அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஒன்றும் செய்யவில்லை!

‘புகைகுடிக்கக் கூடாது’ எனும் விளம்பரப் பலகை பல இடங்களில் தொங்கவிடப் பட்டிருப்பதைப் பார்க்கிறோம். சிறுதீப்பொறி பட்டாலும், தீப்பிடித்துக் கொள்ளும் பண்டம் அங்கு இருக்கிறது எனும் உண்மையை உணர்த்துவதற்கே, முன் அறிவிப்பாக அத்தகைய பலகை தொங்கவிடப்பட்டிருக்கிறது. இந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமலோ, கவனியாமலோ, நடந்து கொண்டால் அபாயம் ஏற்படுவது நிச்சயம்.
***

‘தொடாதே, அபாயம்’ எனும் விளம்பரத்தையும் பார்த்திருக்கிறோம். இதனால், மனிதனால் தொடப்படும் பொருளுக்குப் பெரும்பாலும் அழிவு உண்டாவதில்லை. ஆனால் தொடுகிறவர்களுக்குச் சிலசமயங்களில் உயிர்போகும் அளவிற்கு ஆபத்து ஏற்பட்டுவிடும். எனவே, முனஅறிவிப்பு அவசியப்படுகிறது.
***

‘அசுத்தம் செய்யாதே’ எனும் விளம்பரங்கள் சந்து பொந்துகளிலெல்லாம், நகரங்களில் எழுதப்பட்டிருக்கின்றன. அசுத்தமே வியாதிகளுக்குக் காணரம். இந்த உண்மையை உணர்ந்து கொள்ளாமல், அசுத்தம் செய்வதால், அதன் விளைவாகத் தோன்றும் பல உயிர்கொல்லும் கிருமிகளால், அப்பகுதியிலுள்ள மக்களுக்குப் புதிய புதிய நோய்கள் சம்பவிக்க இடமேற்படுகிறது. எனவே, இதுவிஷயத்திலும் எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
***

நல்வாழ்வு பெறுவதில் மக்களுகுப் போதிய ஆர்வமின்மை, சீர் கேடான செல்வநிலை, கல்வியற்ற கேவலம் முதலியன மக்களைச் செம்மையான முறையில் நடக்கவிட வில்லை. இந்தமுறை மாற வேண்டும். மற்றி அமைக்கப்பட வேண்டும்.

மனித வாழ்க்கைக்கு, இதுவரையில் நாம் கொண்டிருந்த பொருளை மாற்றிப் புதுப் பொருள் கொள்ள வேண்டும். கண்ணுக்குப் புலனாகும் இவ்வுலக வாழ்வில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படவேண்டும். அதற்கான வகையில், நாட்டு மக்கள் நலத்தில் நோக்குடையவர்கள் தொண்டாற்ற வேண்டும்.

அபாய அறிவிப்புகளைக் கண்டு, கலையற்று இருப்போர் உண்டு.

வேறுசிலர் உண்டு, அசுத்தம் செய்யாதே! என்ற போர்டுகள் உள்ள இடமாகப்பார்த்து, அசுத்தம் செய்பவர்கள். இத்தகையவர் களை அறிவுள்ளோர் என்றோ, பொறுப்பை உணர்ந்தவர்களென்றோ, அறிஞர்கள் கூறார்.

அமைச்சர்கள், அறிவுள்ளவர்கள்! ஆளும்திறம் படைத்தவர்கள்! கண்ணியம் காரணமாக அவர்கள், பொதுக் கூட்டங்களிலே, நாங்கள் மக்களின் ஊழியர்கள் என்று பேசுவர், உண்மையிலேயோ, அவர்கள் நாட்டு மக்களை நடத்திச் செல்லும் நாயகர்கள்.

மந்திர டேனியல் தாமஸ், மதிமிக்கவர் என்பது மட்டுமல்ல, அனுபவசாலி!

அப்படிப்பட்டவர், கண்முன் ஓர் அபாய அறிவிப்புப் போர்டு தென்பட்டது - அவரே அதுபற்றிக் கூறவும் செய்தார். ஆனால், அவரே, அது பற்றி யாதொரு நடிவடிக்கையும் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

அந்தப் பகுதிதான் ஆச்சரிய மிகுந்த தடி! -என்ற கவியின் வாக்கு, கவனத்திற்கு வருகிறது.

