அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஊரார் உரையாடல்
தோட்டப்பாதை

இடம் : தோட்டப்பாதை

பாத்திரங்கள் :
1. சங்கர ஐயர், வைதிகர்.
2. சதாசிவ ஐயர், தேசிய வைதிகர்.
3. கலியாணராம ஐயர், காங்கிரஸ்.
4. சிதம்பரம்பிள்ளை, வைதிகர்.
5. மருதாச்சலம், அவர் மகன், சீர்திருத்தவாதி.
6. செங்குட்டுவன், சுயமரியாதைக்காரன்.

ச: ஓய்! கேட்டீரோ விஷயததை? திம்லா மாநாடு தோற்றுதேன்னோ, மனஷ்யன் சித்தம் குழம்பிப்போய் ஏதேதோ கன்னாபின்னான்னு கூவிண்டிருக்கார்.

சதா: யாரைச் சொல்றீர்?

ச: சாட்சாத் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாஸ்வாமிகள் இருக்காரே, நம்ம பிரதம மந்திரி அவரைத்தான் ஓய் சொல்றேன்.

சதா: பித்துக்குளி மாதிரி பேசிண்டிராதேயும். அவருடைய மூளையின் விசேஷத்தைச் சிலாகிக்காதவா கிடையாது, நீர் ஏதோ அவருக்குச் சித்தம் குழம்பி இருக்குன்னு பேசறீர். சத்தம்போட்டுச் சொன்னீரோ யாராவது உம்ம கன்னத்தைச் சுத்தம் செய்து அனுப்பிவிடுவா.

ச: உண்மைதான் ஓய்! உள்ளதைச் சொன்னா அப்படித்தான். யதார்த்தவாதி பகுஜன விரோதின்னு பெரியவா சொன்னே ளேன்னோ யார் என்னை இதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யட்டும், நான் என் மனதிலேபட்டதைச் சொல்றேன், ஆச்சாரியாருக்குச் சித்தஸ்வாதீனமில்லை. அவர் இந்த இராஜீய விஷயத்திலே வேணுமானா பெரிய மேதாவியா இருக்கலாம், ஆனா, நம்ம சமூக மதவிஷயத்திலே அவருக்கு என்ன ஓய் தெரியும்?

சதா: பிரமாதமா கோபப்படுகிறீரே, என்னதான் விஷயம் சொல்லுமே கேட்போம்.

ச: அவர் கொழந்தையை, அதான் ஓய் இலட்சுமியை காந்திமகானுக்குத் தந்தாரேன்னோ...?

சதா: அந்தப் பழைய கதைக்காகவா இப்போ இவ்வளவு கோபம் உமக்கு, பைத்யக்கார மனுஷன் ஓய் நீர்! அவா இப்போ கொழந்தை குட்டிகளோடு சௌக்யமா இருக்கா.

ச: இருக்கட்டும், பகவத்கிருபையாலே, அதை இப்போ கண்டிக்க வரவில்லை, ஓய்! அந்தக் கலியாண சமயத்திலே, ஏதோ நம்மவா இந்தத் தேச சரிதத்திலேயே சிலாக்யமானதா, கீர்த்தியுள்ளதான ஒரு சம்பந்தம் செய்துண்டான்னு நாமெல்லாம், சும்மா இருந்தோம், சாஸ்திர விரோதம், ஆச்சாரஹீனம் என்று தெரிந்தும், அதனுடைய பலன் என்ன ஆயிடுத்து தெரியுமோ? இப்போ, ஆச்சாரியார், கலப்பு மணம் பரவவேண்டும், பரவினால் தான் இந்தத் தேசத்துக்கே விமோசனம் உண்டு. ஜாதி குலம், மதம் முதலியவற்றாலே நாம் இனிப் பாழாகக்கூடாதுன்னு பேசியிருக்கார்.

சதா: உம்மிடத்திலா?

ச: ஊரறிய, உலகறியப்பேசினார் ஓய்! பம்பாயிலே ஏதோ ஸ்திரிகள் கலாசாலையாம், அதிலே போய் அசல் சு.ம. பிரசங்கம் செய்திருக்கார் ஓய்.

சதா: ஓ! அதைச் சொல்றீரா?

ச: என்ன ஒய் இது, அதைச் சொல்றீரான்னு இழுக்கறீர். அது என்ன பிரமாதமான விஷயமில்லையோ? ஜாதியை ஒழிக்கணுமாமே ஓய்! இவர் வாயிலே வரவேண்டிய பேச்சா இது? எந்த ஜாதியிலே இருந்தாலும், எந்த மதமானாலும் சரி கலியாணம் செய்து கொள்ளலாமாமே, கேட்டிரோ. இது ஈரோட்டு இராமசாமி நாயக்கர் கூறுவதுதானே. நாஸ்திகனென்று நம்மவாள் மட்டுமில்லே, அவா மனுஷாளே அந்த நாயக்கரைத் திட்டிண்டிருக்கா, இந்த ஆசாமி திடீரென்னு என்ன ஓய் கலப்பு மணம் தேவைன்னு பேச ஆரம்பிச்சுட்டார்? என்னதான் இருந்தாலும், அடுக்குமோ ஓய் இந்தப் பேச்சு.

