அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பாகிஸ்தானி்ல் பாசிசம்!

‘எல்லைக் காந்தி‘யென்று அழைக்கப்படும் கான் அப்துல் கபார்கானைப் பற்றிவரும் தகவல்கள் கலக்கமூட்டக் கூடியவைகளாக இருக்கின்றன. கடந்த சில மாதங்களாக அவரது உடல் நலம் சீர்கேடுற்று வரும் செய்திகளை, அடிக்கடி பெற்றுக் கொண்டுள்ளோம். இவ்வளவு மோசமான நிலையிலிருக்கும் அவரை இன்னும் பாகிஸ்தான் சர்க்கார் விடுதலை செய்ய வில்லை – மாறாகச் சிறையிலேயே பூட்டி வைத்திருக்கிறது.

மார்ச் 25-ந் தேதியன்று அவரைப்பற்றி காபூல் வானொலி நிலையம் வெளியிட்ட செய்திமூலம், அவரது உடல் நலம் மிக மிகக் கேடுற்று வருவதாக அறிகிறோம். சிறையில், அண்மையில் அவரைக் கண்டுவந்த, யாகாகான் என்பவர், இத்தகவலைத் தந்துள்ளார்.

அப்துல் கபார்கான், சிறையிலடைக்கப்பட்டிருப்பது அரசியல் காரணத்துக்காகவேயாகும். கிட்டதட்ட நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தள்ளாத அக்கிழவர், சிறைக்குள் தள்ளப்பட்டுக் கிடப்பதை நாம் கண்டித்தே வந்துள்ளோம் பாகிஸ்தான் பிரிவினையேற்படுமுன். அந்தக் கோரிக்கைக்கு அவர் ஆதரவாக இல்லையென்றாலும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக விளங்கினரென்றாலும், பிரிவினைக்குப்பின் ‘பாகிஸ்தான் கூடாது‘ என்று அவர் மறுக்கவில்லை, தானும் ஒரு பாகிஸ்தான் பிரஜையாகவே வாழப்போவதாக அறிவித்தார்.

தாயகப் பற்றுக் கொண்ட ஒரு அரசியல்வாதிகை சிறையில் பூட்டி வைப்பது மிகமிக மோசமாகும். இவரைப் போலவே, பூட்டிவைக்கப்பட்ட மற்றொரு அரசியல் தொண்டர் காஜி அதாவுல்லாகான், சிறையிலே நோய்வாய்ப்பட்டு உற்றார், உறவினரின் பராமரிப்பு எதுவுமின்றி சிறைக்குள்ளே செத்தார். இந்த கோரமரணம் கேட்டு, ஜனநாயக வாழ்வில் நம்பிக்கையுள்ள எல்லோரும் கலங்கினார்கள் – கண்டித்தார்கள்.

இருந்தும், எல்லைகாந்தியாரின் – உடல்நிலைப்பற்றி திடுக்கிடக் கூடிய தகவல் பல வந்த கொண்டிருந்தும் இன்னும் இவரை சிறைக்குள்ளே போட்டு சித்ரவதை செய்வதன் நோக்கம், நமக்கு விளங்கவில்லை.

தனிப்பட்ட ஒரு அரசியல்வாதியால், பாகிஸ்தான் கரைந்துவிடுமென்று, பாகிஸ்தான் சர்ர்க்கார் கருதுமென்றால் அதைவிட வெட்கக்கேடு வேறு எதுவுமில்லை. வீண் குரோதத்தால், ஒரு அரசியல் தலைவரின் வாழ்வு, சிறையிருட்டுக்குள் வீழ்த்தப்பட்டது என்றே நாகரீக உலகம் பேசும், எதிர்காலம் கேலி செய்யும்.

இந்த நேர்மையற்ற செயலை ஜனநாயகம் விரும்புவோர், கண்டிக்காமல் விடார். மனங்கூசும் இந்த நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் – பாகிஸ்தான் சர்க்கார். அடக்குமுறைப் பாதை வலிவு தராது, வீழச் செய்யும்! இதை உணர வேண்டும் பாசிசப் பாதை நோக்கிகள்!

திராவிட நாடு – 30-3-52