அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பாசமும் பாசீசமும்
பஞ்ச நிலைமை போகவில்லை.

உற்பத்தி பெருகவில்லை.

உழவர் துயர் தீரவில்லை.

பாட்டாளிக்கு நிம்மதி இல்லை.

பள்ளி ஆசிரியர் பதைக்கிறார்.

அதிகாரிகள் சம்பள உயர்வு கிடைக்கவில்லை.

கதர்த்திட்டம் வெற்றிதரவில்லை.

மதுவிலக்கும் வெற்றிகரமாக இல்லை.

மந்திரி சபையிலே ஒற்றுமை இல்லை.

சட்டசபையிலே, ‘துக்கம்.’

கட்சிக் கூட்டத்திலே, “கலகம்.”

ஊழியர்களிடையே, கசப்பு.

உணவுக் கமிட்டி உபயோகமில்லை.

கட்டாயக் கல்வி பரவவில்லை.

கள்ளமார்க்கட் ஒழியவில்லை.

கொள்ளை இலாபம் போகவில்லை.

விற்பனைவரி உயருகிறது.

தாமாஷ் வரி உயருகிறது.

தமிழாசிரியர் கதறுகிறார்கள்.

இனாம்தாரர் சீறுகிறார்கள்.

ஜமீன்தாரர்கள் புதுப்பணம் பெறுகிறார்கள்.

எல்லைத் தகராறு தீர்க்கப்படவில்லை.

அடக்குமுறைக்குக் குறைவில்லை.

புதியபாதை போடவில்லை.

நீர்ப்பாசனத் திட்டம், ஏட்டளவில்.

துறைமுகத்திருத்தம், பேச்சளவில்

மாஜி பட்டாளத்திற்கு வேலை இல்லை.

ஐ. மீ. அ.வைக் கவனிக்கவில்லை.

வடநாட்டு ஆதிக்கம் குறையவில்லை.

தமிழ்மொழிக்கு ஆக்கம், மேடை அளவில்.

இந்திக்கு, மதிப்பு உயர்ந்து விடுகிறது.

கடல் கடந்த தமிழனைக் கவனிப்பாரில்லை.

புதிய தொழில் திட்டம் போடவுமில்லை.

ஆலை அரசர்களை அடக்க முடியவில்லை.

பண்ணைகளிலே அட்டகாசம் குறையவில்லை.

இலஞ்ச இலாவணம் போகவில்லை.

ஆட்சியாளரிடம் புதிய திட்டம் இல்லை.

ஆனால், காங்கிரஸ் நண்பனே! உனக்கோ, காங்கிரசிடம் உள்ள மோகம் தணியவில்லை.

வெளியே சொல்லக்கூசுகிறாய். விம்மி விம்மி மனம் நோகிறாய்.

இந்தத் துக்கத்தைத் தீர்த்துக்கொள்ளத் திராவிடர் கழகத்தைத் தூற்றுகிறாய். காங்கிரஸ் கூட்டம் நடத்துகிறாய். அனைவரும் சேரவாரீர் என்று அழைக்கிறாய்.

ஜனநாயக ஆட்சியிலே ஒரு கட்சி ஆட்சி செய்தால், அதன் தவறுகளை எடுத்துக்காட்ட, மாற்றுத் திட்டம் கூற, வேறோர் கட்சி இருக்கவேண்டுமே, அந்தக் கட்சி இல்லையே!

ஒரே கட்சிதான் ஆட்சி செய்து வரும் - ஆட்சியிலே குறைபாடுகள் மலிந்துதான் இருக்கும் - எதிர்பாரா விபத்துக்கள் - எண்ணற்ற ஏமாற்றங்கள் - மன முறிவுகள் - நடைபெறும் - ஆனால், அவற்றை எடுத்துக்காட்ட,வேறோர் கட்சியும் கூடாதுஎன்றும் கூறினால், பிறகு, அதற்குப் பெயர் என்ன? பாசீசம்தானே!

பாசீசம் வளருகிறது - நீயே அதனை வளர்த்துக்கொண்டு வருகிறாய் உனக்கு அந்தக்கட்சி மீதுள்ள பாசம் - பாசீசத்தை ஏற்படுத்துகிறது.

