அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பேச்சு மேடை
ஒரு சிக்கலான பிரச்னை. நாம் முன்னேறி வருகிறோமா அல்லது பழையபடியே இருக்கிறோமா என்று சற்று நிதானமாக ஆராயத் தொடங்கினால், சிக்கல் தோன்றும்.

சர் ஏ. இராமசாமி முதலியார், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ரஷியா, சீனா, நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு தேசத்தலைவர்கள் கூடிய பல நாட்டுப்பிரதிநிதிகளின் கூட்டத்திலே கலந்து பேசினார், புகழும் பெற்றார் என்ற செய்தியைப் படிக்கும் போது, “சபாஷ்! நாடு மிகமிக முன்னேறிவிட்டது. நாட்டுப்புகழ் நானிலமெல்லாம் பரவுகிறது. நமது நாட்டு அறிஞரொருவர் அகிலத்திலே புகழ் பெற்றவர்களில் ஒருவரானார். இனிநாம் தலைநிமிர்ந்து நடக்கலாம், நாம் எந்த நாட்டவருக்கும் இளைத்தவர்களல்ல” என்று கூறிப் பூரிக்கலாம் போலிருக்கிறது. ஆனால் அடுத்த விநாடி வேறோர் செய்தியைப் படிக்க நேரிடுகிறது.

“சர். சி.பி. இராமஸ்வாமி ஐயர் சேலத்தில் நடைபெற்ற பிராமண மகாநாட்டில் தலைமை வகித்தார்.”

இந்தச் செய்தியைப் படித்ததும் நாடு, இவ்வளவு பிற்போக்கிலிருக்கிறதே, ஜாதிச்சனியன் தொலைய வேண்டும், பிறப்பால் உயர்வு தாழ்வு இருத்தலாகாது என்று பேசப்படும் இந்நாளிலே சர்.சி.பி. போன்ற, உலகம் சுற்றியவர்கள், பிராமண மாநாட்டுக்குத் தலைமை வகிக்கலாமா? சர்.சி.பி. என்ன மடிசஞ்சியா, சவுண்டியா, இல்லையே, சர்வதேசங்களுக்கும் போய் வந்தவராயிற்றே, ஒரு சமஸ்தானத்துக்குத் தவானாயிற்றே. இவர் ஏன், சமித்து, தர்ப்பை, பஞ்சாங்கக்கட்டு இவைகளே, சகல சௌபாக்கியத்துக்கும் சாதனம் என்றுகூறும் மடிசஞ்சிகளின் கூட்டத்தில் சேருகிறார்? நாடு, இவ்வளவு பிற்போக்காக இருக்கிறதே, இந்த நாட்டுக்கு எப்போதுதான் விமோசனம் ஏற்படும் என்று சோகிக்க வேண்டி இருக்கிறது.

இந்த இரண்டு செய்திகளையும் இதாரமாகக் கொண்டு, நாடு எந்த நிலையில் இருக்கிறது என்று ஆராயத் தொடங்கினால் சிக்கலாகத் தானே இருக்கும்? மனவலி ஏற்படும்.

லெப்டினன்ட் கர்னல் லட்சுமி, இந்திய தேசீய இராணுவ உடையுடன் காட்சி தந்தார், என்று கூறும்போது, “பேஷ்! பெண்களே போர்க்கோலம் பூண்டு விட்டனர், இனி நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை, நாடு மிக மிக முன்னேறிவிட்டது” என்று பெருமையாகப் பேசமுடிகிறது. ஆனால் அடுத்த செய்தி வருகிறது நமது மனதைக்குடைய.

“ஆலமு என்ற விதவை, அன்று பிறந்த குழந்தையைக் கொன்று விட்டுத்தானும் குளத்தில் விழுந்து இறந்தாள்”

இந்தச் செய்தியைப் படித்ததும் “ஆஹா! நாடு எவ்வளவு பிற்போக்கில் இருக்கிறது. பெண்கள் எவ்வளவு பரிதாபமான நிலையில் உள்ளனர். பெண்குலம் இப்படி இருக்கும்போது, நாடு தலைதூக்க முடியுமா? காட்டுமிராண்டிக் காலமாக மல்லவா இருக்கிறது” என்று துக்கிக்க நேரிடுகிறது.

கர்னல் லட்சுமி! வீரச் செயல் புரிந்த மாது! ஆலமு தற்கொலை செய்துகொண்ட விதவை! இருமாதரையும், அவர் பற்றிய செய்திகளையும் ஒரு சேர வைத்துக் கொண்டு நாடு, எந்த நிலையை அடைந்திருக்கிறது என்று பார்த்தால், எவ்வளவு சிக்கலான பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது!

