அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஒரே ஒரு விமானம்!

ஆகவே, வாயுபுத்ரா! வல்லமை மிக்க வனே, நீ தென் திசைக்குப் புறப்பட்டு அலைகடலைத் தாண்டி, கடலையும் விண்ணை யும், மண்ணையும் மருட்டும் கட்டழகனும், காற்றையும் நெருப்பையும், கட்டியங் கூறுவோ ராகவும், தேவர்களைத் தெருக்கூட்டுவோராக ஏற்படுத்திக் கொண்டு கோலோச்சி வரும், இலங்காதிபதியின் சொர்ணபுரியை காண்பாய். அங்கு, அரண்மனைகளிலும், சோலைகளிலும், தேடிப் பார். சோகித்து உடல் மெலிந்த, பிராட்டியைக் கண்டால், இக்கணையாழியைக் கொடு’’ என்று, அன்று.... இராமன் அனுமாருக்குக் கூற, அனுமார் ஒரே பாய்ச்சலில், கடலைத் தாண்டி, இலங்கையை அடைந்தார். ... அது பழைய இதிகாசம்!
இதுபோது, கடலைக் கடக்கவும், கடந்து சென்று, இந்தியரின் செய்தியை எடுத்துக் கூறி, சுயராச்யம் கேட்டுப் பெறவும், போகப்போவதாக, அன்பர் ஆச்சாரியார் கூறுகிறார். சர்க்காரிடம் இதற்கான அனுமதியும் கோரினாராம். அனுமதி கிடைத்ததும், சுயராச்யத்தைத் தேடிக்கண்டு பிடிக்கச் செல்கிறாராம்!

ஆனால், என்ன பரிதாபம். இவர் வருகிறேன்! வருகிறேன்!! என்று கூறுகிறார். ஆனால், அங்கே சீமையிலிருந்து, மிஸ்டர் அமெரி ``அந்த ஆசாமிக்கு இங்கு என்ன வேலை? அவர் வேலை செய்ய வேண்டிய இடம், இந்தியதான்’’ என்று, கன்னத்திலறைவது போலக் கூறிவிட்டார்.

ஆச்சாரியாருக்கு இப்போது இல்லை! போ! கிடையாது! முடியாது! என்ற `வரங்களே’ கிடைக்கின்றன.

தேசிய சர்க்கார் உண்டா?

இல்லை!

காந்தியாரைப் போய்ப் பார்த்துப் பேச வேண்டும், அனுமதி உண்டா?

கிடையாது!!

சீமைக்கு வரலாமென்று நினைக்கிறேன்.

வருவானேன்? வந்து என்ன முடியப் போகிறது?

ஆச்சாரியார், எந்தத் திக்குக்குக்குத் தெண்டனிட்டுத் தரிசனம் செய்து, திருத் தாண்டகம்பாடி வரம் கோரினாலும், பலன் கிடைக்கக் காணோம். இந்தப் பரிதாப நிலைமை கண்டு, அவரது பக்தர்களும், சாமரம் வீசிகளும், பதைத்து, ``இப்படியும் இவருக்கு நடப்பதா? இதென்ன கொடுமை’’ என்று கண்பிசைவதும், கைகளைப் பிசைவதுமாக உள்ளனர்.

``காந்தியாரைப் போய்க் கண்டு பேசினால், சமரசம் ஏற்பட்டுவிடும். அது ஆச்சாரியாரால் தான் முடியும். அவருக்கு வைசிராய் அனுமதி தர மறுத்தது கொடுமை, அநீதி, ராஜ தந்திரமற்ற தன்மை’’ என்று, கூறுகின்றனர், எழுதுகின்றனர்.
ஆனால் இவர் யார்? என்பதைப் பற்றிப் பேச மறுக்கின்றனர், யோசிக்கத் தவறுகின்றனர். இவர் யார்? என்று நாம் கேட்கிறோம்.

தென்னாட்டுக் காந்தியார்! திருச்செங் கோட்டு முனிவர், மாஜி முதலமைச்சர், மகாத்துமா வின் சம்பந்தி, கண்ணன் காட்டிய வழி நடப்போர் என்று அவரைப் பற்றி அன்பர்கள் கூறும் அர்ச்சனைகளை நாம் மறந்து விடவில்லை. அந்த வர்ணனைகளைக் கூறிடும் தோழர்களையே, மீண்டும் கேட்கிறோம், இவர் யார் என்று.

