி! சட்டசபைக்கு உள்ளே!

பட்டாளம், போலீஸ் வெளியே!

எவ்வளவு நேர்த்தியான ஆரம்பம்! எவ்வளவு கீர்த்தி பெறுகிறார்கள் துவக்கத்திலேயே.

கவர்னர் பேச எழுகிறார் – உமக்கு அந்தத் தகுதி இல்லை என்று முழக்கம் கிளம்புகிறது – கதர்கட்டி அறியாதவரிடமிருந்து அல்ல – காங்கிரசில் ஆண்டு பல உழைத்து இன்று அதன் சூதை அம்பலமாக்கும் ஆந்திரத் தலைவர் பிரகாசத்திடமிருந்து.

பூ! இதனாலே என்ன! கவர்னரின் சம்பளத்திலே கால்காசு குறையவா செய்யும் – அவருடைய திருஉருவத்தைத் தாங்காமலா போகும் ஏடும், அவருக்கு என்ன குறை வந்துவிடும் இதனால், என்பர், காங்கிரசார் – அதிலும் – காங்கிரசாரிலே அரசியல் தெளிவு அதிகமற்றவர்கள்.

ஆனால், சென்னையின் வரலாற்றிலே இச்சம்பவம் இடம் பெறுகிறது. கவர்னர் சட்டசபையைத் துவக்குகிறார், கருப்புக் கொடி பறக்கிறது, செந்தலைப் பூச்சிகள் என்று எந்தப் போலீசாரைக் காங்கிரசார் கேலிபேசி வந்தனரோ, அவர்களின் துணையோடு, துரைத்தனத்தின் துவக்கநாள் தொடங்குகிறது.

காங்கிராட்சிக்கு இனி ஏற்படப்போகும் கதிக்கு இதுமுன் அறிவிப்பு!

துவக்கமே இதுபோல! தொடர்ந்து நடைபெற உள்ளவை யாவை! இறுதி எங்ஙனம் இருக்கும் வரலாறு அறிந்த எவரும், யூகித்துக் கொள்ளலாம்.

நாடாள வந்துள்ளார் அரசியல் ஞானி!

அவர் ஆளவருகிறார் என்ற சேதி கேட்டதும், பட்டமரம்துளிரிக்கிறது, கெட்டநிலை மாறுகிறது, என்று இலட்சோப இலட்சம் மக்கள் பஜனை செய்தனராம்!

அத்தகைய ஆட்சியின் துவக்கநாளில், பொதுமக்களின் பூரிப்பு, எவ்விதம் இருந்தது. வெட்கம்! வெட்கம்!!

வேதங்களை வேதியர் முழங்க, சுமங்கலிகள் ஆரத்தி எடுக்க, சீடர்கள் சாமரம் வீச, அர்ச்சகர்கள் சூடம் காட்ட, ஆட்சிப் பெருமான் கெம்பீரமாக வந்தமர்ந்தாரா! இல்லை. இல்லை – நிற்காதே, போகாதே, பார்க்காதே, பேசாதே என்று பொது மக்களைப் போலீஸ் விரட்ட, இந்தச் சபையிலே பேச இவருக்கு என்ன தகுதி என்று கவர்னரைப் பிரகாசம் கேட்க, பார்வையாளர்களிலே சிலபலர், ஒழிக ஆச்சாரியார் ஆட்சி என்று முழக்கமிட வெளியே இழுத்துச் செல்க என்று போலீசுக்கு அதிகாரிகள் உத்திரவிட, அதற்கு முன் இதைக் காணீர் என்று அவர்கள் கருப்புக் கொடியைக் காட்ட, அன்பர் ஆச்சாரியார் தலைகுனிந்தவண்ணம் அமர்ந்திருக்க, இதென்ன வம்பு! இப்படியா துவக்கவிழா! என்று கவலைப்பட்டக் கவர்னர். சட்டசபைத் தலைவரைப் பார்க்க, இது என்ன பிரமாதம், போகப் போக நடைபெறுவதைப் பாரும் என்று கூறுவதுபோல ஐக்ய ஜனநாயக முன்னணியினர் கவர்னரை நோக்க, இதுபோல காட்சி இருந்தது.

