அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


நீங்களே கூறுங்கள்
என்றோ ஒருநாள் தேவையான இயந்திர சாதனம் கண்டுபிடிக்கப்படாத நிலையில், விஞ்ஞான ஒளி வேண்டிய அளவிற்கு வீசாத காரணத்தால், நம் மக்கள் முக்கிய உணவுப் பொருளான நெல்லைக் கையினாலேயே குற்றி உமியை நீக்கி அரிசியாக ஆக்கவேண்டி இருக்கிறது. மிருகத்திலும் கேவலமாக உழைக்கவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. ஆனால், காலப்போக்கில் புரட்சிகரமான இயற்திர சாதனங்கள் ஏற்பட்டுவிட்ட காரணத்தால், பலர் சேர்ந்துகொண்டு கைகள் வலிக்கத் தோள்கள் சோர, வியர்வை ஆறாகப் பெருகப் பாடுபட்டாலும், பயன் அதிகம் கிடைக்காமல் திண்டாட வேண்டிய நிலைமாறி, நினைத்த மாத்திரத்தில் வண்டி வண்டியாக நெல் இருந்தாலும், சில நிமிஷங்களில் அதிகக் கஷ்டமில்லாமல், அரிசியாக மாற்றிவிடும் இயந்திரத்தை நாடினர். கையினால் நெல்குற்றுகிறவர்களுக்குத்தான் தெரியும், அதிலுள்ள சிரமமும், அத்தொழிலில் தாங்கள் பெறும் வருவாயின் குறைவும். இயந்திரத்தில் தீட்டிய அரிசியில் ஜீவசத்துப் போய்விடுகிறது; கைக்குற்றல் அரிசியில் அவ்வாறு நேருவதில்லை, அதை உண்ணும் மக்கள் தான் ஆரோக்கியமாக அதிகக் காலம் வாழ்வார்கள் என்பனபோன்ற சுகாதாரப் பிரசாரம் செய்கிறவர்கள் கையில், உலக்கையையும் ஒரு மூட்டை நெல்லையும் கொடுத்துக் குற்றிக் கொடுங்கள் என்று கட்டளையும் பிறப்பித்தால், முன்னர்த் தாங்கள் ஆற்றிய சுகவழிப் பிரசாரத்திற்கு நேர் விரோதமாகப் பேசக்கிளம்பி விடுவார்கள். இயந்திரத்தில் தீட்டும் அரிசியில் ஜீவசத்துப்போய் விடுவதாக இருந்தால், வேறு ஜீவசத்து நிரம்பியுள்ள பொருளை உட்கொள்ள உபதேசிப்பதும், அனைவரும் அப்பொருட்களை இலகுவாகப் பெறுவதற்கான வாழ்க்கைத் தரத்தைத் தோற்றுவிப்பதற்கான முயற்சியை மேற்கொள்வதுமே முறை. இந்தச் சிறந்த முறையை விட்டு விட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு, பாடுபடுகிறவர்கள் பரிதாபத்தை அறியாது, துளியும் இரக்கமற்ற நெஞ்சினராய், அவசியமற்ற பேச்சைப் பேசிக்கொண்டும், காலத்தைப் பழித்துக்கொண்டும் இருப்பது கூடாது. மனிதனுடைய உழைப்பை, நேரத்தைக் குறைத்துச் சுகமளிக்கும் இயந்திர சாதனங்களைத்தான் மக்கள் நாடுவர். இயந்திரங்கள் ஏற்பட்டதும் அதற்காகத்தான். சிலரின் பணப்பெட்டியை பளுவாக்குவதற்காக அல்லவே அல்ல.

தக்களியிலும் இராட்டையிலும் மக்களில் சிலருக்கு என்றென்றும் ஊக்கம் குன்றாமல் இருப்பதுபோலக் காணப்படலாம். வேறுசிலர் இது பற்றி, நாட்டுமக்களின் செல்வ நிலையை உயர்த்துவதற்கு இதனைக் காட்டிலும் வேறு பொருளியல் முறை கிடையாது என்று மேல்நாட்டினருக்கும் விளக்கம் கூறலாம். இராட்டையைச் சுழற்றினால், அவ்வாறு சுழற்றுகிறவர்களுக்குத் தூயசிந்தனை, உயர்ந்த ஒழுக்கம், அன்பில் இச்சை, அறத்தில் நாட்டம், தன்னடக்கம் முதலிய அருங்குணங்கள் அமைகிறது என்று கந்தபுராணத்திலும் இல்லாத அளவிற்குப் புளுகாகலாம். ஆளவந்தார்களும், வரிப்பணத்தைத் தக்களியும் இராட்டையும் செழித்தோங்க வாரி இறைக்கலாம்.