அரசியலிலே குழப்பம் விளைவித்த கோணற் சேட்டைக்காரர், இவரை, வெளியே தள்ளி வெகு நாட்ட்களாகி விட்டன! காங்கிரசை விட்டோ இவர் வெளியேறிவிட்டார். வேறு கட்சி களுக்கோ இவர் வேம்பு! புதுக்கட்சி அமைக்கவும் தவறிவிட்டார். எனவே இவர் யார்? எதற்குப் பிரதிநிதி? எந்த இலட்சியத்தின் சின்னம்? எவருக்கு வக்கீல்? ஏன் இவர் துடிக்க வேண்டும்! துரைமார் வட்டாரத்தைத்தொழக் காரணம் என்ன? சமாதானத்துந்துபியை முழக்கும் நோக்கம் யாது? யார் பொருட்டு இவர் விசேஷத் தூதராகிறார்? யார் இந்தத் திருக்கோலம் பூண்டு திருவலம் வரும்படி இவரை அழைத்தனர், வேண்டினர்? என்று கேட்கிறோம்.
ஆச்சாரியார் பெரிய அறிவாளி என் பதையோ, பொது வாழ்வில் பல வருஷங்களாகப் பாடுபட்டு வருபவர் என்பதையோ நாம் மறக்க வில்லை. ஆனால், இதே விசேஷங்களோடு கூடிய, ``தலைவர்கள்’` இந்தியாவெனும் உப கண்டத்திலேயே ஆச்சாரியார் ஒருவர் தான் இருக்கிறாரா? என்று கேட்கிறோம். ராஜ தந்திரமும் உலக அறிவும், இந்தியப்ப் பிரச்னை பற்றிய தெளிவும், கொண்ட ``பெரியோர்கள், வேறு எவருமே இங்கு கிடையாதா? அத்தகையவர் களை ``மௌனமாக’’ இருக்க, இவர் மட்டும், திக்கெட்டும் தீப்பொறிப் பறக்கத் தாண்டவமாடு வானேன் என்று கேட்கிறோம். அவ்வளவு பேரும் அக்கறையற்றவர்கள், இவர் ஒருவர்தான் அக்கறைக் கொண்டவர் என்பதை யார் ஒப்புக் கொள்வர்! எங்கும் பாலைவனம், ஒரே ஒரு நீரோடை! எல்லோரும் ஏமாளிகள், இவர் ஒருவர் மட்டுந்தான், இந்திய அரசியலின் சிக்கலைத் தீர்த்து வைக்கக் கூடிய அறிவாளி. ஆச்சாரியார், ``நான் போகவேண்டும் சீமைக்கு’’ என்று கூறுவதிலே, இந்தத் தத்துவம் தவிர வேறு என்ன தொக்கியிருக்க முடியும் என்று ஆர அமர யோசித்து அன்பர்கள் பதில் கூற வேண்டுகிறோம்.

சீமைக்குச் சென்றால், இந்திய நிலைமை சீர் பட்டுவிடும் என்று இவர் செப்புகிறாரே! சீர் படுத்த வேண்டிய இடம் எது? சீமையா, இந்த உபகண்டமா? என்று கேட்கிறோம், இந்தியரின் கோரிக்கையைச் சீமைக்கு எடுத்துச் செல்லும் தாராளத் தபால் உத்தியோகத்துக்கு, ஆச்சாரி யாரின் குருதேவர், முன்பு போனாரே, கண்டது என்ன? கொண்டு வந்தாரா சுயராச்யம்? வட்ட மேஜை மாநாடு குட்டிச் சுவராகும் வம்புகள் பேசினாரே தவிர, காரியபூர்த்திக்கான மனப் பான்மையைக் காட்டினாரா என்று கேட்கிறோம்.

``எங்கள் காந்தி இலண்டன் சேர்ந்தார், கைகூப்பித் தொழுவீர்’’ என்று இங்கு கொடுமுடி கோகிலம் கீதம்பாட ஒரு சந்தர்ப்பம் கிடைத்த துடன், காந்தியரின் இலண்டன் பயணம் முடிந்து விட்டது. காந்தியார் போய்ச் சாதிக்க முடியாமற் போனதை, ஆச்சாரியார் சாதிக்க முடியுமா? அத்தகைய மனப்பான்மையை, அவர் கொண்டிருக்கிறாரென்றால், காந்தியாரைவிட, ஆச்சாரியார் தன்னை அதிகமான மேதாவி என்று கருதுகிறார் என்று ஏற்படுகிறதல்லவா? இது சரியா, முறையா என்று கேட்கிறோம்.

