அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பல்கலைக்கழகத்தில் பஜனை
குற்றஞ்செய்ததில்லை, தண்டிக்கப்படுகிறார்கள்; கொடியவர்கள் புகழப்படுகிறார்கள்; பாடுபடுபவர்கள், பயன் காண்பதில்லை; உழைப்பறியாதவர்கள், உல்லாச புரியில் உலவுகிறார்கள்; மக்களை மதியாதவர்கள், ஜீவகாருண்ய சீலர்களெனச் சித்தரிக்கப் படுகிறார்கள். இவைகள் இன்றைய தினசரிக் காட்சிகள்.

இந்நிலை சீர்படவேண்டும். செம்மையாக்கப்பட வேண்டும். இக்குறைபாடுகள் களையப்பட வேண்டும். மீண்டும் இக்கேடுகள் மக்களைப் பீடிக்காவண்ணம், வழிவகை வகுக்க வேண்டும். வகுத்ததை, வழுவாது காக்கவேண்டும்.

இந்நிலை எய்த மக்களின் மடைமை போகவேண்டும். பழைமைப் பற்று படியவேண்டும். சிந்தனைக்கு முதலிடம் இருக்கவேண்டும். குறிப்பிட்ட ஒரு காலத்தில், சில பொருட் களுக்குக் கற்பிக்கப்பட்ட சிற்சில சிறப்புகள், சீர்குலைந்து விடும் சில நாள் சென்றபின். கால நிலை அறியாது, சீர்குலைந்த சித்திரத்தைக் காட்டிக் காக்கமுயல்வது மடைமை. அதனைக் கண்டு, தங்கள் வாழ்வை மக்கள் சரிசெய்து கொள்ளவேண்டும் மெனப் போதிப்பது, அறிவுலகத்திற்கு அறிந்தோ அறியாமலோ கொடுக்கப்படும் தண்டனையாகும்.

காலம் மாறக்கூடியது. மாறிக் கொண்டுதான் இருக்கும். காலத்திற்கேற்பக்கருத்தில் மாற்றம் வேண்டும். மாறாத சமுதாயம் மறைந்துவிடும். வரலாற்றிலே, பல ஏடுகள் உண்டு, இதனை மெய்ப்பிக்க.

முன்னோர்கள், காட்டிய வாழ்வு, காட்டிய பாதை, தீட்டிய திட்டம், சிறந்தவைகளாக இருக்கலாம். நமக்காக, அவைகளை அவர்கள் செய்யவில்லை. அன்று நாம் இருந்ததில்லை. இன்று நமக்குள்ள தேவை, குறைபாடு, வசதி ஆகிய இன்னோரன்ன அவர்களுக்குக் கிடையாது. அவர்கள் காலம் வேறு. அவர்களுக்கு இருந்த தேவை வேறு. அதனைப் பெறும் சாதனமும் வெவ்வேறு அவைகளுக் கேற்ப, அமைத்துக்கொண்டனர் வாழ்வளிக்கும் திட்டத்தை. அந்தக் காலத்தின் இன்றியமையாமைக் கேற்ப, கிடைத்த வசதியை வீணாக்காமல், அறிவை உறுதுணையாகக் கொண்டு, வாழ்வின் சூட்சமத்தை நன்குணர்ந்து, வாழ்ந்து மறைந்தனர். எனவே அவர்கள் மேற்கொண்ட முறைகள், அவர்களுக்குப் பயனளித்ததுபோல் நமக்குப் பயனளித்ததுபோல் நமக்குப் பயனளிக்கும் என எதிர் பார்த்தால் முடியுமா?
***

கல்லோடு கல்லை உராய்த்து, தீயெழுப்பும் காட்சி, அதனைக் கண்ட அந்தக் காலத்து மக்களுக்கு, ஆச்சரியம் நிறைந்த அற்புதமாகத்தான் இருந்திருக்கும். அத்துடன் அவர்கள் திருப்தி கொள்ளவில்லை. அதுவே அறிவின் முடிந்த எல்லையென்று, அன்று நம்பினவர்களில்லை. மேலும் மேலும் அந்த அறிவைப் பெருக்கினர். மின்சார விளக்கொளியில் வந்து நிற்கிறோம். இது மேலும் அந்த அறிவைப் பெருக்கினர். மின்சார விளக்கொளியில் வந்து நிற்கிறோம். இது மேலும் வளரும். இந்த இரு புதுமைகளுக்கும் உள்ள இடைக்காலம், அறிவைத் துணைகொண்டு வளர்ந்ததா, அல்லது பழைமை மோகங்கொண்டு எழுந்ததா? சிந்தனைச் சிற்பிகளால் இம்மாறுதல் உண்டாயிற்றா, அல்லது ஜீவன் முத்தர்களால் இவை ஏற்பட்டதா?

