அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பாகிஸ்தான் நாள்!

மார்ச் 23ந் தேதி, முஸ்லீம் சரிதத்திலே, ஒரு முக்கியமான நாள்! பத்துக்கோடி முஸ்லீம்களின் கண் திறக்கப்பட்ட தினம், பாதுஷாக்கள் பக்கீர்களாகிய பரிதாபத்தைத் துடைத்து, பழைய பண்புடன், இஸ்லாமியர், எவருக்கும் அடிமையாகாது, தனி நாடு பெற்றுத் தன்னரசு பெறவேண்டுமென்று, தரணியோர் உணரத் துந்துபி முழக்கிய தேதி! பாகிஸ்தான் எமது பிறப்புரிமை அதைப்பெற்றே தீருவோம் என்று முஸ்லீம் லீக் மாநாட்டிலே லாகூரிலே, பரணி பாடியது, மார்ச் 23ல் தான்.

பாட்டாளி மக்கட்கெல்லாம் ஒரு மே தினம்! புரட்சி இயக்கத்தினருக்கெல்லாம் ஒரு அக்டோபர் தினம்! அதுபோல், பிறைக்கொடியினருக்கு, மார்ச்சு 23 என்பது மகத்தான நாள்! இஸ்லாத்தின் மாண்பு கெடாதபடி, இந்து ஆட்சியின் ஏவலராகி நலியாதபடி, உரிமை பூத்திட ஓர் உன்னத பூங்கா அமைக்கப்பட்டு, அதற்கு உழைப்பெனும் எருவும், உணர்ச்சி எனும் நீரும் தரப்பட்ட நன்னாளாகும். இரண்டரை ஆண்டுகள் நடைபெற்ற மமதையாள ராட்சிக்குப் பத்துக்கோடி மக்கள் விடுத்த பதில் வெளிவந்த நாளாகும்.

ஜனாப் ஜின்னாவின் சங்கநாதம் பலுஜிஸ்தான் முதல் வங்கம் வரை, காஷ்மீர் முதல் கள்ளிக்கோட்டை வரை, பரவி, புதியதோர் எழுச்சியை உண்டாக்கிய நாள்! பாராளும் தந்திரங்கற்றோம், பயமில்லை என்று எண்ணிடும் ஆங்கிலரும் பயந்து, இனிப் படை திரண்டுவிடுமே என்று பதைத்திடச் செய்த சிறந்த நாள் உரிமையையிழந்த மக்கள் விழியிழந்த கரிபோல் வயலழித்து வரம்பு கெடுத்து வகைகுலைவது போலாவர், என்பதை அறிந்து உரிமைபெற உழைக்க வேண்டுமென்ற உறுதி தோன்றிய நாள். அந்த நாளை மறந்திடுவார் எவரும் இல்லை.

ஆங்கிலயருக்கு அச்சமூட்டிய நாள்.

காந்திக் கூட்டத்தினருக்குக் கலக்கமூட்டிய நாள்.

இந்துமகா சபையினருக்கு இருதயத் துடிப்பு உண்டாக்கிய நாள்.

இஸ்லாமியருக்கு, இன எழுச்சி எனும் இளமை முறுக்கேறிய நாள்.

தமிழருக்கோ அந்நாள் - தோழமையின் களிப்பையும், பெரியாரின் பெருமதியையும் உணரும் வழி தந்த நாள்.

எந்தப் பாகிஸ்தான் திட்டத்தால், இஸ்லாமிய இனம் எழுச்சி பெற்றதோ, எந்தத் திட்டம் ஆங்கிலருக்கு அச்சமூட்டிக் காங்கிரசைக் கலக்கி இந்து மகாசபையைத் துடித்திடச் செய்ததோ, அந்தப் பாகிஸ்தான் திட்டம், தமிழர் தலைவர் தயாரித்த திராவிட நாட்டுப் பிரிவினைத் திட்டத்தின் தம்பி என்பது அறியும், எந்தத் தமிழன்தான் தலை நிமிர்ந்து நில்லான்! உலகே கண்டு அதிசயிக்கும் திட்டமான பாகிஸ்தான் பேசப்படுவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பே - பெரியார், நமக்குத் திராவிட நாடு பிரிவினைத் திட்டத்தை அளித்தார். அவர் வழிகாட்டினார், தமிழரின் விழியிலே ஆரியத்திரை இடப்பட்டிருப்பதால் வழி தெரியவில்லை. என் செய்வது! ஜனாப் ஜின்னா விடுத்துள்ள செய்தியில், பாகிஸ்தான் திட்டம் பலமடைந்திருப்பதையும், இஸ்லாமியர் இரும்புக் கோட்டை போன்ற அமைப்புப் பெற்றதையுங் கூறித் தமது மக்களைப் பாராட்டுகிறார். தமிழர் தலைவர் இதுபோல் தமிழரைப் பாராட்டக்கூடிய விதத்திலே எங்கே தமிழர்கள் நடந்து கொண்டனர்? இதனைத் தமிழர் யோசிக்க வேண்டும். மார்ச் 23ஆம் தேதி ஓர் இனமக்களைத் தட்டி எழுப்பிற்று. துயிலுறும் தமிழர் அந்தத் தோழர்கள் தோள்தட்டுவதைக் கேட்டாகிலும் விழித்தெழுந்து வழி தெரிந்து, இஸ்லாமியருடன் தமது பிரிவினை இயக்கத்தை இணைத்துக் கொண்டு, வெற்றிபுரி நடக்கலாகாதா என்று கேட்கிறோம்.

வீர இஸ்லாமியரின் விழிப்பும், எழுச்சியும், மார்ச் 23ஆம் தேதி தந்தது. அதை அவரும் மறவார், நாமும் மறவோம். விடுதலைப் போர்முரசு கொட்டப்பட்ட அந்நாள், ஒரு பொன்னாள்!

28.3.1943