பெருமைக்குரிய வெற்றி, கீர்த்திக்குரிய செயல், ஆசையைக் கிளறும் திட்டம், இவை ஒரு கட்சிக்குக் கிடைத்ததும், அது, தன் பிடியைப் பலப்படுத்திக் கொள்ளும் - நாளாக நாளாக, அதனிடம் இலயிக்கும் நண்பர்கள், குறைகளைக் கண்டு பிடிக்கத் தொடங்குவர். அப்போது, பாசீசம், ஏதேதனும் ஒரு புதிய ஆபத்து வர இருக்கிறது, அதனைத் தடுக்க வேண்டும் அதற்கு ஒற்றுமை வேண்டும் கட்டுப்பாடு தேவை, குறைகள் இருந்தாலும் பொறுத்துக்கொள்ள வேண்டும், பொதுவான, நோக்கத்தைக் கவனித்துச் சில்லறைகளை மறந்துவிட வேண்டும், என்று கூறும்.
ஜெர்மனியைச் சூழ்ந்து கொண்டு எதிரிகள் உள்ளனர். வீர ஜெர்மன் இளைஞர்களே! எஃகுக் கோட்டையாக நமது கட்சி இருந்தாலொழிய மாற்றாரின் வாள் நமது தாய் நாட்டின் மார்பைத் துளைத்து விடும் - என்று ஹிட்லர் சொன்னான்; பாசீசப் பாடந்தான் அது.

இங்கும், இப்போது, பாசீசப் பாடமே தான் நடைபெறுகிறது.

இதுவரை, வெள்ளை ஏகாதிபத்தியம் இருந்தது, சுட்டிக்காட்டி, முறுக்கேற்றி மக்களைத் தங்கள் பக்கம் இழுக்க, இப்போது, வகுப்புக் கலகம் என்ற சாக்கு உதவுகிறது.

வடநாட்டு வம்பை, வர்ணித்துக் காட்டி, இங்கு நடைபெறும் ஆட்சியிலே, அதனை நடத்தும் கட்சியிலே, அந்தக் கட்சியிலுள்ள தலைவர்களின் போக்கிலே காணப்படும் குறைபாடுகளை, மறைக்க வழிகோலப்படுகிறது. பாசீசம், புதிய பிரசாரபலம் பெறுகிறது. சரியா?

உங்கள் சிந்தனைக்கு இது, நன்றாகத் தெரிகிறது, மறைக்கமுடியாத அளவுக்கு, காங்கிரசை வடநாட்டு முதலாளிமார்கள், ராஜாதிராஜர்கள் ஆள்கிறார்கள் என்பது. என்றாலும் பாசம், விடவில்லை! அந்தப் பாசத்தையே துணையாகக் கொண்டு, பாசீசம் வளருகிறது. வேறு கட்சிக்கு இடமில்லை - கட்சிக்குள்ளாகவும் எதிர்ப்புணர்ச்சி கூடாது - இந்த அரசியல் திட்டத்துக்கு, நாம் கூறும் பாசீசம் என்ற பெயர் உங்களுக்குப் பிடிக்காவிட்டால், பொருத்தமான வேறோர் பெயர் கூறுங்கள் கேட்போம்.

நீங்கள் கூறுவதைப் பார்த்தால், நாட்டுக்கு, எதிரிகளால் ஆபத்துவராமல் தடுக்க வேண்டாமா? அதற்கான ஏற்பாடுகள் தேவையில்லையா? - என்று கேட்பாய். கட்டாயமாகத் தேவை, அதற்கான திட்டங்கள்.
ஆனால், அந்தத் திட்டங்கள், ஆட்சியில் ஏற்படும் மற்ற அலுவல்கள் ஆகியவற்றைத் தீட்டவும் நிறைவேற்றவும், ஒரு கட்சிதான் உரிமை பெற்றது, என்ற நிலைகூடாது - அந்த நிலை இருந்தால், ஒழுங்கான முறை வளராது - என்கிறோம்.
தவறு பல செய்தாலும் எப்படி மன்னன், பரம்பரைப் பாத்தியதையினால், முடி தரிக்கும் உரிமை பெறுகிறானோ, அந்த முடியாட்சிக்கும், கேடு எது செயினும், சேகரித்து வைத்துள்ள கீர்த்தியைத் துணைக்கொண்ட ஒரு கட்சி, எதிர்ப்பின்றி இருப்பதும், இரண்டும் ஒரே வகையான கேடுதான் . பெயர், வேறு வேறு.