கற்களால் தீப்பொறி கிளப்பியகாலத்தில், அதனைக் கண்டு சீற்றம் கொண்டோரும், பெரியதோர் ஆபத்து வரஇருக்கிறது எனச்சாபம் தந்ததோரும், புதுமை கண்டவனைத் துன்புறுத்தியோரும் உண்டு. இருந்தாலும் உண்மையை உலகுக்கு உணர்த்தினான். தன்னையே அதற்காக அர்ப்பணித்துக் கொண்டான். உலகம் நலம் பெறக்கண்டு, தான் இன்புற்றான். நிற்க, சுயலாபம் கருதாது, சொந்த நன்மையை மட்டும் குறியாகக் கொள்ளாது, ஆராய்ச்சி செய்வதில் தணியாத காதலும், பிறர் ‘நலத்தில் பெரு விருப்பமும் கொண்டு பணி புரிந்த பண்பினராக நமது மக்கள் இருக்கவேண்டும். அவர்களே விடுதலை பெற்றவராவர். உரிமை வேட்கை உடையவர்களாவர்.

இந்நிலையை நாட்டில் உண்டாக்கும் வாய்ப்பும், தகுதியும் நமது கல்லூரி மாணவர்களுக்கே உண்டு. அவர்கள் பெற்ற கல்வியை ரூபாய அணாபையால் அளந்து பார்ப்பின் குறைவுடையதாக இருக்கும். அவர்கள் பெற்ற கல்வியை, மக்களுக்குப் பலனளிக்கும் முறையில் பயன்டுத்தவேண்டும். அதனை ஆளவந்தவர்கள் நடைமுறைக்குக் கொணர வேண்டும். அதற்கான நல்லதோர் ஏற்பாடு ஒன்றும் செய்யாமல், கற்று வெளியேறுபவர்களைக் குறைமதி கொண்டு குற்றம் கூறுவது, ஆளுவோருக்குத் தரப்பட்டுள்ள தகுதியையும் கடமையையும் தட்டிக்கழிப்பதாகும்.

வாய்மை, தூய்மை, அன்பு, அகிம்சை ஆகிய பண்பாடுகள் கொண்டவர்களாக, மாணவர்கள் விளங்க வேண்டுமென்று எதிர்பார்ப்பதும், இதோபதேசம் செய்வதும் கவைக்குதவாது. காட்டுக் கூச்சலாகவும் முடிவுறும். கடமையைத் தெரிந்தவர் செயலுமாகாது.

பல்கலைக் கழகங்களில் பயிற்சி பெறும் மாணவர்கள், பற்பலகலை....................
(தொடர்ச்சி சரியில்லை)
மண்ணாசை
“ஐயங்கார் ஸ்வாமிகளா! வரவேண்டும், வரவேண்டும்.” என்றார் சாஸ்திரியார், முகமலர்ச்சியுடன். “பந்துலுகார், என்ன பேசப் போகிறாரோ,?” என்று, ஐயங்கார், சாஸ்திரியாரைக் கேட்டார், ஆவலுடன். “மகா பண்டிதாளெல்லாம் கூடியுள்ள இந்தச் சபையிலே அவர் தர்மோபதேசம் செய்யத்தானே வந்திருக்கிறார்” என்று சாஸ்திரியார் பொதுவாகப் பேசினார். பந்துலு, சாந்தி சொரூபராகக் காணப்படவில்லை!

“முகத்திலே கவனித்தீரோ, ரௌத்ராகாரத்தை?” என்று சாஸ்திரியார், கேள்வி ரூபத்திலே, நிலைமையை, ஐயங்கார் ஸ்வாமிகளுக்கு விளக்கினார். ஐயங்கார் மௌனமாக இருந்தார். பாவம், அவர் மனதிலே, என்னென்னமோ எண்ணம். இந்த ‘ரௌத்ராகாரம்’ இப்போது, பலனின்றிப் போகிறது. ஒரு காலம் இருந்ததல்லவா, அந்த ரௌத்ராகாரத்தின் முன்பு, அரசுகளெல்லாம், கிடுகிடுவென ஆடின காலம்! - அதை எண்ணி, ஆயாசமுற்றிருக்கக் கூடும், ஐயங்கார் ஸ்வாமிகள்.

