அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


நீலன் நிருபம்
திரு. வி.கலியாணசுந்தர முதலியார் அவர்களுக்கு,

சைவ மெய்யன்பரே! அடியேன் நீலன் தெண்டம், தமியேன் தங்களுக்கு நிரூபம் விடுத்து ஆண்டுகள் பலவாயின. தாங்களும் தங்களின் வார ``நவசக்தி’’ நலிந்த நாள் முதல் இளைத்துத் தான் இருந்து வந்தீர்கள். ``தரையிலே கிடப்பவன் தரையிலேயா கிடப்பான்? பஞ்சணையில் அமரும் காலமும் வரும்’’ என்பார்களே, அதுபோலத் தங்களின் ஆண்டு விழாவும் வந்தது. தங்களின் திருநாமத்தை நாலா பேரும் திக்கெட்டும் முழங்கினார்கள். முழக் கத்தையொட்டி தங்களது துக்கடாப் பிரசங்கங் களும் தமிழகத்தில தலைகாட்ட ஆரம்பித்தன. ``போகட்டும் நம்ம முதலியாரய்யா தனது ஜீவியத்தின் அந்திப் பொழுதிலாவது, தமிழ னுக்கு ஏதேனும் உருவான தொண்டு செய்து அவர் இனத்தானிடம் தனக்குள்ள சாபத் தீட்டைப் போக்கிக் கொள்ளமாட்டாரா?’’ என்றுதான் எண்ணியிருந்தேன். என்னைப் போல எத் தனையோ பேர் என் வட்டாரத்திலே, ஆனால் உங்க எண்ணமெல்லாம் மண்ணாய்ப் போக, என்று கூறிவிட்டீர்கள். திருச்சிப் பிரசங் கத்திலே, மனிதன் செய்யாததைக் காலம் செய்யும் என்பார்களே, அதுகூட உங்கள் விஷயத்தில் பொய்த்துவிட்டது, ஐயனே!

நல்ல வேஷப் பொருத்தம்; நடிப்பும் அசல் பத்தினிப் பெண் மாதிரியேதான். ஆனால் அந் நங்கையிடம் களவியல், கற்பியல், இலக் கணத்தைக் காணமுடியுமென்றா நினைக்கிறீர்கள். முக்காலுமில்லை. ஏன்? நாடாக மேடையில் அவள் கண்ணகி, உலக வாழ்வில் உல்லாசி என்பதினால் தான், இதற்கு உபமேயம் தங்களது திருச்சிப் பிரசங்கம் என்பது உண்மைத் தமிழனது கருத்து. ரொம்ப நாசுக்கான பேச்சுததான், ஆனால், வெண்டைக்காய், அவியல் முறைதான். மாசு, மருவு நிறைந்த மட்டரகக் கலப்புத்தான். கருத்தில் தெளிவில்லை. தமிழனுக்கு விழிப்பில்லை. சொல் அலங் காரத்துக்கோ சோடையில்லை. ``காதல், வீரம், இவை இரண்டுந்தான் தமிழன் பண்புகள். இதைத்தான் பண்டைய நூலான தொல்காப்பியம் உலகத்திற்கு போதிக்கிறது. அதுவே உலகில் போரையொழித்தது. அமைதியை நிலவச் செய்யும் ஆயுதம்’’ என்றெல்லாம் வெளுத்துக் கட்டினீர்கள். அன்று சொன்னதெல்லாம் என்னமோ ஐந்துக்கு இரண்டு பழுதில்லைதான். ஆங்கிலத்தில் """"ஆடிசந னைநயள டிச னைநயடள யசந nடிவாiபே வை வாநசந ளை nடிவ யn iவேநளேந டகைந யனே சநயடவைல நொiனே"" என்ற சொற்றொடர்களை