அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


நானிலம் போற்றிடும் நவம்பர் 7 எனும் நன்னாள் இன்று!

மகத்தான புரட்சி, மாநிலம் மருண்டிடும் புரட்சி, ஏற்பட்ட நாள், 1917, நவம்பர் 7!

வீரலெனின், பொறியைத் தீயாக்கி, சோவியத் செஞ்ஜோதியைக் கிளப்பிய திருநாள்!

பொது உடைமை என்பது புண்பட்ட உள்ளத்துக்கு மருந்து, புவியினுக்கோ புது விருந்து, வறுமை எனும் நச்சரவை மாய்க்கும் பருந்து, என அருள் சுரந்து, அவனியோருக்கு, சோவியத் மக்கள் சொன்ன நாள், 7, நவம்பர்!

மதுக்கிண்ணங்கள் கீழே வீழ்ந்தன! மங்கையரின் மலரடியை வருடிக் கொண்டுகிடந்த மதிகேடர்களின் மாளிகைகள் அதிர்ந்தன! கொடுங்கோலரின் குலை நடுங்கிற்று! கோலாகல வாழ்வினருக்குத் தொடை ஆடிற்று, நவம்பர் 7ல்!

பழமை ஓடிற்று! புதுமை ஓங்கிற்று. வஞ்சகம் அழிந்தது! சமரசம் சிரித்தது! ஏழையின் கண்ணீர் நின்றது! ஏய்த்துப் பிழைப்போரின் குருதி ஆறென ஓடிற்று! எமதே வாழ்வு, அடைந்தே தீருவோம்! என்ற எக்காளம் எங்கும் முழங்கிற்று, ஏங்கிய மக்களை எழுப்பிய ஏழாம் நாள், நவம்பர் திங்களில்!

விதி, கதி, என்ற வீணுரை, ஆணவக்காரர் அகதிகளை ஏய்க்கக் கோர்த்த சதியின்றி வேறன்று, என்று கூறி, பாட்டாளி மக்களே! பாடுபடும் தோழர்காள்! வாடிடும் நண்பர்களே! வாருங்கள் வெளியே! உரிமைக்காகப் போரிடுங்கள், வாகை சூடுங்கள்! என்று வீரமுரசு வீறிட்டுக் கிளம்பிய நாள், நவம்பர் 7!

மாதா கோயிலின் மணியோசை, பூசாரிகளின் அர்ச்சனை, பக்தர்களின் பாசுரம், வேதாந்திகளின் விருத்தம், கலாவாணரின் கவிதை, எதுவும், மாற்றவோ அழிக்கவோ முடியாததால், ஓங்கி வளர்ந்து, கிளைவிட்டுக் கொழுத்து, விழுதுடன் நின்ற, ஏழ்மை எனும் விஷவிருட்சம், கீழே விழ, நவம்பர் 7-ந் தேதியன்று, கிளம்பிற்று ஒரு சண்டமாருதம்!!

ஏழை என்றும் அடிமை என்றும் எவனுமில்லை மனித சாதியில்! என்ற புதுமொழி பிறந்தது! சாய்ந்தான் ஜார், வீழ்ந்தான் வைதிகன், ஒழிந்தான் ஓடப்பரை உற்பத்தி செய்யும் ஒய்யாரச் சீமான் என்ற முழக்கம் கேட்டது.

உழைத்தோம், வாழ்ந்தோம், என்பதைக் கெடுக்கும் கயவரை அங்கு காணமுடியாது! உழைப்புக்கும் செல்வத்துக்கும் இடையே நின்று தரகுவேலை செய்து, தங்கத் தாம்பாளத்திலே, வைர மாலையை வைத்து, பூங்கொடியாளுக்குக் கொடுத்து, அவளுடைய புன்னகை எனும் போதையைப் பருகிக் கேளிக்கை எனும் கேணியில் வீழ்ந்திடும் வீணர் அங்கில்லை! மாளிகைக்கருகே, மண்மேடு இல்லை! மந்தகாச வாழ்வுக்கருகே மனிதப்புழுக்கள் இல்லை! சோம்பேறிச் சீமான்களும் சோர்ந்து விழும் அனாதைகளும் இல்லை! ரஷிய நாட்டிலே, மனிதர் உண்டு, மானம் உண்டு, வாழ்வு உண்டு, மதி உண்டு; விதி என்பதில்லை; நம் கதியாதோ என்ற பேச்சு இல்லை; நாசச்சதி புரிவோர் அங்கு இல்லை! ஆண்டவனைத் தொழுது அலுத்த கரங்கள் இல்லை! புத்தம்புதிய நிலை, புண்ணிய பாவத்தை விரட்டிய நிலை, தத்தளிப்பைத் தவிர்த்த நிலை, தாசர் நீசர் எனும் பேச்சை ஒழித்த நிலை, என் செய்வோம் என்பது இல்லாத நிலை, எவருக்கும் இன்ப வாழ்வு உண்டு என்ற சித்தாந்தம் ஏற்பட்ட நிலை, நவம்பர் 7 எனும் நன்னாள் நடைபெற்ற, புரட்சியின் பயனாக ஏற்பட்டது - சோவியத் ரஷியாவிலே! அந்த ஒளி குவலயமெங்கும் வீசலாயிற்று! புது அறிவு பிறக்கலாயிற்று!!

நவம்பர் 7 எனும் நன்னாள், எந்தக் கேட்டினைக் களைய ஏற்பட்டதோ, அதே கேட்டினைக் களையும் வீரம், நானிலமெங்கும் பிறந்திடல் வேண்டும்; இந்த நாள் மகத்துவத்தைத் தீவிர இளைஞர்கள் உணர வேண்டும். லெனின், 1917, நவம்பர் 7ந் தேதி நடத்திக்காட்டிய புரட்சியைத் திருநாளாகக் கொண்டாடுவது புத்துலக அமைப்புக்கு வழி கோலுவதாகும்.

உலக சரிதத்திலே, மிக முக்கியமான இடம் பெற்ற நவம்பர் 7 எனும் நன்னாளன்று, சோவியத் மக்களின் சோர்விலா உழைப்பையும், வீரத்தையும், தியாக உணர்ச்சியையும், பாராட்ட யாவரும் கடமைப்பட்டுள்ளனர்.

வாழ்க சோவியத்!

7.11.1943