பந்துலு, தமது தலைமைப் பிரசங்கத்தைத் துவக்கினார்.
***

பந்துலு, சாஸ்திரி, ஐயங்கார், போன்ற பிராமணர்கள் கூடிப் பேசுகிறார்கள் என்றால், மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை எனும் மாயப் பைசாசங்களை விரட்டி அடிக்க வேண்டும். எனும், மகத்தான உபதேசம் செய்கிறார்கள் போலும் என்று எண்ணிவிடாதீர்கள்.

மண்ணாசை மாநாடு அது. பாப்பு சோமசுந்தரம் பந்துலு என்பவர் தலைமையில், சென்னையில், சுபோதயம் எனும் மணி மண்டபத்தில், சென்றகிழமை நடைபெற்ற மாநாடு. சிகாகோல் நாகேஸ்வர சாஸ்திரி, பரமக்குடி கோபால ஐயங்கார், பர்லாசிமிடி சூரியநாராயண சாஸ்திரி, இப்படிப்பட்ட பிரம்மகுலத் தலைவர் கள் கூடினர் - உண்மையில்தான் உரைக்கிறோம் - மண்ணாசை மாநாடு நடத்தினர்.

அவர்கள் வேண்டுமானால், மறுப்பர் - மண்ணாசை மாநாடு அல்ல நாங்கள் கூட்டியது - நாங்கள் இனாம்தாரர் மாநாடு கூட்டினோம் என்பர். இரண்டுக்கும், சொல்லில் வித்யாசம் இருக்கிறது உண்மை. ஆனால் நோக்கம் என்ன? நோக்கத்தின்படி, பொருத்தமான பெயர் சூட்ட வேண்டுமல்லவா! அதற்காகவே, அந்த மகானுபாவர்கள் நடாத்திய அந்தக் கூட்டத்தை, மண்ணாசை மாநாடு என்றோம்.

இனாம்தாரர்கள்!
வெட்கம், மானம், ரோஷமற்றவர்கள், ‘இனாம்’ கேட்டு பிழைப்பர் - பல்லை இளித்து! இவர்கள் அவ்விதமல்ல!! நெறித்த புருவத்தினர்! நீறுபூசிகள்! நாமதாரிகள்! ஜெபமாலை ஏந்திகள்! இவர்களின், மூதாதையர்களுக்கு அந்தக் காலத்திலே இருந்த மன்னர்கள், ‘இனாம்’ கொடுத்தார்கள் - ஏராளமான நிலங்களை. தேவதானம், பிரம்மதானம், சதுர்வேதி மங்கலம், என்ற பலப்பல பெயர்களுடன். ஏன்? தர்மத்தைத் தழைக்கச் செய்ய, தேவாலய காரியத்தைக் கவனிக்க,மதத்தை உத்தாரணம் செய்யும் மகானுபாவர்கள், என்று கருதி, இவர்களுக்கு, அந்த நாட்களிலே இருந்த, சிற்றரசன், அவனை அடுத்து வாழ்ந்த காட்டுராஜா, இப்படிப்பட்டவர்கள், ஏராளமான நிலங்களை‘இனாம்’ தந்தனர். எனவே இவர்களுக்கு, இனாம்தாரர் என்று பெயர். இனாம்தாரர்களிடம் உள்ள நிலம், இப்போது ஏறத் தாழ 35 இலட்சம் ஏக்கர் இருக்கும்; அதாவது 35 இலட்சம் ஏக்கர் நிலம், பாடுபடாமல், நோகாமல், இனாம்தாரர்கள், எனும் உழைப்புறுஞ்சிகளிடம் உள்ளன - எவனோ, எந்தக் காலத்திலோ, எதற்காகவோ இவர்களுக்குத் தானமாகத் தந்த காரணத்தால்.

வாளை எடுத்துப் போரிட்டு, வந்தவனுடன் கூடிக்கொண்டு சொந்த நாட்டவனை வஞ்சித்து, ராஜாக்கள் - ஜெமீன்தாரர்கள் - ஏற்பட்டனர்.

ஜெபமாலை காட்டி, கங்காதீர்த்தம் கொடுத்து, மந்திரத்தை முணுமுணுத்து, ஆசி கூறி, ஆலயத்திற்கு அழைத்துச் சென்று, பெரும்பாலும், பிராமணர்கள், இனாம்தாரராயினர்!

