அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


நீலன் நிருபம்

13-2-1944 இதழின் தொடர்ச்சி.

திரு. வி. கலியாணசுந்தரனாருக்கு!

எகிப்திய நாகரிகம், சால்தீய (திராவிட) நாகரிகம், சீன நாகரிகங்களுக்கு முற்பட்டது ஆரியா நாகரீகம் என்கிறார் திலகர். இவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளுகிறீர்களா? இல்லை என்றால், இந்து மதத்தை எப்பொழுது வெறுத்தீர் கள்? ``கிறிஸ்து சகாப்தம் ஆரம்ப காலத்திலேயே தமிழகத்தில் இருள் சூழ்ந்து கொண்டது. அதற்குக் காரணம் ஆரியர் ஆதிக்கம்’’ என்று கால்டுவெல் துரை மகனார் கூறுகிறார். (திராவிட நாகரிகத்திற்கு விரோதமாகவே ஆரியர்கள் சைவ வைணவ சமயத்தை உபயோகப்படுத்திக் கொண்டார்கள்’’ என்று கூறுகிறார், ரிச்சர்டு என்ற வரலாற்று ஆசிரியர். ``இந்திய நாடு கீழ்நிலைக்குப் போன காரணம் பார்ப்பனர்களின் ஆதிக்கமே’’ என்று சாண்டர்ஸ் என்பார் `விதர்ஏஷியா’’ என்ற நூலில் வரைந்துள்ளார். இக்கருத்துக்கள் உங்களுக்கு உடன்பாடு இல்லையானால் தாங்கள் உண்மைத் தமிழராக இருந்திருந்தால், எதிரியின் பாசறையில் நின்று தமிழனிடத்தில் கலை யுணர்ச்சி இல்லையென்ற பாணத்தை விட்டிருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காதே. கம்ப இராமாயணப் படிப்புத் தேவையென்கிறீர். அதில் சகோதரத் துரோகம் இனத் துரோகம், எதிரிக்குக் காட்டிக் கொடுத்தல் இவையான மதச் செயல் களைத்தான் கம்பன் சித்தரித்திருக்கிறான். விபீடணன் சுக்ரீவன், இராமன் போன்றார் உதாரணங்களே போதும். இவையனைத்தும் தமிழன் பண்புகள் அல்லவே. ஆகவே, இராமாயணத்தைத் தமிழன் நூலாகக் கூறும் தாங்கள் எப்படித் தமிழராகவிருக்க இயலும் என்பதையாவது தயை செய்து உலகுக்கு இயம்புங்கள். விபீடணனை ஆழ்வாராகத் துதிப்பவன் எங்ஙனம் தமிழனாகவிருக்க முடியும்? அதுவும் போகட்டும். ``தொல்காப்பியக் காதலையும், வீரத்தையும் தான் கம்பன் இராமயாணத்திலே புகுத்தினார். அதுதான் இராமாயணம். இது என் கருத்து’’ என்று கூறினீர் அன்று. அந்தக் காதலையும், வீரத்தையும் தமிழன் விவரித்தால் கேவலம், அவை வெறும் காமமாக வும், கோழைத்தனமாகவுமே முடியுமென்று திராவிட மகன் முடிவு கட்டி விட்டான். தமிழன் பண்புகளுக்குப் கம்பன் கேடு தேடிவிட்டான். ஆரியப் பண்புகளைத் தமிழன் பண்புகளாக்கி இனத் துரோகம் செய்துவிட்டான் என்பதே உண்மைத் தமிழர் கருத்து. மறைந்திருந்து கொல்லும் வீரந்தான் தமிழன் வீரம் போலும்! மறைவிடத்தைத் தோத்தரிப்பதும், இளையானி டம் தன் காதலியின் அங்க அடையாளத்தை மூத்தோன் நவில்வதும் காதலியை காட்டில் விடுவது போன்றதும் தான் காதல் போலும்! என்னே நீறு பூசிய நும் கூட்டத்தார் கூறும் காதல், வீரத்தின் சிறப்பு. தொலையட்டும், உம் முடிவின் படியே வைத்துக் கொண்டாலும் அக்கருத்தைப் படித்த கூட்டத்தாரிடம் தெரிவித்துக் கம்ப இராமாயணத்தில் எவ்விதத் தெய்வீகத் தன்மை யும் கிடையாது. `இன்னின்னது தமிழன் வீரம் காதல் செயல், இன்னது கோழைத்தனம், நீக்க வேண்டுவன நீக்கிக் கொள்வன கொள்க என்றாவது இதுவரையில் கூறியதுண்டா? இதுவரையில் ஒன்றும் கூறாமல் இந்த வருட ஆரம்பத்தில் தான் கம்ப இராமாயணத்தைக் குறித்து நீங்கள் புதுக் கருத்துக் கொண்டதின் காரணம் கம்பரசடோசை அருந்திய பயனா என்று கேட்க ஆசைப்படுகிறேன்.