நீங்கள் படித்திருப்பீர்கள். பேச்சுக்கும், செயலுக்கும் நட்பு வேண்டுமென்பது அதன் சங்கிரகம். தங்கள் சொற்பொழிவிலும்இது இடம் பெற்றிருக்கிறது. ஆனால் அந்த அளவுகோலால் உங்களை அளந்து பார்க்கவே தமிழன் விரும்புகிறான், தமிழனது இன்றைய சராசரி வாழ்வில் காதல் வீரத்திற்கு இடமுண்டா? தனது இனப் பண்புக்கு மாறாக அவன் கோழை யாகவும், காதலற்ற மனிதப் பிறவியாகவுமே வாழ்கிறான். அந்நிலை போக்க நீர் எடுத்தாண்ட முயற்சிகள் யாவை? எத்தனை காதல் மணங் களைத் தமிழன் குடும்பத்தில் நடத்தினீர்கள்? டைரி வைத்திருக்கிறீர்களா? அல்லது அவை களைச் செயலில் நடத்துகிறவர்களையும், நடக்கச் செய்பவர்களையுமாவது வாயார வாழ்த்திக், கையார எழுதியதுண்டா? கொஞ்சம் நெஞ்சில் பெருவிரலை வைத்துச் சொல்லுங்கள் சுவாமி. ``நீத்தார் பெருமை’’ என்று வள்ளுவன் தன் குறளில் எழுதியது துறவு நிலையைக் குறித்தல்ல, மனமாசைப்போக்கல்’ அழுக்கை அகற்றல் என்பதைக் குறித்துதான். அதுவே சரியான பொருள்’’ என்று அன்று கூறினீரே, அந்த உண்மையை எத்துணைச் சைவ மெய்யன்பர்கள் கூட்டங்களிலே சொல்லியிருக்கிறீர்கள்? போகட்டும், மதுரை மாநாட்டிலாகிலும் உரைத்தீர் களா? அப்படிக் கூறி எவ்வளவு மெய்யன்பர் களை உங்கள் கருத்துக்குத் துணை அழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? பட்டியல் தரமுடியுமா? மகிபாலன் பட்டியாரும், கம்பர் தரும் காட்சியை வரைபவரும் தங்கள் பட்டியில் இருக்கிறார்களா? தமிழன் பண்புகள், காதலும், வீரமுந்தான். அதற்கு தமிழ் மகன் பாடுபட வேண்டும் என்று எந்தெந்தத் தமிழ்நாட்டு மாடதிபதிகளிடம் பேசியிருக்கிறீர் கள், எந்தெந்த ஆதினப் பொருள்களை அந்தப் பிரசாரத்திற்கு உபயோகிக்கச் செய்து தமிழ்த் தொண்டு செய்திருக்கிறீர்கள்? எத்தனை தமிழன் கோயில்களில் ஆரிய ஆகமங்களை ஒதுக்கித் தமிழ் மறை ஓதும்படிச் செய்திருக்கிறீர்கள்? எங்கே, விரலை மடக்கும் பார்ப்போம். ``தமிழ் என் உயிர் என்பேனா, ஊண் என்பேனா, உளம் என்பேனா’’ என்று பேசிய அதே சகல கல்யாண குணங்களும் அமைந்த சுந்தரனாராகிய தாங்கள் தானே இந்திப் போராட்டக் காலத்திலும் இருந்தீர் கள். அன்று தமிழன் மொழிக்காக தமிழர் தலைவர் சிறைக் கோட்டம் நண்ணியகாலை, சாது அச்சுக் கூடத்தில் நீவிர் உல்லாசக் காட்சி அளித்ததை அதற்குள்ளாகவா தமிழன் மறந்து விடுவான். அதுதான் தங்கள் தமிழ்த் தொண்டோ? அதுதான் தமிழன் வீரம் போலும்!