இப்படி, வெட்டிக்கு, மக்களின் சொத்தை, மந்தபுத்தியுள்ள மன்னனின் தயவால் அபகரித்துக் கொண்டவர்கள், இந்த இனாம் தாரர்கள். 35 இலட்சம் ஏக்கர் நிலத்துக்கு மேல், இப்படிப்பட்ட வீணர்களிடம் சிக்கியிருக்க, முதுகெலும்பு முறியப் பாடுபடும், இலட்சக்கணக்கான உழவர்களுக்கு, தங்க நிழல் இல்லை!!

பிளாசி போன்ற பல களங்களிலே போரிட்டு இந்தப் பரந்த ணைக் கண்டத்தைப் பிடித்து, படைகூட்டி மிரட்டி, கொடிகட்டி ஆண்டுவந்த வெள்ளையர், வெளிஏறுகிறார்கள்! ஜெமீன், இனாம், என்ற, உழைப்புறுஞ்சும் உலுத்தர்கள், இனியும் தங்கியிருக்க முடியுமா! சமஸ்தானாதிபதிகளெல்லாம், பிடி தளர்ந்தாலும் பரவாயில்லை, பீடத்திலே அமர்ந்ததிருக்கவாகிலும் அனுமதி கிடைத்தால் போதும், என்று மன்றாடும் இந்த நாட்களில், இனாம்தாரர்கள், ஜெமீன்தாரர்கள், என்ற சிறு சர்வாதிகாரிகள், என்ன செய்ய முடியும்? கண்போன யானையும், கால்வளைந்த குதிரையும், ஒட்டி உலர்ந்து கிடக்கும் ஒட்டகமும், கிழிந்த முரசும், துருப்பிடித்த கத்தியும், வளைந்த கேடயமும், மங்கிப்போன பொன்னிறப் பாகையும் - இன்னும் இவை போன்ற சின்னங்களாவது உண்டு, ஜெமீன்தாரர்களுக்கு. அவர்களிடம் உள்ள நிலத்தின் அளவு, 128 இலட்சம் எனக்கு மேலிருக்குமாம். இந்த ஜெமீன்தாரர்களிடம், உள்ள நிலத்தைக் குடிநிலமாக்கச், சர்க்கார் சட்டம் செய்கிறது - ஜெமீன்தாரர்கள், கொஞ்சம் சலசலப்புக்கக்டிப் பார்த்தனர் - பலிக்கவில்லை - எனவே, வாய் மூடிக்கொண்டனர். அவர்களிலே சிலராவது, ஏதோ ஒருவகைப் போரில், வீரவிளையாட்டில், ஈடுபட்டிருக்கக் கூடும். இந்த இனாம்தாரர்கள், இளித்தவாய் மன்னர்களை ஏய்த்துப் பிழைத்துவந்த எத்தர் பரம்பரை. இவர்கள் கூட்டினார்கள் மாநாடு! இனாம் நிலங்களைப் பறிக்கவிடோம்!! ஜெமீன் நிலங்களைச் சர்க்கார், பறிக்கலாம். ஆனால் இனாம் நிலத்தைத் தொடக்கூடாது. ஜெமீன்தார்கள், பெரிய மன்னர்களுக்கு வரி வசூலிக்கும் அதிகாரிகளாக அமர்ந்தவர்கள்; நாங்கள் அப்படி அல்ல - நாங்கள் தர்மரட்சகர்கள் - எமக்கு இந்தப் பூமி தானமாகத் தரப்பட்டது - இதைப் பறிப்பது மகா பாபம் - அதர்மம் - சட்டவிரோதம் - என்று, சீறிச் சீறிப் பேசினார்கள், சென்னையில். அதே போது, சட்டசபையிலே, ஜெமீன், இனாம், நிலங்களை, முறையே, ஜெமீன்தாரர், இனாம்தாரம் ஆகியோரிடமிருந்து பெற்று, சர்க்கார், நிர்வகிப்பது, எனும், திட்டம், தயாரில் இருக்கிறது - மொத்தத்திலே, இந்தத் திட்டத்தின்படி, 162 இலட்சம் ஏக்கர் நிலம், ஜெமீன், இனாம், எனும் தளைகளிலிருந்து விடுபடும். ஆசை காட்டியும், ஆளை மயக்கியும், அந்த நாளில் இவர்கள் பெற்ற நிலத்தைத் திருப்பித் தருவதற்குச், சர்க்கார், பணமும் தருகிறார்கள் - நஷ்ட ஈடாக.

