அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


நீலக்கல் மோதிரம்
அபூர்வமான நீலக்கல் மோதிரம்; ஊர்ப் பிரமுகர்கள் அவ்வளவுபேரும் ஆச்சரியப்பட்டனர்; பலருக்கு அதை எந்த விலை கொடுத்தேனும் வாங்கிவிடவேண்டுமென்று ஆவல். அவனோ, எந்த விலைக்கும் அதைத் தரச் சம்மதிக்கவில்லை.

“வேண்டாமய்யா! இது உங்களுக்கு வேண்டாம். இதை நான் விற்பதாக இல்லை” என்று பிடிவாதமாகக் கூறிவந்தான்.

காரணம் கூறவும் மறுத்தான்.

கடைசியாக ஒரு கனவான் மிகவும் வற்புறுத்தினார் - காரணமாவது சொல்லச் சொல்லி; அவன் சொன்னான், நீங்கள் எல்லோருமே ஏமாந்துபோகிறீர்கள், இது அசல் நீலம் அல்ல, போலி!” என்றான்.

கனவானுக்குத் தூக்கி வாரிப்போட்டது. உண்மையாகவா? அசல் நீலம் அல்லவா? போலியா? என்று சரமாரியாகக் கேட்டார். ‘ஆமாமய்யா, ஆமாம்! அசல் நீலம் அல்ல இது” நீரே பரிசோதித்துக்கொள்ளும்” என்று கூறி மோதிரத்தைக் கொடுத்தான்.

கனவான், நகை வியாபாரிகளிடம் காட்டினார்; அவர்கள் இது அசல் நீலக்கல்; அபூர்வமானது. இரண்டு ஆயிரம் வராகனாவது பெறும் என்றனர்.

அட முட்டாளே! அசல் நீலத்தை இவன் ‘போலி’ என்று எண்ணிக் கொண்டு ஏமாறுகிறானே! - என்று எண்ணிய வியாபாரி, நவரத்தினப் பரீட்சை நிபுணர்களைக் கலந்து பேசினார். அவர்களும் இரண்டு ஆயிரம் வராகனுக்கு மேல் தரலாம் என்றனர்.

சரி! அந்த முட்டாளிடம், இதை எப்படியாவது அடித்து வாங்கிவிட வேண்டியதுதான் என்று தீர்மானித்த கனவான், மறுபடியும் அவனை அணுகி, “போலி நீலமாக இருந்தாலும் பரவாயில்லை, இது எனக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. விலை உன் இஷ்டம் போல் சொல்லு, வாங்கிக் கொள்கிறேன்” என்று கூறினார்.

“போலி நீலக்கல் மோதிரம் போட்டுக்கொண்டு இருக்கிறேன் என்பது யாருக்கும் தெரியக்கூடாது; கௌரவக்குறைவு என்று எண்ணிக் கொண்டுதான் நான் இதை யாருக்கும் விற்கச் சம்மதிக்கவில்லை. வேண்டாம் உங்களுக்குக் கொடுமய்யா” என்று கேட்டு வாங்கிப் போட்டுக்கொண்டு, உள்ளே சென்று பழரசம் கொண்டுவந்து கனவானுக்குக் கொடுத்தான்.

கனவானுக்கோ, இரண்டு ஆயிரம் வராகனுக்கு÷ல் மதிப்புள்ளதல்லவா இந்த நீலம், இந்தப் பைத்தியக்காரன், போலி என்றல்லவா எண்ணிக்கொண்டிருக்கிறான் - என்ற எண்ணமே மேலிட்டது.

“ஐந்நூறு வராகன் தருகிறேன்” என்றார்.

“இதற்கா! ஐந்து நூறு வராகனா, ஐந்துகூடப் பெறாதய்யா” என்றான்! மோதிரக்காரன்.

“ஆறு நூறு” என்றான் கனவான்.

“ஒரு போலி நீலக்கல் மோதிரத்துக்கா! உமக்கென்ன பைத்தியமா?” என்று கேலி செய்தான் அவன்.
“உனக்கென்ன, போலிக் கல்லாக இருக்கட்டும், எனக்கு அது வேண்டும்; தரச் சம்மதமா?” என்றான் கனவான்.

“நீராக, வீண் நஷ்டத்தைத் தேடிக் கொள்கிறீர். சரி! உமது ஆசையைக் கெடுப்பானேன், கொடுங்கள் தொகையை, எழுதுங்கள் விற்பனைச் சீட்டு” என்றான்; கனவான் பணத்தைக் கொடுத்துவிட்டு, இன்னாரிடமிருந்து இன்னார் இன்ன விலைக்கு வாங்கிக் கொண்ட நீலக்கல் மோதிரம் என்று சீட்டு எழுதினார்; அவன் குறுக்கிட்டுப் போலி நீலக்கல் என்று எழுதும் என்றான்; எழுதினார். மோதிரத்தைப் பெற்றுக்கொண்டு, இலாபம் கிடைக்கப்போவதை எண்ணி, நேரே நகை வியாபாரியிடம் சென்று அதைத் தந்தார்.

அவன், “முன்புகொண்டுவந்து காட்டினீர்களே அசல் நீலம், அது போலவே இருக்கிறதே இந்தப் போலி” என்றான்; கனவான் மயக்கமுற்றார்.

பழரசம் பருகிக்கொண்டே, தன் நீலக்கல் மோதிரத்தை விரலில் போட்டுக்கொண்டு, “அடி அம்மா! நீலம்! இந்த ஊருக்கு இதுபோதும், வா வேறு ஊர் போவோம்” என்று கூறியபடி, பெட்டி படுக்கைகளைத் தயாரித்தான் எத்தன்.

ஏழெட்டுப் பேருடன், இறைக்க இறைக்க ஓடோடி வந்தார், கனவான்.

‘’ஏமாந்து போனேன்...... இது.... போலி நீலம்....”

“-ஆமாம்! நானே சொன்னேனே.... சீட்டும் இதோ தந்திருக்கிறீரே....” என்றான் எத்தன்..

(21.8.1955)