உங்களுடன் உடன்பிறந்த பிறவிக் குணம் ஒன்றுண்டு. வாழ்க்கைக்குரிய திட்டமுறைகள் காலத்திற்கேற்ப அவ்வப்போது அறிஞர்களால் வகுக்கப்படுவதும் அதைப் பொதுமக்கள் ஒப்பி நடைமுறையில் நடத்துவதும், உலக நியதியும், நேர்மையுமாகவிருக்கின்றன. ஆனால், ``அவை கள் அத்தனையும் எமது முந்தையோர் கண்ட முறை’’ என்று கூறி வீண் கித்தாப்பு அடையும் பிறவிக் குணந்தான் உங்களுடையது. சமதர்மந் தான் உலகில் பசிப்பிணியை ஒழிப்பது என்பது புது உலகத் திட்டம் என்றால் மணிமேகலையின் அட்ட்சய பாத்திரநாள் திரும்ப வரவேண்டு மென்று யாரோ ஒருவர் பொங்கல் நாளன்று சென்னையில் கூறினாராமே அதுபோல, ``எங்கள் நக்கீரரே சமதர்மியாக இருந்தார். அவர் காலம் லெனின், மார்க்ஸ் வாழ்ந்ததக்கு முந்தி’’ என்று பேசுகிறீர்! ஒரு வார்த்தை உங்களைக் கேட்கி றேன். கடைச்சங்க காலந் தொடங்கி இன்று வரை காலக் கணக்கெடுங்கள். அதே போழ்தில், ``கேபிடல்’’ நூல் தோன்றியதிலிருந்து சோவியத் ஆட்சி நிறுவியவரையிலுள்ள கால அளவையும் ஒப்பிடுங்கள். மடுவுக்கும் மலைக்குமுள்ள கால வித்தியாசம் இருப்பதை உங்கள் அறிவு சொல் லும். குறுகிய காலத்தில் மார்க்ஸ் சமதர்மம் நீல மண்டலத்தில் சமைந்தது. ஆனால் பல நூற் றாண்டுகள் ஆகியும் நக்கீரன் சமதர்மம் தமிழகத்தில் ஒரு குக்கிராமத்தைக் கூடத் தொட்டுப் பார்க்கவில்லை என்பது மட்டும் உங்கள் நெஞ்சில் இருக்கட்டும். சங்க இலக்கியம் படிக்கும் பண்டிதக் கூட்டத்தில் எத்தனை சமதர்மிகள் காணப்படுகிறார்கள். நக்கீரனைப் போற்றும் சமதர்மிகள் எத்தனை சமதர்ம மகாநாடு களைக் கூட்டிப் பண்டைப் பண்பினைப் போற்றியிருக்கிறார்கள்? மருந்துக்கேனும் உண்டா? அதற்கு மாறாக நக்கீரர் பரம்பரைகள், சமதர்ம நெறிக்கு உழைக்கும் சுயமரியாதைத் தமிழனைக் காய்கிறார்கள். நீங்கள் கூடத்தான் எங்களை அறிவிலி என்கிறீர்கள். துறையூரில் துடை தட்டினீர்கள். பூவாளூரில் ``புஸ்’’ என்றீர் கள். காரியம் பூச்சியம்தான். இதெல்லாம் பார்த் தால் நீர் ஒரு சமதர்மியா என்று கூட நான் சந்தேகிக்கிறேன். நக்கீரன் சமதர்மமே, ரஷிய சமதர்மமோ, எப்படியேனும் ஆகட்டும். நீர் உண்மையில் சமதர்மத்தில் நம்பிக்கை கொண்ட வராகவிருந்திருந்தால் தமிழகத்தில் சமதர்மப் போராட்டத்தைத் துவக்கிய தமிழர் தலைவ னோடு தோள் கோர்த்து நின்றிருப்பீர்! அத்திட்டத் தின் மூலாதாரமாக ஆரம்பிக்கப்பட்ட ஜமீந்தார் அல்லாதார் மகாநாடு, கடன்மறுப்போர் மகாநாடு, தரகர் ஒழிப்பு வேலை, லேவாதேவிக்காரர் அழிவு வேலை இவைகளில் ஒத்துழைத்தாவது இருந்திரூக்க வேண்டாமோ? தமிழன் என்றீர், தமிழன் பண்புகளைத் தங்கள் திருமேனிகள் செய்வதுமில்லை, உங்கள் ஆச்சாரிவர்க்கமும் கவனிப்பதுமில்லை. ஆனால், உம் உறவு, அப்பக்கம், காதலைப் போற்று, வீரத்தோடு திகழ், பண்டைத் தமிழனாக வாழ், என்று கூறும் சுய மரியாதைக்காரன் பக்கம் பகை, அவனைக் கண்டால் உமக்கு வேப்பங்காய்தான். இதிலிருந்து சில உண்மைகள் புலனாகின்றன. உமது சமதர்மக் கொள்கையால், உமது தமிழன் பண்பில் எங்கேனும் கோணல், பொத்தல் இருந்திருக்க வேண்டும். அல்லது உமது வாழ்க்கையின் திட்டமே உள்ளொன்று புறம் பொன்றாயிருக்க வேண்டும் என்பதுதான்.