“சென்னையில், தெருக்களிலும் சாக்கடை ஓரங்களிலும் சுமார் ஒரு இலட்சம் ஜனங்கள் வசிக்கிறார்கள்!”

நாகரிகம், நல்லாட்சி, நல்லறிவு, நன்மதக் கோட்பாடு, மனிதாபி மானம், முதலிய எந்தப் பண்பாட்டின்படி கவனித்தாலும், இந்த நிலை, அபாய அறிவிப்பு என்பது மறுக்க முடியாதபடி விளக்கமாகும்.

அமைச்சர் டேனியல் தாமசின் அரசயில் கட்சியனர் அருஞ்சிறையிலிருந்து கொண்டு, ஆங்கிலக்கொடி, கோட்டையில் பறந்துகொண்டு, உலகுக்கு இந்தியாவின் இழிநிலையை எடுத்துக்காட்டி எளனம் செய்துகொண்டிருந்தனரே, அந்தநாளிலும், சாக்கடை ஒரங்களில் ஏழைகள், விடுதிகள் அமைத்துக் கொண்டுதான் இருந்தனர் விடுதி! வேதனையின் வடிவம்!! தகரப்பலகை, அதிலே பல பொத்தல்! அது வளைத்து ஒருபுறம் நிறத்தப்பட்டிருக்கும். மறைப்பிலே, சட்டியும் பானையும் இருக்கும் - நெருப்பு இருக்கும்போது நாய் இராது - நாயும் ஏழையின் சிறுசேயும், அந்தச் சமையலறையைச் சயன கிரஹமாகக் கொள்ளும், நெருப்பில்லா நேரங்களில்! இது அவர்கள் விடுதி! இதிலே, ஆண் உண்டு பெண் உண்டு, ‘ஆண்டவன் அருளால்’ அரைடஜன் குழந்தை குட்டிகள் உண்டு!

கொடி கீழே இறக்கப்பட்டு, சிறைக்கோட்டத்திருந்தோர் நாடாள் வோராகி விட்டனர். ஆனால் அந்த விடுதிகள், அப்படியே உள்ளன!! அமைச்சரே அறிவிக்கிறார்! அன்பு மார்க்கத்தவர் டேனியல்தாமஸ் அவர் அறியவில்லை, இந்த ஏழைகளின் அவதியை, என்ற அளவிலே நிலைமை இருந்தால், வருத்தம், மட்டுமே நமக்க ஏற்பட்டிருக்கும். அவர் அறிந்திருக் கிறார்! அறிவித்துமிருக்கிறார். ஒரு இலட்சம் மக்கள் சாக்கடை ஓரத்தில் உ“ளளனர் என்று!

மனிதனின் இறுதி லட்சியம் எதுவாக இருந்த போதிலும், இன்று சமுக வாழ்வில் உள்ள குறைபாடுகளை நீக்க வழிவகை செய்யக்கூடாதென்பதில்லை. இன்றுபலர் பசித்திருக்கவும், சிலரிடை உணவுப் பொருள் குவிந்து கிடக்கவுமான நிலையைப் பார்க்கிறோம். மாட மாளிகையில் சிலர் சுக வாழ்வில் வாழவும், பலர் சாக்கடை ஓரங்களையும் வெட்ட வெளிகளையும் தங்கள் குடியிருப்புகளாகக் கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்கள். இந்த நிலை சென்னையில் இருப்பதாகவும், சரியான புள்ளி விவரம் சேகரிக்கப்படவில்லையென்றும், சுமார் ஒரு லட்சம் மக்கள் தெருக்களிலும் சாக்கடையோரங்களிலும் வசிக்கிறார்கள் என்றும், சென்னை சட்டசபையில் கனம் மந்திரி டேனியல் தாமஸ் குறிப்பிட்டுள்ளார்.

வேதனை தரும் விஷயம் இது. சென்னையில் மட்டும் இந்த நிலை என்று சொல்லமுடியாது. பொதுவாகச் சொல்ல முடியாது. பொதுவாகச் சகலநகரங்களிலும் இந்த நிலைதான். கோவை, மதுரை போன்ற இடங்கள், சென்னையை மீறினாலும் மீறிக்கூடும். இதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா? இதற்கான திட்டம் ஏதாவது இதுவரையில் தீட்டப்பட்டுள்ளதா?

