அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஊரார் உரையாடல்

இடம்: சென்னை
பேசுவோர்:-
1. சம்பூர்ணசாஸ்திரி, மானேஜர் மங்கா ஸ்டோர்.

2. சாமிநாத முதலியார், புடவை வியாபாரி.

3. அண்ணாமலை, தையல்காரர் வாங்கோ, வாங்கோ, முதலி....... இப்பனா, பார்க்கப் இருக்கு!

சம்: ஏன் இராது! தங்களை, கதர் ஆடையிலே பார்க்கிறபோது, பிரம்மானந்தமாக இராதோ, உண்மையைச் சொல்றேன் கேளும், கதர் சால்வையைப் போர்த்துண்டு நீங்கவந்ததைப் பார்த்ததும் எனக்கு, சாடசாத் சி.ஆர். தாஸ்போலவே இருந்தது.

சாமி: அடடே! அதைச் சொன்னீர்களா? ஜூப்பாவைப் பார்க்கலையா!

சம்: பேஷா இருக்கு. கதர்ன்னாலே அதற்கு அலாதியான அழகு இருக்கு.

சாமி: அழகா? அதுகிடக்கு. யாருடைய சொக்கா தெரியுமோ? நம்ம, குமாஸ்தா இல்லையா, குப்பு, அவனுடையது. என்னிடந்தான், உங்களுக்குத் தெரியுமே சில்க் சொக்காதானே இருக்கும். இதை அந்தப் பயலிடம் கேட்டுவாங்கிக்கொண்டு வந்தேன், காந்தியைப் பார்க்கிற போது, கதர் போடவேணாமா? அதுக்காக.

சம்: அப்படின்னா உம்மது இல்லையா?

சாமி: செச்சே! நம்மிடம் ஏது, கதர்? சால்வைகூட, நம்ம மைத்துனன் வீட்டிலே இருந்தது!

சம்: அப்படியா? கிடக்கட்டும். சொந்தமோ இரவலோ, கதர்போட்டிருக்கேள். அதுபோதும். சரி, மகாத்மாவைத் தரிசித்தீரோ?

சாமி: ஓ! பஜனையிலும் இருந்தேன்.

சம்: திவ்யமாப்போச்சு! எப்படி இருந்தது?

சாமி: சொல்லணுமா! ஒரே கூட்டம்.

சம்: கூட்டமா! ஜன சமுத்திரம்னு சொல்லும்!!
(அண்ணாமலை, எனும் வாலிபர் வந்து பேருகிறார்.)

சாமி: (ஐயரிடம் மெதுவாக) அதோ, வருகிறான் பார்த்தீங்
களா, சூனாமானா கட்சி அவன்.

சாஸ்: தெரியுமே, அண்ணாமலை தானே!! நன்னாத் தெரியும்.
(அண்ணாமலை அவர்களிடம் நின்று கும்பிடுகிறான்.)

சம்: வாப்பா, அண்ணாமலை! சவுக்கியமோ? நேத்தைக்கே வந்து விட்டாயோ?

அ: ஆமாம், மிஸ்டர்ச் சம்பூர்ணம்! ஏன்சார், எங்கே, நீங்க தங்கியிருந்த ஹோட்டலிலே போய்ப்பார்த்தேன், இல்லையே நீங்க.

சம்: இந்துஸ்தான் நகர்போயிருப்பர்.

சாமி: ஆமாம், காந்தியைப் பார்க்கத்தானே வந்தது.

அண்: பார்த்தாச்சோ?

சாம: பார்த்தேன்.

சம்: அண்ணாமலை! நீ பார்க்கலையோ? ஏன், பார்க்கப்படாதோ? கட்சி வேறாக இருந்தா என்ன? மகாத்மா, சகலருக்கும் சொந்தந்தானே.

அ: எனக்கு என்னய்யா பேதம்! நான் போயிருந்தேன் தியாகராய நகருக்கு.