‘அன்றொரு நாள்’ - ‘முன்பெல்லாம்’ ‘அரும்பாடு பட்டு’ தியாக வேள்வி’ எனும் வார்த்தைகள், காங்கிரசுக்கு அர்ச்சிக்கப்பட்டு, அந்த மலர்கள், கள்ளமார்க்கட்காரர் மீதும், காட்டு ராஜாக்கள் மீதும், மேட்டுக் குடியினர் மீதும், நாட்டுக்கு ஊறு தேடுபவர்கள் மீதும் தூவப்பட்டுவருகிறது - இது நன்றாகத் தெரிகிறது - என்றாலும் பாசம் விடவில்லை.

காங்கிரசின், மகத்துவத்தை இனியும் எடுத்துக்காட்டி, வேறு கட்சி எதுவுமே தலைகாட்டக் கூடாது என்று எண்ணி, அதற்கேற்றபடி நடந்து வந்தால், நிச்சயமாக, பாசீசம் தான் உருவாகமுடியும். வேலை முடிந்தது, வேறு திட்டம் சொல் - என்று காங்கிரசைக் கேட்கவும், அந்தத் திட்டத்தைப் பரிசீலனை செய்யும், மாற்றுத் திட்டம் எவரேனும் கூறினால், சமத்துவ உணர்ச்சியுடன், இரண்டையும் சீர் தூக்கிப் பார்க்கவும், இரண்டிலே, எது சிலாக்கியமானதோ, அதனை ஆதரிக்கவும், பழகவேண்டும். ஜனநாயகம் வளர அதுதான் வழி. ஆனால், இதற்கு, முதலில் அந்தப் பாசம் போகவேண்டும். அதுலேசில் போகாது! பந்தம் பாசம் ஆகியவற்றை அறுத்துக்கொள்ள, ரிஷிகள், காடுசென்று தவம் புரிந்தார்காளாமே, அதுபோல, இங்கும், பாசீசத்தால் தாக்கப்பட்டு, பலநாள் ஆசைகள்கெட்டு, எதிர்பாரா ஏமாற்றங்கள் வளர்ந்து, மனம் முறிந்து, பிறகுதான் பாசம் போகும். இடையே முனிவர்களை மயக்க, மயா மனோகரிகள் வருவதுபோல, வசீகரத்திட்டங்களை ஏட்டிலே தீட்டிக்காட்டவும் கூடும். இடையூறுகளை உண்டாக்கித் தவத்தை அழிப்பார்களாமே, அதுபோல, இடையூறுகள் உண்மையோ நிஜமோ, ஏதோ ஒன்றைக் காட்டிப் பாசத்தைத் தங்கவைக்க முயற்சி செய்யப்படக்கூடும். இத்தனையையும் தாண்டித்தான், ஜனநாயகத்தை அடைய முடியும். ‘நமது ஒப்பற்ற கட்சியினால் நாடு ஈடேறும்’ என்று தொடங்கி, நமது மாபெருங் கட்சி நாடு ஈடேற வழி செய்யவேண்டும்’ என்று பேசப்பட்டு, ‘நமது கட்சியைத் தவிர, வேறு கட்சிகளால், அதிலும் வகுப்பு வாத, சுயநலக் கட்சிகளால் இந்த மகத்தான காரியத்தைச் சாதிக்க முடியாது’ என்று பேசி - ‘நமது கட்சியின் போக்கு வகுப்பு வாதக் கட்சிகள் கூடக் குறை கூறும்படி இருக்கிறதே என்று மாறி, ‘இந்த இலட்சணத்திலே நமது கட்சி இருக்கும்போது, மற்றக் கட்சிகளை நாம் குறைகூறி என்ன பயன்?’ - என்ற பேச்சு, ஏக்கரூபம் எடுத்து, ‘எப்படிப்பட்ட கட்சி! எவ்வளவு எதிர்பார்த்தோம்! இதை வளர்க்க என்னென்ன பாடுபட்டோம்!’ - என்று பழங்கதை பேசிக் கோபத்தைக் குறைக்கப் பார்த்து, ‘பழைய பெருமையை முதலாக வைத்துக் கொண்டு, கடைசிவரை நம்மை வசியப்படுத்த முடியாது’. - என்று எச்சரிக்கை விடுக்கும் குரல் காட்டிப் பிறகு, “அப்போது இருந்தாய் அப்சரசாக! இப்போது?” என்று கேலியாகப் பேசிப் பிறகு, ஜனநாயகத்தைத் தேடச் சொல்லும்.

