அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஊரார் உரையாடல்

கிருஷ்ணன் - மந்திரமென்பதே உலகத்தில் இல்லை என்றுநீர் சொல்வதாய்க் கேள்விப்பட்டேன்; அது உண்மைதானா?

ராமன் - ஆம்! அது உண்மைதான்.

கிருஷ்ணன் - ஏன் இந்த விவகாரத்தில் தலையிட்டுக் கொண்டீர், உலகிலுள்ள எல்லோரும் மந்திரமிருப்பதாகவும், அதற்கு அநேக சக்தி இருப்பதாகவும் சொல்லும்பொழுது நீர் மாத்திரம் இல்லையென்று சொன்னால் எல்லாருடைய மனமும் புண்படுமல்லவா?

ராமன் - அநேக நாட்களாக மந்திரக்காரர்கள் பாமர மக்களை ஏமாற்றி “நான் அது செய்கிறேன், இது செய்கிறேன்; உமது எதிரிகளைக் கொன்றுவிடுகிறேன்,கால் கை வராமல் செய்து விடுகிறேன், மிட்டாய் தருவித்துக் கொடுக்கிறேன், ரூபாய்கள் தருவித்துத்துத் தருகிறேன்” என்று மக்களிடம் ரூபாய்களைக் கொள்ளையடித்து ஓட்டாண்டிகளாக்கி கொண்டு திரியும் புரட்டர்களிடமிருந்து மக்களைத் தப்புவிப்பதற்கும், இதுகாறும் பொருட்களையும் நாட்களையும் அறிவையும் இழந்து புண் பட்டிருப்பதை ஆற்றுவதற்கேயன் றிப்புண்படுத்தவல்ல. இதுவும் நான் மாத்திரம் புதிதாகச் சொல்லி விடவில்லை. சுயமரியாதைக்காரர் யாவருமே சொல்லுவார்கள்.

கிருஷ்ணன் - யாராவது மந்திரம் செய்து ருசுப்படுத்தி விட்டால்?

ராமன் - இல்லாததை இல்லை என்று சொல்லுகிறேனே யொழிய இருப்பதைப் போய்விடச் சொல்லி நான் சொல்ல வில்லை. இருக்குமானால் சந்தோஷந்தான், அன்று முதலே மந்திரங்களைக் கற்றுக்கொண்டு என்விரோதிகளின் மீது பிரயோகித்து அவர்களைப் பிழைக்க விடாமல் ஹிம்சித்து ரூபாய்களை தருவித்துக் கொண்டு பணக்காரனாய் விடுவேன்.

கிருஷ்ணன் - மந்திரத்தினால் தருவித்துக்கொள்ளும் பணம் மூன்றே முக்கால் நாழிகைதான் இருக்குமாம்.

ராமன் - அவ்வளவு நாழிகை இருந்தால் போதும். அதற்குள்ளாக பாங்கில் கொண்டுபோய்ப் போட்டு ரசீது பெற்றுக் கொள்வேன். அதற்குப் பின்னால் பாங்கிலிருக்கும் ரூபாய்கள் தானே காணாமற் போய்விடும் - அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை.

கிருஷ்ணன் - மந்திரக்காரர்கள் இதைச்செய்து காட்டுவதற்குப்பயப்படுகிறார்கள். ஏனென்றால் கவர்ன் மெண்ட் விரோதமென்றும், ஊரார் பல்லைத்தட்டி விடுவார் களென்றும், மற்றும் ஏதேதோ சொல்லுகின்றார்கள்.

ராமன் - அவர்கள் அப்படித்தான் சொல்லுவார்கள். சட்டியில் இருந்தாலல்லவோஅகப்பையில் வரும். என்றாலும் பெரிய காரியம் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. மந்திரத்தினால் ஒரு சிறிய பொருள் வைத்த இடத்தைவிட்டுச் சிறிது நகர்ந்தாலும் நமக்குப் போதுமானது. இதற்குக் கூடவா கவர்ன்மெண்டார் பிடித்துக் கொள்வார்கள்? ஊரார்பல்லைத் தட்டி விடுவார்கள்? உண்மையிலேயேமந்திரக்காரர்கள் பயந்தால் மாந்திரீகப் புஸ்தகம் போடுவது, மோடிவைப்பது, முதலியவைகள் கவர்ன்மெண்டுக்கு விரோதமாகாதா?

