அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பகுத்தறிவுப் பொன்மொழிகள்

1. விசாரணை செய்யவும், ஆராய்ச்சி செய்யவும், விவாதம் செய்யவும், சுதந்தரம் அளிக்காத மதம், உண்மையான மதமாயிருக்க முடியாதென்பதை நீங்கள் அறிந்துக் கொள்ளவேண்டும்?

2. கடவுள் தங்களுக்கு நன்மை செய்ததற்காக நன்றி செலுத்த வேண்டும் என்று சிலர் சொல்வதானால், கடவுள் பலருக்குத் தீமை செய்ததற்காக தீமையை அனுபவிப்பவர்கள் கடவுளை என்ன செய்யவேண்டும்.

3. மதக்குறி என்பது, மாட்டு மந்தைக்காரன் தனது மாடுகளுக்குப் போடும் அடையாளம்போலவே, மதத் தலைவன் தனது மதத்தைப் பின்பற்றுகின்றவர்கள் என்பதைக்காட்ட ஏற்படுத்தப்பட்ட குறியேயாகும்.

4. மனித சமூகத்திற்கு அப்பாலிருந்து உற்பவிக்கப்பட்ட தென்ற ஒழுக்கம் என்பதாக ஒன்று இருப்பதை நாம் ஒப்புக் கொள்வதில்லை.

5. கடவுள் மாறாதவர் என்று சொல்லுகிறீர்கள்! ஆனால் அவருடைய பரிணாமமாகிய இவ்வுலகத்தில் சகல வஸ்துக்களும் சதா மாறிக்கொண்டே இருப்பதற்குக் காரணமென்ன?

6. கஷ்டத்திலிருந்து உண்மையும், கடைத்தேற்றலிலிருந்து நன்றி விசுவாசமும், துக்கத்திலிருந்து சுகமும், விடுதலையிலிருந்து நம்பிக்கையும் பிறக்கிறது.

7. ஒரு மனிதன் தன் தோல்வியையும், குறைகளையும், பலவீனத்தையும், சுமத்துவதற்கும், தனக்கு இசைந்து வராத ஒரு விஷயத்தில் ஈடுபட்டு அது கைவரப்பெறாமல் தவிக்கும் காலத்தில் தன்மனோவேதனையைத் தவிர்த்துக் கொள்வதற்கும் ஒரு சாதகமாயிருக்க ஏற்படுத்திக்கொண்ட ஒரு கற்பனையும் ஒரு கருவியுமே கடவுள் என்பது?

8. புரோகிதன், பண்டு முதல் மனிதனால் மனிதனை மேன்மேலும் அஞ்ஞான இருளில் முழுகவைத்து அவனை அடிமையாகவும், கோழையாகவும் செய்து வருகின்றான்.

9. செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலா மென்றே எண்ணியிருப்பார்; பித்த மனிதர் அவர் சொல்லும் சாத்திரம் பேயுரையாம் என்றிங்கூதடா சங்கு.

10. கோவில் வழிபாடு மக்கள் பக்தியை வளர்க்க வென்றால், அதற்குச் செய்யும் பணச்செலவு யார் வயிற்றை வளர்ப்பதற்கு?

(19.9.1943)