``தொல்காப்பியம் தொன்மையான நூல், தரணிக்கே காதல், வீரத்தைத் தரத்தக்கது. ஆனால், பிற்காலத்து வந்த தமிழ்ப் பண்டிதர்கள் அதனை அன்மொழித் தொகைக்காகவும், ஆகு பெயருக்காகவும் (இலக்கண நூலாக) ஆக்கி விட்டார்கள், என்று அக்கூட்டத்தில் கூறிய நீவீர் உம் கருத்தை எத்தனை தமிழ்ப் பேரவையில் கூறித் தர்க்கித்துப் பண்டிதர்களை பாமரத் தன்மையிலிருந்து விழிப்படையச் செய்ததன் மூலமாவது தங்களை உண்மைத் தமிழ் மக னாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்? காலஞ் சென்ற பண்டிதர் கா.நா. அவர்களாவது தன் மனதில் பட்டதைக் கள்ளமின்றி மக்கள் மன்றத்தில் கூறும் அருங்குணம் படைத்திருந்தார். அவர் கால அளவில் அவரைத்தான் அறிவுப் புலவன் என்றுகூட அழைக்கலாம். அகத்தியர் ஆராய்ச்சி ஒன்றே என் கருத்தை வலியுறுத்தும். அந்தத் துறையிலாகிலும் நீங்கள் இறங்கியதுண்டா? அதற்கு வீரத்தைக் காணோம். ஆனால் தமிழர் வீரத்தைப்ப் பற்றி பிரமாதமாய்ப் பேசினீர்கள். மேனாட்டார் காதலை லௌகீகமாகக் கருதுகிறார் கள். மதத்தைப் பிணைப்பதில்லை. மதமோ, சட்டமோ அவர்களது காதலைத் தடுப்பது கிடையாது. ஆங்கில நாட்டு வரலாறு சற்று படியுங்கள். மதத்திலும் அரசியலிலும் ரோமாபுரி போப்பின் ஆதிக்கம் சில காலம் இங்கிலாந்தை ஆட்சி செய்தது. தனக்கு விரும்பிய மங்கையை மணம் புரிந்துகொள்ள ஆங்கில மன்னன், ஒருவன் விரும்பினான். மதகுரு மறுத்தார். உடனே மன்னன் பாராளுமன்றத்தில் புதுச் சட்டத்தை நிறைவேற்றி மதக்குருவுக்கு ஆதிக்கம் இல்லாமல் செய்து விட்டுத் தன் மணத்தை நிறைவேற்றிக் கொண்டான். எட்டாவது எட்வர்டு காதல் வாழ்வுக்காக இம்மதத்தைத் துறக்க வில்லையா? இதிலிருந்து நீங்களும், நானும் தெரியும் படிப்பினை என்ன? உங்கள் மாணிக்கப் பெருமாள் பிறந்த நாட்டைப் பாருங் கள். சம்பந்தர் வாழ்ந்த தேசத்தில் காதல் எப்படி என்று கேட்டால் அண்ணாமலைப் புராணத்தைப் படி என்று சொன்னால் தொல்காப்பியக் காதல் வந்து விடுமா? எங்கே உங்களது பெரிய புராணக் காதலைத்தான் பார்ப்போமே! ஒரு பக்தன் மனைவியைச் சிவன் கேட்கிறான், அவன் தமிழனாம், அவனும் பக்திக்காகக் கொடுத்து விடுகிறான். இது தொண்டர் புராணக் கதையி லொன்று, இம்மாதிரி உதாரணம் எத்தனையோ புராணக் குப்பையிலிருந்து எடுக்கலாம். இதுதான் காதல் என்பது உமது வாதமா? ஒன்று மனைவியைத் கொடுத்தவன் தமிழனாக இருந்திருக்க முடியாது, அப்படியிருந்தால் அது காதல் முறையல்ல. அல்லது அக்காதல் பொய் யாக இருக்க வேண்டும். இதைப்போன்ற சம்பவங்கள் தமிழனுக்கு அடுத்ததல்லவென்று தாங்கள் கூறுவது கிடையாதே! அவ்வாறு தமிழர் மரபுக்கு மாறாக இருக்கும் புராணங்கள் எப்படி ஐயா தமிழர் புரணாங்களாகும். உங்கள் புராணங் கள் கூறும் காதல் வீர பிரதாபங்களை நீங்கள் கூறிய