பத்துக்கோடி ரூபாய் நஷ்ட ஈடுத்தொகை! பாடுபடுபவனி சர்க்கார், பணத்தை, வரியாகக் கொண்டு, பாடுபடாத பரம்பரைக்கு, பத்துக்கோடி ரூபாயைக் கொட்டிக் கொடுக்கவும் இசைகிறது - முற்போக்குக் கொள்கையினரின், கண்டனங்களைக் கூடப் பொருட்படுத்தாமல். இந்தப்பத்துக்கோடி, கடைசித் தானம், ‘பிணத்துக்கிடும் வாய்க்கரிசி’ என்ற அளவில், கொடுத்துத் தொலைக்கட்டும், என்று ஒரளவுக்கு, மக்கள் சம்மதிக்கின்றனர். இனி நமது எதிர்ப்புபலிக்காது என்பதை அறிந்து ஜெமீன்தாரர்களும், அடங்கிக் கிடக்கின்றனர் - ஆனால் இந்த இனாம்தாரர்கள், மாநாடு நடத்துகிறார்கள் - மண்ணாசை கொண்டு.

இனாம் தாரர்களின் இரைச்சலை, அறிவுடையோர் பொருட்படுத்தக் கூடாது. ஆனால், இந்த நாட்டின் சமுதாய அமைப்பு முறையின் சீர்கேட்டின் காரணமாக, என்ன நேரிட்டிருக்கிறது என்றால், இனாம்தாரர் பிரச்னை, இன்றைய மந்திரி சபைக்கே நெருக்கடியைக் கொண்டு வந்திருக்கிறது. மந்திரிகள் மருள்கிறார்கள்! ‘மாபெருந் தலைவர்கள்’ என்ற விருதுபெற்றவர்கள், மௌனவிரதம் கொள்கிறார்கள். ‘இந்து’ இனாம்தாரருக்கு வக்காலத்துப் பெற்று, எழுதுகிறது. எழுதுகிறதா? மிரட்டுகிறது, மந்திரி சபையை!

இப்படிப்பட்ட தீவிரமான திட்டங்களைக் கொண்டு வருவதால், மந்திரிக் கட்சிக்கு மகத்தான கஷ்ட நஷ்டம் ஏற்படும், என்று கூறுகிறது. தினசரி தவிர மற்றத் தமிழ் தேசியத் தாட்கள், இனாம்தாரர்களைத் தீண்டலாகாது என்று எச்சரிக்கை விடுகின்றன. மந்திரிகளில் பத்துப்பேர் - இனாம்தாரர் பக்கம்! முதலமைச்சரும், அங்ஙனமே! நெஞ்சில் உரமும் நேர்மைத் திறனும் கொண்ட வீரர் சிலர், சட்டசபைக் காங்கிரஸ்கட்சியிலே, இருக்கிற காரணத்தால் மட்டுமே, ஜெமீன்களோடு, இனாம்களை யும் ஒழிக்கத்தான் வேண்டும் என்ற தீர்மானம், நிறைவேறிற்று, மிகப் பெரிய மெஜாரிட்டி கிடைக்கவில்லை. தீர்மானம் நிறைவேறியதும், மிகப் பெரிய மெஜாரிட்டி கிடைக்கவில்லை. தீர்மானம் நிறைவேறியதும், “நான் ஒர் இந்து! இதைச்சகியேன், “நான் ஒர் இந்து! இதைச்சகியேன்” என்று கூறி ராஜநாமாச் செய்கிறார் ஓர் பார்ப்பனர். நான்கட்சிக் கட்டுப்பாட்டுக்கு அடங்கப் போவதில்லை, என்கிறார் மற்றோர் பார்ப்பனர். இனாம்தாரர்கள், பக்கம், பிரபல வக்கீல்களான, அல்லாடியும், வெங்கடராம சாஸ்திரியும், நிற்கிறார்கள். ‘அகில இந்தியாவிலும்’ கேட்கக்கூடிய விதத்திலே, ஆர்ப்பரிப்பு அதிகரித்துவிட்டது. முதலமைச்சர், டில்லிக்குச் செல்கிறாராம், மந்திராலோ சனைக்கு.