“இந்த ஏழைகள் வசிப்பதற்கு இதுவரையில் சர்க்கார் ஒரு நடவடிக்கையும் எடுத்துக் கொள்ளவில்லை.

இவ்வாறு கூறிவிட்டார், பதிலாக மந்திரயார். அவருக்குப் பெயர் வீட்டிலாக்கா மந்திரி. பெயருக்கு ஏற்பச் செயலிருக்கவில்லை.

மாகாண சர்க்கார்தான் இதனைச் செய்யவில்லை. ஆனால் சென்னை நகரைப் பரிபாலிக்கும், சீமான்களாவது இந்த அபலைகளின் அவஸ்தையைப் போக்கத் தக்கதோர் நடவடிக்கை எடுத்துக் கொண்டார்களா? அவர்களுக்குத்த எவ்வளவு பேருக்கு வரவேற்பு அளிக்கவேண்டி இருக்கிறது - எத்தனைப்பேர்களுக்கு சஷ்டியப்த பூர்த்தி கொண்டாட வேண்டி இருக்கிறது - இது போன்ற ‘சத்காரியங்களிலே’ அவர்கள் கவனம் எல்லாம் சென்றி ருக்கும் பொழுது, ஏழை எளியவர்கள் எக்கேடு கெட்டால்தான் என்ன! எங்கு குடியிருந்தால்தான் என்ன - எப்படி அவஸ்தைப் பட்டால்தான் என்ன - இவைகளை எல்லாம் கவனிக்க அவர்களுக்கு நேரமேது?

விடுதலை அடைந்துவிட்டதன் அறிகுறியாக, அவர்கள் எவ்வளவு வேலை செய்யவேண்டி இருக்கிறது. தெருக்களுக் கெல்லாம் புதுப் புது பெயர்கள் மாற்றவேண்டும் - பேட்டை களுக்கெல்லாம் வேறு நாமஞ் சூட்ட வேண்டும் - இதுபோன்ற எவ்வளவோ உடனடியாகச் செய்யவேண்டிய வேலைகள், அவர்களுக்குக் காத்துக்கொண்டிருக்க, அவர்களுடைய கவனம் பாதையிலே முகாமிட்டிருக்கும் - ஒதுக்குப்புறத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் - ஏழைகள் மீது எப்படிச் செல்லும்?

சென்னை கார்ப்பொரேஷன் கனதனவான்களின் கருத்தையும் - வேலைத் தொந்தரவையும் தெரிந்து கொள்ளாமல். அவர்கள் ஏன் இந்த ஏழைகளின் குடியிருப்பைக் கவனித்துக் கொள்ளக்கூடாதென, தோழர் ஆதித்தன், அதே சட்டசபையில் அதே மந்திரியாரை ஒரு கேள்வி கேட்டார். அதில், கார்ப்பொரேஷன் செய்யும் வரவேற்பையும் விழாவையும் இடித்துக் கூறினார். இதற்கு, பொருத்தமற்ற கேள்வி என மந்திரியார் பதில் கூறிவிட்டார்.

இது, உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்று சொல்லத் தேவைஇல்லை. குடிஇருக்க இடமில்லாமல், தெருக்களிலும், ஒதக்கப் புறங்களிலும் மக்கள் அவதிப்படுவது, அவர்களை மட்டும் பாதிக்கக் கூடியதன்று. பங்களா வாசிகளையும் இது தாக்கும். இருக்கவும் படுக்கவுமே இடமின்றி அவதிப்படும் ஏழைகள், அசுத்தத்தைக் கழிக்க ஒதுக்கிடங்களுக்கு எங்கே போவார்கள்? அவர்களே சுகக்கேடான இடங்களில் தங்கி உயிரோடு இருக்கிறார்களே!

அவர்களைப் பீடிக்கும் நோய், சுகபோகிகளையும் தாக்கவே தாக்கம். சுற்றப்புறங்களை நச்சுக் கிருமிகள் பிறந்துவளரும் பண்ணையாக வைத்துக்கொண்டு, பாதுகாப்பான பங்களாவில் வாசம் யெச்து, நச்சுக் கிருமிகளைக் கொல்லும் பற்பல நவீன பொருள்களை உபயோகித்துக் கொண்டு, வாழ்ந்து வந்த போதிலும், என்றைக்காவது ஒரு நாளைக்கு, பங்களாவும் தொத்துநோய்ப்பண்ணையாக மாறியே தீரும்.