சதா: கலப்பு மணத்தைக்கண்டு மிரளுகிற காலமில்லையே ஓய் இது. மேலும் கலப்பு மணத்தாலே, குடி முழுகி விடுகிறதா என்ன?

ச: நம்ம குலம், ஆச்சாரம், சம்பிரதாயம், சாஸ்திரம்? ஓய், இவை என்ன கிள்ளுக் கீரையா?

சதா: அப்படியா ஆச்சாரியார், சொன்னார்? இல்லையே! கலப்பு மணத்துக்கு நமது பழைய தர்மசாஸ்திரங்களிலே கூட ஆதாரமிருக்குன்னுதான் பேசினார்.

ச: தர்ம சாஸ்திரத்தைப் பேசறாரோ? அனாச்சாரத்துக்கு ஆச்சாரம் கற்பிக்கிறாரோ? கலப்பு மணத்துக்கு ஆதாரம் பழைய தர்மசாஸ்திரத்திலே இருக்கட்டுமே, இருந்தால், அதன்படி நடக்கவேண்டிய அவசியமில்லைன்னுதானே நம்ம பெரியவா ஜாதி ஆச்சார முறைப்படி நடந்துவந்தா? இவர் அதைக் குட்டிச்சுவராக்கி நமது குலத்துக்கே கேடு செய்வதோ?
சதா: நீர் யோசிக்காமே பேசிண்டிருக்கீர். ஆச்சாரியார் செய்கிற எந்தக் காரியமும், நமது குலத்துக்குக் கேடு வருகிறபடி இராது. வர இருக்கும் கேட்டைப் போக்கவே அவர் பாடுபட்டு வருகிறார். கலப்பு மணத்தை ஆதரிப்பதும் அந்த உத்தம நோக்கத்தோடுதான். அதை அறியாமல் உளறிண்டு இராதீர்.

ச: ராம: ராம! நீரும் அந்தக் கோஷ்டியிலே சேர்ந்துண்டீரா? உம்ம மகன் எவளாவது கிருஸ்தவப் பெண்ணைக் கலியாணம் செய்துகொள்ளப் போறானாக்கும். ஜாதியைக் கெடுக்கும் உங்களையெல்லாம் பகவான் தண்டிக்காமெ விடமாட்டார்.

சதா: தண்டனை விஷயம் பிறகு இருக்கட்டும். கலப்பு மணத்தை ஏன் ஆதரிக்க வேண்டிய அவசியம் நேரிட்டது தெரியுமோ உமக்கு?

ச: என்ன காரணமோ, ஞானஸ்தாளாகிய உமக்குத்தானே தெரியும்! நாங்கள் கேவலம் மண்டுகள்தானே.

சதா: கோபப்படாதேயும் ஓய்! காலம்போற போக்கைக் கவனிக்கணும். நம்ம பிராமண சமூகம், க்ஷணித்திண்டு வாரது. நம்ம ஆச்சார அனுஷ்டானங்கள், சாஸ்திர சம்பிரதாயங்கள் யாவும் கெட்டுவிட்டன.

ச: மிச்சம் மீதி இருப்பதைத் தொலைக்க மகானுபவாள், நீங்கள் கிளம்பி விட்டீர்களாக்கும்!

சதா: ஓய்! நாம் பழைய சம்பிரதாயத்தைக் கட்டிக்கொண்டு அழறது, நமது சமூகத்துக்கேன்னா ஆபத்தா முடியறது தெரியுமோ? அந்தக் காலத்திலே ஜாதி குலம் அதற்கான சதாச்சாரம் ஆகியவற்றுக்கு மதிப்பு இருந்தது, ராஜாங்கத்திலேயாகட்டும் சரி, ஜனசமுதாயத்திலே யாகட்டும் சரி, பிராமணாம
தேவதான்ன காலம். ராஜாக்கள் ரிஷிகள் காலிலே நமஸ்கரித்த காலம். உஷத்தகால உயர்வும், சந்தியாவந்தன மகிமையும், பொதுவாகவே பிராமண ஆச்சாராதிகளும் ஜனங்களாலே மதிக்கப்பட்டு வந்த காலம். அந்தக்காலமா இது!

ச: அதைத்தான் நானும் கேட்கிறேன் ஓய், வயிறு எரிந்து கேட்கிறேன்.

சதா: வயிறு எரிந்து பலன் இல்லையே ஓய். கால வேகத்தாலே, ஜனங்கள் கண் விழித்துக்கொண்டா, பழைய முறைகளைக்
கண்டா கேலி பேசறா, வைதீகப்பிச்சுன்னு கூறிண்டு இந்தக்காலத்திலேயும் இப்படிச் சிலதுகள் இருக்கேன்னு கேலி செய்யறா. நம்ம சமூகத்திலேயே பாருமே ஓய்! ரொம்ப தூரம் போகவேண்டாம், உம்ம மாப்பிள்ளை இருக்காரேன்னா, அவரைப்பாருமே, ஓமத்தீ பரவ வேண்டிய உம்ம கிரஹத்திலேயே சிகரெட் புகையை நிரப்பிக்கொண்டு, இருக்காரேன்னா.