பாஞ்சால நாட்டு உதாரணத்தோடு கொஞ்சம் ஒப்பிட்டுப் பாருங்கள். அப்பொழுது வெளுக்கும் உங்கள் சமய நூற்களின் சாயம். இவ்வாறாகத் தமிழன் தன்மான உணர்ச்சியை இழக்கும் நிகழ்ச்சிகள் நிறையப் பெற்று ஆயிரத்திற்கொன்றாகக் காதலைப் பற்றியும், இயற்கை வர்ணனையைக் குறித்தும் எழுதப்பட்டிருப் பவைகளே சமய நூற்களாகும். அவைகளைச் சுட்டிக்காட்டுவதால் மட்டும் சமயநூற்கள் தமிழர் நூற்களாகி விடுமா? புராணங்கள் பூராவும் வெறும் காமக் களஞ்சியங்களாகவேயிருக்கின்றன. உண்மைக் காதலுக்கு இடமேயில்லை. இதை நம்பும் மக்களிடம் எவ்வாறு தொல்காப்பியக் காதலைக் காண முடியும்? பெரும்பாலும் மதவாதி களைவிட அறிவியல்வாதிகளிடந்தான் தொன்மைக் காதல் நிகழ்வதை நீர் நடுநிலை நின்று யோசித்தால் அறிவீர். ஆகையால் தமிழன் வீரமற்றுக் கோழைகளாகக் காமாந்தகார்களாக ஆனதற்குக் காரணம் என்ன என்பதை இனியாவது உணர்ந்தீரா? உணர்ந்திருந்தால் மேனாட்டானைப் பார்த்து, ``லவ் என்பது எங்கள் தொல்காப்பியக் காதல் அல்ல, அது காமம் (சரீர சேர்க்கை மட்டும்) அதற்குச் சரியான ஆங்கிலப் பதமே உம்மிடம் கிடையாது! என்று ஜம்பம் அடித்திருக்க மாட்டீர். பதம் இருக்கோ இல்லையோ, அதுவல்ல நமது பிரச்சினை, வாழ்க்கையில் எங்கு தமிழர் காதல் நடை முறையில் இருக்கிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும். எங்கிருந்தாலும் அதைப் போற்றவே முடியாதும், இல்லாத இடத்தில் பரவும் வேலையைச் செய்ய வேண்டியதுதானே தமிழன் கடமையாகும்.

அக்காலத்தில் சமயமும், அரசியலும், சமூக இயலும் ஒன்றாகயிருந்தது. இப்பொழுது அப்படிக் கருதாததால்தான் ஆபத்து வந்து என்று கூறினீர்கள். அக்காலத்திற்கு வேண்டுமானால், அது பொருத்தமாகயிருக்கலாம். ஆனால் எக்காரணத்தை முன்னிட்டும் மதத்தை அரசிய லோடு பிணைப்பது கூடாது. ஏனெனில் மனித வர்க்கத்தின் ஒற்றுமையுணர்ச்சிக்கு முட்டுக் கட்டை போடுவது உங்கள் மதக் கோட்பாடும், சமய நூற்களுமேயாகும். என்பதை நீங்கள், தெரிந்து கொள்ள வேண்டும். இரண்டொரு சாம்பிள் கேளுங்கள். ``பிறசமய உரைகளை மெய்யென்று நம்புதல் கூடாது.’’ என்கிறது திருவுந்தியார் என்ற சைவ நூல். (அயனரி முதலிய தலைவர்கட்கும் இறைவன் (இவன்) தன்மை தெரிந்ததில்லை’ என்று கூறிப் பிற மதஸ்தர்களைப் பழித்துக் கூறுகிறது மற்றொரு சிவ நூலான திருக்களிற்றுப் படியார் என்ற நூல், ``சமயக் கோட்பாடுகளையும் பலர் கூறும் உண்மைகளையும் ஆராய்ந்துப் பார்த்து நேரம் போக்காதே ஆராய்ச்சியைக் கடந்த முதல் வனைக் `கும்பிடு’ என்று அறிவுக்கும் பரந்த உலக அறிவாராய்ச்சிக்கும், `பிரேக்’ போடுகிறது திருக்களிற்றுப் படியார் என்ற சைவ நூல். இவை போன்றவைகள் தானா சமரச சன்மார்க்கத்தைப் போதிக்கும் என்பது உங்கள் எண்ணம்?

(திராவிட நாடு - 13.2.1944)