இருக்கும் சண்டை, சர்க்காருக்கும், காங்கிரசுக்கும் நடக்கும் காரியமோ, ஐந்தாம் படைக்காரரின் கை வரிசை என்று எவரும் ஐயுறும்படியான, அழிவு வேலைகள். இந்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருருக்கும் நேரத்திலே, ஆச்சாரியார் போன்ற தலைவர்கள் செய்ய வேண்டியது என்ன? சீமைக்குச் சென்று, ``இந்தியாவிலே, தண்டவாளங்களைக் கழற்றி, தபால் பெட்டிகளைக் கொளுத்தி, தீ மூட்டி விடும் காரியங்கள் நிற்க வேண்டுமானால், எமது சகாக்களிடம் அதிகாரத்தைத் தாரும்’’ என்று கேட்பதா, காந்தியாரின் கூட்டத்தார், ஆச்சாரி யாரை, இதுபோல் போய்க் கூறும்படி ஏற்பாடு செய்வதாகச் சர்க்கார் கருத வேண்டுமா? நாச வேலைகளிலே ஈடுபட்டோர்களுக்கு ஆச்சாரி யார் நன்மொழி எடுத்தோதட்டும்.சிறைப் படாத காங்கிரஸ்வாதிகளைத் திரட்டி, அவர்களைக் கொண்டு, இனிக் காங்கிரஸ் எத்தகைய நாச காரியத்தைச் செய்பவருக்கு உடந்தையாக இராது என்று தீர்மானம் நிறைவேற்றட்டும். பிறகு, இந்த முடிவுக்கு ஏற்ப, நாட்டிலே அமைதி உண்டான தும், அகாகான் அரண்மனைக்குச் செல்ல ஆச்சாரியாருக்கு அழைப்புக் கிடைக்கும். அதற்குள் லீகுடன் ஒரு சமரசம் ஏற்படுத்திக் கொள்ளட்டும். இதுதானே வழி! இங்கே புகையும் நெருப்பும் சூழ்கிறது! சமுதாயப் புண்ணும், பிளவும் குறையவில்லை! கட்சிகளுக்குள் உள்ள வேற்றுமைகள் நீங்கக் காணோம்! இவ்வளவிருப் பினும், ``ஒரே ஒரு விமானம்’’ என்று ஆச்சாரியார் கூவிப் பயன் என்ன என்று கேட்கிறோம்.
ஜெர்மன் சர்க்காரின் அதிகாரத்தைப் பெறாமல், தன்னிச்சையாக, ஏதேனும் தூது பேசியோ, தூபமிட்டோ பார்ப்போம் என்று விமானமேறி வந்த ஹெர் ஹெஸ் (ழநசச ழநளள) பின்னர் ஜெர்மன் சர்க்காரால், ``அவனுக்குத் திடீரென மூளைக் குழப்பமேற்பட்டு விட்டது. அதனால் தான் சொல்லாமல் சீமைக்குப் பறந்து சென்றான்’’ என்று கூறிவிட்டது. ஆச்சாரியாரின் சண்டமாருதப் பிரசாரம் சீமையில் நடக்கும் போது, இங்கு ஆகாகான் அரண்மனையிலே அந்த ராத்மாவிடம் கொஞ்சிக் கொண்டிருக்கும் மகாத்மாவும் அவரது மடத்துக் காவலரும் எல்லாரும் ஆச்சாரியாரைப் பற்றி, என்ன கூறுவார்களோ அறிவர்!

