அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஊரார் உரையாடல்
இடம் : கபாலீஸ்வரர் கோயில்

நமோ, நம!
இடம் : கபாலீஸ்வரர் கோயில்
காலம் : மாலை.
பாத்திரங்கள் : சோமசுந்தர சர்மா, எம். கணபதி குருக்கள், வேலு முதலியார், எம்.ஜி.ஏ. பாதம்.
(கணபதி குருக்கள் சந்தியாவந்தனத்தை முடித்துக்கொண்டு, கபாலீஸ்வரர் கோயிலை வலம்
வரும் நோக்கத்துடன் குளத்தங்கரையைவிட்டுப் புறப்படுகையில், வக்கீல் சோமசுந்தர சர்மாவைக் காண்கிறார்.)

கணபதி : யாரது? சோமுவா! பார்வை கொஞ்சம், இப்போ மட்டு. ஓய், சோமுதானே போறது?

சோமசுந்தரர் : வேலு மொதலியைக் கண்டயேளோ?

கணபதி : என்னடாப்பா இது! நான் ஒன்னு கேட்க, நீ வேறு கேக்கிறே? காது மட்டோ?
சோழ : ஆமாம், க்ஷமிக்கணும். பெரியவாளைக் காணவே முடியறதில்லை. எங்கே போயிருந்தேளோ?

கணபதி : செதம்பரம் போயிருந்தேன், நேத்துக் காலைதான் வந்தேன்.

சோழ : தெரிசனாதிகள் விசேஷந்தானோ?

கணபதி : எந்தத் தெரிசனத்தைக் கேக்கறேள். நான் கோயில் பக்கமே போகலே. நம்ம பையன் இருக்கானேல்லோ ஆடியபாதம் அவன் அண்ணாமலை சர்வகலாசாலையிலேன்னா வாசிக்கிறான். அவனைப் பாத்தூட்டு வரப்போனேன்.

சோழ : அண்ணாமலை யூனிவர்சிடியிலா. அங்கேதான் இப்போ, பிராமணத்துவேஷம் தலைவிரிச்சுண்டு ஆடறதாமே, அங்கே ஏன், பையனைச் சேர்த்தீர்.
(ஆடியபாதம் அங்கு வருகிறான்.)

ஆடியபாதம் : குட் ஈவினிங், மாமா! ஏதோ சுவாரஸ்யமாகப் பேசிண்டிருக்கேள் போலிருக்கே.

சோழ : அடே, ஆடியா! உன் விஷயமாத்தான் பேசிண்டிருந்தோம், நீயே வந்தூட்டாயே. பையனை அழைச்சிண்டு வந்தது நேக்குத் தெரியாது.

கணபதி : இங்கே நம்ம மு.க.வ. சோமநாதஞ் செட்டி
யாரிடம், பையன், படிப்பு விஷயமாச் சொன்னேன், அவர் நல்ல தர்மிஷ்டர் பாருங்கோ,பையனை நேரில் பார்த்து, பணம் தருவதாச் சொன்னார். அதுக்காகத்தான், ஆடியையும், அழைச்சுண்டு வந்தேன். மேலும், ஆத்திலே ஒரு விசேஷம், நம்ம அலமு இருக்காளே, தெரியுமல்லோ, அடையாத்து ஸ்கூலிலே வாசிச்சிண்டிருக்காளே, அவ பெரிய மனுஷியானா.

சோழ : ஏண்டா ஆடி. அண்ணாமலை யூனிவர்சிடியிலே, கம்யூனல் ஹேட்ரட் ரொம்ப அதிகமாமே, நிஜமாகவா?

ஆடி : சில பையன்கள் அந்த மாதிரி இருக்கா. பொதுவாவே இப்போ எங்கேயும் கம்யூனலாத்தானே இருக்கு. இருந்தாலும், காலேஜ் பசங்க காந்தி பேரை சொன்னா மத்த விஷயத்தை மறந்தூடுவா.

கணபதி : அந்தத் தாரக மந்திரத்தை நம்பிண்டு எத்தனை நாள் இருக்கிறது? என்னமோடாப்பா, எங்க காலத்திலே இதெல்லாம் கிடையாது. இப்போ சூத்ராள் செய்யற அட்டகாசம், சிவசிவ, சொல்லி முடியாது.