“இகாகானுக்கு வைரதுலாபாரம்” என்ற செய்தியையும், ஆனாதைப் பிணம் தெருவில் கிடந்தது என்ற செய்திûயுயம், டாடா கம்பெனியார் புதிய தொழிற்சாலை துவக்கினார்கள் என்ற செய்தியையும், தாமோதரத்துக்கு வேலை கிடைக்கவில்லை என்ற செய்தியையும் இப்படிப்பட்ட செய்திகள் பலவற்றையும் படிக்கிறோம். நாடு முன்னேற்றமடைந்திருக்கிறதா பிற்போக்காக இருக்கிறதா என்று புரிந்து கொள்ள முடியாமல் திகைக்கிறோம். நாடக மேடையில் வரும் ராஜபார்ட் தகதகவென்னும் பொன்னாடையுடன் காட்சி தருகிறான், நாம் களிக்கிகறோம், இப்படிப்பட்ட இடை அல்லவா போடவேண்டும், அவன் ஆதிர்ஷ்டசாமி, என்று கூறுகிறோமல்லவா? பிறகு காலையிலே அவனைக்கண்ட போது, நறுக்கு மீசையும் காணோம், நாகரிக உடையும் காணோம், மேனி மினுமினுப்பும் இல்லை, மேல்ஸ்தாயி சிரிப்பும் இல்லை, செச்சே! இவ்வளவுதானா ஆசாமி என்று கூறிவிடுகிறோமல்லவா. அது போலவே அந்த ராஜபார்ட்டும், தன் அலங்கார இடையைக்கண்டு பாராட்டிப் புகழ்வது தெரியும்போது ஆனந்தப்படுவதா, அந்த இடையின் பளுவையும், முதலாளி தரும் தொல்லையையும் ஒரு சேரச் சுமந்துகொண்டு வாழ்க்கையை வளர்த்துக் கொள்கிறோமே என்று சோகிப்பதா என்ற திகைப்பு அடையக்கூடும். ஆனால் ஒருசௌகரியம் அவனுக்கு, சந்தோஷமாக இருக்கும் கட்டம் இருப்பது போலவே சோகக்கட்டமும் கதையிலே இருக்கும். அந்தச் சோகக் கட்டத்தின்போது, ஆல்லியைக் காணோமே என்ற கவலையுடன் அழுகிறான் ஆர்ஜ÷னன் என்று நாம் எண்ணிக்கொள்ளும் சந்தர்ப்பமாகப் பார்த்து அந்த நடிகன் தன்னை ஆட்டிவைக்கும் வறுமையை எண்ணி அழுது கொஞ்சம் துக்கத்தின் பாரத்தைக் குறைத்துக் கொள்ளலாம். நாட்டு நடவடிக்கைகளை நாம் படிக்கும்போது, நமக்கு இந்த வசதியும் கிடைப்பதில்லை. சிக்கலான பிரச்சனைதான் உண்மையில். ஒரு சம்பவத்தைப் பார்த்தால் உச்சி குளிர்க்கிறது, இன்னோர் சம்பவமோ மனதைக் குடைகிறது. என்னதான் நாட்டின் உண்மையான நிலைமை என்று தெரிந்துகொள்ள முடிவதில்லை.
***

அலங்காரவாதி ஒருத்தி, ஆனால் கொஞ்சம் அசடு. (ஆனால் கொஞ்சம் அசடு என்று கூறுவதா, ஆகவே கொஞ்சம் அசடு என்று கூறுவதா என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்) அவள் ஒருமுறை பெர்னாட்ஷாவிடம் சிக்கிக் கொண்டாள்.

“என்னைப் பார்த்தால், என்ன வயது இருக்குமென்று தங்களுக்குத் தோன்றுகிறது” என்று கேட்டாள்.

ஷா ஆவளை ஏற இறங்கப்பார்த்தார்.

“உன் பற்களைப் பார்க்கும்போது பதினெட்டு வயதுப் பாவை போல் தெரிகிறது. கூந்தல் கருளைக் கண்டாலோ பத்தொன்பது வயது என்று சொல்லலாம் போலிருக்கிறது, உன்போக்கைக் கவனித்தாலோ 14 வயது என்று கூறலாம்” என்று பெர்னாட்ஷா சொன்னார்.

அந்தப் பைத்யக்காரி, இத்துடன் விடக்கூடாதா!

