அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஓமந்தூரார்!

1. பொதுஜன பாதுகாப்புச் சட்டத்தை வாபஸ்பெற வேண்டும்.

2. அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும்.

3. மந்திரிகள், சட்டசபை மெம்பர்களின் சம்பளம் குறைக்கப்படவேண்டும்.

4. மில்தடைக் கொள்கையைக் கைவிட்டுவிட வேண்டும்.

5. ஆசிரியர்கள் சம்பளம் உயர்த்தப்படவேண்டும்.

6. போலீஸார் சம்பளம் உயர்த்தப்படவேண்டும்.

7. பட்டாளத்திலிருந்து திரும்பினவர்களுக்கு வேலை தரவேண்டும் அதற்காகத் தனியாகத் தொழிலை அமைக்கவேண்டும்.

8. உழவர்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் வாழ்க்கைத்தரம் நாகரிக அளவுக்கு உயர்த்தப்பட்டு, அதற்கு ஏற்ற அளவு உதியம் தரப்படவேண்டும்.

9. ஜெமீன்முறை ஒழிப்பைத் துரிதப்படுத்தவேண்டும்.

10. மதஸ்தாபனங்களிலே முடங்கிக் கிடக்கும் சொத்துக்களை புதிய தொழில்கள் அமைக்க உபயோகிக்கவேண்டும்.

11. புதிய சமூக அமைப்புக்கு மக்களைத் தயார் செய்வதற்காகத் தனியாக ஓர் மந்திரியை நியமிக்கவேண்டும்.

12. உணவுப் பொருள்கள், ஏழை மக்களின் உடைகள், ஆகியவற்றுக்கு, விற்பனைவரி கூடாது என்று சட்டத்தைத் திருத்தவேண்டும்.

13. கிண்டி குதிரைப் பந்தயம், சூதாடுமிடங்கள், ஷோ முதலியவைகளைத் தடுக்கவேண்டும்.

உடனடியாகச் செய்யவேண்டியவைகளில், முன்வரிசைக் குரியவைகளைக் குறித்திருக்கிறோம்.

இவைகளைப் புது மந்திரிசபை செய்யவேண்டும் என்பது பொது மக்கள் வேண்டுகோள் பிரகாசம் மந்திரிசபை மாறிவிட்டது. புதியவர்கள் இளவந்திருக்கிறார்கள் புதிய திட்டம் கிடைக்குமென்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஓமந்தூரார், சாது, சாந்தசீலர், கண்ணியமானவர் என்று பெயரெடுத்தவர்.

குட்டிக் குழப்பங்கள், கலகச் சூழ்நிலை ஆகியவைகளுக்கு அப்பால் நிற்பவர்.

ஏழைகள் ஈடேறவேண்டும் - அதற்காகப் பணிபுரிவதே தெய்வத்தொண்டு என்று எண்ணுபவர்.
இவ்வாறெல்லாம், பதிய முதலமைச்சரைப் பற்றிக் கூறப்படுகிறது.

இந்த நல்லுரைகளைப் பொய்ப்பித்து விடாதபடி, புகழுடன் விளங்கவேண்டும். இதற்குக் ‘காங்கிரஸ் சேவை’ மட்டும் செய்தால் போதாது! சாந்தம் மட்டும் போதாது! சிக்கல்கள் ஏற்பட்டாலும் சமாளித்துக் கொண்டு, மக்கள் முன்னேற்றத்தையே குறிக்கோளாகக் கொண்டு பணிபுரிய வேண்டும்.

மாஜி முதலமைச்சர் பிரகாசம், இந்திரத்தின் கேசர் - ஆகிய இந்திய அரசியல் சபைகளிலேயும் அவரைப் பலர் அறிவர் - பிரபல வக்கீல் - பெரிய பத்திரிகை ஆசிரியர் - போர் வீரர்!

ஓமந்தூராரைவிட மக்களுக்கு அதிகமாக அறிமுகமானவர்

பத்து மாதங்களிலே - பதவியை இழக்க நேரிட்டது.

ஏன்? ஏன் இழந்தார்?

ஓமந்தூராரின் உள்ளம், இதை ஓயாது கவனிக்க வேண்டும். இந்த வீழ்ச்சியிலே புதைந்துள்ள சூட்சமத்தை உணர்ந்து, மக்களின் முன்னேற்றத்துக்கான காரியத்தைச் செய்ய துணிவுடன் செயலாற்ற வேண்டும்.

கட்சியினரின் கருத்துதான் நாட்டு மக்கள் கருத்து என்று முடிவு கட்டிவிடாமல், காங்கிரஸ் மேடைகளிலே பேசப்பட்டுவந்த திட்டங்களால் மட்டுமே நாடு உடேறும் என்று அவசர முடிவுக்கு வந்துவிடாமல், ஓமந்தூரார், கட்சியிலே இல்லாமற் போனாலும், குறிப்பிட்ட விஷயங்களிலே தனியறிவு பெற்றவர்களாக உள்ளவர்களைக் கலந்தாலோசித்துக் காரியமாற்ற வேண்டும்.

சட்டசபையிலே மெஜாரிட்டி இருக்கிறது - பிரகாசம் பிரிவினர் எதிர்ப்பு உண்டாக்கினால்கூடத் தாங்கக்கூடிய பலம் இருக்கிறது என்று மட்டுமே எண்ணிப் புள்ளி விவரக் கணக்காலே பூரிப்படைவது கூடாது. “நாட்டிலே புதிய கருத்துக்கள் பரவுகிற நேரம்! புதியதோர் நிலை பெறத் துடிக்கும் மக்கள்? இதன் பிரதிபலிப்பு சட்ட சபையிலே காணமுடியாது.

சட்ட சபையிலே இன்று காணப்படுவது, வெள்ளையரின் ஏகாதிபத்திய ஆதிக்கம் ஒழியவேண்டும் என்று மக்கள் கொண்டுள்ள ஆர்வத்தின் பிரதிபலிப்பு; வேறு ஒன்றுமில்லை.

அந்த ஆர்வம் மட்டும்; இளவந்தார்களுக்குப் போதுமானதுமல்ல!

இவைகளை நன்கு மனத்திற் கொண்டு, திறம்படத் தமது கடமையைச் செய்து வெற்றி பெற வேண்டுமென்று, திராவிடர் கழகம் விரும்புகிறது. நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகப் போடப்படும் திட்டங்களைத் திராவிடர் கழகம் ஆதரிக்கும் - ஊறு தருவனவற்றை நிச்சயமாக எதிர்க்கும்.

ஓமந்தூரார் ஏமாந்தார்! என்று, நாடும கூறவேண்டிய அவசியம் ஏற்படாத வகையிலே, மந்திரிசபையை நடத்திச்செல்ல, புதிய முதலமைச்சர், முயல்வாராக.

(திராவிடநாடு 30-3-47)