ஆடி : உங்க காலத்திலே, யூனிவர்சிடியுங் கிடையாது.

சோழ : நோ, நோ! அப்படிச் சொல்லப்படாதுடா, ஆடி. நம்ம பழையவா காலத்திலே, நளந்தா, தட்சசீலா போன்ற யூனிவர்
சிடிகள், பிரமாதமானவைகளாக இருந்தன. அந்தக் காலத்திலே, பிராமணாளுக்கு எதிர்ப்புக் கிடையாது. ராஜாக்களெல்லாம், பிராமண சேவை செய்கிறதிலே மகாசிரத்தையுடன் இருந்தா, இப்போ காலம் கெட்டுவிட்டது.

கணபதி : சந்தேக மென்ன அதுக்கு. இப்போ இவாளுக்கு யாரோ ஒரு கிருஸ்தவான்னோ வைஸ்சான்சலர்.

ஆடி : ரத்னசாமி, பார் அட்லா, அவர் பேர்.

கணபதி : என்னமோ ஒரு சாமி. ஆசாமி கிருஸ்தவன்.

சோழ : தில்லை மூவாயிரவர் க்ஷேத்திரத்திலே இந்த நிலை ஏற்பட்டிருக்கு. சரி, ஆடி, யூனிவர்சிடி பில் விஷயமா...?

ஆடி : நாங்க, யூனிவர்சிடி பாய்ஸ்களிடம், பேசியிருக்கோம். சிதம்பரம் பார் மெம்பர்களும், பில்லை, எதிர்க்கிறா. இந்து பார்த்தேயேளோ. மணியா, ஒரு லீடர் எழுதியிருக்கு.

சோழ : லீடர் அழகாத்தான் இருக்கு! ஆனா, காரியம் எப்படியோ?
(வேலு முதலியார் வந்து சேருகிறார்)

வேலு : எந்த லீடர் சாமி, அழகு?

கணபதி : வேலுவா? சௌக்யந்தானே ஏண்டாப்பா, இளநீர் கேட்டனுப்பினா, இல்லேன்னு, சொல்லியனுப்பனேயே, நான் ஒரு பத்து இளநீ பெறமாட்டேனா.

வேலு : சிவசிவா! உங்களுக்குத்தானா இல்லேன்னு சொல்வேன். மரமேற ஆள் இல்லை. நீங்க கேட்டனுப்பின பிறகு,தேடித்தேடிப் பார்த்தேன், ஒரு ஆள்கூடக் காணோம். ஆமாம், எந்தப் பார்டீ லீடரைப்பத்திப் பேசறிங்க?

சோழ : பார்ட்டி லீடரல்ல வேலு. இந்து பேப்பரிலே, ஒரு லீடர், தலையங்கம், அதைக்குறித்துச் சொன்னான் ஆடி.

வேலு : என்ன விஷயமுங்க? சண்டை விஷயமா?

சோழ : இல்லை, இல்லை, அண்ணாமலை யூனிவர்சிடி இருக்கே அது சம்பந்தமா ஒரு மசோதா தயாராகுது, இதைக் கண்டித்து இருக்கு, இண்டு.

வேலு : என்ன சொல்லுது மசோதா?

சோழ : வைஸ் சான்சலருக்கு அதிகப்படியான அதிகாரம் தரணுமாம்.

வேலு : கொடுக்கட்டுமே, அதனாலே நமக்கென்ன, குறைச்சலுங்க. யாரோ இண்டியன்தானுங்களே வைஸ் சான்சலர்.

சோழ : அந்த விதத்திலே பார்த்தா அது சரி.

வேலு : நீங்க ஏன், வேறவிதத்திலே பார்க்கணும். ஒரு ஸ்தாபனத்திலே இருக்கும் நிர்வாகஸ்தருக்கு அதிகமான அதிகாரம் இருக்கவேண்டும்னு சட்டம் செய்தா ஸ்தாபனம் ஒழுங்கா நடக்கும். நம்ம ரைட் ஆனரபில் சாஸ்திரியார் வைஸ் சான்சல
ராக இருந்தபோது, நீங்களே ஒரு நாள் சொன்னிங்களே, சாஸ்திரி யாருக்குச் சரியான அதிகாரம் கொடுத்தா, யூனிவர்
சிடியை திவ்யமானதாகச் செய்தூடுவாருன்னு சொன்னிங்களே.