ச: யார் அவனைச் சட்டை செய்யறா? அழிஞ்சி போறான்.

சதா: அதேபோலத்தான் அவன் எண்ணிண்டிருக்கான். போறது கிழட்டு வைதீகம்னு அவன் கூறுவான்.

ச: கூறட்டு ஓய்! இதுகள் இப்படிக் கெட்டுக் கீரைவழி ஆவதைக்
கண்டித்து, நமது சமூகத்தைத் திருத்தி, பழையபடி ஆச்சார முள்ளதாகச் செய்யவேண்டிய ஆச்சாரியார் ஜாதி ஆச்சாரத்
துக்கே உலை வைக்கிறாரே! எவன் வேண்டுமானாலும், எவளை வேண்டுமானாலும், கலியாணம் செய்து கொள்ளலாமாமே, இதுதான் இவரை நம்ம சமூகம் நம்பிக்கொண்டிருந்து கண்ட பலன். பேஷ்! ஓய்! இவருடைய சேவை இருக்கே, மனுமாந்தாதா முதலானவாளுடைய சேவையைவிட மகாசிலாக்கியமானது.

சதா: ஓய்! கொஞ்சநேரம் உம்ம கோபத்தை அடக்கிண்டு இரும், அதோ சிதம்பரம் பிள்ளை வருகிறான், அவன் எதிரிலே நீர் ஆச்சாரியாரை வைதுண்டு இராதேயும்.
(சிதம்பரம்பிள்ளை வருகிறார்.)

சதா: சிதம்பரம்! சௌக்யந்தானே!

சித: இருக்கிறேனுங்க உங்க ஆசீர்வாதத்திலே.

சதா: என்ன விசேஷம் ஊரிலே, உம்ம பையன் மருதாச்சலத்துக்கு...

சித: எனக்குப் பையன் ஏதுங்க? பத்து வருஷமாச்சிங்களே தவறிப்போய்.

சங்: பையன் காலமாயிட்டானா?

சதா: ஓய்! பிள்ளை கோபத்திலே சொல்றார் அதுபோல, மருதாச்சலம், அவருடைய ஒரே மகன். காலேஜிலே படித்தக் கொண்டிருக்கச்சே, யாரோ ஒரு சினேகிதி, அவளைக் கலியாணம் செய்துண்டான்.

சித: கேளுங்க சாமி, ஐயர், எவ்வளவு சாதாரணமாச் சொல்றாரு பாருங்கோ. என் தலைக்குக் கொள்ளியா, என் குடும்பத்துக்குச் சனியனா, என் குலத்துக்கே காசமா வந்தான் அந்தப்பய. பள்ளிக்கூடம்போய் எதுவோ கொஞ்சம் படிச்சு, வேலை வெட்டிக்குப் போடான்னா, என் காசை வாங்கித் தின்னுகிட்டு, என் குலத்துக்கே துரோகம் செய்தான். அந்தப் பாவி எவளோ ஒருத்தி, என்ன ஜாதியோ, என்ன குலமோ சில பேரு செங்குந்த முதலி வீட்டுப்பெண்ணுன்னு சொல்றாங்க, சில பேரு கிருஸ்தவப் பெண்ணுன்னு சொல்றாங்க, அதைக் கலியாணம் செய்துக்கொள் ளனும்னு சொன்னான். என்னடா தம்பி இது நம்ம குலமென்ன கோத்திரம் என்னா, சீயாழிப் பிள்ளை மாருன்னா ஜெகமெல்லாம் புகழ்ச்சி, நாம்ப சைவ குலம், பரம்பரையாச் சைவம், நம்ம ஆச்சாரத்
தைக் கண்டா, கேட்டா, ஆச்சரியப்படுவாங்க, அப்படிப்பட்ட பிள்ளைமார் குலத்திலே பொறந்து, நீ கண்டவளைக்கட்டிக் கொள்வது அழகா, நியாயமா, ஊர் என்ன சொல்லும், ஜாதியிலே உள்ளவங்க ஒப்புவாங்களா, என் மனந்தான் இடங்கொடுக்குமான்னு புத்தி சொன்னேன், மிரட்டினேன், அந்தத்தறுதலை, ஜாதிபேதம் என்பது முட்டாள்தனம் என்று முரட்டுத்தனமாகப் பேசி, அவளைக் கலியாணம் செய்து கொண்டான். ரிஜிஸ்டர் செய்து கொண்டானாம், அன்று தலை முழுகினேன், அவ்வளவுதான், அவன் எப்படி என் மகனாவான்?
(சங்கர ஐயர் சதாசிவ ஐயரைப் பார்க்கிறார். “கேளும் ஓய்! இந்தப் பிள்ளைக்கு இருக்கிற குலாச்சாரப் பற்று உமக்கு இருக்கா பாரும். நீர் இந்த இலட்சணத்திலே பிராமணர்” என்று அந்தப் பார்வை பேசுகிறது. சதாசிவ ஐயர் சங்கர ஐயரைச் சும்மா இருக்கும்படி ஜாடை காட்டிவிட்டு.)

