அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


நீக்ரோஸ்தான்!

பலஹீனமாக இருக்கும் பாரிஸ்டர் சவர்க்கார், நாற்காலியிலே உட்கார வைக்கப்பட்டுத், தூக்கி வந்து மாநாட்டு மேடையிலே இருத்தினராம். பிறகு, அவர், அமர்ந்தபடியே, தமது பிரசங்கத்தைப் படித்தாராம். அந்த வீர கர்ஜனையைக் கேட்டீரோ என்று ஆரிய ஏடுகள் கலங்கலமாக எழுதியுள்ளன. தலைவரின் நிலையே தான் அந்தக் கட்சிக்கும். அவர் உடல்நலங்குன்றிக் கிடப்பது போன்றே இந்து மகாசபையுங் கிடக்கிறது; அவர் நடமாடச் சக்தியற்று இருப்பது போலவே, இந்து மகாசபையும் நாட்டிலே தலைகாட்டித் திரிவதில்லை; அவரைத் தூக்கி வந்து உட்கார வைப்பது போலவே, லீகுக்கு எதிரிடையான ஒரு கருத்தைக்கூற ஒரு ஸ்தாபனம் வேண்டுமே என்பதற்காக வடநாட்டு முதலாளிகள் இந்து மகாசபையைத் தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள். தலைவர் ஏட்டைப் படித்தது போலவே, சபையும் ஏட்டிலே பல எழுதிப்படித்துக் களித்துக் கிடக்கிறது. இவ்வாண்டு வைபவத்தின் போது, கங்கா ஜலமும் கன்னியாஸ்திரிகளின் கத்தி வீச்சும் இல்லைப் போலும்!

காட்சியிலே விசித்திரம் இராமற் போகவே, சவர்க்கார் தமது உரையிலாகிலும் விசித்திரம் இருந்து தீர வேண்டுமென்று கருதி “நீக்ரோஸ்தான் வேண்டுமென்று அமெரிக்காவிலே உள்ள நீக்ரோக்கள் கேட்டால் எப்படி அமெரிக்க சர்க்கார் அடக்கி ஒழிப்பார்களோ அதுபோல, இங்கு பாகிஸ்தான் கேட்பவர்களும் அடக்கி அழிக்கப்படுவார்கள்” என்று கூறுகிறார்.

பத்து நாட்களுக்கு முன் “பாகிஸ்தானை என் வாழ்நாளிலேயே காண்பேன்” என்றுரைத்த ஜனாப் ஜின்னாவின் மொழி, சவர்க்காரின் இருதயத்தை ஈட்டி போல் குத்தியிருக்கும். அந்த வேதனையினால், அவர் அவ்விதம் பேசினார். எனவே சீற்றம் பிறக்கவில்லை; மாறாகச் சிரிப்பே வருகிறது, இந்த இந்து சபைச் சிங்கம் புரியும் கர்ஜனை கேட்டு!

அமெரிக்காவின் ஆதி குடிகளாகட்டும் ஆப்ரிக்காவின் சொந்தக்காரராகட்டும், எஸ்கிமோக்காரராகட்டும், எந்த இனமும் தன்மானத்தையும் தன்னுணர்வையும் இழந்து விடாதபடி தடுக்க ஒரு தலைவர் கிடைத்தால், நிச்சயம் தன்னரசு பெறுவர். நீக்ரோக்களுக்கு நீக்ரோஸ்தான் தேவை தான்! அதைக் கேட்கும் உணர்ச்சி ஊற்று, வளமாக இருக்குமாறு செய்ய ஒரு தலைவரும் கிடைத்தால், நீக்ரோஸ்தான் கேட்பர், நாம் பாகிஸ்தான், திராவிட நாடு கோரிக்கைகளை ஆதரிப்பது போலவே, அதனையும் நிச்சயம் ஆதரிப்போம். எந்த இனமும் மற்றோர் இனத்தை அடக்கி ஆள்வதையோ, எந்த இடமும் மற்றோர் இத்தைச் சுரண்டுவதையோ நாம் கண்டிப்போம் - வெள்ளை - கருப்பு - பழுப்பு சிகப்பு - என்ற வித்தியாசமின்றி.

நீக்ரோக்கள், அமெரிக்காவிலே குடி ஏறின ஐரோப்பிய வர்க்கத்தாரால், அடிமைப் படுத்தப்பட்டு, தன்னுணர்வு அழிந்து போனதை உலகுக்கு நேரிட்ட மகத்தான நஷ்டமென்றே நாம் இன்றும் கருதுகிறோம். ஆளும் இனம் - ஆளப்படும் இனம் என்ற சொற்களே, அரசியல் அநாகரீகத்தை, அந்தகாரத்தை, அவதியை உண்டாக்குவனவாகும். இன்று கப்பலில் கஷ்டமான வேலைசெய்தும், மூட்டை தூக்கியும், முறி வேலை செய்தும், காடு மேடு வசித்தும், வாடும் நீக்ரோ மக்களின் நிலைமை கெட்டதற்குக், காரணம் அவர்கள் ஒரு நீக்ரோஸ்தான் பெறாததால்தான்! பரிதாபத்தைக் கிளர வேண்டிய இச்சம்பவம், கேலிக்கு உதாரணமாக சவர்க்காரால் எடுத்தாளப்படுவது, அவரது இன இயல்பையே காட்டுகிறது என்போம்.