சோழ : அது சரி, ஆனா இதிலே ஒரு சூட்சுமம் இருக்கு.

வேலு : தெளிவாச் சொல்லுங்க.

சோழ : அண்ணாமலை சர்வ கலாசாலையிலே, இப்போ பிராமணாளுக்குத்தான் அதிக ஆதிக்கம் இருக்கிறதாம், அதைக் குறைக்க வேண்டுமென்ற எண்ணத்தோடுதான், இந்த மசோதாவாம்.

வேலு : இதிலே தப்பு என்னங்க? ஒரு நாட்டுக்கோட்டைச் செட்டியார் உண்டாக்கின பள்ளிக்கூடத்திலே, பிராமணாளுக்கே அதிகாரமும் அந்தஸ்தும் அதிகமா இருந்தா, அதைக் குறைச்சி எல்லோரும் அதை அனுபவிச்சு பயன்பெற வேண்டியது முறைதானே. அதுக்கு சட்டம் வந்தா நல்லதுதானே. இந்து ஏன், எதிர்த்து எழுதுது?

சோழ : இதோபார் வேலு! பிராமணாளுக்கு அதிக அதிகாரம், மத்தவாளுக்கு கொறைவா அதிகாரம் என்ற பேச்சு இருக்கே, அது வகுப்புவாதம். அதைவளரவிடக்கூடாது. மகா விஷம் அது.

வேலு : அதை வளர்க்காமே இருக்க வேணும்னா, எல்லா வகுப்பாருக்கும், திருப்தியான முறையை அங்கே ஏற்படுத்தி விட்டாச் சரியாப்போவுது.

சோழ : அதுக்கு இதுதான் வழியோ?

வேலு : ஆமாம். 100க்கு 50க்கு மேலே பிராமணப் பிள்ளைகளைச் சேர்க்கக்கூடாதுன்னு ஏற்பாடு செய்வதாக் கேள்விப்பட்டேன். ஒரு ஜாதிக்கு அரை பாகம், எல்லா ஜாதிக்கும் சேர்த்து மிச்ச அரை பாகம். இதுக்கே இண்டுவுக்கு இத்தனை கோவம் பிறக்குதே, ஜஸ்டிஸ் காரனுங்க சொல்றபடி 100க்கு 3 பாகத்துக்கு மேலே பிராமணாளுக்குத் தரக்கூடாதுன்னு சொன்னா, இந்து பேப்பர், என்னென்ன எழுதுமோ? அந்தச் சுயமரியாதைக்காரனுங்க சொல்றபடி, தமிழன் காசிலே ஆரியனுக்குப் படிப்பான்னு கேட்டா தேள் கொட்டினமாதிரி இந்து ஆடும்போலிருக்கே?

சோழ : சரி! சட்டம் அவசியமென்றே வைத்துக் கொண்டாலும், இப்போ, மந்திரி சபை இல்லாதபோது இதைச் செய்யலாமோ?

வேலு : இந்த மாதிரி பேசாதிங்க. நீங்களே, எத்தனையோ தடவை சொல்லியிருக்கிறிங்க, இந்த சர்க்கார் காரியம் செய்யாமே கிடக்கேன்னு கண்டிச்சிப் பேசினிங்க. வரி வசூல் செய்யறே வேலையோடு முடிந்தா, ஜன சௌக்யத்தை கவனிக் வேண்டாமான்னு சொன்னிங்களே. இப்போ சர்க்கார், ஒரு காரியத்தைச் செய்ய முன்வந்தா, இவா செய்யலாமா கர்மத்துக்குப் பாத்யப்பட்டவா வரவேண்டாமான்னு பேசறிங்க. இது, வேண்டாமென்ற பொஞ்சாதிக்கு கால்பட்டா குத்தம், கைபட்டா குத்தம்னு சொல்வாங்களே அது போலிருக்கு. இப்படிப் பேசப்படாது.
கணபதி : வேலுவா, இப்படிப் பேசறான்? ஏண்டாப்பா நீ ரொம்ப பிராமண பக்தியுள்ளவனாச்சே.

ஆடி : வீணா விவாதிப்பானேன். இந்த மசோதாவுக்கு சரியான எதிர்ப்பு உண்டாக்கப் போறா. இண்டு, எழுதினா இலேசன்று.