சதா: அதெல்லாம் அவாளவா விதிப்படின்னுதான் சொல்லணும்.
சித: என்ன விதிங்க இது! தடிப்பய கொழுத்துப் போயி ஆடினான். அவன் இந்தப் பட்டணம் போயி படிக்க ஆரம்பிச்சதுமே, அது எப்படி இது எப்படின்னு கேட்கறதும், இதை நம்ப முடியாது அது சுத்தத் தப்புன்னு வாதம் செய்யறதுமா கிடந்தான். என்னமோ ச.ம. கட்சியாம், அதிலே சேர்ந்து இந்தக் கதிக்கு வந்து தொலைச்சான்.

சதா: போகட்டும் விடுங்கோ, பிள்ளைவாளுக்கு, அவருடைய மகன் விஷயமா கவனம் வந்ததோ கொஞ்சத்திலே போறதில்லை துக்கம். அந்தப் பயலும் அவரை ரொம்ப வாட்டித் தொலைச்சான்.

சங்: பாபம்! இப்படித்தான், அந்த நாசமாப்போற நாஸ்திகக் கட்சியிலே சேர்ந்து பலபேர் கெட்டுப்போறா.

சித: சமூகத்தை சீர்திருத்தரானாம் இவன். தேசத்துக்குக் கலப்பு மணத்தாலேதான் நன்மை பிறக்குமாம்.

ச: யார் சொல்றா?

சித: அதோ அந்த மடப்பயதான்.

ச: எந்த மடப்பய?

சித: அவன் தானுங்க, எனக்கு மகனாப் பொறந்து என் மானத்தை போக்கினானே அந்தச் சண்டாளன் சொல்றது இது போலெல்லாம்.

சதா: யாரோ பையன் மனசைக் கெடுத்து விட்டா.

சித: யாரு? எல்லாம் இந்தப் பசங்கதான். அவனுங்கதானே ஜாதி இல்லை, ஆச்சாரம் இல்லைன்னு ரொம்ப நாளாகக் கத்திண்டிருக்கிறானுங்க.

ச: ஆமாம், ஆமாம்.

சித: பெரிய படிப்பாளி, மேதாவி, எவ்வளவோ விஷயஞானம் அனுபவ ஞானம் உள்ளவங்களெல்லாம், நம்ம மதத்தின் பெருமை, ஜாதி முறையினுடைய மகிமை இவைகளைப்பற்றிப் பேசறாங்க; இது என்னாடான்னா, கலப்பு மணமாம், ஜாதி ஒழிப்பாம், எல்லோரும் ஒரே குலமாம், என்னென்னமோ பேசி நாசமாப் போச்சி.
சதா: சரி, நான் கொஞ்சம் அவசரமாப் போகணும், பிறகு சந்திக்கிறேன்.
(சிதம்பரம்பிள்ளையை அனுப்பிவிட்டு, சதாசிவமும் சங்கர ஐயரும், செல்கின்றனர், மருதாச்சலம் வருகிறான் அந்த வழியே.)

சதா: வாப்பா, மருதாச்சலம்! சௌக்கியந்தானே.

மரு: இருக்கிறேன்.

சதா: இவ்வளவு நேரம் உங்க அப்பா பேசிண்டிருந்தார்.

மரு: அந்த இடியட்டுக்கு இப்போதாவது புத்தி வந்ததோ?

சதா: இப்போ, என்ன?

மரு: பத்து வருஷத்துக்கு முன்னாலே நான் துணிந்து அவருடைய கோபத்தையும் சட்டை செய்யாமல், மீனாவைக் கலியாணம் செய்து கொண்டேன், அப்போது என்னைக் குலத்துரோகி, ஜாதியைக் கெடுத்த சண்டாளன் என்றெல்லாம் ஏசினார், வீட்டைவிட்டு வெளியே துரத்தினாரே, நான்தான் மடப்பயல் போக்கிரி கட்டுக்கடங்காதவன், சாஸ்திர விரோதி, சூனாமானா; பெரிய அறிவாளி, ஞானஸ்தர், உபநிஷத்தின் உயர்வும் கீதையின் சிறப்பும் தெரிந்தவர் ராஜகோபாலாச்சாரியார், அவர் கூறுகிறாரே இப்போது, இந்தக் கலப்பு மணத்தாலே தான் நாட்டுக்கு விமோசனம் உண்டென்று, அவர் பேச்சைக் கேட்ட பிறகாவது என் தகப்பனாருக்குத் தெளிவு வந்திருக்குமோ என்றுதான் கேட்டேன்.
சதா: ஓ! அதைக் கேட்டயா? அது சரி. அது சரி! உங்க அப்பா ஒரு கர்நாடகப் பேர்வழி, அவருடைய போக்குமாறாது. போகட்டும், சௌக்கியமா இருக்கேயேன்னோ? அவ்வளவுதான் தேவை. போய் வரட்டுமோ.