“என்னைப் புகழ்ந்தது இருக்கட்டும், என்னதான் வயது என்று நிர்ணயித்துக் கூறும்” என்று கேட்டாள்.

பார்த்தார் ஷா, பைத்யம் தெளியும் விதமாகப் பதிலிருக்க வேண்டுமல்லவா? சுரீலென்று தந்தார் பதில்.

“18, 19, 14, இவைகளைக் கூட்டிப்பார் 51 ஆகிறது” என்றார். அசட்டுத்தனத்துக்கு ஏற்றதைப் பெற்றுக் கொண்டு வயோதிகத்தை மறைக்க வாலிபப் பூச்சுடன் காட்சி தந்த மாது போய்விட்டாள். நம்நாடும், ஒரு விதத்திலே அந்த அலங்காரவதி போலவே இருக்கிறது. இங்குள்ள ஒரு சம்பவம், நாடு மிக மிக முன்னேறி இருக்கிறது என்று காட்டுகிறது. வேறோர் சம்பவமோ காட்டுமிராண்டிக் காலமே மாறவில்லை என்று காட்டுகிறது, என்ன தான் நாட்டின் நிலைமை, நிர்ணயமாகச் சொல்லு என்று வற்புறுத்தினால், பழைய கூளங்களைப் புதிய அலங்காரக் கூடையிலே குவித்திருப்பதுபோல நாடு இருக்கிறது என்றுதான் சொல்லலாம். பெர்னாட்ஷாவா நாம், மக்கள் இந்தப் பதிலைக் கேட்டுப் பாராட்ட! கோபிக்கத்தான் செய்கிறார்கள். ஏன்மீது கோபம் வேண்டாமய்யா, நாடு முன்னேறிவிட்டதா, இல்லையா என்று நீங்களே சொல்லுங்கள் எனக் கேட்டால், சிக்கலான பிரச்னை என்று கூறுவதன்றி வேறோர் பதிலும் அவர்களாலும் அளிக்க முடிவதில்லை.
***

இதிலென்ன சார்! சங்கடம், நாட்டிலே உள்ள சம்பவங்களை, முற்போக்குக்கு அறிகுறி களானவை பிற்போக்குக்குச் சான்றுகள் என்று இரண்டாகப் பிரித்து எந்த ஆம்சம் அதிகம் இருக்கிறது என்று கணக்கிட்டு, முற்போக்குச் சக்திகள் அதிகம் என்றால் நாடு முன்னேறிவிட்டது என்று சொல்லுவது, இல்லை என்றால் இல்லை என்று கூறுவது சுலபந்தானே, இது என்று கணக்குப் படிப்பினர் கூறக்கூடும், அதிலே இருக்கும் சிரமம் அவர்களுக்குத் தெரிவதில்லை.

மகாகனம் சீனுவாச சாஸ்திரியார் மாண்டேடட் பிரச்னை பற்றியும் பேசுகிறார், மந்தரை சூழ்ச்சி பற்றியும் உபன்யாசம் செய்கிறார். திரு.வி. கலியாணந்தரனாரோ, இளையான்குடி மாறநாயனார் புராணத்தைப் பேசுகையிலேயே லெனின் கண்ட மார்க்கத்தை நாயனார் நெறியிலே நுழைத்துக் காட்டுகிறார். விமானம் ஏறிப்பறக்கிறார் வேதாந்தி சர். இராதாகிருஷ்ணன், அவரே பிறகு விஜயதசமி பண்டிகை விசேஷத்தையும் பேசுகிறார். “எனக்குக் கோயில் கட்டுவது பைத்யக்காரச் செயல்” என்று கண்டிக்கிறார் காந்தியார், ஆனால் அவரே, ராமநாம உச்சரிப்பே நோய் தீர்க்கும் மருந்துமாகுமென்கிறார், செங்கொடியே நம்கொடி என்கிறார் கம்யூனிஸ்டு, பக்கத்திலுள்ள மூவர்ணக்கொடிக்கும் பணிவதே நமது கடன் என்றும் பாடுகிறார், இப்படி ரண்பாடு மயமாக இருக்கிறதே, சொல், செயல், கருத்து, எதை எடுத்தாலும் என்ன செய்வது?
***

