அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


நீர் நஞ்சாயிற்று!
பாம்பு தீண்டிற்று இறந்தான் - விஷம் குடித்தான் இறந்தான் - என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம், இதனால் ஆச்சரியம் கொள்வதில்லை - கொள்ளத் தேவையுமில்லை. ஆனால், தண்ணீர் குடித்து இறந்தான் என்றால், எவர்க்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஏதோ தண்ணீர் அசுத்தமாக இருந்திருக்கும்; உயிர் கொல்லும் கிருமிகள் அதில் இருந்திருக்க வேண்டும்; அதனால்தான் அந்நீரைக் குடித்தவன் இறந்தான் என்று சிலர் வாதிட முற்படலாம். ஓரளவிற்கு - ஏன் - பெரும்பாலும் அது உண்மையாக இருக்கக்கூடியதுதான். ஆனால், நாம் சொல்லும் பேர்வழி நல்ல தண்ணீரை அனைவரும் குடிப்பதற்காக என ஏற்படுத்தப்பட்டுள்ள குழாய்த் தண்ணீரைத்தான் குடித்தான்; ஆசை தீரக் குடித்தான்; வயிறு நிறையக் குடித்தான். முடிவு என்ன? சில நிமிடத்திற்கெல்லாம் உணர்வு இழந்தான்; உடல் வியர்த்தது; பரிசோதித்துப் பார்த்ததில், பிணமாய்விட்டான் எனத் தெரிந்தது.

அவன் யார்? தண்ணீர் குடித்து ஏன் பிணமானான்? திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள கயத்தாறு எனும் கிராமத்தவன் அவன். பலநாள் பட்டினி. மதுரைக்குக் கால்நடையாக வந்த பலரிலே அவன் ஒருவன். மீனாட்சி தரிசனத்திற்காகச் செல்லவில்லை. வேலை ஏதாவது கிடைக்காதா எனும் நோக்கத்தோடு மதுரைக்குச் செல்லத் துணிந்தான். வழியிலேயே, விருதுநகரில் புகைவண்டி நிலையத்தில் தண்ணீரைக் கண்டதும், பசித்தீயைத் தணித்துக்கொள்ள நீரைப் பருகினான். உடல் உயிரைவிட்டுப் பிரிகிறவரையில் பருகினான்.

வேலையில்லை, பணங்கொடுத்தாலும் அரிசி கிடைக்கவில்லை, இந்நிலையில் குறைந்தளவானாலும் ஏதோ கொடுத்துத் தீரவேண்டும் எனும் கடமை உணர்ச்சி கொண்டிருந்த அரசாங்கமும், பற்றாக்குறைப் பகுதிகளுக்குப் பங்கீட்டை எடுத்து விடுகிறது. மண்ணுக்கு இரையாகும் கட்டைதானே, தண்ணீரைக் குடித்துத்தான் காலங்கழிக்கட்டுமே எனும் உயர்ந்த நோக்கமே ரேஷன் விலக்குக்குக் காரணம் போலும்!

(திராவிட நாடு - 28.12.47)