மரு: செய்யுங்க.
(சதாசிவமும் சங்கர ஐயரும், மருதாச்சலத்தைவிட்டுப் பிரிகின்றனர் மேலும் போகையில், காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கலியாணராம ஐயரைப் பார்க்கின்றனர்.)

கலி: சதாசிவ ஐயரவாள்! பேப்பரைப் பார்த்தீளோ? சுவாரஸ்யமான விஷயம்.

சதா: என்ன இருக்கு சுவாரஸ்யம் சிம்லா கெட்டுப் போனபிறகு.

கலி: அது சரி! வேறே ஒரு விஷயம். இந்தச் சூனாமானா இருக்காளே அவா மண்டையிலே ஓங்கி ஒரு அடி அடிச்சிருக்கோ.

ச: வேணும் அதுகளுக்கு. யாரு அடிச்சா?

கலி: அடின்னா நிஜமாகவே அடின்னு அர்த்தமில்லை. அவாளுடைய ஜம்பம் ஒன்று உண்டு, அதை ஒழித்துவிட்டார்.

ச: யார் ஓய்! என்னமோ, விஷயத்தைச் சொல்லாமயே பேசிண்டிருக்கிறீர்.

கலி: யாராலே முடியும் அந்தக் காரியம்? நம்ம ஆச்சாரியார்தான்.

ச: ஆச்சாரியாரா? அவரா சூனாமானா கட்சியைத் தாக்கினார்?

கலி: தாக்கினார்ன்னா, எப்படின்னு நினைக்கிறீர், ஓய்! என்னதான் சொல்லும், காந்தி மகாத்மாகூட இருக்கட்டும் நம்ம ஆச்சாரியார் இருக்காரே அவருடைய புத்தி தீட்சணியம் காந்திக்குக் கூடக் கிடையாது.

சு: அர்ச்சனை இருக்கட்டும் ஓய், விஷயத்தைச் சொல்லும்.

கலி: விஷயமா? கேளும். இந்தச் சுனாமானா இருக்காளே, அவா, ஒரு பெரிய சித்தாப்பு பேசாது வழக்கம். அதாவது நாங்களெல்லாம் பெரிய சீர்திருத்தக்காரளாக்கும், ஜாதி பேதம் மத பேதம் முதலியவைகளை நாங்கள் ஒழிச்சிண்டு இருக்கோம், கலப்பு மணம் நடக்கவேண்டும்னு பேசரோம், நடத்துகிறோம்னு பேசுவா. காலம் இப்போ அவாளுக்குச் சாதகமா இருக்
கேன்னோ? படித்தவாளெல்லாம், ஜாதி ஆச்சாரம் குலபேதம் போன்றவைகளைக் கண்டிக்கிறா. உலகத்து அபிப்பிராயமும் அதற்குச் சாதகமா இருக்கு, இதனாலே, சூனாமானா இயக்கம் வளர்ந்துண்டு வர்ரது. அந்த இயக்கத்தால்தான் முற்போக்கான காரியம் செய்யறவா, சீர்திருத்தக்காராள், அடிப்படையான வேலை செய்துண்டு வர்ரான்னு ஒரு பேர் வர ஆரம்பிச்சுது. பார்த்தார் நம்ம ஆச்சாரியார், ஓங்கி ஒரு அடி அடித்தார். கலப்புமணம் தேவை, ஜாதிகள் ஒழிய வேண்டியது தான்னு பேசி இருக்கார் பூனாவிலே. சகல பத்திரிகைகளும் அவர் பிரசங்கத்தைப் பிரபல்யப் படுத்திவிட்டன. இனிமேல், நாங்கதான் சீர்திருத்தக்காரான்னு சு.ம. கட்சியிலே பேசிண்டிருக்க முடியாது, பேசினா, நாம் கேட்கலாம், “என்ன பிரமாதம்? நீங்க மட்டுந்தானா சீர்திருத்தவாதிகள்? ஆச்சாரியார், கலப்பு மணத்தைப்பற்றி அழகாகக்கூறி இருக்காரே” என்று சொன்னா, அதுகள் வாயை மூடிக்கொண்டு போக வேண்டியதுதான், சரியான சமயத்திலே ஆச்சாரியார், சாமார்த்தியமான முறையிலே, “இதுகளை” ஒழித்துக்கட்டுகிறார்.

ச: சர்வேஸ்வரனுக்குத்தான் வெளிச்சம். ஓய்! நான் வர்ரேன்.
(சங்கர ஐயர் சலிப்புடன் போகிறார். சதாசிவ ஐயர், சங்கர ஐயரின் கவலையைக் கலியாணராமய்யருக்கு விளக்குகிறார்.)

