அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஊரார் உரையாடல்!
இடம் : கோவில் குளம்.

இடம் : கோவில் குளம்.
பாத்திரங்கள் : வரதாச்சாரியார், வத்சலா, சுதாசனாச்சாரி, ஜனகா, கோபாலன்.

வத்சலா: அடி அத்தே! கொளத்திலே கொழந்தையா, விழறதுக்கு.

ஜனகா: வெறுமனே, கூவாதேடி, நானென்ன கொழந்தையா, விழறதுக்கு.

வரதாச்சாரி : ஏண்டி, மொட்டை முண்டே, அவ சொன்னது நல்லதுதானேடி. நீ விழுந்து தொலைச்சா இங்கே கோயில் காரியமன்னா கெட்டுப்போகும்.

சுதர்சனாச்சாரி : நன்னா சொன்னேன். இந்தச்சண்டைச் சனியனாலே முதலிலே சங்கடம் நேரிட்டது. பிறகு பாருங்கோ இந்த ஏ.ஆர்.பி. பசங்க உயிரை வாட்டிண்டு இருந்தா. பிறகு, ஏமீப வரதராஜப் பெருமாள், யார் மனசிலேயோ பூந்துண்டு, உத்சவம் நடக்க உத்தரவு பிறப்பிக்கச் செய்தாராம். திவ்யமாக நடந்தது.

ஜனகா : என்ன திவ்யம், மகாதிவ்யம். உத்சவமா நடந்தது? ஒப்புக்கு அழற மாதிரி, ஏதோ நாலு தெரு சுத்திண்டிருந்தா, கூட்டம் உண்டா, கடை உண்டா, கருட சேவைக்கு என்ன இருந்தது, யார் வந்தா.

வரதாச்சாரி : போதும் வாயை மூடிண்டுகிடடி, மொட்டை முண்டே. பிரதி தினமும், ஸ்வாமி கங்கனா மண்டம் போனாறானா நோக்குத் திருப்தியா இருந்திருக்கும், உன்னை யாரோ தாம்பூலம் வைச்சி அழைக்கறமாதிரி அங்கே போயிண்டிருப்பே, இப்போ அது கெட்டுப்போச்சேன்னோ, அதுதான் அவளுக்குக் கவலை.

வத்சலா : அப்பா! நேத்து கடைவீதியிலே நான் யாரைப்பார்த்தேன் தெரியுமோ?

ஜனகா : யாரைப் பார்த்தே?

வத்சலா : நீ ஏண்டி குறுக்கே பேசறே, நான் அப்பாவைத்தானே கேட்டேன்.

வரதாச் : அவ, வாய் மூடுமோ, போடி, போய் மடப்பளியிலே ஏதாவது பிரசாதம் வாங்கிச் சாப்டுட்டு வாடி, ஏண்டிவத்சு, யாரைப்
பார்த்தே மாப்பிள்ளை வந்தாரா என்ன?

வத்சலா: அவரை இல்லைப்பா. என்னை முதலிலே கேட்டா பாருங்கோ, மைலாப்பூர் டாக்டர், அவரைத்தான் பார்த்தேன்.

சுதர்சனம்: யாரு, சந்தானமா? ஏண்டி, அவனோடு, ஒல்லியா, செகப்பா ஒரு பொண்ணு இருந்தாளோ.

வத்சலா : ஆமா சித்யா, இருந்தா, டிராமாக்காரி போலன்னோ இருந்தா.

சுதர்ச : டிராமாக் காரியுமன்று, சினிமாக்காரியுமன்று, அவதான் அவனுக்கு ஆத்துக்காரி. ராவ்பகதூர் ராமச்சந்திரய்யர் மகளேன்னோ அவ. டான்சு ஆடறாடி அவ.

வத்சலா : அவ நடந்த நடையிலேயிருந்தே நான் நினைச்சேன்.

சுதர்ச : இன்னும் கொஞ்ச நாளிலே ருக்மணி அருண்டேலைத் தோற்கடித்து விடுவாளாம். அவ பேருகூட அருமையா இருக்கும், நினைப்பில்லே.

வரதாச் : நளினி என்று பேராம்.

ஜனகா : அது என்ன பேருடா அது. வாயிலேயே நுழையாது போலிருக்கே.