பித்தாபுரம், பொப்பிலி, சிவகங்கை, சேத்தூர், வெங்கடகிரி, பானகல் உத்தமபாளையம், ஊத்துக் குழி, முதலிய ஜெமீன் தாரர்களால், கிளப்பமுடியாத அளவு கூச்சலை, இந்த இனாம்தாரர்களால், கிளப்பமுடிகிறது! எப்படி? இங்குதான், யார் எவ்வளவு தந்திரமாக மறைக்க விரும்பினாலும், ஆரியத்தின் விஷமம், பளிச்செனத் தெரிகிறது. பரம்பரை பரைம்பரையாக அனுபவித்து வரும்ஜெமீன்கள் பறிமுதலாவதைச் சரியென்று ஏற்றுக் கொண்டுவிட்ட இதழ்களெல்லாம், இனாம் சம்பந்தப் பட்டமட்டிலே இரைச்சலிடக் காரணம் என்ன? இனாம்தாரர்களில், பெரும்பாலோர், பார்ப்பனர் என்பதல்லவா! இது சரியாகுமா? ஆரியர், தங்கள் ஆதிக்கத்துக்கும் சுயநலத்துக்கும் துளி ஆட்டம் காண்கிறது என்றாலும், இப்படி ஒன்று கூடி, பெருங்குரல் கிளப்பி, மதம் போகுதே! பரம்பரைமுறை போகுதே! என்று பேசிடுவர்.

மேனாட்டுச் சட்ட புத்தகங்களிலே படித்ததை எல்லாம் கொட்டிக்காட்டுகிறார் அல்லாடி! மேனாட்டிலே, இங்குள்ளது போல, ஒரு வகுப்பார், பூதேவர்கள் என்று உண்டா? அல்லாடி, அதைக்கூறமாட்டார். சட்டப் புத்தகங்களைச் சரமாரியாக வீசி, இனாம்தார்களைக் காப்பாற்றக் கிளம்புகிறார். இனாம்தாரர்களின் இந்தக் கூச்சலை, பிராமண சேவைக்கும் பக்திக்கும் வித்தியாச மறியாத முதலமைச்சர், வெளிப்படையாகவே ஆதரிக்கிறார். இது, அறிவுடைமை அல்ல என்பது மட்டுமல்ல, இது, கட்சியை யும், தன் கூட்டு மந்திரித்தோழரையும் காட்டிக் கொடுக்கும் காரியமுமாகும். ஒரு காங்கிரஸ் மந்திரி, இனாம்தார்களை ஒழிக்கத் திட்டம் கொண்டு வரும்போது, மற்றக் காங்கிரஸ் மந்திரிகள், அதனை எதிர்க்கிறார்கள். ஏன் பணமூட்டைகளிடமும் பஜனைக்காரர்களிடமும் இவ்வளவு பற்றும் பயமும் இருக்கவேண்டும்? இப்படித், தொடை நடுங்கிக் கொண்டு, எத்தனை நாளைக்குத் துரைத்தனம் செய்வதாக உத்தேசம்? ஏன் இவ்விதமான துரைத்தனம்!