சதா: நம்ம சங்கர ஐயருக்கு என்ன கவலை தெரியுமோ? இப்படி ஆச்சாரியார் கலப்பு மணத்தை ஆதரித்தா, ஜாதி ஆச்சாரம் கெட்டுவிடுமே, பிறகு பிராமண குலத்தின் பெருமை பாழாகி விடுமே, என்று பயப்படுகிறார். அதுதான் அவருடைய கவலை.
கலி: பைத்யமான்னு இருக்கார். ஆச்சாரியாருக்கு என்ன நம்ம குலத்துக்கு எந்தச் சமயத்திலே எது தேவை, அதை எந்தவிதமாகப் பெறுவது என்பது தெரியாதா? கலப்பு மணத்தை ஆதரிக்கிறார், ஆனால் என்ன, அதே வேலையாகவா, பிரச்சாரத்திலே இறங்கப் போகிறார்? அது ஒன்றும் இல்லை. ஒரு ரிகார்டு, யாராவது, அந்தச் சீர்திருத்த விஷயமாகத் தாங்களே உழைப்பவர்கள் என்று சொல்லிக்கொண்டானானா, இதோ பாரும், நானுந்தான் பூனாவிலே பேசி இருக்கன் கலப்புமணத்தை ஆதரிச்சி என்று கூறலாம், அவ்வளவே தவிர வேறே என்ன இருக்கு.

சதா: படிப்படியாகப் போய் விடுவாரோன்னு ஒரு பயம் இருக்கேன்னோ?

கலி: அவர் விஷயத்திலே அந்தப் பயமே வேண்டாம். கலப்பு மணத்தை ஆதரித்தாரே அதே கூட்டத்திலே என்ன பேசி இருக்கார் தெரியுமோ? பெண்கள் கிரஹலட்சுமிகளாக இருக்கணும், குடும்ப பரிபாலனத்திலே சிரத்தையா இருக்கணுமே தவிர, ஆண்களோடு கருத்துவம் வேண்டும்னு ஆர்ப்பரிக்கப்படாதுன்ன சொல்லி இருக்கார்.

சதா: ஆமாம்! நானும் பார்த்தேன் பேப்பரில். மேலும், கீதாவாக்கியப்படி வாழ்க்கை இருக்கவேணும்னும் கூறினார்.

கலி: கவனிச்சீரோ அதை? கீதாவாக்கியம்னா என்ன? பிராமணம் மதேவதாதானே! சுதர்மந்தானே அது அதைக் கூறியிருக்கும்

போது, குலத்துக்குக் கேடு செய்பவர் என்று எப்படி அவரைச் சொல்ல முடியும்?

சதா: “கண்ணன் காட்டிய வழி” என்று புத்தகம் எழுதலியோ அவர்!

கலி: அதுமட்டுமில்லை, ஒரு விஷயம் கேளும். சென்னையிலே ரேடியோ ஆபீஸ் திறந்து வைத்தானே, அப்போ, ஆச்சாரியாரைப் பேசச்சொன்னா ரேடியோவிலே...

சதா: என்ன பேசினார்?

கலி: நான் பழைய தினுசு மனிதன். வைதீகமனப்பான்மை, புது நாகரிகங்கள் அவ்வளவாகப் பிடிக்காது - இது அவர் பேசின வார்த்தைகள் ஓய்!

சதா: ஸ்பஷ்டமாக இருக்கே! தெளிவாச் சொல்லியிருக்கார். என்றையத் தினம் பேசினார், கவனமிருக்கா? யாராவது கேட்டா சொல்லணும் பாருங்கோ!

கலி: தாராளமாச் சொல்லுங்ககோ, சென்னை வானோலி நிலையத்திலே, 16-6-38ல் பேசினார்.

சதா: சங்கர ஐயரவாளுக்குச் சொல்லணும். ரொம்ப சஞ்சலப்படுகிறார்.