சா: போயிருந்தீரா? எப்படி இருந்தது?

அ: எது?

சா: கூட்டம்?

அ: பெருங்கூட்டம்.

சாமி: ஏம்பா, அண்ணாமலை! காந்தியைப் பார்க்கவருகிற பிரம்மாண்டமான கூட்டத்தைப்பார்த்தா பிரமிச்சுப்போகுது. ஆச்சரியமாக இருக்குது, அந்தப்பெரியவருக்கு, என்னதான் மகிமை!

அ: கூட்டம் பிரம்மாண்டமானதுதான், ஆனால், அதிலே ஆச்சரியம் என்ன இருக்கு?

சம்: என்னப்பா, இவ்வளவு சாதாரணமாகச் சொல்கிறாயே!

அ: பெரிய கூட்டம் வந்ததைப் பார்த்து, நான்வேண்டுமானா ஆச்சரியப்படலாம் ஒருசமயம். நீங்களெல்லாம் ஆச்சரியப்படக் கூடாதே!
சம்: அதென்னப்பா அப்படி?

அ: அவர், மகாத்மான்னுதானே நீங்களெல்லாம் எண்ணுவது.

சம்: ஆமாம்! மகாத்மாதான் அவர்.

அ: அவ்வளவு தீர்மானமாக அவர் மகாத்மாவென்று எண்ணுகிறபோது, அவரைப் பார்க்கப் பெருங்கூட்டம் வந்தால் ஆச்சரியம், எதற்கு? மகாத்மாக்களுக்கும் கும்பல் சேரத்தானே செய்யும்!

சம்: வேடிக்கையா, இருக்கே!

அ: சாஸ்திரியாரே! நீங்கள், நிஜமாக, காந்தியாரை ஒருமகாத்மா வென்று நம்பினால், அவரைப் பார்க்கக் கூட்டம் வருவதைக் குறித்து ஆச்சரியப்படக் கூடாதே, பொருத்தமாக இல்லையே.

சம்: போகட்டும்! இவ்வளவு பெரிய கூட்டம் அவரைத் தரிசிக்க வருவதைக்கண்ட பிறகு, உனக்கு என்ன தோன்றுகிறது, அதைச் சொல்லு, எங்கதை இருக்கட்டும் ஒருபுறம்.

அ: எனக்கு, என்ன தோன்றுகிறது. எதிர்பார்த்தபடி நடக்கிறது என்று தோன்றுகிறது. வழக்கமான முறைப்படி விஷயம் இருக்கிறது.

சம்: விளங்கச் சொல்லேன்.

அ: இந்த நாட்டிலே, எப்போதும், யாரார், மகாத்மாக்கள், மகரிஷிகள், சாதுசன்யாசிகள், அருள் பெற்றவர்கள், என்று கூறப்படுகிறார்களோ அவர்ளெல்லாம், வழக்கமாக எதைப் பேசுவார்களோ, என்ன செய்வார்களோ, எப்படி எப்படி நடந்து கொள்வார்களோ, அதேவிதமாகக் காத்தியாரும், “வாழையடி வாழையாக” இருக்கிறார். அப்படிப்பட்டவர்களுக்கும் கும்பல் சேருகிற பழக்கப்படி, இவருக்கும் சேருகிறது. இது எதிர்பார்த்ததுதானே? இதிலே ஆச்சரியம் ஏன் கொள்கிறீர்கள்? அதிலும், நீங்களெல்லாம், மகாத்மாக்களைப் பூஜிப்பவர்கள், உங்களுக்கு ஏற்படக்கூடாதே அந்த ஆச்சரியம்.

சம்: ஓஹோ! சாமர்த்தியமா பேசறே. சரி, உனக்கு ஆச்சரியமாக இருக்கோ?

அ: ஒருவிதத்திலே ஆச்சரியந்தான்.

சம்: எப்படி?