ஆயுதப் போலீசும் படை வீரரும் முன்னும்பின்னும் இரு மருங்கிலும் வர, உல்லாசச் சீமான்களும் ஒய்யாரச் சீமாட்டிகளும் கண்டுகளிப்பதற்காக அமைந்திருந்த நாடகக் கொட்டகைக்குள் ஜார் நுழைந்தான் – கண்டதும் கண்டனம் கிளம்பிற்று, ஏழை எளியவர்களிடமிருந்து – எதிர்ப்பும் பிறந்தது. பயங்கரமான வேகத்தில் வளர்ந்தது, ஜார் திகிலிடைந்தான் – ஜாரின் நிலைகண்டு அவனது பாதுகாவலர் பீதிகொண்டனர் – தடியும் துப்பாக்கியும் துணைபுரிந்தன – ஜார் தப்பினான் – எனினும்புரட்சிப் புயல் வேகமாக அடித்தது – வளர்ந்தது.

இது ரஷியாவில் – கொடுங்கோலனை மக்கள் எதிர்க்கத் துணிந்ததும்!

இங்கு, சட்டசபையிலே கவர்னர் பேசுகிறார் – பேசாதே என்ற முழக்கம்!

சரிதம் எவ்வளவு அழகாக, புதிய புதிய பதிப்புகளாக வெளிவருகிறது!

இவ்வளவு ‘இடி‘களுக்கிடையிலே காங்கிரசாருக்கு, ஒரு திருப்தி, பயங்கரமான கிணற்றிலே விழ இருந்தவன், வேரொன்றைப் பற்றிக் கொண்டு, உயிர் தப்பிக்க முயல, வேர் அறுத்துக் கொண்டே வர, கீழே தெரியும் ஆபத்தால் அவன் மனம் பீதிகொள்ள, அந்தச் சமயத்திலே, அங்கிருந்த தேன் அடையிலிருந்து சிந்திய தேன்துளி அவன் வாயில்பட, அதைச் சுவைத்து இன்புற்றானாமே – கதை படித்திருப்பீர்கள் – அதுபோல, இவ்வளவு அலங்கோலமான ஆரம்பத்துக்கிடையே அவர்களுக்கு ஒரு அற்ப சந்தோஷம் – ஐக்ய தலைவர் தேர்தலிலே ஐக்ய ஜனநாயக முன்னணி தோற்றுவிட்டதாம்.

சாயம் வெளுத்துவிட்டது – கட்டு குலைந்துவிட்டது – என்று கொட்டை எழுத்துக்களிலே அச்சடித்துப் பார்த்து அகமகிழ்கிறார்கள் ‘அற்ப சந்தோஷிகள்‘ – வரலாறோ, அழிக்க முடியாத முறையிலே தீட்டுகிறது, ஆச்சாரியார் சட்டசபையைக் கூட்டினார் – கவர்னர் பேச வந்தார் – கண்டனம் கிளம்பிற்று, கருப்புக் கொடி பறந்தது – சட்டசபையைச் சுற்றிலும் பட்டாளம் பாதுகாப்பளித்தது – இவ்விதமான அலங்கோலத்துடன் துவக்கநாள் இருந்தது – என்று எனினும், அவர்களோ, மலக்குழியிலிருந்து மல்லிகையை எடுத்து முகர்ந்திடும் மந்தமதினர்போல, மகிழ்கிறார்கள் – தாங்கள் வெற்றி பெற்றோம் என்று கூறி அல்ல – ஐக்ய முன்னணி தோற்றது என்று கூறி.

ஐக்ய ஜனநாயக முன்னணியைக் கவர்னர் முதலிலேயே, பணியாற்ற இடமளிக்காமல், நொண்டிக்குத் தடிதானம் தருவதுபோல, ஆளும் இலாயக்கைப் பெறாத காங்கிரசுக்கு ஆச்சாரியாரை அளித்து காங்கிரஸ் மைனாரிடியைப் பீடத்தில் அமர்த்தினார். மாணிக்கவேலர் கிடைத்தார். பிரகாசம் பேசுவதைக் கேளுங்கள்- “ஆச்சாரியார் பதினைந்து மந்திரிகளை நியமித்து, அவர்களை அவிழ்த்துவிட அவர்கள் சென்று ஆதரவு தேடி, சட்டசபைத் தேர்தலிலே ஐக்கிய முன்னணி வெற்றி பெறவொட்டாதபடி செய்தனர்.

இதற்குப் பெயர் வெற்றியா?