கவி: நன்னாச் சொல்லும், துளிகூடக் கவலைப்படத்தேவை இல்லைன்னு சொல்லும், பிராமண குலத்துக்குள்ள உயர்வு இதனாலே ஏன் அழியப்போறது? அவ்வளவு உயர்ந்த குலத்
திலே கலப்பு மணம் நடக்கறதுன்னே வைத்துக்கொள்வோம். எப்படிப்பட்ட சம்பந்தம் ஏற்படும்னு நினைக்கிறீர்? பணத்திலேயோ படிப்பிலேயோ, அந்தஸ்திலேயோ, மிக உயர்ந்த ஸ்தானத்துக்கு வருகிறவாளோடு சில கலப்பு மணம் நடக்கும். அதனாலே இலாபமேதவிர, நஷ்டம் உண்டோ? இப்போ பாரும், டாக்டர் சுப்பராயன் இருக்காரேன்னோ, அவருடைய பார்யா, பிராமண குலம், இதனாலே, குறைவு என்ன? அவர் மந்திரியாக இருந்தவர், இனியும் வரக்கூடியவர், குமாரமங்கலம் ஜெமீன்தார். ஒரு பெரிய ஜெமீன்தார், படிப்பாளி, பெரிய பெரிய பதவிகளிலே அமரக் கூடியவர் அப்படிப்பட்டவரை, பிராமணராக பிறக்கவில்லைன்னு தள்ளி வைத்தா நம்ம குலத்துக்கு நஷ்டம்தானே? ஆணானாலும் சரி பெண்ணானாலும் சரி இப்படிப்பட்ட சிலாக்கியமான கலப்பு மணமாத்தானே நாம் நடத்திவைப்போம். எம்.எஸ்.ன்னா சங்கீத உலகமே இலயிக்கிறது. கோகிலம்னா கோகிலமேதான், குரலிலே! மேனி பவுன், சம்பாதனையும் பவுன் பவுனாக. அப்படிப்பட்ட இசைவாணியை சதாசிவ ஐயர் கலியாணம் செய்து கொண்டார், நமது குலத்துக்கு நஷ்டமோ? அது இலாபமன்னோ?
சுதா: பேஷாச் சொன்னீர். அந்தப் பித்துக்குளிக்குச் சொல்லணும். சரி, நான் போகணும் கொஞ்சம் அவசரமாக, வர்ரேன்.
(சதாசிவ ஐயர் போகிறார்.)
(கலியாணராமய்யர், சுயமரியாதைச் சங்கச் செயலாளர் செங்குட்டுவனைக் காண்கிறார்.)
கலி: பிரதர்! என்ன? ஆச்சாரியார் பிரசங்கத்தைப் படித்தீரோ.
செ: ஆஹா! ஒரு தடவையன்று மூன்று தடவை.
கலி: மூன்று என்ன, முப்பது தடவை கூடப்படிப்பீர்.
செ: ஆமாம், அப்படிப் படித்தால் தானே எங்கெங்கே பொடி வைக்கிறார் என்று தெரியும்!
கலி: அடப்பாவி! இன்னமும் சந்தேகந்தானா? ஆச்சாரியார் பச்சையாகக் கலப்புமணத்தை ஆதரிக்கிறார், காதல் மணத்தை விளக்குகிறார், இப்போது கூடவா அவரிடம் நல்லெண்ணம் வரக்கூடாது.
செ: வழுக்கைத்தலை. இருக்கும் நாலைந்து மயிரும் வெளுப்பு! உமக்கென்ன தெரியும் காதலைப்பற்றி என்று கேட்பார்கள் என்று ஆச்சாரியாரே தமது கட்டுரையிலே குறித்திருக்கிறார், ஆகையாலே, காதல் விஷயமாக அவர் கூறுவது கேட்டு நான் பரவசமடைவதற்கில்லை.
கலி: கலப்பு மணவிஷயமாக?
செ: ஆச்சரியமில்லை!
கலி: ஒரு பெரிய தலைவர், காந்திக்கு அடுத்த நிலையில் இருப்பவர், அவர் கலப்பு மணத்தை ஆதரிக்கிறார், ஆச்சரியமில்லையோ? அது பாராட்டப்பட வேண்டியதல்லவோ?
செ: இந்நாள் வரையிலே, இவ்வளவு பெரிய அறிவாளி, இவ்வளவு சாதாரண விஷயத்தைப்பற்றிப் பேசாது இருந்தது ஆச்சரியப்படத்தக்கது, கண்டனத்துக்குரியது என்று சொல்வேன். இப்போது பேசினார், இதிலே ஆச்சரியம் என்ன? எங்கள் தலைவர் பெரியார் இருபது ஆண்டுகளுக்கு முன்பே இதைப்பற்றி தற்குறிகளின் தாக்குதல், வைதிகரின் வசைமொழி, முரடரின் சொல்லடி, லேகப்பிரியர்களின் கல்லடி முதலிய எதனையும் பொருட்படுத்தாமல் பிரசாரம் செய்தார், தன்னந்தனியே அவரைத் தவிக்கவிட்டனர் இந்நாட்டு மேதாவிகள்! இந்நாட்டுப் பத்திரிகைகள் அவரைக்கண்டபடி தூற்றுவதற்கே புதிய அகராதிகளைத் தேடிக் கிடந்தன. என்னையே நம்பி இப்பெரும் பழி ஏற்றேன் என்றார். கல்லும் கனியும்படி வேலை செய்தார். இன்று கலப்பு மணத்தாலன்றி நாடு விமோசனம் பெற வேறுவழி இல்லை என்று பேசும் ஆச்சாரியார், ஒரு புன்னகை, ஓர் ஆமோதிப்பு, ஒரு சிறு ஆதரவு தந்திருப்பாரா? நடுநிலைமை வகித்தாரா? எதிர்க்காமல் இருந்தாரா? எவ்வளவு எதிர்ப்புகள், கண்டனங்கள், கேலிகள்! நாஸ்திகன், என்றனர். நாத்தழும்பேற நிந்தித்தனர். பாமரரின் கோபத்தைக் கிளப்பி அதனை அவர்மீது பாயச் செய்தனர். எந்தக் கலப்புமணப் பிரசாரத்துக்காக இன்று நீர் ஆச்சாரி