சாமி: சரி, சாமி! அண்ணாமலை, ஒருவிஷயம் அகப்பட்டா விடமாட்டான். வாங்கபோகலாம்.

அ: உண்மைதான்! நானும் விடமாட்டேன், நம்ம முதலியாரும், எதிலேயும் படமாட்டார்.

சம்: சரி, அண்ணாமலை!உனக்கு ஆச்சரியம், உண்டா இல்லை?

அ: இவர் பெரிய மகாத்மாவாமே, மகாத்மாக்கள் அற்புதங்கள் செய்வார்களாமே, இந்த மகாத்மாவோ ஓர் அற்புதமும் செய்யக்காணோமே, பேனா தொலைந்துவிட்டதாம், அதைக் கூடக் கண்டுபிடிக்க அவருடைய “மகிமை” பயன்படக்காணோமே! இப்படிப்பட்டவரை, எந்தக்காரணத்தைக்கொண்டு ஜனங்கள், ‘மகாத்மா’ என்று எண்ணுகிறார்கள், என்று நான் ஆச்சரியப்படுகிறேன்.

சம்: ரொம்ப அழகுதான்!

அ: ஏன்? உண்மை, வேதனையாக இருக்கிறதோ கேட்க!

சம்: சரி, சொல்லு, உனக்குத் தோணினதை. அவர், மகாத்மான்னு அழைக்கச்சொல்லி,யாரையும் கேட்டுக்கொள்ளலை தெரியுமோ!

சாமி: ஜனங்களாகப் பார்த்து மகாத்மா என்று அன்பினாலே...

சம்: அர்ச்சிக்கிறார்கள்!

அ: சரி, அப்பாயானால், உண்மையிலே அவர் மகாத்மா அல்ல, அவர் ஒன்றும் அற்புதம் செய்பவரல்ல. அவரை ஜனங்கள், சும்மா அப்படிக் கூப்பிடுகிறார்கள், என்று நானும் எங்கள் தோழர்களும் சொன்னால், ஏன் உங்களுக்குக் கோபம் வருகிறது?

சம்: வாதம் செய்வதிலே வல்லவனாச்சே நீ. அண்ணாமலை! மகாத்மா என்ற புகழ் இருக்கட்டும் ஒரு புறம், அவருடைய சேவையாலே, தேசபக்தி கொழுந்துவிட்டு எரிகிறதே அதையும் இல்லைன்னு சொல்வாயோ?

சாமி: சொன்னாலும் சொல்வான்.

அ: இல்லை! அவருடைய செல்வாக்கு, அமோகம். அது மட்டுமில்லை. அவருடைய வார்த்தைக்கு மக்கள் செவி சாய்த்ததுபோல, வேறு யாருக்கும் இல்லை.

சம்: பேஷ்! பலே! பேஷ்!!

அ: அவர் வார்த்தையை வேதமாகக் கொண்டு ஆயிரக் கணக்கில் ஜெயிலுக்குப் போனார்கள்.

சாமி: தூக்குமரமும் ஏறினார்கள் சாமி!

அ: சர்க்காரோடு சண்டை போட்டார்கள். இதை நான் அறிவேன். நீங்களும் அறிவீர்கள். ஆனால், ஒன்று உங்களுக்குத் தெரியாது, எனக்குத் தெரியும்!

சாமி: அது என்ன தம்பீ! அந்த இரகசியம்.

அ: இரகசியம் அல்ல! நான் சொன்னதுபோல, செல்வாக்கு காந்தியாருக்கு இருப்பது உங்களுக்குத் தெரியுமே தவிர, இதைப் போன்ற செல்வாக்குப் படைத்தவர்கள், சுதந்தரப்போர் நடத்திய ஒவ்வொரு நாட்டிலும் இருந்தார்கள் என்பதும், அவர்களிலே யாரும், ‘மகாத்மா’ ஆக்கப்பட்டு, மாலைநேரப் பூஜைகள் நடத்திக்கொண்டு, இருக்கவில்லை, சாதாரண மக்களாக இருந்து, பல அரிய பெரிய காரியங்களைச் சாதித்தனர் என்பதும், அவர்கள் சாதித்ததுபோல இவர் எதையும் இவ்வளவு செல்வாக்குப் பெற்றும் சாதிக்கவில்லை என்றும் நான் அறிவேன், நீங்கள் அறியவில்லை.