முற்போக்கான, முற்போக்குத் தரக்கூடிய விஷயங்கள் அதிகமாகப் பேசப்பட்டு, பழைமை அதிகமாகப் பேசப்படாமலிருக்குமானால், நமது நாட்டுப் பிரசங்கிகள், ஆசிரியர்கள், நடிகர்கள், கவிகள், ஓவியக்காரர் ஆகியோர் முற்போக்கான விஷயங்களை முன்னிலையில் கொண்டு வருவதற்கு மட்டுமே தமது திறமையை உபயோகிப்படுத்துவது என்று தீர்மானித்துவிட்டால், இந்தச் சிக்கல் தீர்ந்துவிடும், முன்னேற்றப் பாதையிலே போக நாட்டு மக்கள் விரும்பு கிறார்களா, அல்லது பழைமையிலேயே மூழ்கிக் கிடக்க வேண்டுமென்று அசைக்க முடியாத தீர்மானத்தில் உள்ளனரா என்ற உண்மை தெரிந்து விடும். ஆனால், இங்கு நம்நாட்டு அறிவு பரப்புவோரின்போக்கு, விசித்திரமாகவன்றோ இருக்கிறது.

சீனாக்காரர் ஒருவர் அமெரிக்கா சென்றார். அங்கு விருந்து, வைபவம், கேளிக்கை, எல்லாம் கண்டார். அமெரிக்கர்கள் விசித்திரமான பேர்வழிகள் என்று அவருக்குத் தோன்றிற்று. அந்தச் சீனர், “வேடிக்கைக்காரர்களய்யா நீங்கள், கண்ணாடிக் கோப்பையிலே சர்க்கரை போடுகிறீர்கள், பானம் இனிப்பாக இருக்கவேண்டுமென்று, அதனுடனேயே எலுமிச்சம் சாறுபிழிகிறீர்கள், புளிப்புத் தேவை என்று கூறி, சுறுசுறுப்புத் தரும் என்று சூடுபிறக்க ஜின் (சாராய வகை) ஊற்றுகிறீர்கள் கோப்பையில், அதிலேயே குளிர்ச்சி வேண்டுமென்று ஒஸ் போட்டுக் கொள்கிறீர்கள், எதிரே இருப்பவரிடம் பானக்கோப்பையைக் காட்டி “உனக்காக இதோ” என்று கூறுகிறீர்கள், ஆனால் பானத்தை நீங்களே குடித்து விடுகிறீர்கள். மகா விசித்திரப் பேர்வழிகளப்பா இந்த அமெரிக்கர்கள்!” என்ற சொன்னாராம். அந்தச் சீனரின் ஆச்சரியத்துக்கு அளவே இராது, இங்கு நமது நாட்டு அறிஞர் குழாம் தயாரித்துத் தரும் பானவகையின் தன்மையைக் கண்டால். அவர்கள் முற்போக்குத் துறைக்கு வேலை செய்கிறார்களா? பழைமைக்குப் பாடுபடுகிறீர்களா? என்பதை மக்கள் புரிந்து கொள்ளக்கூடாது என்ற நோக்கம் கொண்டவர்கள் போலவே நடந்து கொள்வதைக் காணலாம். எடுத்துக்காட்டாக, ஏதாவது ஒரு பத்திரிகையின் சனி மலர், ஞாயிறு இதழ், எடுத்துப் பாருங்கள். ஒரு பக்கத்திலே லூயி பிஷரின் கட்டுரை, அணுகுண்டு ஆராய்ச்சி, இருக்கும். இன்னொரு பக்கத்திலே இலுப்பையூர் பற்றிய ஸ்தல புராணமும் இருக்கும். தலையங்கம், வீண் விரயம் விவேகமல்ல என்ற பொருள் பற்றி இருக்கும், நிருபசாரம், ஊரிலே பல இடங்களில் நடைபெற்ற கும்பாபிஷேகச் செய்திகளாக இருக்கும். மக்களின் மனதிலே புதுக்கருத்து எழ வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய சொற்பொழிவு ஒருபுறம் பிரசுரமாகி இருக்கும், மற்றோர் பக்கத்தில் மகாமகத்தின் பெருமை பற்றி மாங்காட்டுச் சாஸ்திரியார் கூறிய உபன்யாசம் வெளிவந்திருக்கும். நாடக மேடையில் முன்னாளிலே பபூன் வேடக்காரன் உடைபோல, ஏடுகள் காட்சி தருகின்றன என்று கூறினால், அந்த ஏடு வெளியிடுபவர் கோபிப்பர், ஆனால் என்ன செய்வது? என்னால் சொல்லாமலிருக்க முடியவில்லை. ஒரு சமயம் அந்தப் பத்திரிகைகள், புரட்சி ஏடுகளாகத் தோன்றும், மறுசமயம் வெறும் பஞ்சாஞ்கமாகி விடக்காண்கிறேன். வேறு வேறு சமயங்களிலே மட்டுமல்லவே! ஒரே சமயத்திலே, வேறு வேறு பக்கங்களிலே வேறு வேறு பத்திகளிலேகூட இந்த விசித்திர மாறுபாடுகளே உள்ளன. எப்படி, நாடு முன்னேற்றப் பாதைக்குப் போவதா, பழைமையிலேயே இருப்பதா என்று தீர்மானிக்க முடியும். நாடு திகைத்துக் கிடக்கிறது. வெளி உலகு நகைத்துக் கொண்டு முன்னேறுகிறது..