சுகவாழ்வுக்கு பங்கம் விளைவிக்கும் சுற்றுச் சார்புகளை ஏற்படுத்திக் கொண்டு, அதன் அபாய விளைவிலிருந்து தப்பிப் பிழைக்க மருந்து தேடிக்கொண்டிருப்பது, விரும்பத் கூடிய முறையாகாது. பொதுமக்கள் வரிப்பணம் பாழாவதும், தொத்து நோய் அறவே அழிக்கப் படாமல் இருப்பதும், மக்கள் அதனால் பாதிக்கப்படுவதும்தான் பலனாக முடியும்.

சென்னை சர்க்காரோ, கார்ப்பொரேஷனோ, இந்த அபாய நிலையிலிருந்து சென்னை மக்களை மீட்க உடனடியாக முயலவேண்டும். புதிய வீடுகள் கட்ட முன்வர வேண்டும். இந்த நல்ல காரியத்தில் செலவு செய்தவற்கு இல்லா பணம் வேறு எதற்கு என்பதுதான் விளங்கவில்லை!

சென்ற போரின் விளைவாக, இங்கிலாந்தில் லட்சக் கணக்கில் வீடுக்ள நாசமாய்விட்டன. அங்கு, வீடு கட்டுவதற்கே முதலிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சென்ற ஆண்டில் வீடு அற்றோர், அங்கு சில பொது இடங்களை ஆக்ரமித்துக் கொண்டதாகவும் செய்தி வந்தது.

சென்னை சர்க்காரின், செயலகங்கள் பல வாடகைக் கட்டிடங்களில் இருப்பதாகவும், அதற்கான புதிய கட்டிடங்களைச் சொந்தத்தில் சென்னை சர்க்கார் கட்டப்போவதாகவும் சிலநாளைக்கு முன்னர் அ றிவிக்கப் பட்டது. பின்னர், கட்டிடத்திற்கான சாமான் விலை அதிகமாக இருப்பதின் காரணமாக, அந்த யோசனை கைவிடப்பட்டு விட்டதாகவும் செய்தி வந்தது. சர்க்காரின் சொந்தநிலைக்கே, இந்தப்போக்கு. ஆனால், ஏழைகளுக்க வீடு கட்டுவதில் புதிய நிலை ஒன்றும் ஏற்பட்டுவிடப் போவதில்லை.

இங்கிலாந்தில் இருப்பதும் சுதந்திர சர்க்கார்தான், இங்கு இருப்பதும் சுதந்திர சர்க்கார்தான். இருந்தாலும் - இங்கு சர்க்கார் கட்டிடங்களுக்கே சலுகை கிடையாது; பலம் பொருந்திய மத்திய சர்க்காருக்கு ஆக்கம் தேடுவதில் ஊக்கம் குறையக் காணோம்!

இன்று சென்னையிலிருக்கும் கோவில்கள், ஒருலட்சம் அல்ல, மேலும் பலரை குடியிருக்க ஏற்றுக் கொள்ளும் அமைப்பில்தான் இருக்கின்றன. தெருக்களிலும் ஒதுக்குப் புறங்களிலும் தங்கி இருப்பவர்கள் நாஸ்திகர்களும் அல்ல. அவர்கள் அனைவரும் ஆண்டவன் குழந்தைகள். சிலருக்கு விரிந்த மனமும், அதிகாரத்திலிருப்பவர்களுக்குக் கொஞ்சம் துணிவும் இருந்தால் ஏழைகள் குடியிருப்புக் கஷ்டத்துக்கும் ஒரே நிமிஷத்தில் நல்லதோர் முடிவு காணலாம். நடக்குமா?

ஏழைகள் இவ்வாறு இடமின்றி அவதிப்படுவது, மக்களின் சுவாழ்விற்கு வரஇருக்கும் கேட்டைத் தெரிவிக்கும், அபாய அறிவிப்பாகும்இதனைக் கவித்துத் தக்கமுறையில், ஆதிக்கதி லுள்ளோர் நடந்து கொள்ளவேண்டும். இல்லையானால், விடுதலைப் போராட்டம் புதுரூபத்தைப் பெறுவது இயற்கையாகும்.

(திராவிட நாடு - 14-12-1947)