சம்: சரி, உன்னோடு பேசுவதும் விபரீதமாகத்தான் போகும் முதலியார் ! நான் வருகிறேன்.
(போக முயல்கிறார்.)

அ: ஐயரே! கோபிக்க வேண்டாம். ஒரு விதத்திலே, பார்த்தால், காந்தியாரிடம் எனக்குப் பிரதாபம் கூடப் பிறக்கிறது.

சம்: அது ஏனோ?

அ: இன்று காந்தியார் அடைந்திருக்கிற செல்வாக்கு இருக்கிறதே அதைப்பெற, பாவம் அவர் கொடுத்திருக்கிற ‘விலை’யைப் பார்த்தால், எனக்குப் பரிதாபமாகத்தான் இருக்கிறது. ஒரு கதை சொல்கிறேன், கேட்கிறீரா?

சா: சொல்லுப்பா, சொல்லு.

அ: ஓர் ஊரில், ஒரு கழைக்கூத்தாடி. பலே ஜோராக ஆட்டம் ஆடுவான். கம்புமேலே ஏறி, பம்பரம் போலச் சுழலுவான் கயிற்றைப் பிடித்துக்கொண்டு கர்ணம் அடிப்பான், கத்தியாலே குத்திக்கொள்வான், இரத்தமே வராது, இப்படி எல்லாம் செய்வான், ஊரிலே அவனுக்கு ரொம்ப நல்லபேர். காசும் குவிந்தது. ஆனால் பாபம், அதற்காக அவன் நரம்பு முறிய, எலும்பு உடைய வேலை செய்து கொண்டிருந்தான்.

சம்: கதை பெரிசோ?

அ: இல்லை, இல்லை, இது என்ன புராணமா என்ன, வளர. பாதிக்கதை முடிந்துவிட்டது. கழைக்கூத்தாடி இவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தபோது, அவன் தம்பி ஒருவன் அவனும் பேரும் பிரக்யாதியுமாக வாழ்ந்து வந்தான், அவனுக்கும் பணம் சேர்ந்தது.

சாமி: அவனும் கழைக்கூத்தாடிதானா?

அ: இல்லை! இருந்தா, கதை ஏது? அவன், வெறும் கூத்தாடி. நாடகத்திலே, கழைக்கூத்தாடி வேஷம் போட்டுக் கொண்டு, தன்னானமெட்டிலே,

கயிறுமேலே ஏறுவேன்
கம்புமேலே சுழலுவேன்
கரணம்பல போடுவேன்
காலைத்தூக்கி மேலேத்தி
தலைகீழாக நடப்பேன்,
என்று பாடுவான்! அதற்கு அவனுக்குக் கீர்த்தி, பணம், கிடைத்தது.

ச: அது போலே?

அ: அதுபோல, அடக்குமுறைக்கு ஈடுபட்டு, ஜெயிலுக்குப்போய், அரை ஆடைகட்டி, கஷ்டம் அனுபவித்துக் காந்தியார்

பெற்ற மகாத்மா பட்டமும், செல்வாக்கும், ஜெயிலுக்குப் போகாமல் அடக்குமுறையை அனுபவிக்காமல், அரைப்படியை ஆழாக்காகக் காய்ச்சிச் சாப்பிடும், எத்தனையோ ஆண்டி, பெற்றிருக்கிறான் இந்த நாட்டிலே. கால் கை முறிய ஆடிக் கழைக்கூத்தன் காசு திரட்ட, அது ஆடுவேன் இது ஆடுவேன் என்று வாயளவில் பாடிய அவன் தம்பி இலோசாக வேலை செய்து, அண்ணன் பெற்ற பேரும் பணமும் பெற்ற கதை போல.