வத்ச : ஏண்டி அத்தே! உன்வாயிலே வடை தோசை தவிர வேறென்ன பிடிக்கும்.

சுதர் : பேஷாச் சொன்னேடி வத்சு.

வரதா : ஆமாம், சந்தானம் உன்னோடு பேசினானோ?

வத்சலா : இல்லை, வெறுமனே பார்த்துச் சிரிச்சேன். நான், சௌக்கியந்தானென்னு அப்பா உம்மை விசாரிக்கச் சொன்னார்னு சொன்னேன். நான் நாளைக்கு வந்து அப்பாவைப் பார்க்கிறேன்னு அவர் சொல்லிண்டிருக்கிறதுக்குள்ளே, அவ என்ன செய்தா தெரியுமோ...
ஜனகா : ஆட்டக் குதிரை மாதிரி ஆடினா, அவளின்னோடே அவன் போனான், இவ இஞ்சி தின்ன குரங்காட்டம் விழிச்சா.

சுதர் ; ஏண்டி ஜானு, இப்படி வளவளன்னு பேசறே.

வரதா : அவளுக்கு வாயும் அறுதல், கழுத்தும் அறுதலேன்னோ.
(ஒரு வாலிபன் அப்பக்கம்வர)

ஜனகா : அட கட்டேலே போறவனே, கொஞ்சம்தூரம் விலகக்
கூடாதோ, பிராமணா இருக்காளேன்னு கொஞ்சமாவது எண்ணப்படாதோ (குளத்திலே இறங்கிய கோபாலன், ஜானகியை முறைத்துப் பார்த்து)

கோபாலன் : ஏன் பெரியம்மா இவ்வளவு கோபம்? நான் என்ன மேலேயா விழுந்தேன்.

ஜானகி : (வரதாச்சாரியைப் பார்த்து) கேட்டயளோ, அவன் பேசறதை - மேலே விழுவானாமே.

கோபாலன் : அட யாரம்மா பெரிய அடாவடிப் பேர்வழியா இருக்கே. மேலே விழுவேன் என்றா சொன்னேன்.

சுதர் : விழுந்து பாரேன். பாரேன்னேன், அப்போ தெரியறது.

கோபா : சரிதான் நிறுத்ததய்யா, சும்மா மிரட்டாதே, கோயில் கொளம் உங்க சொத்துபோலப் பேசறே.

வத்சலா : அவா சு.ம. போலிருக்கு. அவாளுக்கு நம்மவாளைக் கண்டாலே பிடிக்காதே, இப்படித்தான் அவா பேசுவா.

கோபா : போதும். அம்மா, நிறுத்துங்கோ, நீங்க வேற பிரசங்கம் செய்யறிங்களா. உங்க பேரிலே தப்பு இல்லை, எங்களவங்களைச் சொல்லணும்.

வத்சலா : இதுக்குத்தான் சு.ம. கட்சியின்னு பேரு. பிராமணா வேறே, இவா வேறேன்னு பேசுவா. ராமசாமி நாயக்கர் கட்சியேன்னோ.

ஜானகி : அவாதான் கோயில் கொளம் கூடாதுன்னுவாளே, இங்கே ஏன் வந்தாளாம்?

கோபாலன் : உங்களைப் பார்க்கத்தான்.

ஜானகி : அட கட்டேலே போறவனே, என்னைப்பாக்கவா, திமிரே பார்த்தேயேளோ, மரமாட்டம் நின்றுண்டிருக்கேளே. அவன் என் கையைப் பிடித்து இழுத்தாகூட வெறுமனேதான் இருப்பீர் போலிருக்கே. அவர் இப்போ இருந்திருந்தா, இந்த அல்பாயுசு தாடையிலே ஒரே அறையா அறைஞ்சிருக்க மாட்டாரோ. இப்ப இந்த மொட்டச்சியை யார் என்ன செய்தாலும் கேப்பார் யாரிருக்கா? வரதா! நீதாண்டா கவனிக்கணும்.

வரதர் : சும்மா கிடடி. அழறே கொழந்தையாட்டம். ஏதோ விஷக்கடி வேளை. அந்தப் பிள்ளையும் போக்கிரியன்று, பரமசாதுவாகத்
தானே இருக்கான். ஏதோ கோபமா இருந்தான் போலிருக்கு, பேசிவிட்டான். கோயிலுக்கு வந்த இடத்திலே, சகோதரர் போலே இருக்காமே சண்டை போடுவதா. ஏனப்பா முதலியார் வகுப்போ?