``காரைக்குடி முதலிய இடங்களில் நான் சென்றபோது தமிழர்களிடையே ஒரு புத் துணர்ச்சியை- மறுமலர்ச்சியைக் கண்டேன் என்று கூறினீரே, அது உங்கள் கோஷ்டியாரின், காப்பியடிக்கும் தமிழ்ப் பண்டிதர்களின் தொண்டினாலா அல்லது தமிழிரை இயக்கம், சுய மரியாதை இயக்கம் இவைகளின் தளரா உழைப்பினலா என்பதற்கு உமது மனமே சான்று பகரும். சென்னைத் தமிழிசை மாநாட்டுக்குச் சென்றும் ஒரு வார்த்தை கூடப் பேசாததோடு அமையாது அம்மகாநாட்டுக்குச் சுயமரியாதைக் கார்கள் எதிரிகள் என்றுகூட பிரசாரஞ் செய்தீ ராமே, அதுதான் தமிழ்க் கலைத் தொண்டா? தமிழர் தோலில் பார்ப்பன உணர்ச்சியா? சற்றுக் கடுமையான உச்சரிப்பில் சொல்ல வேண்டுமா னால் தாங்கள் ஒரு கலைஞரா என்று கூட ஐயப்பாடு உண்டாகிறது! சமூகத்தை மீறி எழுந்த வனே கலைஞன் ஆவான் என்பது அறிஞர் கருத்து! அக்கலைஞனுக்கு அறிவுப் புலமை யல்லவா வேண்டும். நீர் மொழிப் புலவராக இருக்கலாம். சமயப் புலவராகவுமிருக்கலாம். அதனால் கலைஞனாக ஆகிவிட முடியாது. இந்நிலையில் எங்களைக் காய்கிறீர். அன்று முடிவுரை கூறிய ஒருவர் கூற்றுப்படி தாங்கள் ஒரு விசித்திரப் பிராணி என்று தான் எண்ண வேண்டியிருக்கிறது. இல்லையானால் உங்கள் மத ஆச்சாரத்துக்கும், காதல் பிரசாரத்திற்கும் சம்ம்பந்தமிருக்குமா? சங்க காலச் சமதர்மத்துக் கும் காந்தீயத்துக்கும், ரஷிய சமதர்மத்துக்கும் துளியாகிலும் தொடர்பாவது இருக்குமா? ஏகம் ஒரே மிச்சர்தான் உங்கள் வாழ்விலே, சூயவரசயடளைவiஉ உடிnஉநயீவiடிn டிக டுகைந யனே வாந ருniஎநசளந என்ற இயற்கையோடியைழந்த வாழ்வைச் சீன நாட்டுப் பெரியோன் ஷுஷிக் மக்களுக்குச் சொன்னார். அதன் காரியமாக அவர் பாமரர்களிடையே நாத்திகப் பட்டமும் பெற்றார். ஆனால், நீரும் இயற்கை வாழ்வு என்று கூப்பாடு போடுகிறீர். ஆனால் உங்களுக்குப் பட்டம் என்ன தெரியுமா? விப்பிரரிடத்திலே ஸ்ரீ வி.க.தமிழ்ப் பெரியார் என்று, ``பாரத தேவி’’யிலே ஆதியந்தமில்லாத தமிழ், வி.க. பிரசங்கம் என்று நீங்கள் எங்கே? உங்கள் கொள்கை எங்கே? அறிவாளி ஷுஹிக் எங்கே? அன்னாரது உன்னத உலகப் படப் பிடிப்பு எங்கே? சுயமரியாதைக்காரன் உங்களை யும் அறிவான், உங்கள் அவதாரங்களையும் அலசுவான்.