சா: அது உண்மைதான்! ஏஞ்சாமி!

அ: அவர், இல்லை என்று சொல்ல முடியாதே. திருவண்ணாமலையிலே ரமணர் இருக்கிறார். அவர் என்ன ரௌலட் சட்டத்தை மீறினாரா, தண்டியாத்திரை போனாரா? ஜெயில் சென்றாரா, சத்யாக்கிரகம் செய்தாரா! ஒன்றுமில்லை! அவர் ‘மஹரிஷி’ ஆகிவிட்டார்! காந்தி “மகாத்மா” ஆவதற்குப்பட்ட கஷ்டத்திலே ஆயிரத்திலே ஒரு பங்குகூட, ரமணர், “மகரிஷி” ஆவதற்குப் பட்டதில்லை; ‘மகாத்மா’ வுக்குச் சீடர்கள் இருப்பதுபோல ‘மகரிஷி’க்கும் இருக்கிறார்கள். இருவருக்கும், ‘மகிமை’ கூறப்படுகிறது. ஏன், சாஸ்திரியாரே! என் உவமானக்கதை, தவறா?

சம்: வயிறு.................

அ: எரிகிறதா?

சம்: செச்சே! ஏதோ, உன் அபிப்பிராயத்தை நீ சொன்னதாலே எனக்கு என்னப்பா? வயிறு வலிக்கிறது என்றேன்.

அ: அதைச் சொல்லவே, எனக்கு இன்னொரு விஷயம் கவனம் வருகிறது. ரமணரிஷியாவது, ஏதோ படித்தவர். வேதாந்தி, என்று கூறுகிறார்கள். அதுபோலக்கூட இல்லாமல் கைஎழுத்துப் போடவும் தெரியாமல், கஞ்சா கசக்கும் கையாலே விபூதி மந்திரித்துக் கொடுத்து, தீராத நோயைத் தீர்த்துவைக்கும் சாமியாடிகளெல்லாம், இருக்கிறார்கள். அவர்களுக்குங்கூடத்தான், ஊர் திரண்டுவருகிறது, பேர், ‘ஓஹோ’ என்று பரவுகிறது, காணிக்கை குவிகிறது, கதைபல பேசப்படுகிறது. இப்படி மிகச் சாதாரணமானவர்கள், புல்தோட்டத்துச்சாமி, புளியங்காய்ச்சாமி, நெய்குழியார், மெய்மொழியார் என்று பட்டம் பெற்று, வாழ்கிற நாட்டிலே, ஒரு பாரிஸ்டர், ஆயிரத்துக்குக் குறையாத பத்திரிகைகளிள் பிரசார பலத்தைப் பெற்ற பிறகும் பலமுறை ஏகாதிபத்ய அடக்குமுறையை அனுபவித்தபிறகு, ஜெயிலுக்குப் போன பிறகு, “மகாத்மா” ஆனதும், மக்கள் அவரைக் காணக்கூடுவதும், ஆச்சரியமில்லையே, சாஸ்திரியாரே! மலையைக் கல்லிக் கல்லி அல்லவா இவர் எலிபிடித்தார்! வெறும் புலித்தோலைக் காட்டி, பூஜைக்கு உரியவர்களாகிட்ட மலைவிழுங்கி மகாதேவன் களெல்லாம் இங்கே இருக்கிறார்களே, மடம் கட்டிக் கொண்டும் மலைமேல் ஏறிக்கொண்டும், மகான் மகரிஷி, மார்க்கபோதகர், மகேஸ்வரர், என்றெல்லாம் பட்டம் பெற்றுக்கொண்டும், அவர்கள் எல்லாம் மிகமிக மலிவான விலை கொடுத்து வாங்கிய “சரக்கை”க் காந்தியார், எவ்வளவோ அதிகமான விலைகொடுத்தல்லவா வாங்கினார்! அதை நினைக்கும்போது எனக்கு உண்மையாகவே அவர் விஷயத்திலே பரிதாபந்தான் பிறக்கிறது.