ஆதாரக் கல்வி என்னும் பெயரால், பள்ளியில் பயிலும் சிறார்களை வாரத்தில்சிலமணிநேரமாவது, தக்களியில் நூல் நூற்கக் கட்டாயப்படுத்தலாம். தக்களியின் ‘புதுமை’ யைக்கண்டு ஆரம்பத்தில் அச்சிறுவர்கள் நூல் நூற்பதில் ஆர்வம் குன்றாமல் இருக்கலாம். இந்தப்பெரிய வித்தையைப் பயிற்றுவிக்கும் பண்பு படைத்த ஆசிரியரும், இதுகுறித்து அவர் நெஞ்சில் எத்தகைய நேர்மையான நினைப்புத் தோன்றினாலும், அதனை வெளிக்குக்காட்ட அஞ்சி, போதிக்கும் வேதனையைப் புறக்கணித்து நடக்கமுடியாத நிலையில், காலத்தை நொந்துகொண்டு மௌனியாகக் காலங்க கழிக்கலாம்.

கட்டாய இந்திநுழைப்புப் பற்றித் தங்கள் கருத்துகளை வெளியிடும் தமிழ் ஆசிரியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்துக்கொள்ளப் போவதாக ஆளவந்தார்கள் அறிவித்து விட்ட பிறகு, அலுவல் பார்க்கும் ஆசிரியர்களுக்கு அவர்கள் அறிந்த உண்மையை எடுத்துக்கூற வாக்கு உரிமை மறுக்கப்பட்ட
பின்னர், அலுவல் பார்க்கும் எவர்தான் எது குறித்துத்தான் வாய்திறந்து சொந்த முடிவைத் தெரிவிக்கப் போகிறார்கள். வாயில் ஊமையராக அவர்கள் காலங்கழிக்க வேண்டியதுதான்.

பலகாலமாக விடுதலையோடு வாழ்ந்துவரும் எந்த நாட்டிலாவது, தக்களியும் இராட்டையும் நாட்டுப் பற்றை உண்டாக்குகிறது என்று சொல்லிக்கொண்டிருக்கும் நபர்கள் அதிகார பீடத்தில் அமர்ந்திருக்கிறார்களா? பள்ளியில் அமர்ந்திருக்கிறார்கள். பள்ளியில் பயிலும் சிறுவர்கள் கையில் தக்களியைக்கொடுத்து ஆசிரியர்கள் கையில் இராட்டையைக் கொடுத்து, நாட்டுப் பற்றையும் தொழிற் கல்வியையும், இளமையிலிருந்தே மக்கள் கற்றுத்தேர்வதற்காகத் தீட்டப்பட்டுள்ள அருமையான திட்டத்தைப் புகுத்தியுள்ள பள்ளிக்கூடமும், இத்தகு திட்டங்களைத் தீட்டித்தரும் கல்விக் களஞ்சியங்களும், அதனை நிறைவேற்றுவதற்கென அதிகார பீடத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கும் விசித்திர மூளை அமைந்துள்ள அமைச்சர்களும், இதுபற்றிக் கவலை எதுவும் இன்றி, ‘என்னால் ஆவது இனி ஒன்று இல்லை; எல்லாம் அவன் செயல்’ என்று பாசுரம்பாடிக் காலங் கழிக்கும் மக்களும் நிரம்பியுள்ள நாடு, வேறு எங்காவது இருக்கிறதா?

ஒன்றுக்கும் உதவாத இந்தப்பயன்படா முறைகளைப் புகுத்திச் சிறுவர்களைச் சித்திரவதை செய்வது ஒருபக்கம் இருக்க, அதே நேரத்தில் இந்த நாட்டில் பெரியபெரிய தொழிற்சாலைகளை நிறுவப்போவதாகவும், அதற்கான இயந்திரக் கல்வியின் நுணுக்கங்கள் தெரிந்தவர்களைப் பயிற்றுவிக்கப் போவதாகவும் படாடோபமாகப் பேசுகிறார்கள். எவ்வாறு சாத்தியமாகுமோ நாம் அறியோம்!