தோழரே! ஏன் இந்தக் கோலம், எத்தனை நாளைக்கு இந்த நாடகம் செலாவணியாகுமென் பது உங்கள் நினைவு. வேண்டாம், தாயின் பண்பைச் சேய் அறியாதா? இன்னமும் காலம் அகாலமாகவில்லை. என்னமோ இன்னமும் சுயமரியாதைத் தாயாகிய நீர் சோரம் (தமிழன் இனத்துக்குச் சதி செய்யும் கூட்டத்தில் உறைதல்) போய்க் கொண்டேயிருக்கிறீர். இனியாகிலும் உம் நிலை உணர்ந்து உம் கணவனை நாடி வாரும். உம்மைக் கடியாது கனிந்து உம் தலைவனும் வரவேற்பார். ஒழுக்கம் தவறிய பெண்டிர் அக்காலத்தில் குமரி நீர் ஆடச் செல்வது போல உம்மை எம் தந்தை எந்நீராட்டாலும் செய்யார். ``ஐயகோ! கிழட்டுப் பருவமும் தட்டிப் போச்சே, இனி என்னால் யாது பயன்?’’ என்று மனச் சோர்வு அடையாதீர். ``சேய்க்கு மாறாக, தலை வனுக்கு எதிராக வினைகள் பல ஆற்றினோமே, இப்பொழுது எப்படி அவர்களிடம் சேர மனம் இடங் கொடுக்கும்’’ என்றும் ஆயாசப்படவும் தேவையில்லை. மனித வர்க்கம் நிமிடத்திற்கு நிமிடம் தன்னையறியாது பிழை பல செய்து கொண்டே இருப்பது இயல்பு. நீர் சேயிடத்தில் இற்றைப்பொழுதில் இருந்திருந்தால், கதகளி நடனமாது ருக்குமணி தேவியார், ``சங்கீதத்திலும் பாஷையை புகுத்துவது அசம்பாவிதம், நல்ல காலமாக அது இங்கு (அடையாறுகலா ஷேத்திரம்) தலைகாட்டவில்லை’’யென்று பேசியதைச் சகித்திருப்பீரா?