இந்த, எண்ணப் பயணத்தைத் தாமதப்படுத்துவது, ஒரே ஒரு விஷயந்தான். வடநாட்டுக் கலக நிலைமை! ஆனால், பயணம், தாமதப்படுமே ஒழிய, அடியோடு நின்றுவிடாது - நிச்சயம் அந்தப் பயணம் உண்டு. நாம் சற்று, முன்னோடுகிறோம். அவ்வளவுதான் வித்தியாசம், நமக்கும் காங்கிரசிலுள்ள நண்பர்களுக்கும்.

“அன்னிய ஆட்சியின் விபரீத விளைவுகளே உணவுப் பஞ்சமும், லஞ்ச ஊழலும், கள்ள மார்க்கெட்டும். நாட்டில் தலைவிரித்தாடும் பஞ்சத்தைத் தீர்க்க ஆங்கில ஆதிக்கத்திற்கு அக்கறை கிடையாது. அதைச் சமாளிக்கும் சக்தியும் அதற்கில்லை. பஞ்சத்திற்குக் காரணம் பூதமான பரங்கிய சர்க்கார் ஒழியவேண்டும். சென்ற தேர்தலில் மக்களின் வாக்குகளை வாங்க மேடையேறி மேற்சொன்ன பாணியில் வீரமும் உணர்ச்சியும் சொட்டப் பேசினர் காங்கிரஸ் தலைவர்கள்.

அவர்களின் பகட்டான வார்த்தைகளை நம்பிய தேசியப்பற்று மிகுந்த மக்கள் யாவரும் காங்கிரஸுக்குத் தங்கள் வாக்குகளைச் செலுத்தினர். அவர்களுடைய ஓட் பலத்தைக் கொண்டே மந்திரி பதவிகளைக் காங்கிரஸ் தலைவர்கள் கைப்பற்ற முடிந்தது. பொதுஜன ஆதரவு இல்லாதிருப்பின், அந்த உன்னத ஸ்தானங்களை மேற்படி காங்கிரஸ் தலைவர்கள் எட்டிப் பிடித்திருக்க மாட்டார்கள். இது அவர்களின் அந்தராத்மாவுக்குத் தெரியாததல்ல. இவ்வாறாக மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்துவந்த காங்கிரஸ் தலைவர்கள் ஆட்சி பீடத்திலமர்ந்ததும் என்ன செய்திருக்க வேண்டும்? எந்தப் புனிதமான விடுதலை ஸ்தாபனமான காங்கிரஸின் நாமத்தை ஜெபித்து அதிகாரக்கடிவாளத்தைக் கைப்பற்ற முடிந்ததோ, அந்த ஸ்தாபனத்தின் சார்பாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக் காங்கிரஸ் மந்திரிகள் என்ன முறைகளைப் பின்பற்றி
யிருக்க வேண்டும்?