மார்ச்சு 24ந் தேதி இந்து பத்திரிகை இதழிலே, அன்று நகர நிகழ்ச்சிகள் என்ன என்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்தன. அவை ஏன் கவனத்தை இழுத்தன.

சென்னை பேசுகிறது, கேளுங்கள்

“தேவி பாகவதம்” பற்றி, மாம்பலம் சன்மார்க்க சம்வர்த்தினி சபாவில், கல்லிடைக்குறிச்சி ராமகிருஷ்ண சாஸ்திரியார் பேசுகிறார்.

“கிருஷ்ணோபதேசம்” பற்றி, சுவாமி நிர்விகல்பானந்தர் பேசுகிறார்.

தசரதராம பாகவதர் இந்திரஜித்வதம் பற்றிக் காலட்சேபம் செய்கிறார்.

புரசவாக்கம் வேதாந்த சங்கத்தில் பஞ்சாதசி பிராகார்ணம் எனும் பொருள்பற்றி கோபால கிருஷ்ண ஐயர் பேசுகிறார்.

ஸ்ரீரங்கம் ரங்கசாமி ஐயங்கார் திருவல்லிக்கேணியில் சீதாகல்யாணம் நடத்தி வைக்கிறார்.

கச்சாபேஸ்வரர் அக்ரகாரத்தில் ஞானவாசிட்டம்ம நடத்துகிறார் கோபால கிருஷ்ணஐயர்.

ரிக்வேதம் விளக்கப்படுகிறது வைத்தியநாதஸ்வாமியால், ஏஸ்பிளனேட் ஆரவிந்தர் படிப்பகத்தில்.

வித்வான் அண்ணங்கராச்சாரியார், தொண்டை மண்டலப்பள்ளியில் மாசறுசோதிபதிகம் பற்றி உபன்யாசிக்கிறார்.

திருக்கச்சிநம்பிவைபவம் பற்றி ஸ்ரீமான் ரங்கசாமி ஐயங்கார் பேசுகிறார்.

மயிலலையில், ராமாயணம் பிரசங்கம் செய்கிறார் சுப்பிரமணிய சாஸ்திரிகள்.

ஏழும்பூரில், நடேச ஐயர், பாகவத உபன்யாசம் நடத்துகிறார்.

கடோபநிஷத்தை விளக்கி வைக்கிறார் யதுநாதாச்சாரியார்.

ராமசேது சாஸ்திரிகள், மகாபாரதம் ப்றறிப் பேசுகிறார்.

வெங்கட சுப்பிரமணிய சாஸ்திரிகள் விவேகசூடாமணி பற்றிப் பேசுகிறார்.

பாலசுப்பிரமணிய சாஸ்திரிகள் பிரணவ மந்திரங்களைப் பற்றி உபதேசிக்கிறார்.

கிருஷ்ணசாமி பாகவரத், ராமபட்டாபிஷேக காலட்சேபம் நடத்துகிறார்.

வேறோர் பக்கம் நடராஜ பாகவதர் சீதா கலியாணம் நடத்தி வைக்கிறார்.

கௌடியா மடத்தில் பக்தி சாஸ்தரி சைதன்யர் பற்றி உபன்யாசம் செய்கிறார்.

இனந்தாஸ்மரத்தில் பஜனை நடக்கிறது.

பண்டிட் கண்னையா, வேதம் பற்றி விளக்க உரை செய்கிறார்.

தியாகராயநகரில் காமாட்சிபுரம் சுவாமிநாத சாஸ்திரிகள் பாகவத கதை நடத்துகிறார்.

லீலாவதிசுதன் என்ற புராணக் கதையை சிம்ஹாதிரி பார்த்தசாரதி பாகவதர், சிந்தாதிரிப்பேட்டையில் காலட்சேபம் செய்கிறார்.