சம்: சரி, நான் வருகிறேன் மருந்து சாப்பிட்டாகணும்.

அ: தேனில் குழைத்துச் சாப்பிட்டுங்கள் சாஸ்திரியாரே! ஏனென்றால் நான் பேசியது கேட்க அதிகக் கசப்பாக இருந்திருக்கும்.

சம்: அதெல்லாம் ஒண்ணுமில்லே. நான் வருகிறேன் பிறகு.
(போகிறார்)

சாமி: என்னென்னமோ, கதை பேசி, அந்தப் பார்ப்பான் வாயை அடக்கிவிட்டாயே தம்பீ.

அ: இதோ பாருங்கள் சார்! இதுதான் எனக்குப் பிடிக்கறதில்லை; என்னிடம் தனியாகப் பேசற போது, பார்ப்பான் என்று திட்டிப் பேசுவது, அவர்களைக் கண்டால் குழைந்து கும்பிட்டு, சாமி, சாமி என்று கூத்தாடுவது இருக்கிறதே இது எனக்குப் பிடிக்காது. என் எதிரே அவர்களைத் திட்டவும் வேண்டாம், அவர்கள் எதிரிலே பெரிய பிராமண பக்திமானாக நடிக்கவும் வேண்டாம். எப்போதும் ஒரே விதமாக, மரியாதையுடனும் ஆனால், நமது சுயமரியாதையையும் இழக்காமல் பேசுங்கள். அதுதான் நியாயம்.

சாரி: என்ன அண்ணாமலை கோபிக்கறே!

அ: இல்லை, சார் உள்ளபடியே எனக்கு இந்த ஆள் பார்த்துப் பேசற சுபாவம் பிடிக்கிறதில்லை. உங்களை யாராவது ஓர் ஐயர், முதலியாரேன்னு மரியாதையாகக் கூப்பிட்டா, நீங்களும் மரியாதையாக என்ன ஐயரே! என்று அழைக்கணும். “ஏண்டாப்பா சாமிநாதா” என்று அழைத்தார், “ஏண்டாப்பா ஏகாம்பரம்” என்று நீங்க அழைக்கணும், அதை விட்டுவிட்டு “ஏஞ்சாமி!” என்று அவன் எதிரிலே குழையறதும், அவன் போனபிறகு என்னைப் போன்றவன்களைக் கண்டால், “அந்தப் பாப்பான் இப்படிச் சொன்னான்” என்று ஏசுவதும் இருக்கிறதே, அது அழகுமில்லை, நியாயமுமில்லை, அது வேண்டாம்.

சாமி: சரி, சரி, இன்று என்னமோ எனக்குக் கோபம் போல இருக்கு.

அ: ஒரு கோபமும் இல்லை! உண்மையைச் சொன்னேன். நாங்கள், ஜாதி உணர்வு தாழ்வு முதலிய கொடுமைகள் கூடாது என்று சொல்கிறோம், அவ்வளவே தவிர, பார்ப்பனர்களை ஏசுங்கள் என்று சொல்கிறோமா? நீங்களெல்லாம் என்னமோ, எங்கள் எதிரிலே அவர்களைத் ‘திட்டி’ப் பேசிவிட்டால் எங்களுக்குப் பரமதிருப்தி ஏற்பட்டு ஆஹா! இவரல்லவா வீராதிவீரர் என்று புகழ்வோம் என்று நினைக்கிறீர்களே, அதுதவறு. இரண்டு மார்க்கட்டுக்கு இரண்டு வேறு வேறு சரக்கு வைத்துக்கொண்டு, இரண்டிலும் இலாபம் கிடைக்குமா என்று வேலை செய்கிறீர்கள், அந்த வியாபாரம், எதிர்பாராத நஷ்டத்தைத் தரும். அவ்வளவுதான் நான் சொல்லமுடியும்.