உண்மையிலேயே, இங்குள்ள முஸ்லீம்களும், திராவிடர் களும், தத்தம் இனத்தினிடம், தன்னுணர்வு இருக்குங் காலத் திலேயே, உரிமைப்போர் நடத்தி, வர்க்கத்துக்கோர் வட்டாரம் பெறாவிட்டால், நிலை இழந்து கிடக்கும் நீக்ரோக்ககளின் கதியே ஏற்படும் என்று நாம் பன்முறை கூறியிருக்கிறோம்.

ஆனால், சவர்க்கார் இதை உணரட்டும். நீக்ரோக்களின் நிலைமைகண்டு, முஸ்லீம்கள், திராவிடர்கள், தமது கோரிக்கையைப் பன்மடங்கு மும்முரமாக வற்புறுத்தத் துணிவரேயன்றி, துவண்டுபோக மாட்டார்கள். இரு இனமும், இன்று அடைந்துள்ள எழுச்சியைக் கருத்துள்ளோர் தெரிந்து கொள்வர், கபோதிகள் அறியார். கபோதிகளின் கர்ஜனையை நாம் பொருட்படுத்த மாட்டோம்.

நீக்ரோக்களுக்குச் சமமாக, முஸ்லீம்களை, சவர்க்கார் மதிக்கிறார். அது அவரது இனமமதை. ஆனால் ஒன்று சொல்வோம், இந்துஸ்தானைவிட, நீக்ரோஸ்தான் மேலானதாகவே இருக்கும், ஆரியஸ்தானைவிட நீக்ரோஸ்தான் ஆயிரமடங்கு மேலாக இருக்கும். நீக்ரோதானில் சூது சூட்சி வஞ்சனைக்கு இடம் இராது! வீரருக்கு மதிப்பு இருக்கும் வீணருக்கு ஆட்சி இராது. ஆயிரத்தெட்டுச் சாதிகளும் அநாச்சாரக் கருத்துகளைக் கொண்ட மதமும் இராது. புலி வேட்டையும் சிங்க வேட்டையுமிருக்குமே யன்றி, மேலுலகங் காட்டும் சூதாட்டமிராது. மனிதனை மனிதன் தொடக்கூடாது என்ற மடைமை, ஒரு மனிதனுக்கு மற்றோர் மனிதன் தாழ்ந்தவன் என்ற கொடுமை, ஒரு கூட்டம் வாழ மற்றோர் கூட்டம் பணத்தைக் கொட்டி அழவேண்டும் என்ற கொடுமை இராது.

சவர்க்கார், இதையும் உணரட்டும், பாகிஸ்தான், திராவிட நாடு, என்ற கோரிக்கைகளைப் பூர்த்தி செய்யாத வரையிலே இந்த உபகண்டத்திலே வேறு எத்தகைய “ஸ்தான்” அமைக்கப் பட்டாலும், அது நிலையாஸ்தானாகவே போகும். பீரங்கியும் விமானமும், கப்பலும் டார்ப்பிடோவும், 150 ஆண்டு அனுபோக பாத்யதையும், சாம்ராஜ்ய சக்தியுங்கொண்ட ஆங்கிலஸ்தானையே, உனக்கென்ன இங்கு இன்னமும் வேலை என்று கேட்கும் இக்காலத்திலே, காய்ந்த ஓலையும் கிழிந்த காகிதக் கட்டும், நெற்றியிலே பொட்டும், வைதீகக் கட்டுங் கொண்டுள்ள ஆரியர்கள், தங்கள் ஸ்தானுக்கு, மற்ற இனங்கள் அடங்கியிருக்க வேண்டுமென்று கூறினால், வீர இனங்கள், இணங்குவரா? அந்த மராட்டியப் பிராமணர், பீஷ்வாக்கள் காலத்தை மனதிலே வைத்துக் கொண்டு மமதையோடு பேசியிருக்கிறார். இது வேறுகாலம் விடுதலை வீரர்கள் விடும் கணை திக்கெட்டும் கிளம்பும் காலம். வஞ்சனை அழிந்துபட அறப்போர் நடக்குங் காலம் இறுதிப் போரின் ஆரம்ப காலம். இதையும் அவர் உணரட்டும்; பித்தத்தை விடட்டும்.

(3.1.1943)