இனாம்தாரர்கள் பட்டியிலே, மடாதிபதிகளும், ஜீயர்களும், மற்றும், வேஷமிட்டு வேதாந்தம் பேசும் வெட்டிகளும், உள்ளன! இவர்களிடம் உள்ள ‘இனாம்கள்’ மதகாரியத்துக்காக, மன்னர்கள் மனமுவந்து தந்தனராம்! மதகாரியம்! எத்தகைய மதகைங்கரியம் நடைபெறுகிறது என்பதை, மடாலயங்களின் சுற்று வட்டாரத்திலே சென்று கேட்டாலேயே, விளங்குமே. பட்டணப் பிரவேசமும், பலவித தரிசனமும் தானே அங்கெல்லம் மதக்கைங்கரியம். பசுபதி பாசம், ஏட்டில்! இனாம் நிலங்களை, ஏழைகளைக் கொண்டு உழவைத்துக் கொழுக்கும் ‘சிவசொரூபங்கள்’ பதியை விட்டுப் பசுக்களைப் பிரித்து, பணமெனும் பாசத்தால், தம்மிடம் பிணைத்துக் கொண்டு, சிவாகமம் படிப்பதாகக் கூறிவிட்டு, ஊரை ஏமாற்றும் விஷயம், யாருக்குத் தெரியாது. இவர்களுக்காக, ஒமந்தூரார் ஓலமிடுகிறார், அல்லாடி சல்லடம் கட்டுகிறார், சாஸ்திரியார் சட்டம்புரட்டுகிறார், தேசீயப்பத்திரிகைகள் ஆதரவு காட்டுகின்றன! ஏன் இந்தப் பரிவு? ஆயிரமாயிரம் மேடைகளிலே, வெள்ளையன் வெளி ஏற்றப்பட்டதும், உள்நாட்டிலே உள்ள சுறண்டல்காரர்களின் ஆதிக்கமும் ஒழிக்கப்பட்டே தீரும் என்று பேசியவீராப்பு என்காற்றிலேபறக்க விடப்பட்டிருக்கிறது? சற்று, சட்டப் புத்தங்களை மூடிவைத்து விட்டு, இனாம்தாரர்களின் வாழ்க்கையையும், அவர்களுக்கு உழைத்து அலுக்கும் பாட்டாளிகளின் அல்லலையும், பார்த்தால், அல்லாடிகள் இப்படித் துணிந்து பொதுமக்களுக்குத் துரோகம் செய்யமாட்டார்கள். மைலாப்பூருக்கும் மடாலயங்களுக்கும், ஏனோ இப்படி ஒரு தொடர்பு ஏற்பட்டுவிட்டது!! சுகபோகத்தையே சிவாகமமாகக் கொண்டுள்ள, தருமபுரம், திருவாவடுதுறை,திருப்பனந்தாள், மற்றம் இவைபோன்ற மடலயங்களின் தயவு இல்லாமலே, சைவம் கூடத்தழைக்க முடியும்! மதத்தைக் காப்பாற்றுவதாகக் கூறிக்கொண்டு மந்தகாச வாழ்வு நடாத்தும், இவர்களின் போக்கு மக்களுக்கு நன்றாகத் தெரியும். இவர்களின் ஆதிகத்தைக் காப்பாற்றக் கிளம்புவது, பொது மக்களுக்கு மனதறிந்துசெய்யும் துரோகமாகும்.

கோயில்களுக்கு விடப்பட்ட இனாம்களிலே, கைவைப்பதா, என்று கலங்குகிறார், ஓமாந்தூரார். கோயில்களுக்கு ஏராளமான சொத்து இருக்கவேண்டுமென்று, எந்தத் தர்ம சாஸ்திரம் தெரிவிக்கிறது? சைவமோ, வைணவமோ, ஜொலிக்க வேண்டுமானால், அந்த மதத்தைச் சாக்குக் காட்டி அமைக்கப்படும், மடாலயங்களுக்கு ஆயிரக்கணக்கான வேலி நிலங்கள் இருந்தாக வேண்டும் என்று, அவர் படித்த ருக்வேதம் கூறுகிறதா, அல்லது அடிக்கடி அவனாசியார் குறிப்பிடும் கூறுகிறதா!

‘ராஜசேவை’ செய்ததாகக் கூறி, ஜெமீன்தாரர்கள் கிளம்பினர்.

தேகசேவை செய்தாகக் கூறிக்கொண்டு இனாம் தாரர்கள் கிளம்பினர்.

இருவரும், உழைத்தறியாத உலுத்தர் கூட்டமே! இதிலே இனாம்தாரர்களுக்கு ஒரு நியாயம், ஜெமீன்களுக்கு வேறு என்பதில்லை. இருவகையும், இந்த நாட்டை அரிக்கும் கேடுதான். எனவே, எக்காரணம் கொண்டோ, காங்கிரஸ் இனாம் தாரர்களுக்கு, விதிவிலக்கு அளிக்குமானால், பொதுமக்களின், கோபத்துக்கும், அறிவுடையோரின் கண்டனத்துக்கும் ஆளாவதோடு, பணக்காரர்களின் பாதந்தாங்கும் நிலையையும் அடைய நேரிடும். வேறுகட்சியினர் கூறினால், கண்டனம் என்று படும், எனவே, காங்கிரசிலுள்ள இளைஞர்களைக் கேட்டுக் கொள்கிறோம், உங்கள் கண்முன்பாகவே நடத்தப்படும் கபட நாடகத்தை உடனே கண்டித்துக், காங்கிரசின் பெயர்கூறி, உங்கள் உழைப்பின் பெயர்கூறி, தியாகத்தின் பெயர்கூறி ஆள வந்தார் களானவர்களை, நேர்வழி நடக்கச் சொல்லுங்கள், ஏழை உழவனை, நடைப்பிணமாக்கும் ஜெமீன் இனாம் முறைகள் ஒழிந்தாக வேண்டும்.