பாலசுப்பிரமணிய ஐயர், துருவ சரித்திரம் கூறுகிறார்.

அன்று ஒரு நாளில் மட்டும், சுமார் 40 நிகழ்ச்சிகள். இவைகளிலே ஆறு இசை அரங்குகள், மூன்ற நாட்டியங்கள், இரண்டு கமிட்டிக் கூட்டங்கள், போகமிச்சருப்பதிலே 24 புராண சம்பந்தமான பிரசங்கங்கள், சென்னையில் பேசுவது, இவ்விதமிருந்தால். பிறகு, நாடு, முன்னேறிவிட்டது என்று எப்படிக் கூற முடியும்? மக்களைத் துடிக்கச் செய்யும் பஞ்சத்தைப் போக்குவது பற்றிப் பேசுவார் காணோம். துருவ சரித்திரம் நடக்கிறது. உலகில் காணப்படும் விஞ்ஞான அற்புதங்களை மக்களுக்கு விளக்கும் ஊரை இல்லை, கடோபநிஷத், ரிக் வேதம் முதலியன விளக்கப்படுகிறது. நாடு, முன்னேற்றமடைவதற்கா, பாகவதம், பாரதம், ராமாயணம், பிரபந்தம், பதிகம், முதலியன பற்றி, மாகாணத் தலைநகரில், மக்கள் ஒருவார முழுதும் வேலை செய்து ஒய்ந்த நேரத்தில், பேசுவது? அறிவ பரப்பும் பேச்சு எங்கே! உலகைக் காட்டும் ஊரை எங்கே! வல்வேறு நாட்டு நிலைமை பற்றிய பேச்சாளியே இல்லையா? அமெரிக்கா போய்வந்த தினமணி ஆசிரியர், ஆங்கிலருக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கக் கூடியவர் என்று ஆக்கரகாரம் புகழும் இந்து பத்திரிகைக் குழுவினர், ஏன் இவர்கள் எல்லாம், சென்னையைப் புராணிகர்களிடம் ஒப்படைத்து விட்டுக் கிடக்கிறார்கள். கேட்பார் யார்? கேட்பவனைத்தான், துரோகி, நாத்தீகன் என்று தூற்றிவிடுகிறார்கள். நீங்கள் யோசியுங்கள், ஒரே நாளில் ஒரு ஊரில், இவ்வளவு புராணப் பிரச்சாரம் நடைபெறுமானால், மக்களுக்கு அனுமாரின் வாலின் அளவு தெரியக்கூடுமே தவிர அமெரிக்காவின் நிலைமையை விளங்கும், சைதன்யரின் பாசுரம் நினைவிற்கு வருமேயொழியச் சோவியத் சோபிதமா புரியம்! உலகிலே வேறு எங்கேனும் இதுபோல, ஒரே புராணமயமாக்கப்பட்டிருக்கிறதா! எந்தக் காலத்தில் வாழ்கிறோம், என்னென்ன விதமான, புதுப்பிரச்னைகள் மக்கள் முன் தோன்றியுள்ளன, எவ்வளவு சிக்கல்கள் தீரவேண்டி இருக்கிறது, இவைகளை மறந்து, இனந்தாஸ்ரமத்திலே பஜனை நடத்துகிறார்கள்.