கிருஷ்ணன் - ஆனாலும் சில மந்திரவாதிகள் ஆகட்டுமென்று தான் சொல்லுகிறார்கள்.

ராமன் - வாயில் சொன்னால் போதுமா? நேரில் காட்ட வேண்டாமா? இன்றைக்கு நாளைக்கு என்பது இல்லை என்பதற்குத் தான் அடையாளம்.

கிருஷ்ணன் - மந்திரங் கால்மதி முக்கால் என்று ஆன்றோர் சொல்லியிருப்பதைப்பார்த்தால், கொஞ்சமா வது இருப்பதாகத் தானே தெரிகிறது.

ராமன் - அப்படியானால் ‘மந்திரத்தால் மாங்காய் விழாது’ என்று ஆன்றோர் சொன்னதை மாத்திரம் ஏன் மறந்துவிட்டீர்?

கிருஷ்ணன் - மலையாளத்தில் மந்திரக்காரர் அதிகமென்று சொல்லுகிறார்களே.

ராமன் - ஆம் அப்படித்தான் சொல்லுவார்கள். அவ்விடம் போய்க் கேட்டால், இவ்விடம் விசேஷமாக இல்லை, திருநெல்வேலிப்பக்கம் அதிகமென்று சொல்லுவார்கள், அவர்களிடம் போய்க்கேட்டால் பொம்ம சமுத்திரமெனுமூரில் அதிகமென்பார்கள் இது தெரிந்த விஷயந்தானே.

கிருஷ்ணன் - ஆனால் மந்திரக்காரர்களுக்கே மந்திரம் சந்தேகமென்றீர்களா?

ராமன் - அவர்களுக்கு மந்திரத்தின் மீது சந்தேகமில்லை. ஒவ்வொரு வரும் ‘நமக்குத்தான் தெரியவில்லை குருநாக்குச் சரியாய்ச் சொல்லவில்லை இன்னும் அநேகருக்குத் தெரியும் என்று நினைத்திருக்கிறார்கள்.

கிருஷ்ணன் - எவ்வகையிலும் ருஜுப்படுத்த முடியா விடட்õல் மந்திரமில்லையென்றுதானே ஒப்புக் கொள்ள வேண்டும்.

ராமன் - வாஸ்தவந்தான், அப்பா ஒப்புக்கொள்ளுவார் களென்று நாங்கள் நினைக்கவில்லை.

கிருஷ்ணன் - ஏன்?

ராமன் - “எத்தனையோ பேர் கெட்டிக்காரர்கள் இருப்பார்கள் நமக்குத் தெரியவில்லையே ஒழியவேறில்லை. “மந்திரம் தெரிந்தவர்கள் தெரியும் என்று வெளியில் வருவார் களா” என்று சொல்லிவிடுவார்கள்.

கிருஷ்ணன்- அப்படியே எண்ணி விட்டால் உண்மையைத் தெரிவது தான் எப்படி?

ராமன் - உதாரணமாக வாதபித்தசிலேத்தும்குணவித்தியாசத் தினாக் யாருக்காவது கால் கை வீங்கிய கொண்டால், அவ்வூரில் மந்திரக்காரனென்று இருப்போனைப் பிடித்து வந்து “நீ தான் மந்திரம்செய்து இப்படிச் செய்து விட்டாய்” என்று யாராவது நன்றாய் உதைத்துப் பல்லைதட்ட ஆரம்பித்தால் அவன் “ஐயோ சிவனே நான் ஒன்றும் செய்யவில்லையே! எனக்கு மந்திர மென்பதே தெரியாதே” என்று அழஆரம்பித்து விடுவான், அப்போது மந்திரக்காரன் யோக்கியதை தெரிந்து போருமல்லவா?

திராவிடநாடு - 2-11-1947