சாமி: அடே, ஏன் தம்பீ! என் மேலே சீறிவிழறே. என் குடுமி அவனுங்ககிட்ட சிக்கிக்கிட்டு இருக்கு, அதனாலே நான் அப்படிப் போக வேண்டி இருக்கு. எனக்கு மட்டும் இல்லைன்னு நினைச்சியா அந்த உணர்ச்சி. நேத்து பேப்பர் பார்த்தேன், காந்தி பக்கத்திலே ராஜகோபாலாச்சாரி இருந்தார், கோபாலசாமி ஐயங்கார் மாலை போட்டார், சீனுவாச சாஸ்திரியாரைக் காந்தி போய்ப் பார்த்துவிட்டு வந்தார், காந்தி மதுரை போவது பற்றி, கோபாலசாமி ஐயர் அறிக்கை விட்டார், வைத்யனாதஐயர் கூட்டம் போட்டார் என்று ஒரே பார்ப்பனனுக்கும் பல் போடுகிற கும்மாளமா இருந்தது, எனக்கு எரிச்சலாகத்தான் இருந்தது. காந்தி ஏன், இப்படிப் பார்ப்பான்களையே சுற்றிலும் வைத்துக்கொண்டிருக்கிறார் என்று கோபமாகத்தான் இருந்தது; ஆச்சரியமாகவும் இருந்தது அவ்வளவு பெரியவர்; இந்த ஆகாவழிகளைச் சேர்த்து வைத்துக்கொண்டு இருக்கிறாரே என்று.

அ: இதிலே, ஓர் ஆச்சரியமுமில்லையே! பரம்பரைப்பழக்கப்படி, சனாதனமுறைப்படி, வைதிகநெறிப்படி, காரியம் நடக்கிறது. காந்தியார், இந்தியாவுக்கே தலைவர் என்று போற்றப்படுகிறார், அப்படிப்பட்டவர்கள், ஐயர்களைப் பக்கத்திலே வைத்துக்கொண்டு, அவர்கள் சொல்கிறபடி நடந்துதான் வரவேண்டும், அதுதானே வழக்கம்.

சாமி: ஏன் அப்படி நடக்கணும்? இதுகள் யார்? அவர், மகாத்மா! அவர் ஏன், இதுகளைப் பிரமாதப்படுத்தவேணும்?

அ: சார்! நீங்கள், இந்த நாட்டுப் பழைய சம்பிரதாயத்தைக் கவனப்படுத்திக்கொண்டு, பார்த்தா இதிலே துளிகூட ஆச்சரியம் இருக்காது. எப்படி என்றால், இந்த நாட்டிலே, அந்தக் காலத்திலே தசரதன், ஜனகன், நளன், அரிச்சந்திரன் என்றெல்லாம் முடிசூடிய மன்னர்கள் இருந்தார்களல்லவா? அவர்கள் ஒவ்வொருவரும் வசிஷ்டன் கௌதமன், அவன் இவன் என்று எவனாவது ஒரு ரிஷியைத்தானே பக்கத்திலே வைத்துக்கொண்டு, அவன் சொல்லுகிறபடி நடந்தார்கள். முடிசூடிய மன்னர்கள் பக்கத்தில் ஜடை கூடியரிஷிகள் இருந்தனர். காந்தியார் முடிசூடா மன்னர், ஆக அவர் பக்கத்திலே ஜடை இல்லாத ரிஷிகள் இருக்கிறார்கள், பரம்பரை வழக்கப்படி, இதிலே ஆச்சரியம் இல்லை. நாங்கள் சொல்வது இதுதானே, பார்ப்பனர்கள் அந்த நாளிலிருந்து இந்த நாள்வரை, நம்மவர்களை ஆட்டி வைக்கிறார்கள் என்று சொல்லுகிறோம். இந்த ஏற்பாடு ஒழிந்தாக வேண்டும் என்கிறோம். மதவிஷயத்திலே இந்த ஏற்பாடு இருக்கும் வரையில், அரசியல் முதலிய மற்ற எல்லா விஷயங்களிலும் இது இருந்துதான் தீரும், காய்ச்சல் தீராமுன்பு வாய்க்கசப்பு, எப்படிப் போகும்?