ஆச்சாரியார் சீமைக்குப் போக வேண்டும் என்ற உடனே, இந்த தேசத்தை தாங்கிக் கொண்டுள்ள அசகாய சூரர், வைத்தியர் வரதராஜுலு, ``நானும் கிளம்புகிறேன்’’ என்றுரைத்து விட்டார். லீகுக்கு ஒருவர்? திராவிடருக்கு ஒருவர்! என மற்றும் பலரும் கிளம்பி, சீமையிலே, அந்நாட்டு தலைவர்கள், அந்தப் படையை அனுப்பு! கடற் படையை இங்கே போகச் செய். விமானப் படையை இத்தாலி மீது பாயச் சொல். பர்மாக்குள் நமது படைகளை அனுப்பு.. என்று பேசிக் கொண்டிருக் கையில், ஹைடு பார்க்கில் (ழலனந ஞயசம) ஒரு பக்கத்தில், சொரென்சன் தலைமையில் சுயராஜ் யம் தேவை என்று ஆச்சாரியாரும், வரதராஜுலு, இந்துஸ்தான் தேவை, இந்துக்கள் லேசானவர்களல்ல. இரதகஜ துரகபதாதிகள் படைத்தவர். ஈரேழுலோகத்தையும் அடக்கி ஆள்பவர். முப்பத்து முக்கோடி தேவர்களைக் கொண்டவர். என்று வீரமுழக்கம் செய்யவும், பாகிஸ்தான் எமது பிறப்புரிமை. அதைப் பெற்றே தீருவோம் என்று முஸ்லீம் லீக்கினரும், திராவிட நாடு திராவிடருக்கே என்று நீதிக் கட்சியினரும் பேசவுமான நிலைமை இருக்க, உலகப் போர் அங்கங்களிலே என்னென்ன ஏற்பாடுகள் செய்வோம் என்பதை பேசி முடித்துவிட்டு, சர்ச்சில் அமெரிக்கப் பிரதிநிதியுடனும், வாயில் சுருட்டுடனும் அப்பக்கம் வந்து புகையை மேலே விட்டபடி புன்னகையுடன் பிரசங்கிகளைக் காட்டி, இதோ இதுதான் இந்தியா என்று ஏளனமாகக் கூறுவார். இந்தக் கேலிக்கூத்தைத் தவிர வேறு ஆச்சாரியார் செய்யக்கூடிய காரியம், இன்று இங்கு இல்லையா என்று கேட்கிறோம். ஜனாப் ஜின்னாவிடம் பேசின பிறகு ஆச்சாரியார் வைசிராயை பேட்டிக் கண்டு பேசினார். பேசுகையில் காந்தியாரைப் போய் பார்க்க வேண்டுமென்று மட்டுமே தெரிவித்தார். வைசிராயும் முடியாது என்று கூறிவிட்டார்.

காந்தியாரைப் போய்ப் பார்ப்பது பிறகு இருக்கட்டும், ஜனாப் ஜின்னாவுடன் பேசினதில் என்ன பலன் ஏற்பட்டது? அவருடன் சமரசம் உண்டாகிவிட்டதா? என்றன்றோ, வைசிராய் கேட்டிருக்க வேண்டும். அந்தக் கேள்வியைக் கேட்டிருப்பின், ஆச்சாரியாரின், சமரசமுயற்சி என்ன ஆயிற்று என்பது ஏற்பட்டிருக்கும். அதனைக் கூறாது, வைசிராய் வேறு ஏதேதோ கூறினார்.

ஆச்சாரியார், ஜனாப் ஜின்னாவிடம் பேசின பிறகு, இருவருக்குள் சமரச ஏற்பாடு பூர்த்தியாகிவிட்டது என்ற கூட்டறிக்கை வெளியிடப்பட்டிருப்பின், ஆகாகான் அரண் மனையின் கதவு திறக்கப்பட்டிருக்கும். வைசிராயிடம் சாவி இருப்பதாக ஆச்சாரியார் கூறுகிறார்! இல்லை! நாம் பன்முறை கூறினோம், இன்றும் கூறுகிறோம், சாவி அங்குமில்லை, சீமையிலும் இல்லை! சாவி, நமக்குள் ஏற்படும் சமரசத்திலே இருக்கிறது! அதற்குச் சீமைப் பயணம் பயன் தராது! தள்ளாடும் கிழவன் தங்கக் கொடி போன்ற தையலை மணந்து கொண்டு, பிறகு தங்கபஸ்பம் தேடியும், பயன் என்ன அடைய முடியும்? அதுபோலவே, அரசியலிலே, சோர்வும் சிக்கலும் வளர்த்து விட்ட கூட்டமே, சிக்கலைப் போக்கவும் முனையாமல், சிரித்துப் பேசுவோம், என்று முன் வந்தால், பலன் ஏற்படாது. சிந்தனையில் ஒரு தெளிவு!! செயலில் ஒரு புது மாற்றம்!! திட்டத்திலே புதுமை தோன்ற வேண்டும். அதுதான் மிக மிக அவசரமாகத் தேவை.
இப்போது அவசரமாகத் தேவை, ஒரே ஒரு விமானமல்ல! ஒற்றுமைக்கு மனம்!!

(திராவிட நாடு - 22-11-1942)