வேலு : ரொம்ப கனமாய்த்தானிருக்கும் தம்பி. ஆனா இதை எதிர்த்தா இண்டு பேப்பரைபத்திக் கொஞ்சம் நஞ்சம் என்னைப் போன்றவங்களுக்கு அன்பு இருந்ததே அதுவும் போய், அது வெறும் அக்கிரகாரம், பஞ்சாங்கம்னு ஏற்பட்டுவிடும்.
சோழ : இந்த மாதிரி, தலைகீழான காரியம் நடக்கும்னு தெரிஞ்சா 50, 60 இலட்சம் ரூபாயை மகா ஜனங்கள், யூனிவர்சிடிக்குக் கொட்டிக் கொடுத்திருப்பாரோ. அவாளுடைய காசு விரயமாகலாமோ?

வேலு : அறுபது இலட்சம் யாரு கொடுத்தா? ஐயர்மாரா? சங்கராச்சாரியாரா? தீட்சிதரா? சொல்லுங்க கேட்போம். பணம் கொடுத்தது தமிழனுங்கதானே. அவனுங்க பணத்தாலே பள்ளிகூடம்கட்டி, அதிலே நாட்டாண்மைக்காரரா ஐயரை நடுவீட்டிலே வைக்கணும். இதுதானே நீங்க பேசற நியாயம்? இது நடவாது. நாடு இருக்கிற நிலையிலே இது நடவாது. தம்பி சொல்றதே, இதை எதிர்க்கப் போறதா, அதேப்போல இதை ஆதரிக்கவும் ஒரு பெருங் கூட்டம் இருக்குது. ஏதோ வாய் மிரட்டாலே, இன்னும் கொஞ்சகாலம், இதுபோல சாதுவான சட்டம் வந்தாக்கூட எதிர்க்கலாம், ஆனா, இப்போ காலம்போற போக்கைப்பார்த்தா அண்ணாமலை யூனிவர்சிடி, தமிழ் யூனிவர்சிடி, இதிலே தமிழருக்கு இடமுண்டு, ஆரியருக்குக் கிடையாது என்றுகூட சட்டம் பிறக்கும் போலிருக்கு.

கணபதி : திவ்யமா பிறக்கட்டும், உமக்குத் திருப்தியேற் படட்டும். விடுடா சோமு, பேச்சு ஏன்? நம்ம சங்கராச்சாரியா ஸ்வாமி சொல்லிண்டிருக்கோ, காமகோடி பேப்பரிலேயும் பார்த்தேன், நமக்கு இந்த நீசப்படிப்பு ஏன்? பழையபடி வேதபாட
சாலை உண்டு நாம உண்டுன்னு இருந்தோமானா, பிராமண தர்மம் கெடாது பார்த்துக் கொள்ளலாம். நமக்கேன் இங்கிலிஷ் படிப்பு? அந்த மோகம் பிறக்காதபடி, இந்த மசோதா செய்யும். இதுவும் நமது குல நன்மைக்குத்தான்.

ஆடி : இதெல்லாம், காங்கிரஸ் மினிஸ்டிரி இருந்தா நடக்குமோ? இப்பவும் நேஷனல் லீடர்ஸ் விடுதலையானா, இது மாதிரி விபரீதம் நேரிடாது. இந்த ஆரிய திராவிட கூச்சலை அடியோட ஒழிச்சுடுவா?

வேலு : சும்மா கிடடா தம்பி, அது என்ன அவரைப் பிஞ்சா ஒழிச்சுப்போட. உங்க ஐயர் சொன்னமாதிரி, ஆஸ்ரமத்திலே உட்கார்ந்து வேதம் படிச்சூட்டு பவதி பிக்ஷாந்தேகின்னு, பழைய பெருமையோடு வாழக்காலம் பிறக்குது உங்களுக்கு, அது தெரியாமே ஆடாதே.

கணபதி : பேச்சு முத்தறது. பொறப்படு சோமு ஆத்துக்குப் போவோம். ஆடி, வாயை மூடு. நமோ, நம!
(மூவரும் போகின்றனர்.)

வேலு : சிதம்பரத்துக் காலேஜுக்கு இங்கே மயிலாப்பூர் குளமேல்லோ அதிருது. பசங்க, இலேசுபட்டவங்களா? இவனுங்க கொட்டம் அடங்கணும். ஆமாம், அடக்கணும்.

(15.8.1943)