அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஓடுது பார்!

ஓடுது பார், வேகமாய் எங்கும் ஓடுது பார்! என்று களிப்புடன் பாடி, விழாக் கொண்டாடி வெற்றி வாடை வீசக் கண்டு, மக்கள் முக மலரும், வெற்றி செய்திகள், கடந்த பத்து நாட்களாகக் கிடைக்கின்றன. ஸ்டாலின் சிராட், லெனின் கிராட்... வாரனேஷ், சாகசஸ் முர்மான்ஸ்க் ஆகிய பல இடங்களில் ஜெர்மன் படைகள், பிடரியில் கால்பட, பின்வாங்கி ஓடுகின்றன. பெருநஷ்டம், சொல்லாணாக் கஷ்டம். டான், வோல்கா நதி தீரங்களில் நாச நாட்டியமாடிய நாஜிப் படைகள் இப்போது சோவியத் ஜ்வாலை சுற்றி வளைத்துக் கொண்டிருக்க கண்டு, தப்பும் வழி தெரியாது... தலைவனை நம்பித் தலையிழக்கிறோமே என பிணங்களின் மீது உருண்டு, குளிரால் சுருண்டு கண் இருண்டு கலங்குகின்றன. மூன்று மாதத்திற்கு மேலிருக்கும் இத்தகைய `முக்தி’ தரும் சக்தியினால் தாக்கப்பட்டுள்ள நாஜிகள் ... இருபதாயிரம் சதுர மைல் விஸ்தீரணமுள்ள சோவியத் களத்திலே, ரஷியா தமது வீரத்தாலே, வீவேகத்தாலே, வெறி கொண்ட பெர்லின் பேயரை இடித்து அடித்து, இழந்த இடங்களை மீட்டுக் கொண்டு, எதிரியைப் பிடித்திழுத்துப் கைது செய்து வருகின்றனர். புலி வேட்டைக்குப் போய் கிலியில் சிக்கிய கதை போல், ஆப்பசைத்து விட்டு மதியிழந்த மந்தி போல், தீயிலே கால் வைத்து விட்டு திக்கு முக்காடும் கள்ளன் போல, நாஜிப் படை திணறுகிறது. டாண், வோல்கா நதிகளிலே, சோவியத்காரர்கள் தமது இரத்தம் புரண்டோடும் அளவு வேகமாக போரிட்டனர். ஸ்டாலின் கிராட், சோவியத்தின் கண் என்று கருதிக் காத்தனர்.’’ எங்களது படைகள் ஒரு ஊருக்குள் நுழைந்தன என்றால் பிறகு அவைகளை விரட்ட யாரால் முடியும்?’’ என்று கேட்ட அடாலப் ஹிட்லரே, இதோ உமது படை ஓடுது பார், வரிசை குலைந்து வகை கெட்டு! எங்கெங்கு முழக்கமிட்டனரோ, அங்கெல்லாம் அழு குரல், வெற்றி கண்ட இடமெல்லாம் இன்று வேதனை. வீரர் என்று விளம்பரம் பெற்றவர் இன்று கோழையாகி, பதைத்துப் பயந்து ஓடும் உமது படையைப் பார்!

மூன்றே வாரத்திலே, மாஸ்கோவிலே சுவஸ்திகக் கொடி பறக்குமென்று பேசிய சூரனே, உன் படை ஓடும் வேகத்தைப் பார்!’’ என்று சோவியத் மக்கள் கூறிப் பூரிக்கின்றனர். பெர்லினுக்குக் கிடைக்கும் இடி இது மட்டுமா! வட ஆப்பிரிக்கா முனையிலோ ஜெனரல் ரோமல் ஓடிய ஓட்டத்தின் வேகம், எவ்வளவு மனமுறிவைத் தந்திருக்கும்.

வழக்கப்படி நடக்கும் `வாண வேடிக்கை’ பிரிட்டன் குண்டு வீச்சு, ஜெர்மன், இத்தாலிய நகர்கள் மீது நடந்த வண்ணமிருக்கிறது. ஜப்பானின் ஜம்பமோ, தலை நீட்டினால் மட்டந் தட்டு கிறார்கள்.
இந்நிலையிலே, நேச நாடுகள், வெற்றி பெறுமென்று எவர் துணிந்து கூற முன் வாரார் என்று கேட்கிறோம். இவ்வளவு அச்சுத் தோல்விகளைக் கேட்ட பிறகேனும், நெஞ்சிலே நச்சுக் கொள்கை கொண்டுள்ள வஞ்சகக் கூட்டம் வால் சுருட்டி வளை தேடி வாழட்டும், வகை யிருப்பின் என்று கூறுகிறோம்.

இரவு பகலாகி விட்டது என்று ஜெனரல் ஸ்மட்ஸ் கூறுகிறார். அழகிய கருத்து அழகுறக் கூறப்பட்டது. இதைவிட, அழகியதோர் வாசகம் நமது நினைவிற்கு வருகிறது. சோவியத் தலைவன் சோர்விலா வீரன், சமதர்மத் தீரன், ஸ்டாலின் கூறினார் நவம்பர் 7-ந்
தேதி, சோவியத் புரட்சியின் இருபத்தைந்தாம் ஆண்டு விழாவின் போது, செஞ்சேனையின் சக்தியை உலகு உணர்ந்து கொண்டது, செஞ்சேனையின், தாக்கும் சக்தியை எதிரி உணரும் காலம் பிறக்க வெகு நாட்கள் இல்லை. நாங்கள் `தமாஷ்’ அனுபவிக்கும் நேரம் ஒரு நாள் வரத்தான் போகிறது.

என்று கூறினார். உலகமே `தமாஷ்’ அனுபவிக்கிறது, அந்த உத்தம வீரன் குறிப் பிட்டபடி! ஓடுது பார், ஜெர்மன் படை, பின் வாங்கி ஓடுது பார்! என்று உலகம் உவகையுடன் கூறுகிறது! ஒழிக அச்சு நாட்டு நச்சரவு! ஓங்குக நேச நாடுகள்!!

(திராவிட நாடு - 29.11.1942)