அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


நீதி சிரித்திடும் காட்சி

ஆளவந்தார் விழித்திடும் கோரம்

நமது சர்க்காருக்கும், நீதிக்கும் நெடுநாள் பகைதான் போலும்! இல்லாவிட்டால், ஆளவந்தார் எடுக்கிற நடவடிக்கைகள் எல்லாம், நீதமன்றத்தில் பொடிப் பொடியாகின்றனவே-ஏன்? ‘வீம்புக்கு’ பல விபரீதங்களில் கால்வைத்து விடுகின்றனர். பிறகு நடக்கவும் மாட்டாமல் ‘பேந்த பேந்த’ விழிக்கின்றனர்.

நம்மீது பாய்ந்து பாய்ந்து பிறகு ஓய்ந்து போன சந்தர்ப்பங்கள் உண்டு. பொதுச்செயலாளர் அண்ணாதுரை தீட்டிய ‘இலட்சியவரலாறு’ என்ற நூலின் மீது வகுப்புத் துவேஷத்துக்குற்றம் சாட்டினர். வழக்கு நடந்தது. பிறகு, நீதி மன்றம், இதில் குற்றம் ஏதுமில்லை என்று தீர்ப்பளித்துவிட்டது. முகத்தில் கரியைப் பூசிக்கொண்டது. இ“ந்த ஆட்சியாளக் கும்பல்! நம் ‘திராவிட நாடு’ வார இதழ் மீதும் தங்கள் அடக்குமுறை ஈட்டியை வீசி, தங்களது அதிகாரத் ‘திமிரை’க் காட்டினர். ரூ.3000 ஜாமீன் தொகை கேட்டனர். கட்டினோம். வழக்கு தொடர்ந்தோம். அதிலேயும் இந்த ஆளவந்தார்கள் மூக்குடைந்தனர். தோற்றனர். பணத்தைத் திருப்பித் தரும்படித் தீர்ப்பளித்தனர். இதுபோலத் தான், ‘கருப்புச்சட்டை ஒழியவேண்டுமா? என்ற நூல் மீது நடந்த வழக்கிலும், சர்க்கார் படுதோல்வி கண்டது ஆகவேதான் நீதியை மதிக்காத இவர்களிடம் ஆட்சி சிக்கிவிட்டது என்று நீதியில் நம்பிக்கையுள்ளவர்கள் நினைக்கின்றனர் வருந்துகின்றனர்.

‘தேசாபிமானி’ என்றொரு தினசரி, மலையாள மொழிப்பிரதேசத்தில் வந்துகொண்டிருக்கிறது. அந்தப் பத்திக்கைக்கு ரூ.10000 கேட்டு விட்டது. இந்த ‘சுதந்திர’ சர்க்கார். அதனை நடத்தும் தோழர்கள், வழக்கு தொடுத்து விட்டனர். சர்க்கார் மீது வழக்கு நடந்து வந்தது.

கடைசியாக உயர்நீதி மன்றம், சர்க்கார் உத்திரவை ரத்து செய்து விட்டது! வெட்கம்! நீதிக்கு, இனியாவது தலை வணங்கட்டும் இந்த நிலைமை தெரியாது, ‘கதகளி’ ஆடும் ஆளவந்தார் என்பதுதான் நமது ஆசை.

(திராவிடநாடு 17.12.50)