சாமி: எனக்கு என்னமோ பிடிக்கவில்லையப்பா அது.

அ: எனக்கு மட்டும் பிடிக்கும் என்று சொல்கிறேனா! அது போலத்தான் நடக்கும், ஆரியத்துக்கு மதத் துறையிலே ஆதிக்கம் இருக்கும் வரையில் என்கிறேன். அது என்று கூட, தேர்தல் சம்பந்தமாக காமராஜர், ராஜகோபாலாச்சாரியாரைக் கலந்து பேசவேண்டும் என்று அசப் அலி கூறினாரே, அது அக்ரமம், காமராஜர்தானே, தமிழ்நாட்டுக் காங்கிரசுக்குத் தலைவர், அவர் ஏன், ராஜகோபாலாச்சாரியாரைக் கலந்து பேசுவது, என்று கூறிக்கோபித்துக் கொண்டீர்.

சாமி! ஆமாம்! அது என்ன, முறையா?

அ: உங்களைப் போன்றவர்களுக்கும், காமராஜர் போன்றவர்களுக்கும் அதுதான் முறை!

சாமி: அதுஏன்?

அ: ஏனா? என்ன சார் இது! வேடிக்கை பேசுகிறீர். உங்கள் வீட்டு மூதாதைகள் இறந்துபோனவர்கள் ஆத்மதிருப்திக்குஆக, நீங்கள் ஆச்சாரியார் குலத்தாரின் யோசனையை கேட்டு நடக்கிறீர்கள், உங்கள் ஆண்டவனிடம் போய் உங்கள் பக்தியைச் செலுத்த, உங்கள் குறையைக்கூற, ஆச்சாரியார் பரம்பரை

யினரின் உதவியை நாடுகிறீர்கள்! இது அசப் அலிக்குத் தெரியாதா? குடும்ப விஷயம் முதற்கொண்டு கோயில் காரியம் வரையிலே காமராஜர்கள் ஆச்சாரிகளைத்தான், ஆசான்களாகக்
கொண்டு இருக்கிறார்கள், ஆகவே, அவர்கள் சுயமாகச் சிந்தித்துத் தாமாகச் செயலாற்ற முடியாதவர்கள், ஆகையினால் அரசியல் விஷயத்திலும் அவர்களால், ஆச்சாரியார் யோசனையின்றி ஒன்றும் செய்ய முடியாது என்று எண்ணினார். இது தவறா?

சாமி: ரொம்ப அழகுதான்!

அ: நம் வீட்டுக்கலியாணத்துக்கு அவன் காலில் விழுகிறோமே, அது அழகாக இருக்கிறதோ?

சாமி: எதற்கு எதையப்பா உவமானம் எடுக்கிறே!

(அ: இதுமட்டும் ஆச்சரியமா சார்! பாவம் கழுவும் நீராகப் பசுவில் சிறுநீரை, உவமானமாக மட்டுமில்லையே, உட்கொள்ளவும் மனம் இருக்கிறதே உங்களுக்கு.
சாமி: என்னமோ கர்மம் அதெல்லாம்.

அ: அதேபோல, இப்படி எல்லாம் நம்மவரை ஆட்டிவைப்பது ஆரியதர்மம்.
(சாமிநாத முதலியாரும் விடைபெற்றுக்கொள்கிறார்.)