சென்னை பேசுகிறது, இவ்விதம், தாளச்சத்தம், மேளச்சத்தம், சதங்கைச் சத்தம், புராணிகரின் சத்தம், இவையே எப்பக்கமும் கேட்கப்படுகிறது. இங்கே பலகல்லூரிகள், பலப்பல உயர்தரக் காலசாலைகள், உலகம் சுற்றிய அறிவாளிகள், ஊராள்வோரை மிரட்டும் உரத்தகுரலினர், உயர்தரமான பத்திரிகைகள் உள்ளன. இருந்தும் ஒரே தினத்தில் ஒருபக்கம் சீதைக்குக் கலியாணம், வேறோர் பக்கம் ராமருக்குப் பட்டாபிஷேகம், மற்றோர் பக்கம் தேவிக்குப் பூஜை, பிறிதோர் பக்கம் அம்பிக்கைக்கு இராதனை என்று இருக்கக் காண்கிறோமே அன்றி, பிரான்சு விடுதலை பெற்றது எவ்விதம், வானத்தில் பறக்கும்வழி எப்படி ஏற்பட்டது வரிப்பளுவின்றி மக்கள் வாழ முடியுமா? வர்க்கப்போராட்டம் தீருமா? வல்லரசுகளின் ஆதிக்க வெறி அழியுமா? என்ற பிரச்சனை யார் பேசுகிறார்கள்? ராஜராஜ சோழன், ராணி மங்கம்மா, ரஞ்சித்சிங் என்று, ஏதேனும் வீரக்கோட்டத்தவர் பற்றிய பேச்சு இருக்கக்கூடாதோ, தோடர்மால் போன்ற நிர்வாகிகள், இளங்கோ போன்ற புலவர்கள், ஓவியக்காரர்கள் ஆகியோர் பற்றிய பேச்சு இருக்கக்கூடாதா, அடிமை வர்த்தம் ஒழிந்தவிதம் எப்படி, என்று கூறலாகாதோ, அடிமை வர்த்தகம் ஒழிந்தவிதம் எப்படி, என்று கூறலாகாதோ, அந்தநாள் தமிழன் யவனத்தில் வியாபாரம் செய்தவிதம் விளக்கப்படக்கூடாதோ, பேசப் பிரச்னைகளா இல்லை? மக்கள், தெரிந்து கொள்ள வேண்டும் என்று இவலுடன் உள்ள விஷயங்கள் ஆயிரமாயிரம் இருக்க, சாவடிச் சுப்பனும் தெரிந்து கொண்டிருக்கும் ராம-கிருஷ்ண கதைகளைத்தானா, அறிவுத்தாகம் அதிகரித்துள்ள இந்தந ôளிலே பேசிக் கொண்டிருக்க வேண்டும்? ஜாவாவில் இன்று என்ன நடக்கிறது என்பதைப் பொதுமக்களுக்குக் கூற வேண்டிய இந்நாளிலே ஜனக ராஜ்யத்திலே நடைபெற்ற சுயம்வரத்தைப் பற்றியா பேசிக்கொண்டிருப்பது? இப்படிப் பழைமைக்குப் பலமான பிரச்சாரம், பலரகமான பிரசாசரம் நடைபெற்றால், புதுமைக்குப் புகலிடம் எது. தோடி இராக ஆலாபனையுடன் சேர்த்துத் தருவது எதனை? தாசரதியின் பெருமையை! இடையை வளைத்து, சடையைக் காட்டி, பூங்கொடி போலாடி, ஆடலழிகள் காட்டுவது எதனை? அய்யன் ஆடிய ஆட்டத்தை. சினிமா நட்சத்திரங்கள், இசைவாணர்கள், நாட்டிய ராணிகள், பாகவத் சிரோமணிகள், பிரம்மஸ்ரீகள், பிரசங்க பூஷணங்கள், ஆகியோர் பழைமைக்கே பிரச்சாரம் புரிபவர்களாக உள்ளனர், உலகின் இன்றைய அறிவுக்காகப் பேசுபவர் காணோம். இந்நிலையில், மக்கள் மனதிலே பூட்டப்பட்டுள்ள தளைகள் நீக்கும் வழி எங்கிருந்து ஏற்படும்? சிக்கலான பிரச்னை அல்லவா?
***

ஞாயிறு இதழில் நான் கண்ட மற்றோர் செய்தி, கருத்த மேகத்திடையே தோன்றும் மின்னல் போன்று இருந்தது. அது நிரந்தர ஒளியாகுமா என்ற ஆசையால் தூண்டப்பட்டே இதனை எழுதுகிறேன்.