யாரைப் புகழ்ந்து, என்னையும் புகழும்படி கூறுகிறீரோ, அதே பிரசாரத்துக்காகப் பெரியாருக்குக் கல்லடி! ஆச்சாரியருக்கோ மலர் மாலை!! இரக்கம், நேர்மையில் நாட்டம், வாய்மையில் விருப்பம் துளியேனும் இருந்தால், இந்தச் சீர்திருத்தப் பேச்சை பலத்த எதிர்ப்புக்கிடையே பிரச்சார இயந்திர பலமில்லாது பாமரரிடையே செய்து வந்த பெரியாரை, ஆச்சாரியார் அந்தப் பூனா பிரசங்கத்திலே பாராட்டி இருக்க வேண்டாமா? நெஞ்சில் கை வைத்துச்சொல்லும், சு.ம. இயக்கம், ஜாதி ஒழிப்பு, கலப்பு மண ஆதரிப்பு போன்ற காலத்துக்கேற்ற திட்டங்களைப் பிரசாரம் செய்தபோது, ஒத்துழைத்தாரா ஆச்சாரியார்? அவருடைய படை பலம், சுயமரியாதை இயக்கத்தைத் தாக்கப்பயன்பட்டதே தவிர, வேறு எதற்குப் பயன்பட்டது.
கலி: இப்போது....
செ: இப்போது மட்டும் என்ன? ஆச்சாரியார், ஏதாவது ஒன்று சொன்னால் உடனே எடுத்துக்காட்டிக்கொண்டு, அதற்கு ஆதரவு தேடக் கிளம்புவார்களே, குரலர்கள், அவர்கள் எங்கே இப்போது? ஏன் அவர்கள் கலப்பு மண ஆதரிப்பு, ஜாதி ஒழிப்பு பற்றித் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது? ஏன், அவருடைய அன்புக்குப் பாத்திரமான ஏடுகள், இதுபற்றித் தீவிரப்பிரசாரம் புரியக்கூடாது? ஏன், ஆச்சாரியாரேகூட இதுபற்றிப் பேசும்படியும் எழுதும்படியும் தூண்டக்கூடாது? உண்மை
யிலேயே கலப்பு மணத்திலே பற்று இருந்தால் இதுதானா பிரச்சார முறை! “உலகத்தின் சீர்திருத்தத்
திற்கென்றாவது பாரதசாதியின் முன்னேற்றற்திற் கென்றாவது மணம் செய்ய யோசிப்பதோ அல்லது செய்யப்போவதை நிராகரிப்
பதோ நன்மை தராது. விவாதம் என்பது தனியொருவனையும் ஒருத்தியையுமே அதிகமாகப் பொருத்தது சமுகத்தின் நன்மைக்காக நாம் மணம் புரிவோமென்பது வீணான ஆகாயக் கோட்டை” என்று அதே ஆச்சாரியார் கட்டுரை எழுதுகிறார். கலப்பு மணத்துக்கு இந்த வாசகம் தூண்டு கோலாகுமா? மேலும் கலப்புமணத்துக்கு பழைய ஏடுகளிலே ஆதாரம் இருக்கிறது என்று கூறுகிறாரே, அதனால் நன்மையைவிடக் கேடுதானே விளையும்.
கலி: கேடு என்ன?
செ: ஏன் இல்லை! இவர் கூறுகிறபடி, பழைய ஏடுகளிலே கலப்பு மணத்துக்கு ஆதாரம் இருப்பது உண்மை, ஆனால் அதைவிட, குலதர்மம், ஜாதிமுறை எனப்படும் வர்ணாஸ் ரமத்துக்குத்தானே ஆதாரம் அதிகம்.
கலி: கலப்பு மணத்துக்கு ஆதாரம் இருக்கிறதா இல்லையா, பழைய ஏடுகளில்?
செ: பழைய எடுகளில், கலப்பு மணத்துக்கு மட்டுமன்று, மிருகத்துக்கும் மானுட ஜாதிக்குங்கூட கலப்பு மணம் நடந்த கதைகள் உள்ளன. பல ரிஷிகளின் பிறப்பு, உடற்கூறு விற்பன்னர்களும், மனோதத்துவ சாஸ்திரிகளும், ஒழுக்க நூற் புலவர்களும், சட்ட நிபுணர்களும், கேட்டால் கைகொட்டி நகைக்கக்கூடியபடி உள்ளன. மிருகலோகத்துக்கும் மானிட லோகத்துக்கும், தேவலோகத்துக்கும் பூலோகத்துக்கும், நாக லோகத்துக்கும், நரகலோகத்துக்கும் கலப்பு மணங்கள் நடந்துள்ளன அந்த ஏடுகளின்படி! ஆச்சாரியார், கலப்பு மண ஆதரவுக்காக அந்த ஏடுகளைத் தேடிப் பார்த்து, ஆதாரம்கூறி வாய் மூடுமுன், வைதிகப் பண்டிதர்கள், அதே ஏடுகளிலே உள்ள இத்தகைய ஆபாசக் கலப்புகளை ஆயிரக்கணக்கிலே எடுத்துக்காட்டி, இவைகள்கூடத்
தான் உள்ளன ஏடுகளிலே, ஆச்சாரியார் இவைகளையும் ஆதரிக்கிறாரா என்று கேட்பின், வேடிக்கையாக வன்றோ இருக்கும்.
கலி: சரி! ஆச்சாரியார் பேச்சினால் அகமகிழ்ந்திருப்பாய் என்று நம்பினேன்...
செ: இல்லை என்பதைத் தெரிந்துகொள்ள.
கலி: நான் வருகிறேன்.
(போகிறார்).

(12.8.1945)