அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பேரறிஞரின் பெருந்தன்மை!

சென்னையில் கருப்புக் கொடி

வடநாட்டுக் கவர்னருக்குக் கருப்புக் கொடி காட்டவேண்டும் என்று திராவிடர் கழகம் தீர்மானம் செய்து நாள் குறித்திருக்கிறது.

வடநாட்டு ஆதிக்கத்தை நாம் வெறுக்கிறோம் என்பதன் அறிகுறியாகக் கருப்புக் கொடி காட்டப்பட வேண்டும் என்று திராவிடர் கழகம் கூறுவது, முற்றிலும் நியாயமானதும் அனைவரும் வரவேற்க வேண்டியதுமாகும்.

வடநாட்டுக் காங்கிரஸ் பாசீசம் திராவிடத்தின் எழுச்சியை அறிய இநத் கருப்புக் கொடி பிடித்தால் உண்மையாகவே ஒரு அரிய வாய்ப்பாகும்.

இதிலே கலந்து, வெற்றியை மேலும் வலுவுள்ளதாகச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இருக்கிறது.

ஆனால், கருப்புக் கொடி நாள் நடத்துவதாக அறிவித்திருக்கும் திராவிடர் கழகம், நாம் தீண்டுவதையும் தீண்டக்கூடாது என்ற திட்டத்தைத் தெரிவித்துவிட்டதால், தி.மு.க. இந்தக் கருப்புக் கொடிகாட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது கூட்டுறவு, ஒத்துழைப்பு, கலப்பு, தங்கள் முயற்சியைக் கெடுத்துவிட்டது என்று பழி சுமத்தவும் திராவிடர் கழகத்தில் பெரும்பகுதியினர் முன்வரக்கூடம் அவர்களும் கலந்து கொள்வதனால் அந்தக் காரியமே வேண்டாம் என்று ஒரு பகுதியினர் எண்ணக்கூடும். எனவே, திராவிடர் கழகம் தனித்தன்மையுடன் கருப்புக் கொடி காட்ட இடமளித்துவிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தார் 12-3-52 அன்று நாடெங்கும் கண்ட நாள் நடத்தித் தரக் கேட்டுக் கொள்கிறேன்.

அண்ணாதுரை

திராவிட நாடு – 9-3-52