மைலாப்பூரில், பேச்சுமேடை ஒன்று அமைத்திருக்கிறார்கள் என்ற செய்தி வெளி வந்திருக்கிறது. இவலுடன் அதனைப் படித்தேன். தோழர்கள் சிவஞானகிராமணியார், ப. ஜீவானந்தம், ஏன், ஜீவரத்னம், டி. செங்கல்வராயன் ஆகிய தோழர்கள் அந்த விழாவில் கலந்து கொள்ளு கின்றனர் என்று இருக்கக் கண்டு சந்தோஷித்தேன், நாட்டுவிடுதலை பற்றித் தோழர் சிவஞானமும், பாட்டாளிகளின் விடுதலைப்பற்றித் தோழர் ஜீவாவும், பார்ப்பனியத்திடமிருந்து திராவிடம் விடுதலை ஆடைவதுபற்றி ஜீவரத்னமும், பாட்டு மொழியிலே நாட்டுப் போரைக் கூற நண்பர் செல்கல்வராயனும் ஒன்றுகூடும் பேச்சு மேடை தனிச்சிறப்புப் பெறுமல்லவா, என்று களித்தேன். பேச்சு மேடைக்கு யார் தலைவர் என்று பார்த்தேன், பயந்தேன்! நண்பர் ரா.பி.சேதுப்பிள்ளை தலைவர் என்று பொறிக்கப்பட்டிருந்தது. ஐயகோ! அவர் விரிசடையும் திரிசடையும், வேலும் வில்லும், வாலும் காலும், கோசலைச் செல்வனும் மிதுலைச் செல்வியும் என்று, பழைமையை வழங்கும் இயல்பினராயிற்றே, பேச்சு மேடைக்கு அவரை அழைத்து வந்தால் ஜீவாவின் வர்க்கப் போராட்டத்தைக் குறைத்துவிட்டு, ஜானகியின் ஜடை அழகுபற்றியல்லவா அவர் பேசத்தொடங்குவார், என்ன செய்வது என்று ஏங்கினேன். அன்று என்ன நடந்ததோ தெரியாது. ஆனால், பேச்சு மேடைக்காரரை மட்டுமல்ல, பேசத் தெரிந்த வரனைவரையும் கேட்டுக் கொள்ளுகிறேன், இனியேனும் பழைமை பேசுவதை, புராணம் பேசுவதை நிறுத்துங்கள், உலக நிகழ்ச்சியை எடுத்துக் கூறுங்கள், வீரர் வாழ்க்கையைக் கதை ரூபமாக்கிப் பேசுங்கள், விடுதலைக் கிளர்ச்சிகளைச் சொல்லுங்கள், விஞ்ஞானத்தை விளக்குங்கள், அறிவுபரவ உங்கள் ஆற்றலை உபயோகப் படுத்துங்கள், ஐயனின் பெருமையையும் ஆம்மையின் அருமையையும் அனைவரும் தெரிந்து கொண்டார்கள், உலகின் நிலைமைத்தான் நமது மக்களுக்குத் தெரியாது. அது தெரியவிடாதபடி இன்றும் புராணிகர்களின் சத்தம், சென்னை போன்ற இடத்திலேயே அதிகமாகிவிட்டது. இந்தச் சத்தம், நமது நாட்டைப் பிடித்தாட்டும் பழைமைப் பித்தத்தை அதிகரிக்கச் செய்யும், பசிபிக்கடலை அறியமாட்டார்கள் பாற்கடலின் பெருமையை அறிந்தவர்போல் பேசுவர், ஏவரஸ்ட் சிகரம் எது என்றால் கூறார்கள், எம்பெருமானின் தூதுவன் ஏந்திச்சென்ற சஞ்சீவி பர்வதத்தின் சிறப்பைச் சொல்லுவார்கள், காவிரியின் பிறப்பிடம் கூறார்கள், யமபுரத்திலே ஓடும் நெருப்பாற்றின் நீளம் அகலம் கூறுவார்கள். டெலிவிஷன் என்றால் என்ன என்று கேட்டால் தெரியாது என்பார்கள், ஆனால் ஞானதிருஷ்டியால் வசிஷ்டர் விஸ்வாமித்திரரின் நிலையை அறிந்தார் என்று பேசுவார்கள். மலடோவ் எங்கே போகிறார் என்று கூறத்தெரியாது, நாரதர் பிரம்ம லோகத்திலிருந்து கிளம்பிப் பூலோகம் வந்த கதையைக் கூறுவர், ராஜதந்திரக் கலகக்காரரின் பேச்சால் சமர்மூள்வதை அறியமாட்டார்கள். நாரதர் கலக விசேஷத்தைப்பற்றிப் பேசுவார்கள்! உலகின் நடவடிக்கைகளை மறந்து, வாழ்க்கையின் பிரச்னைகளை அலட்சியப்படுத்திவிட்டுப் பிறகு எப்படி நாடு முன்னேற முடியும்? பேச்சு மேடையைப் புராணிகர்களிடமிருந்து கைப்பற்றி, அறிவு பரப்புவோர் அங்கு நீட்சி செலுத்த வேண்டும், இல்லையேல், நாட்டின் நலிவு நீங்காது. இப்போது நண்பர்கள் அமைத்துள்ள பேச்சுமேடை, இந்தத் தூய்மையான பணிபுரியுமா? சிக்கலான பிரச்னைதான், இதற்குப்பதில் கூறுவதும், ஆனாலும், நம்புவோம், நல்லறிவுக்காக நண்பர்கள் பாடுபடுபவார்கள் என்று.

(திராவிட நாடு - 7.4.46)