ஒரு சந்திரசேகர அய்யர், ஒரு சுப்பாராவ், ஒரு பல்லடம், ஒரு அரியக்குடி, ஒரு காயக சிகாமணி தமிழகத்தில் தமிழிசைக்கு எதிராக தீர்மானம் போட, ஒத்துத் தாளம் போட்டிருப்பீரா? ``ராஜா சர், மிகுநிதி படைத்தவர். ஆனால் அதைக் கொண்டு அவர் அரசியலில் செல்வாக்குப் பெற இயலாததால் தமிழிசை இயக்கத்தை ஆரம்பித் தார். கர்நாடக சங்கீதம் என்றால் சமஸ்கிருதம், களி தெலுங்கு இவைகளில் பாடுவதுதான் என்ற இது வரை தமிழ்நாட்டில் கருதப்பட்டு வந்தது. இப்பொழுது இந்த இயக்கத்தார் தமிழ்ப் பாட்டுத்தான் தமிழ்நாட்டில் பாட வேண்டுமென் கிறார்கள், ஆனால் `இந்து’ பத்திரிகை அதை எதிர்ப்பதால் பிளவு அதிகரித்துக் கொண்டிருக் கிறது.’’ என்று பம்பாய் வாரப் பத்திரிகையான போரம் (குடிசரஅ) எழுதுவதெல்லாம் உண்மை யென்றாவது கூறியிருப்பீரா? ``சரித்திரப் படியான கலப்பையும், அதன் விளைவான அபிவிருத்தி யையும் மறுக்க முயல்வதே தமிழிசைக் கிளர்ச்சி யாகும், இசையாலும், சாதியாலும் தனிமை கொண்டாட விரும்புவோர் உணவிலுங்கூட அவ்வாறு ஆரம்பித்தால் (நல்லவேளை, ஆச்சாரி கூறியத போல பார்பர் ஷாப்பைத் தொடவில்லை) ஜிலேபி, சட்னிவேண்டாமென்பாரோ?’’ என்று பிரிபிரஸ் ஜெர்னல் ஆசிரியர் கே.சீனிவாசன் என்ற ஆரியர் திராவிட நாட்டிலுள்ள ரானடே ஆலில் கூறியதற்கு ஒப்பம் வைத்திருப்பீரா? ``அக்காலத்தில் சாதி, மொழிப் பிரிவினை கிடையாது. (தேவாரத்தில் ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய் என்று பாடப்பட்டிருக்கிறது’’ என்று ஆரியத்தை ஆதரிக்கும் சைவ நூலை ஒருசங்கு சுப்பிரமணியன் துணைக்கழைத்துப் பேசிய சம்பவத்துக்கு நீங்கள் ``ஆமாம்’’ போட்டிருக்க முடியுமா? விக்ரமாதித்தன் யார்? யாருக்குத் தலைவன்? என்பது சரியாகத் தெரியவில்லை. ஏதோ சைன மதத்தினன், உச்சைனியில் ஆண்டான் என்று தெரிகிறது. எனினும் சரியான வரலாறு தெரியாத அவனது ஆட்சியை நாம் (ஆரியர்) வரவேற்கிறோம் என்றால் அது இந்தியர்கள் சுதந்திர தாகமுடைய வர்கள் என்பதைக் குறிக்கிறது’’ என்று ஒரு நீலகண்ட சாஸ்திரி தமிழகத்தில் பேசியிருக்க முடியுமா?

சமீபத்தில் திருவையாற்றில் நடைபெற்ற தியாகப் பிர்ம ஆராதனை உற்சவத்தில் எங்கும் பார்ப்பன சோதிதானாம். பேருக்குக் கூட ஒரு தமிழ் இசைவாணன் அக்கச்சேரியில் இடம் பெறவில்லையாம். தப்பித் தவறிச் சென்றிருந்த இரண்டொரு இளந்தமிழ் வித்வான்களுக்கு இடமில்லையென்று கண்டித்துக் கூறப்பட்டதாம். பாடிய பார்ப்பன இசைவாணர்களில் ஓரிருவர் ஏதோ நிலைமையைக் கருதி இடையில் தமிழ்ப் பாட்டு பாடிவிட்டார்களாம். அவ்வளவுதான். தியாகய்யர் விழாவில் தமிழுக்கு வேலை யென்ன? என்ற ஆரவாரம் கிளம்பிற்றாம். முகத்தில் முளைத்தவரிடமிரந்து, அன்பரே, இனியேனும் சுயமரியாதைக்காரனென்ற சேயோடு வாழ முயற்சியும், தாயின் நிலையைக் கண்டு சேய் வருந்துகிறது. சேயோ தாய்க்குக் கைக்கு உயர்ந்த பிள்ளையாகிவிட்டது. இனி, நீர் பிறந்த விழாவன்று சென்னையில் கூறியது போல் உம்மை நோக்கிச் சேய் வராது. தந்தை சொல்மிக்க மந்திரமில்லையென்ற மொழியையே கடைப்பிடித்து விட்டது. ஆகையால் நீர்தான் சேயை நாடிச் செல்ல வேண்டும். என்னமோ எனக்குப் பட்டதைச் சொன்னேன். அப்புறம் உம் தலையெழுத்து(?) நான் என்ன செய்யட்டும்.

இங்ஙனம்
அன்பு மறவா நீலன்

(திராவிட நாடு - 27-2-1944)