“பஞ்சத்தைப் பறக்க அடிப்போம். கள்ளமார்க்கெட்டைக் கருவறுப்போம். லஞ்சத்தை மிஞ்சவிடாது வேட்டையாடுவோம்.” என்று சிறிதும் சலிப்புத்தட்டாமல் வாக்குறுதிகளை வீசிக்கொண்டே சென்ற காங்கிரஸ் தலைவர்கள், பதவிக்கு வந்ததும் பறக்க அடித்தது பஞ்சத்தையல்ல. ஆடிக்காற்றோடு தம் வாக்குறுதிகளையே பறக்கடித்தனர். லஞ்ச வேட்டையாடுவதாக வீரம் பேசியவர்கள் பதவி வேட்டையிலும், ‘பெர்மிட்’ வேட்டையிலும் இறங்கினர். அதோடு லஞ்சத்தில் உழலும் அதிகாரவர்க்கத்துடன் இவர்கள் இரண்டறக் கலந்தனர். அதுமட்டுமா! கள்ள மார்க்கெட் கயவர்களின் உற்ற தோழர்களாகி, அதிகார மோகத்தில் ஆழ்ந்து உணர்வு அழிந்தனர். இப்பதவி வேட்டைக் கபட நாடகத்தின் எதிரொலியே ‘மந்திரி சபை பூகம்பம்’. இதன் பயனாகக் காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் கொண்டிருந்த நல்லெண்ணம் காற்றோடு காற்றாகக் கரைந்து போயிற்று. காங்கிரஸ் ஆட்சியில் மக்களுக்கு அலுப்புத் தட்டியிருப்பதாக ராஷ்டிரபதி ஆச்சாரிய கிருபளானியே பழித்துக் கூறுமளவுக்கு வந்துவிட்டதென்றால், எப்படியிருக்கும் நிலைமை.”

என்று, எழுதுகிறது; விடுதலை அல்ல - தமிழ்நாடு-! தமிழ்நாடு என்றால் , சென்னையில் நண்பர் பார்த்தசாரதி வெளியிட்டாரே அந்த இதழ் என்று எண்ணி விடாதீர்கள் - இது மதுரை, ‘தமிழ்நாடு’ – காங்கிரசை ஆதரிக்கும் ஏடு!

இவ்வளவும் எழுதிவிட்டு, என்ன கூறுகிறது, மேலால்-? கன்ட்ரோல் எடுபடவேண்டும் என்று. காங்கிரசின் பாசம் கூடாது என்றல்ல, நாம் முன்னால் கூறியுள்ளபடி தொடக்கநிலை இது - எனவே, பாசத்தை அறுத்துக்கொள்ள முடியா து - மெல்ல முடியாமலும் விழுங்க முடியாமலும் அவஸ்தைப்படும்நிலைமை. இது எவ்வளவோ பரவாயில்லை - வேறு பல ஏடுகள் உள்ளன - ஒரே அடியாக மூடிபோட.

இதுபோல, அடிக்கடி மூச்சுவிடுவர் - முணு முணுப்பர் - முற்றம் வரவும், பந்தம் அறுத்துக் கொள்ளவும் உடனடியாக முடியாது. ஆனால், நாம் கூறியபடி, பயணத்தின் தொடக்கம் இது. இதிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது - மனச்சாட்சியை, “தாரைவார்த்துக்” கொடுத்துவிட்டிருந்தாலொழிய.

ஒருமுறை, மீண்டும், அந்த ஏடு வெளியிடும் கருத்துரையைப் பார்க்க வேண்டுகிறோம் - காங்கிரஸ் நண்பர்களை.

பகட்டான பேச்சு
வாக்குறுதி பறந்தது
பதவி வேட்டை
இலஞ்சத்தில் பங்கு
கள்ளமார்க்கட் உறவு
அதிகார மோகம்.

இவ்வளவு குற்றச்சாட்டுகள்! கடுமையான குற்றச்சாட்டுகள். நாகரிக நாட்டிலே, ஜனநாயக உணர்ச்சியுள்ள எவரும், சகித்துக்கொள்ள முடியாது, தங்கள் கட்சியின் ஏடு, தங்களைப் பற்றி இவ்வளவு பச்சையாகக் கண்டிப்பது கண்டு. ஆனால், இங்குக் காங்கிரஸ் தலைவர்கள் சகித்துக்கொண்டனர். ஆச்சரியம்! என்கிறீர்களா? ஆச்சரியம் அதிலே இல்லை! இவ்வளவு குற்றச்சாட்டுகளுக்குரியவர்களான, தலைவர்களை, நாடு சகித்துக்கொண்டிருக்கிறதே, அதுதான் ஆச்சரியம்! ஆனால், அதற்கு என்ன காரணம்? பாசம்! பாசம்! பொல்லாத நோய்; எளிதில் போவதில்லை!’

(23.11.1947)