நாம் மட்டுமல்ல, காங்கிரஸ் சோஷியலிஸ்டு பத்திரிகையான ஜனதா, “இனாம்களை ஒழிக்கத்தான் வேண்டும். கோயிலின் பெயரால் மதத்தின் பெயரால், கொள்ளையடிக்கும் கும்பலை ஒழிக்கத்தான் வேண்டும்.” என்று 12-10-47ல் எழுதுகிறது.

சட்டசபை அங்கத்தினர்களிடையே காணப்படும் சலசலப்பையும், வெளிவரும் வதந்திகளையும், கவனிக்கும் போது, இனாம் தாரர்களின் பக்கம், வெற்றி கிடைத்துவிடுமோ, என்று அஞ்சவேண்டி இருக்கிறது. ஏனெனில் முதலமைச்சரும் மற்றும் 10 மந்திரிகளும், இனாம் தாரர்பக்கம், நிற்கிறார்கள். மீண்டும் யோசிப்பது, திருத்தம் கொண்டுவருவது, மேலிடம் சென்று கேட்பது, என்று ஏதேனும் சாக்குக் கூறி, இனாம்தாரர் களின் கட்சியைத் தட்டிக்கொடுக்கக் காங்கிரஸ் சட்டசபைக் கட்சி, முற்படுமானால், அதைவிட, வெட்கக்கேடான, வெறுக்கத்தக்க நிலை வேறில்லை என்றாகும் உண்மையிலேயே ஓமாந்தூராருக்கும் அவருடைய சகாக்களுக்கும், மக்களின் நலனைவிட, மடாதிபதிகள், ஜீயர்கள் ஆகியோரின் நலனே முக்கியமென்று தோன்றினால், மனமார அதைக் கூறிவிட்டுப் பதவிகளை ராஜீநாமாச் செய்துவிட்டு, மடங்களிலே சென்று அமர்ந்து கொள்ளட்டும். மக்கள் மன்றத்தை, மக்களின் நலனில் அக்கரைகொண்ட மதிவாணர்கள், ஏற்று நடத்தட்டும். பொதுவாக, முற்போக்குக் கொள்கை கொண்டவர்களுக்கும், குறிப்பாகக் காங்கிரசிலே உள்ள முற்போக்குணர்ச்சியினருக்கும், இது ஓர், சோதனை. யாருக்காக ஆட்சி நடத்தப்படுகிறது? பொது மக்களுக்காவா, அன்றி, ஜெமீன் இனாம், முதலியவர்களுக் காகவா, என்பது விளக்கமாகிவிடவேண்டிய நாள் விரைந்து வருகிறது. ஜெமீன்தாரர் விஷயத்திலே ஏற்படாத சிக்கலும், எதிர்ப்பும் இனாம்தாரர் பிரச்னையின் போது ஏற்பட்டிருப்பதைப் பார்க்கும் போதாவது, மற்ற நேரங்களிலே, வகுப்புவாதி, மதத்துவேஷி என்று தூற்றும், காங்கிரஸ் இளைஞர்கள் பெரியார் இராமசாமி கூறுவது சரியாகத்தான் இருக்கிறது, முற்போக்குக்கு முட்டுக்கட்டை போடுவதே ஆரியத்தின் வேலை. சாதாரண முதலாளித் தனத்தை விட, மதத்துடன் பிணைக்கப்பட்டுள்ள முதலாளித்துவம், அதிகத்தொல்லை தரக்கூடியது - என்று அவர் அடிக்கடிகூறி வருவதன் உண்மை ஓரளவு தெரிகிறது, என்று சொல்லக்கூடும் என நம்புகிறோம். ஜெமீன் முறை போலவே, இனாம் முறையும் ஒழிக்கப்படத்தான் வேண்டும் என்பதைத் தெளிவாக, மக்கள், துரைத்தனத்தாருக்குத் தெரிவிக்க வேண்டும். மண்ணாசை கொண்ட மமதையாளர்களினி காலம் மலைஏறி விடவேண்டும். மக்களின் உழைப்பை உறுஞ்சும் முறை அழிந்தாக வேண்டும். அதுதான், விடுதலையின் பயன்! அதுதான் இளைஞர் குறிக்கோள்.

(திராவிடநாடு - 19-10-47)