மற்ற நாடுகளில் மாணவ மாணவிகளுக்குக் கல்வி கற்றுக்கொடுக்கும் முறைக்கும், இங்குள்ள கல்விமுறைக்கும் உள்ள வேறுபாடு, மிகப்பெரிய, ஒன்றுக்கொன்று எந்தவகையிலும் பொருந்தாது. அங்குப் பழைமைக்கு இடமில்லை. இங்குப் புதுமைக்கு இடமில்லை. ஆனால், இங்குப் பழைமையையும் புதுமையையும் ஒன்றாகப் பிணைத்து, மோரில்வெண்ணெய் தேடுவதுபோல் உருவற்ற காரியங்களைச் செய்வதில் ஈடுபடுகின்றனர்.

மேலே குறித்துள்ள படத்தில், ஆர்வமிக்க சிறுவன் ஒருவனுக்கு, ஒரு விமானத்தின் சிறு உருவத்தைக் காட்டி, அதுபற்றி விளக்கத்தையும் கூறுகிறார். அந்த விமானம் மணிக்கு 144 மைலுக்கு அதிகமாகப் பறக்கக் கூடியதாம். அதற்கு ‘ஜக்கெர்நாட்’ என்று பெயரிடப்பட்டிருக்கிறதாம். இலண்டன் நகரில் நடந்த பொருட் காட்சிச் சாலையில் இது நடக்கிறது.

ஆனால்!

இங்கு?

தக்களி தரப்படுகிறது.

கை இராட்டை, அதனினும் உயர்ந்தது என்று கூறி, அதுபற்றி விளக்கமும் பயிற்சியும் தரப்படுகிறது!

அங்குக் காலத்துக்கேற்ற கல்வி தரப்படுகிறது.

இங்கு?

அதுவும் விடுதலை நாடுதான்!

இதுவும் விடுதலை நாடுதான்!

ஏன் இந்த வேற்றுமை! அங்குத் தரப்படுகிற கல்வி, காலத்திற்கும் அறிவியல் பண்பாட்டிற்கும் ஒத்ததாக இருக்கிறது. ஆனால், இங்குத் தரப்படும் கல்வி, குறைந்தது ஏழெட்டு நூற்றாண்டுகளுக்கு முற்பட்டதாகவும், புதுமையைக் கண்டு அருவருப்புக் கொள்ளக்கூடியதாகவும் இருக்கிறது!

அங்குப் புத்துலகிற்குப் பாதை அமைத்துத் தருவதாக இருக்கிறது.

இங்குப் பழைமைக்குப் பலந்தேடுவதாக இருக்கிறது.

படத்திலே காணும் சிறுவனுக்கு, அந்தப் பொம்மை விமானத்தைக் கண்டதும், அவன் உள்ளத்திலேயே எந்தெந்த வகையான கனவுகள் தோன்றக் கூடும்? தக்களியைக் கண்ட தம்பிக்கு, எந்த வகையான கற்பனைகள் பிறக்கும்?

படத்தில் பார்க்கும் சிறுவனுக்கு, சந்திர மண்டல யாத்திரை, அதற்கான முயற்சியை மேற்கொள்வது, வேண்டிய கருவிகளைக் கண்டு பிடிப்பது, இன்னும் இவை போன்ற தேவைப்படும் இன்பக் கனவுகள் அன்றே தோன்றும்?

நம் தம்பியின் நினைப்பும் முனைப்பும் செயலும் எதிலே சென்று படியும்?

ஆகாய விமானத்தைக் காணும் சிறுவனுக்கும், அது போன்ற கல்வி பயின்ற மற்றவர்க்கும் நாட்டுப் பற்று இல்லாமல் போய் விட்டதாக எவராலாவது சொல்ல முடியுமா? அல்லது, தக்களிக்குத்தான் நாட்டுப்பற்றுத் தெரியும், ஆகாய விமானத்துக்குத் தெரியாது என்று எவர்தான் கூற முந்துவர்?

இன்றைய உலக நிலையில் எந்தக் கல்வி தேவையானது, எதனை நம் சிறுவர்களுக்குப் போதிப்பது நியாயமானது என்பதை நீங்களே சொல்லுங்கள் - வேண்டாம் வேண்டாம் - சிந்தியுங்கள்!

படிப்பான், புகழோடு வாழ்வான் என்னும் நம்பிக்கையோடு, பெற்ற சிறுவர் சிறுமியர்களைப் பள்ளிக்கனுப்பும் பெற்றோர்களே, போதிக்கும் ஆசிரியர்களே, அதிகாரத்தின் துணை கொண்டு ஆகாத் திட்டங்களைப் புகுத்திச் சிறுவர்களைச் சித்திரவதை செய்யும் சீரற்ற அமைச்சர்களே, நீங்கள் தனித்
தனியாகவோ ஒன்றுகூடியோ சிந்தித்துக் கூறுங்கள் எது நியாயம் என்பதை!

(10.10.1948)