காங்கிரசுக்கு காங்கிரஸ் கட்சியின் பேரால், சட்டசபைத் தலைவர் துணைத் தலைவர் பதவிகளுக்கு, ஆட்களை நிறுத்திவைக்க, யோக்யத்தையும் துணிவும், நம்பிக்கையும் இல்லையே! ஐக்ய முன்னணிக்குத்தானே அந்த யோக்யதை இருந்தது! மாமரத்தின் பின்புறம் இருந்தல்லவா, காங்கிரஸ் போரிட்டது – நேருக்குநேர் – ஆண்மையுடன் – அரசியல் நேர்மையுடனா!

அலிபுரம் சிறையில் அவதிப்பட்டு அன்னை பாரத தேவியின் தளைகளை அறுத்தெறிய அரும்பாடுபட்ட காங்கிரஸ் தலைவர்களா, வெற்றி பெற்றார்கள், அவர்கள் ‘மலைமலை‘யாக வீற்றிருந்தார் – வெட்கம் தாக்கிய நிலையில் – வெற்றிப் பெற்றவர்களோ சுயேச்சைகள்.

அவர்களுக்கு என்ன கசக்குமா, காங்கிரஸ் கட்சி தரும் சர்க்கரைக்கட்டி!!

காங்கிரஸ் லேபில் கூட ஒட்டிக் கொள்ள மறுத்தனர் – வெட்கம், மானம் ரோஷமற்று, பரவாயில்லை, சுயேச்சையாகவே இருந்தாலும் பரவாயில்லை, சிகப்பு நிறம் படாததாக இருந்தால் போதும் என்று தானே, காங்கிரஸ் கட்சியினர், சிவ சண்முகம், பக்தவச்சலம் ஆகியோர் பின்னாலே வால் பிடித்துக் கொண்டு ஓடினர்! கீர்த்தியும் கித்தாப்பும் உள்ள காரியமா இது!

ஐக்ய முன்னணி அரசியல் இலஞ்சங்களை அள்ளி வீசும் ஆச்சாரியாரின் முழுத் திறமைக்குப் பிறகும் பெற்ற ஓட்டுகள், சாமான்யமல்ல, ஐக்ய முன்னணியின் கட்டு உடைபடும் விதமானது அல்ல! அதிலே இருப்பதைவிட, சும்மா இருந்தால் காங்கிரஸ் அரசியல் சூதாடிகள், சாமரம் வீசுவார்கள் என்று தெரிந்ததால், சிலர், ‘பக்தவத்சல‘ அவதாரமாயினர் – அவர்களுக்குப் பாதந்தாங்கும் காரியம் புரிந்தனர். பாரத மாதாவின் பிரிவுக்குப்பாத்திரமான திருக்குமாரர்கள்! இது, பாராட்டுதலுக்கும் மகிழ்ச்சிக்கும் உரிய காரியமா!! தெளிவுள்ளோர் சிந்திக்க வேண்டும்.

துவக்கநாளும், சட்டசபைத் தலைவர், துணைத்தலைவர் தேர்தலும், காங்கிரஸ் கட்சியின் போக்கு எவ்வளவு வேகமாகக் கேவல நிலைக்கு ஆச்சாரியாரால் இழுத்துச் செல்லப்படுகிறது என்பதை விளக்கும் நாள் ஆகிவிட்டது இதை உணராத மேனா ஓட்டிகளும் பெரிய நாவினரம, ஐ.மு. சாயம் வெளுத்தது என்று கூறுவதிலே, பொருள் என்ன இருக்கறிது என்று கேட்கிறோம்.

நரியைப் பரியாக்கும் படலமும் பிறகு பரி நரியாகி உண்மைப் பரிகளைக் கடித்துவிட்டு ஊளையிட்டப்டி ஓடிய படலமும் திருவிளையாடற்புராணமாகும். அரசியலே, இப்போது காங்கிரஸ் மைனாரடி மெஜாரடியாக்கப்படுவது நரி பரியான படலம்தான்! நயவஞ்சகத்தின்துவக்கம் வெற்றிகரமாக இருந்தது! ஆனால்,இறுதி! அதை 375 பேர் கொண்ட சபை அல்ல அந்தச் சபைகளை ஆக்கவும் அழிக்கவும் வல்லமையும் கொண்ட மக்கள், தீர்மானிக்க இருக்கிறார்கள்! மக்கள் விழித்துக் கொண்டுமிருக்கிறார்கள்! இதை ஆச்சாரியார் திருச்சபை உணரட்டும்.

திராவிட நாடு – 11-5-52