கோபாலன் : இல்லைங்க நாயுடு.

வரதா : ரொம்ப நன்னாயிருக்கு, நாயுடுன்னா, வைஷ்ணவ பக்தாளேன்னோ, அவா எப்பவும் பிராமணாளே தூக்ஷிக்கவே மாட்டாடி, ஜானு. வாயை மூடு இருப்பிடம், சென்னைப் பட்டிணமோ?

கோபாலன் : ஆமாங்க.

வரதாச் : வியாபாரமாக்கும்.

கோபாலன் : ஆமாம் வேணு நாயுடு ஷாப் சைனா பஜாரிலே இருக்கே, வைர வியாபாரம், அது எங்க கடைதான்.

வத்சலா : அங்கேதான் இந்த லோலாக்கு வாங்கினது.
கோபாலன் : நான்தான் உங்க கையிலே கொடுத்தேன். 315-க்குத் தம்படி கூடக் குறையாதுன்னு அப்பா சொன்னாரே, நான் 15 குறைத்தேன் - உங்களைப் பார்த்ததும் நான் தெரிந்துக்
கொண்டேன், நீங்கள் மறந்துவிட்டிங்க.

வத்சலா : பார்த்தாயடி அத்தே. நமக்குத் தெரிந்தவர், நீ சண்டைக்கு நின்றாயே.

ஜானகி : நேக்கென்ன தெரியும். யாரோ சூத்ராவாராளேன்னு பார்த்தேன்.

வத்சலா : நகைக்கடை இங்கே உற்சவத்துக்கு உண்டோ.

கோபாலன் : கடை இல்லை, ஆனா, கையிலே கொஞ்சம் நகைமட்டும் கொண்டு வந்திருக்கேன்.

வரதா : இங்கேயே பேசிண்டு நிற்பானேன், ஆத்துக்குப் போவமே. கோபால நாயுடு, நீங்களும் வரலாம், இங்கே எங்கே தங்கியிருக்கேள்?

கோபாலன் : ஓட்டலிலே.

வத்சலா : வைரநகை வைச்சிண்டு, ஓட்டலிலே தங்கலாமோ? ஏண்டி ஜானி, நம்ம ஆத்து மாடி அறைக்காலியாத்தானே இருக்கு.

வரதாச் : திவ்யமாத் தங்கலாம்.

கோபால் : ரொம்ப சந்தோஷங்க.

வத்சலா : புறப்படு ஜானி, நேக்குத் தலைவலிக்கிறது.

வரதாச் : ஏண்டி வத்சு, சிவகவி போகணும்னு சொன்னேயே.

வத்சலா : இல்லைப்பா, நேக்குத் தலை ரொம்ப வலியா இருக்கு.

ஜானகி : அடேயப்பா, அவர், வந்தா வரட்டும், இல்லை, ஆத்திலே தூங்கிண்டிருக்கட்டும், நான் சிவகவி பாத்தாகணும்.

வரதாச் : சரி, போறது, ஏன் நீர் வருவது உறுதிதானே.

சுதர்ச : ஆஹா! டிக்கட்டு பணம் நம்முடையது.

கோபால் : டிக்கட் வேண்டாம், எனக்கு அந்தச் சினிமாப் படக்காரர் தெரியும், சீட்டு தருகிறேன் றிபிரியாறீ போகலாம்.

வரதா : ரொம்ப நன்னா போச்சு. அப்போ வாரும் நம்ம ஆத்தையும் அடையாளம் தெரிஞ்சிண்டு, சீட்டும் எழுதித்தரலாம்.

வத்சலா : ரொம்ப தூக்கம் வர்ரது வாடி ஜானு, இன்னிக்கி ஆத்துக்கு வரச்சே நகை எடுத்துண்டு வருவீரோ? பார்க்கணும்.

கோபாலன் : ஒரு கைப்பெட்டிதானே, இப்பவே எடுத்துவந்து விடுகிறேன். (யாவரும் போகின்றனர்)

உரையாடல் கற்பனை

(திராவிடநாடு - 6.6.1943)